மந்தாரைச் செடி ஓரத்தில் – 4

 

மந்தாரை 4

 

 

 

 

 

சதுர்வேதமங்கலம்:

 

இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நிச்சயமாக தனது அப்பாயியை காயப்படுத்தி விடுவோம் என்று வேந்தனுக்குத் தோன்றவும், ஹாலுக்கு வந்தவனோ அங்கே தொங்கிக் கொண்டிருந்த வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே போனவன், ஷெட்டில் இருந்த புல்லட்டில் ஏறி நேராகத் தன் நண்பனின் போர் கொட்டகைக்கு வந்தான்.

 

அப்பொழுதுதான் வேலுவோ வயலில் வேலை செய்பவர்களுக்காக டீ, வடை வாங்குவதற்கு கடைக்குப் போகச் சட்டையைப் போடும்போது, சற்று தூரத்தில் வேந்தன் வருவதைப் பார்த்தான்.

 

“என்ன மச்சான், முகம் சரியில்லை? பெருசுங்க ரெண்டும் என்னத்தை சொல்லுச்சுங்கனு தெரியலையே?” என்று வேலு புலம்பிக் கொண்டிருக்கவும், போர் கொட்டகையின் உள்ளே வந்தவனோ எதுவும் சொல்லாமல் அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்தவன், இடது கையை மடித்து நெற்றியில் வைத்துக்கொள்வதைப் பார்த்த வேலு சுத்தமென தலையில் அடித்துக்கொண்டான்.

 

“மச்சான், நம்ம பாண்டியன் கடை வரைக்கும் போயிட்டு வாரேன்னு” சொல்ல, “ம்ம்” என்ற பதில் மட்டுமே வந்தது.

 

இனி அவனாக வாயைத் திறக்காமல் எந்த வார்த்தையையும் வாங்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டவன், பைக் சாவியை எடுத்துக் கொண்டு வரப்பின் வழியே நடந்து ரோட்டிற்குப் போனான். அங்கு மரத்தின் கீழிருக்கும் பைக்கில் ஏறிய வேலு, டவுனுக்குச் சென்றான்.

 

அரை மணி நேரத்தில் டவுனுக்கு வந்தவன், “அண்ணா, 15 பார்சல் டீ, 20 வடை பஜ்ஜி கலந்து கட்டுங்கள். தனியாக நாலு வடையும் பஜ்ஜியும் கட்டுங்கள்” என்றவன், “என்னா வெயிலு, மண்டைய கொளுத்தி எடுக்குதே!” என்றபடி அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தான்.

 

சுற்று வட்டாரத்தில் இருக்கும் 15 கிராமத்தில் எங்கு வேலை நடந்தாலும் சேரன் கடை டீ, வடை தான் என்பதால், அந்தக் கடை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.

 

அப்போது உள்ளே வந்த வேலுவின் சித்தப்பா, தனது அண்ணன் மகனைப் பார்த்தவர், “என்ன பாண்டி, ஒரு கழுதை மட்டும் உள்ளே இருக்கு, இன்னொரு கழுதையைக் காணுமே?” என்றவர், சூடாகப் பொரித்து எடுத்த பஜ்ஜியில் ஒன்றை எடுத்து கடித்துக்கொண்டே எதிரில் இருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிடலானார்.

 

அங்கே கட்டிலில் படுத்திருந்த வேந்தனுக்கு கடந்து சென்ற நினைவுகள் திரைப்படம் போல கண் முன்னால் ஓடலானது.

 

சில வருடங்களுக்கு முன்…

 

“அம்மா, அண்ணன் சொல்றான்னு சம்மதிக்கக் கூடாது. உண்மையிலேயே உனக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே சரினு சொல்லு,” என்று தம்புசாமி கேட்க, தனது அண்ணனைப் பார்த்த கனகு, “நிஜமாகவே எனக்கு மாமாவை பிடித்திருக்கிறது. எனக்கு சம்மதம் தான் அண்ணா, நீ எதுவும் நினைக்காதே,” என்று ரூமிற்குள் சென்று விட, தனது அப்பா அம்மாவைப் பார்த்தவன், “இப்போ சந்தோஷம் தானே? இனி ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள்,” என்றவாறு வெளியே வந்தவன், தனது புல்லட்டில் ஏறி பக்கத்து தெருவில் இருக்கும் மாமன் வீட்டிற்கு புறப்பட்டான் .

 

சிறிது நிமிடத்தில் வந்தவனோ வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, “ஓய் சக்கு, எங்கேடா இருக்க?” என்றவாறு முற்றத்தைத் தாண்டி உள்ளே வர, “ஏன்டா இப்படி ஏலம் போடுற? இங்குதான் இருக்கேன் பார்,” என்ற சர்க்கரை, தனது தங்கை பரிமாறிய கம்மஞ்சோற்றில் சுண்ட வைத்த மீன் குழம்பை ஊற்றி, “வாடா சாப்பிடு,” என்றான்.

 

“ம்ம்… வாசனை சுண்டி இழுக்குதே!” என்றவாறு அங்கே ஓரமாக இருந்த குவளை தண்ணீரில் கை, கால் கழுவி விட்டு வந்து உட்காரவும், சாலாட்சியோ தனது அத்தை மகனுக்கும் தட்டு வைத்து பரிமாறினாள்.

 

ஒரு வாய் அள்ளி வாயில் வைத்தவன், “அத்தை கைக்கு வைரத்தில் வளவி போட்டாலும் ஈடாகாது. என்ன ருசி, என்ன ருசி!” என்றவாறு ரசித்து சாப்பிட, சாலாட்சியோ அவனை கொலைவெறியில் முறைத்தாள். சர்க்கரைக்கு தங்கையின் முகப்போக்கைக் கண்டு புரையேறியது.

 

“ஏலே, பக்கத்துல தான் தண்ணி சொம்பு இருக்கு, எடுத்து குடிக்க வேண்டியதுதானே பன்னி பயலே! நான் என்ன புடுங்கியா தின்ன போறேன், இப்படி போட்டு அமுக்குற…”

 

“அத்தை, எப்படியும் மூணு பேருக்கு சமைக்க சொன்னா ஆறு பேருக்கு தாராளமா தானே சமைத்து வைத்திருக்கும்,” என்றவாறு தம்புசாமி சாப்பிடவும், “அண்ணா, கொலை பண்ணிட்டு நான் ஜெயிலுக்கு போயி களி திங்கிறது உறுதி,” என்றவாறு சாலாட்சி அங்கிருந்து சென்றாள்.

 

“என்னடா, உன் தங்கச்சி என்னமோ ரகசியம் பேசிட்டு போறாள்?” என்றவாறு மண்சட்டியில் இருந்த குழம்பை மீனோடு இரண்டு கரண்டி மொண்டு தனது தட்டில் போட்டுக் கொண்டவன், அங்கே பானையில் இருந்த களியை அள்ளி தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடும் போது, இரண்டு கிண்ணத்தில் முட்டையை பொரித்துக் கொண்டு வந்து வைத்தாள்.

 

“என் அத்தை வீடுனா வீடு தான் மச்சி… காலையிலேயே மீன் குழம்பு, முட்டை பொரியல், களினு நல்ல வாட்டமா சாப்பிட்டு தான் என் மாமா இன்னும் 16 வயசு குமரன் போலயே இருக்கிறார்,” என்று சாப்பிட்டு ஏப்பம் விட்டவாறு எழுந்தவனோ, முற்றத்தில் கையைக் கழுவிவிட்டு தனது வேஷ்டி நுனியில் வாயைத் துடைத்தவன், “மச்சான், ஒரு முக்கியமான சோலி இருக்கு. அத்தை எங்கேடா?” என்றான்.

 

“தோட்டத்துல தேங்காய் உறிச்சிட்டு இருக்காங்க, போய் பாருடா,” என்றவாறு சர்க்கரையும் எழுந்து கையைக் கழுவினான். “விடுடா, ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம தாய் மாமா மகன் இல்லையா?” என்கவும், “அந்த வளர்ந்த மாடு மண்டையை ஒரு நாளைக்கு நான் பொளக்காமல் இருக்க மாட்டேன், நீ வேணும்னா பாருண்ணா. எப்போ நான் ஆக்கி வச்சாலும் வந்து வக்கணையா தின்னுட்டு, அத்தை கைக்கு வளவி போடணும், ஒட்டியானம் போடணும்னு அந்த மனுஷன் என்னை வெறுப்பேத்துக்கிட்டே இருக்கிறார்,” என்று முறுக்கிக் கொண்ட சாலாட்சியோ, அங்கிருந்த தட்டையும் உணவு பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு போனாள்.

 

தோட்டத்து கதவு வழியாக வெளியே வந்தவன் பார்வையில் அங்கே தேங்காய்கள் முட்டாக குவிக்கப்பட்டிருக்க, இரண்டு பேர் தேங்காய் உரித்துக் கொண்டிருக்கவும், காசியும் அவர் மனைவி பவுனும் வேலையாட்களிடம் பேசிக்கொண்டே வேலை வாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

“ஏ புள்ள பவுனு,” என்றவாறு தனது அத்தையிடம் வந்த தம்புசாமி, “உன் மவளோட கை பக்குவம் அப்படியே உன்னை போல தான் இருக்கு. என்ன, நீ கொஞ்சம் உரப்பை மட்டுப்படுத்துவ, அவ கொஞ்சம் நாக்குக்கு சுள்ளுனு வைக்கிறா,” என்றான்.

 

தனது அண்ணன் மகன் பேசுவதைக் கேட்டு சிரித்த பவுன், “நீ கட்டிக்கிட்டு குடும்பம் பண்ண போறவ தானே, அவ கை பக்குவம் உனக்கு புடிச்சா போதும் ராசா,” என்கவும், “உன்கிட்ட பல வாட்டி சொல்லிட்டேன், சின்ன வயசுல பேசி வைக்காதீங்கனு. வளரும் போது அவங்க மனசுல என்னனு ஆசை வருதுன்னு தெரியாது. உன் மவள் பத்தாவது படிச்சிருக்கா, நான் அஞ்சாவது இன்னும் தாண்டலையே,” என்று தம்புசாமி சொல்லவும், “அனுபவத்துல நீ பெரிய படிப்பு தான் படிச்சிருக்க ராசா, உனக்கு என்ன குறை?” என்று பவுனு சொன்னாள்.

 

“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுனு சும்மாவா சொன்னாங்க?” என்று காசி சிரிக்கவும், “என்னய்யா, உமக்கு ஏத்தமா இருக்கா?” என்று தனது கணவரை பவுன் முறைக்க, “விடு பவுனு விடு… ஆயிரம் தான் இருந்தாலும் உன் புருஷன் தானே,” என்றான்.

 

“ஏம்ல, அத்தைக்கும் மருமவனுக்கும் பொழுது போகலனு இளிச்சவாயன் என் தலைய உருட்டுறீங்களோ?” என்கவும், “ஆமா, இந்த நொய்யா ரொம்ப தான் இளிச்சவாயன்,” என்றவாறு பவுனு தனது இடது பக்க தோளில் தாவங்கட்டையை இடித்துக் கொண்டு சொல்ல, மனைவியின் செயலைப் பார்த்த காசி, “பார்த்துடியம்மா, கழுத்து சுளிக்கிக்க போகுது,” என்றவர், “இன்னைக்கு தானே கபடி போட்டி? இன்னும் கிளம்பாம என்னடா சுத்திக்கிட்டு கிடப்பீங்க? இந்த முறை நெல் மண்டிக்காரன் 100 ரூபாய் சன்மானம் தரானாமே, ஜெயிச்சு வாங்கிட்டு வாங்கய்யா. அந்த ஆனந்தாயி துணை இருப்பாள்,” என்றார்.

 

“ஏ பழனி, அந்த தேங்காயை சரியா உரிக்கல பாரும், பார்த்து செய்யுப்பா,” என்க, “சரி சித்தப்பு, தம்பிக்கும் கையோடு கண்ணாலத்தை முடிச்சிடலாமே,” என்றான்.

 

அந்த நேரம் பார்த்து சுவற்றில் பல்லி கத்தும் சத்தம் கேட்க, “ஆனந்தாயி!” என்றவர், “நீ சொல்வதும் வாஸ்தவம் தான் பழனி. அந்த ஆத்தா தான் உன்னை சொல்ல வச்சிருக்கிறாள் போல…” என்றார்.

 

“ம்கும்… மாமா, கனவுல வந்து ஆத்தா சொன்னா நீ பார்த்த?” என்ற தம்புசாமி, “நானும் நம்ம கனகு விஷயமாக தான் சொல்லிட்டு போக வந்தேன். ஆச்சிக்கு நம்ம சக்குவை கட்டிக்க சம்மதம்,” என்கவும், “என்னடா இது, காலையிலேயே நல்ல செய்தியாக காதில் விழுது!” என்று கணவன் மனைவி இருவரும் கூறினர்.

 

மகன் இரண்டு மாத லீவில் மிலிட்டரியிலிருந்து வந்திருக்கிறான். கையோடு அவனது கல்யாணத்தை முடித்து விடலாமென்று நேற்று காலைதான் தம்பதிகள் இருவரும் பேசிக் கொண்டனர்.

 

செடி வளரும்…

 

error: Alert: Content selection is disabled!!