மந்தாரைச் செடி ஓரத்தில் – 3

 

மந்தாரை 3

 

ஒடிசா-புரி:

 

“மணி 10 ஆகுது, இன்னும் கவின்-நவ்யா வரலையா? பூஜைக்கு நேரமாகி விட்டதே,” என்று கவினின் பாட்டி மருமகளிடம் கேட்க, “நேற்றே நவ்யா கிட்ட சொல்லிட்டேங்க அத்தை. ஒருவேளை ரெடி ஆகிட்டு இருப்பாங்க. பண்டிதர் வரதுக்குள்ள நான் பூஜைக்குத் தேவையானதை எல்லாம் எடுத்து வைக்கிறேன்.”

 

“ஹம், நீ போ,” என முதியவர் சொல்லவும், தலையசைத்துவிட்டு ஸ்டோர் ரூமில் இருக்கும் மணையை எடுப்பதற்கு கதவைத் திறந்து லைட்டைப் போட்டவர், அங்கே யாரோ ஒரு பெண் படுத்துக் கிடப்பதைப் பார்த்து, “யார் இது?”வென சொல்லிக்கொண்டு, குப்புறப் படுத்திருப்பவளைத் திருப்பிப் பார்த்தவர், “நவ்யா!” என்று அதிர்ந்து போனார்.

 

அவரின் சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்தவர்களோ ஸ்டோர் ரூமிற்கு ஓடி வந்தனர். அங்கே மயக்க நிலையில் நவ்யா இருப்பதைப் பார்த்து, “இவள் எப்படி இங்கே?” என்றவர்கள் அவளைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வர…

அதற்குள் யாரோ ஒருவர் தண்ணீர் எடுத்துட்டு வந்து கொடுக்க, அவள் முகத்தில் தெளித்தனர்.

 

“நவ்யா இங்க மயங்கிக் கிடக்கிறாள். அப்போ கவின் எங்கே போனான்?” என்றவாறு கவினின் அம்மாவோ வேகமாகப் படியில் ஏறி மாடியில் இருக்கும் மகனின் ரூமை நோக்கி வந்தவர், “கவின்! கவின்!” என்று ரூம் கதவைத் தட்ட, அது திறக்கவில்லை.

 

“என்னங்க… கவின் கதவைத் திறக்க மாட்டாங்குறான், சீக்கிரம் வாங்க!”ளென்று கீழே இருந்த அவர் கணவருக்குக் குரல் கொடுக்க, வேகமாக மேலே வந்தவர், அவரும் ரூம் கதவைத் தட்ட, அப்போதும் திறக்கவில்லை.

 

“என்னாச்சு?” என்றவாறு மேலே வந்த கவனின் அண்ணன்களிடம் விஷயத்தைச் சொல்ல, இருவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே போக…

 

அங்கே பெட்டின் மேல் உறைந்துபோன இரத்தத்தோடு கவினின் உயிரற்ற உடலைப் பார்த்து அதிர, அவனின் அம்மாவோ மகனின் கோலத்தைக் கண்டு, “இல்லை!” என்றவாறு மயங்கி விழுந்தார்.

 

முதல்நாள் கோலாகலமாகக் கல்யாணம் நடந்த வீடோ, தற்போது அழுகுரலோடு காட்சியளித்தது.

 

மயக்கம் தெளிந்து எழுந்த கல்யாணப் பெண்ணோ, அழுகுரல் சத்தம் கேட்டு, “யாருக்கு என்னாச்சு?” என்று முழித்தவளோ அங்கிருந்த போலிஸ்காரர்களைப் பார்த்துக் குழம்பினாள்.

 

அப்பொழுது அவள் எழுந்துவிட்டதைப் பார்த்த ஒரு போலீஸ்காரர், அவரின் உயரதிகாரியிடம், “சார், அந்தப் பொண்ணு எந்திரிச்சிட்டாங்க,” என்கவும், “ஓஓ,” என்றவாறு அங்கு வந்த இன்ஸ்பெக்டர், “ஹலோ மேடம், ஆர் யு ஓகே?”

 

“எஸ் சார்,” என்றவள் யோசனையோடு அவரைப் பார்க்க, “உங்ககிட்ட சில விஷயம் கேட்கணும். அதை வைத்துதான் கொலை செய்த குற்றவாளியை எங்களால் கண்டுபிடிக்க முடியும்.”

 

“என்ன கொலையா?” என்று அவள் அதிர, “என்னையா, இவங்களுக்கு விஷயம் தெரியாதா?” என்று பக்கத்திலிருந்த ஏட்டுவிடம் கேட்க, “இல்லைங்க சார்… இவங்களுக்கு ‘ஹெவி டோஸ்’ மயக்க மருந்து கொடுத்திருப்பதாக டாக்டர் செக் பண்ணிட்டு சொன்னாங்க. இப்போதான் அவர்களுக்கு மயக்கம் தெளிந்திருக்கு போல…”

 

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், “ஓஓஓ” என்றவாறு தனது நெற்றியைத் தடவியவர், இந்தப் பொண்ணு கிட்ட எப்படி விஷயத்தைச் சொல்வது என்று அவருக்கும் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது.

 

வேறு வழியில்லை! கடமையைச் செய்ததுதானே ஆகவேண்டும் என்று போலீஸ்காரராக யோசித்தவர், “உங்க ஹஸ்பண்ட் கவினை யாரோ கொலை பண்ணிட்டாங்க,” என்கவும், “என்ன சொல்றீங்க!” என்றவளோ மீண்டும் மயங்கி விழுந்தாள்.

 

“ப்ச்… இப்படி ஒரு நிலைமையில் இருந்த பொண்ணு கிட்ட என்ன விசாரணை பண்றது? ஒண்ணுமே புரியவில்லை. விசாரணையை அப்புறம் வச்சுக்கலாம். மத்தபடி வீட்டை நல்லா சோதனை பண்ணுங்க,” என்றவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்கச் சென்றார்.

 

நாட்களும் கடந்து செல்ல, கவினின் கொலை பற்றி எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

 

விசாகப்பட்டினம்:

 

காரின் வேகத்தைப் பார்த்த விக்ரம், “யோவ் மச்சான், தயவு செய்து என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுயா. இல்லன்னா உன் தங்கச்சி இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ரெண்டு பேரையும் பரலோகத்துக்கு அனுப்பிடுவா.

 

கார் போற வேகத்தைப் பார்த்தால் கண்ணு, முழியெல்லாம் பிதுங்கிப் போகுது. தயவுசெய்து உன் மனசுல இருக்குறதைச் சொல்லித் தொலை! அத்தை மகன் வயதில் என்னை விட ரெண்டு வருஷம் பெரியவர்னு கூடப் பார்க்க மாட்டேன்.

 

உன் தங்கச்சி நிதானமாக் கார் ஓட்டுவதற்கு வழி பண்ணு,” என்று விக்ரம் முறைக்க, “ஒரு விதத்துல நீ சொல்றது நியாயம் தான்டா, ஆனால்…” எனச் சந்தர் இழுக்க…

 

“நீயும் கயலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்யா,” என்று மீண்டும் விக்ரம் சொல்ல… “அப்போ நீங்க ரெண்டு பேரும்? உங்களை அப்படியே விட்டுட்டு நாங்கள் மட்டும் குடும்பஸ்தனா செட்டில் ஆகிட்டால் என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்காதாடா? எங்கள் அப்பா அம்மா ஆத்மா என்னை மன்னிக்குமாடா?” என்கும் சந்தரைப் பார்த்துப் பல்லைக் கடித்த விக்ரம், “இந்த மனசாட்சி, மண்ணாங்கட்டி எல்லாம் தூக்கி அந்தப் பக்கம் போடு!”

 

“என்றைக்கு இருந்தாலும் என் பொண்டாட்டி உன் தங்கச்சிதான். இதுல எந்த மாற்றமும் கிடையாது, புரியுதா? இப்போதைக்கு உன் தங்கச்சியை அமைதிப்படுத்த வேண்டியது உங்க கையிலதான் இருக்கு.

 

அவளைப் பற்றி நான் சொல்லிதான் உனக்குத் தெரியணும்னு அவசியம் இல்லை. புரிஞ்சு நடந்து கொள்ளுயா,” என்றவாறு கார் ஓட்டுபவளைப் பார்த்தவனுக்கு, “விக்கி மாமா!” என்கும் அன்பொழுகும் குரல் காதில் ஒலிக்க, அந்த ஆறடி ஆண் மகனின் கண்கள் கலங்கவும், அதை மறைக்க ஜன்னல் பக்கமாய் திரும்பிக் கொண்டான்.

 

இதை முன்னாடி இருக்கும் கண்ணாடி வழியாகப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் வலித்தாலும், எஃகு போலத் தனது வெளிப்புறத் தோற்றத்தை இறுக்கமாக்கினாள்.

 

“சிறிது நிமிடங்கள் வரை அந்தக் காரில் அமைதியே நிலவியது.”

 

தங்கையைப் பற்றித் தெரிந்த சந்தரோ, உறுதியாக ஒரு முடிவை எடுத்தவன், “தங்கம்!” என்க, அந்தப் பெயரைக் கேட்டு, “நோஓஓஓஓஓ!” என்று கத்தியவாறு ‘சடன் பிரேக்’ போட்டு காரை நிறுத்தியவளோ, இடுப்பில் சொருகியிருந்த பிஸ்டலை எடுத்துத் தனது இடது பக்க நெற்றியில் வைக்க…

அதைப் பார்த்த ஆண்கள் இருவரும், “வேண்டாம்!” என்று கத்தினார்கள்.

 

தங்கையின் கோலத்தைக் கண்டவன், “நான் கயலைக் கல்யாணம் பண்ணிக்குறேன்டா. ஆனால், அதற்கு முன்னால் அண்ணனாக நான் செய்ய வேண்டிய கடமை இருக்கு. உனக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் முடிந்ததும் நான் கயலைக் கல்யாணம் பண்ணிக்குறேன். இனி அந்தப் பெயரைச் சொல்லி உன்னை கூப்பிட மாட்டேன். நீயும் என்னை விட்டுப் போயிடாதேடா,” என்று முகத்தை மூடிக்கொண்டு சந்தர் கதறினான்.

 

யாரைச் சமாதானம் பண்ணுவதென்று விக்ரமிற்குக் புரியவில்லை. முதலில் தன்னவளைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்தவன், “முகை!” என்க…

நெற்றியிலிருந்த பிஸ்டலைக் கீழே போட்டவளோ பின்னாடி திரும்பிப் பார்க்க, “கீழே வா,” எனக் கண்களால் பேசியவனோ, அவன் பக்கமிருந்த கதவைத் திறந்து கீழே இறங்க…

மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாய் அவளும் இறங்க, வேகமாகப் போய்த் தன்னவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

இவ்வளவு நேரம் கல்போல் இருந்தவளோ, அந்த வலிமையான நெஞ்சின் மேல் முகத்தைப் புதைத்துக் கொள்ள, கண்ணீர் மட்டும் கணக்கின்றி வழிந்தோடியது.

 

தன்னவள் அழட்டுமென விக்ரமும் அமைதியாகவே இருந்தான். நிமிடங்கள் கடந்து செல்ல, அவளிடம் அழுகை குறைந்தது.

 

பின்னர் தன்னை அணைத்துக்கொண்டு நிற்பவனை அண்ணாந்து பார்த்தவள், “நான் உங்களுக்கு வேண்டாம்,” என்க…

“விக்ரமோ, சரி வேண்டாம்,” என்றான்.

 

“நான் கொலைகாரிங்க,” என்கவும், “ஆமா! ரொம்ப வருஷமா என்னைக் கொன்னிட்டிருக்கும் கொலைகாரிதானே?” என்று அவள் தலையைத் தடவினான்.

 

“எனக்குச் சில கடமை இருக்கு. அதனால் நீங்கள் வேறு நல்ல பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிங்குங்க,” என்கும்போது அவளுக்குத் தொண்டை அடைத்தது.

 

“ஓஓஓஓஓ…!”

 

“சரி டி!”

 

“உன் விருப்பம்தான் என்னோட விருப்பம்.”

 

“தாராளமாகப் பண்ணிக்குறேன் டி.”

 

“நீ சொல்லி நான் கேட்காமல் இருப்பேனா? என்னுடைய டேஸ்ட் உனக்குத்தான் நல்லா தெரியுமே. அதனால், நீ என்ன பண்றேன்னா, எனக்கான பொண்ணை நீயே பார். உன் தலைமையிலே என்னுடைய கல்யாணம் நடக்கட்டும் டி.”

 

“ஏன்னா, என் சந்தோஷம் தானே உனக்கு முக்கியம். அதே போல், உன் ஆசையை நிறைவேற்றுவது இந்த அடியேனின் தலையாய கடமை!”

“சீக்கிரம் பொண்ணு தேடு டி. எனக்கும் வயசு போகுது,” என்கும் விக்ரமை அதிர்வோடு பார்த்தாள் எழில்முகை.

 

செடி வளரும்…

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!