மந்தாரை 5
விசாகப்பட்டினம்:
எழில்முகை அதிர்வோடு விக்ரமைப் பார்த்தாள். அவளது கண்கள் அகல விரிந்திருக்க, “விக்ரம்…” என்று மட்டுமே அவளால் முனக முடிந்தது. அவளது நெற்றியில் துப்பாக்கியை வைத்திருந்த போது கூட அவளது கைகள் நடுங்கவில்லை, ஆனால் விக்ரம் சாதாரணமாக ‘வேறு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்குவேன்’ என்று சொன்ன வார்த்தைகள் அவளது நெஞ்சில் இடியாய் இறங்கியது.
விக்ரம் அவளது அதிர்ச்சியை ரசிப்பது போல் ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்தான். அவளது கன்னங்களை மென்மையாகத் தட்டி, “என்னடி அப்படிப் பார்க்குற? நான் வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது உனக்கு சந்தோஷம் தானே? அப்புறம் ஏன் மூஞ்சி இப்படிப் போகுது?” என்று கேட்டான்.
அவளது மௌனத்தைக் கண்டு விக்ரமின் புன்னகை மறைந்தது. அவளது தோள்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, அவளது கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
“முகை… விளையாடினது போதும். நீ ஒரு கொலைகாரி, உனக்குக் கடமை இருக்கு, அதனால என்னை விட்டுப் போயிடுவேன்னு நீ சொல்வதை நான் கேட்பேன்னு நினைச்சியா? இந்த உலகத்துல நீ யாரை வேணா ஏமாத்தலாம், ஆனா என்னை ஏமாத்த முடியாது டி” என்றான் அழுத்தமான குரலில்.
காரின் கண்ணாடி மேல் தலையைச் சாய்த்து, தன் தங்கையின் விபரீத முடிவால் உடைந்து போயிருந்த சந்தர், மெதுவாகக் காரை விட்டு கீழே இறங்கி வந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன.
“முகை…” என்று சந்தர் அழைக்க, எழில்முகை தன் அண்ணனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“நான் கயலை முறைப்படி கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன்டா. ஆனா, விக்ரம் சொன்னதுதான் என் முடிவு. என் தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்காமல், நான் மட்டும் எப்படிடா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்க முடியும்? ” என்று சந்தர் ஆதங்கத்துடன் கேட்டான்.
எழில்முகை இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளது இடுப்பில் இருந்த பிஸ்டல் இப்போது காரின் தரைப்பகுதியில் கிடந்தது. அவளது ஆழ்மனதிற்குள் புரியில் நடந்த கவினின் கொலையும், அதைச் சுற்றியிருக்கும் மர்மங்களும் வந்து போயின. ‘நான் உங்களுக்கு வேண்டாம்’ என்று அவள் சொன்னதன் பின்னணியில் இருந்த அந்தப் பெரு ரகசியம் அவளது தொண்டைக்குள் முள்ளாய் குத்தியது.
“உங்களுக்கு ஒண்ணுமே புரியல அண்ணா…” என்று முகை தழுதழுத்த குரலில் சொன்னாள். “நான் சாதாரணப் பொண்ணு இல்லை. என் கைகள்ல படிஞ்சிருக்கிற கறை சாதாரணமானது இல்லை. விக்ரம் மாமா, தயவு செஞ்சு என்னை மறந்துடுங்க,” என்று கூறிவிட்டு வேகமாக காரை நோக்கி நடந்தாள்.
ஆனால் விக்ரம் அவளை விடவில்லை. அவளது கையைப் பற்றித் தடுத்து நிறுத்தியவன், “நீ எங்கேயும் போக வேண்டாம். முதல்ல கார்ல ஏறு. விசாகப்பட்டினம் போய்ச் சேர்ற வரைக்கும் நீ கார் ஓட்டக் கூடாது. யோவ் மாமா , நீ வண்டியை எடுயா,” என்று கட்டளையிட்டான்.
முகை எதிர்த்துப் பேச முயன்றாள், ஆனால் விக்ரமின் கண்களில் இருந்த அந்த அதிகாரம் அவளைக் கட்டுப்படுத்தியது. மூவரும் காரில் ஏறினர். இந்த முறை சந்தர் காரை ஓட்ட, விக்ரமும் முகையும் பின்சீட்டில் அமர்ந்திருந்தனர். கார் விசாகப்பட்டினத்தின் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி விரைந்தது.
விக்ரமின் முகம் இப்போது மிகத் தீவிரமாக மாறியிருந்தது. காரில் முகைக்கு அருகே அமர்ந்திருந்த போது, அவளது உடலிலிருந்து வீசிய அந்த மெல்லிய மல்லிகைப் பூ வாசனை அவனது நாசியில் இன்னும் நின்றுகொண்டிருந்தது.
சந்தர் இருவருக்கும் பூனா செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பே வாங்கியிருந்தான். முகையின் மனநிலை மற்றும் அவளது தற்போதைய தவிப்புக்கு விசாகப்பட்டினத்தை விட பூனா நகரே தற்காலிகமாகப் பாதுகாப்பானது என்று அவன் கருதினான்.
ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் வண்டிக்காகக் காத்திருந்தபோது மூவரிடமும் பெரிய அளவில் பேச்சில்லை. ரயில் வந்து நின்றதும், விக்ரமும் முகையும் ஏறுவதற்கு வசதியாக அவர்களின் லக்கேஜ்களை எடுத்து வைத்தான் சந்தர்.
“மச்சான், பத்திரமா போயிட்டு வாங்க. முகை… அண்ணன் சொன்னது ஞாபகம் இருக்கட்டும், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே” என்று சந்தர் விடைபெற, முகை அவனையே வெறித்துப் பார்த்தாள். விக்ரம் அவனது தோளை அழுத்தி விடைபெற்றுக் கொண்டான்.
இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏசி கோச்சின் பர்த் இருக்கும் இடத்திற்கு வந்தனர். விக்ரம் லோயர் பர்த்தையும், முகைக்கு அப்பர் பர்த்தையும் ஒதுக்கியிருந்தான். விக்ரமிடம் இருந்து தப்பிக்க நினைத்தவளுக்கு அது ஒருவகையில் நிம்மதியாக இருந்தது.
வண்டி மெதுவாக விசாகப்பட்டினம் ஸ்டேஷனை விட்டு நகரத் தொடங்கியது. இரவின் இருள் எங்கும் படர்ந்திருக்க, ரயிலின் இரும்புச் சத்தமும், தண்டவாளத்தின் அதிர்வும் மட்டுமே அந்தப் பெட்டிக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.
இருவரும் தங்களின் பர்த்தில் படுத்துக் கொண்டனர். ஆனால் தூக்கம்? அது இருவர் கண்களையும் தழுவ மறுத்து, ஏமாற்றிக் கொண்டிருந்தது.
மேல் பர்த்தில் படுத்திருந்த எழில்முகை, இருட்டில் ரயிலின் கூரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நான் விக்ரம்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்க நினைக்க, விதி என்னை அவன்கிட்டயே கொண்டு வந்து நிறுத்துதே’ என நெஞ்சில் எழுந்த பாரத்தில், அவளது விழியோரத்திலிருந்து ஒரு துளிக் கண்ணீர் காதோரமாக வழிந்தது.
கீழ் பர்த்தில் படுத்திருந்த விக்ரமின் நிலையும் அதுவே. கைகளைக் தலைக்குக் கீழே கொடுத்துக் கொண்டு, தூக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவனது பிசினஸ் மூளையையும் அவனது காதலும் இப்போது வேலை செய்யத் தொடங்கியிருந்தது.
காரில் முகை சொன்ன அந்த வார்த்தை—”நான் கொலைகாரிங்க” என்ற விபரீத ஒப்புதல் அவனது காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
‘முகை… நீ என்னைக் கொன்ன கொலைகாரிதான்.உன்னை இந்த விக்ரம் அவ்வளவு சீக்கிரம் விட்டுட மாட்டேன் டி. நீ எவ்வளவு பெரிய பாதாளத்துல இருந்தாலும், உன்னை என் அன்பால மீட்டுக் கொண்டு வருவேன்’ என்று தனக்குள்ளேயே உறுதி பூண்டான்.
ரயில் பூனாவை நோக்கித் தன் வேகத்தை அதிகரித்துக் கொண்டிருக்க, அந்த இரு இருண்ட பர்த்துகளிலும் இரண்டு இதயங்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, விடை தெரியாத மர்மங்களோடும் மாறாத காதலோடும் தவித்துக் கொண்டிருந்தன.
மறுபுறம், ஒடிசா-புரி:
கவினின் கொலை நடந்து சில நாட்கள் கடந்திருந்தாலும், அந்த வீட்டில் இன்னும் சோகம் மறையவில்லை. மணக்கோலத்தோடு கணவனை இழந்த நவ்யா, பித்துப் பிடித்தவள் போல் ஒரு அறையில் அமர்ந்திருந்தாள். அவளது கண்களில் கண்ணீர் வற்றிப்போயிருந்தது.
அப்போது அந்த வழக்கின் இன்ஸ்பெக்டர் மீண்டும் கவினின் வீட்டிற்கு வந்தார். அவரிடம் கவினின் அப்பாவும் அண்ணன்களும் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.
“சார்… கவினை யார் கொலை பண்ணாங்கன்னு ஏதாச்சும் துப்பு கிடைச்சதா சார்? எங்க குடும்பத்துக்கு யாரோடயும் எந்தப் பகையும் இல்லையே…” என்று கவினின் அப்பா கைகளைக் கூப்பிக் கேட்டார்.
இன்ஸ்பெக்டர் தனது தொப்பியை கழற்றி மேஜை மேல் வைத்தார். “விசாரணை போய்க்கிட்டு தான் இருக்கு சார். ஆனா, கொலையாளி ரொம்பப் புத்திசாலித்தனமா வேலை செய்திருக்கான். வீட்ல எந்த ஒரு கைரேகையும் கிடைக்கல”.
“நவ்யா மேடமிற்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்து சாதாரணமானது இல்லை. அது டாக்டர்ஸ் பயன்படுத்தக்கூடிய ‘ஹெவி டோஸ்’ கெமிக்கல். சாதாரண ஆளால அதை வாங்க முடியாது. நவ்யா மேடம் இப்போ பேசக் கூடிய நிலைமையில இருக்காங்களா? அவங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும்,” என்றார் இன்ஸ்பெக்டர்.
கவினின் அம்மா நவ்யாவை ஹாலிற்கு அழைத்து வந்தார். நவ்யா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல், ஒரு ரோபோ போல வந்து அமர்ந்தாள்.
“மேடம்… அன்னைக்கு ராத்திரி என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா? நீங்க எப்படி ஸ்டோர் ரூமுக்கு போனீங்க?” என்று இன்ஸ்பெக்டர் கனிவோடு கேட்டார்.
நவ்யா மெதுவாகத் தலைநிமிர்ந்தாள். அவளது நினைவுகள் அந்தப் பயங்கரமான இரவை நோக்கிச் சென்றன. “அன்னைக்கு… அன்னைக்கு நைட்டு நான் ரூம்ல கவினுக்காகக் காத்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஜன்னல் வழியா ஏதோ சத்தம் கேட்டுச்சு. நான் என்னன்னு பார்க்கப் போனப்போ… யாரோ ஒரு உருவம் கருப்பு டிரஸ் போட்டு முகத்தை மூடியிருந்தது. நான் கத்த வர்றதுக்குள்ள என் மூக்குல ஏதோ ஒரு துணியை வச்சு அமுத்தினாங்க. எனக்கு அப்படியே மயக்கம் வந்துடுச்சு. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியாது சார்…” என்று கூறிவிட்டு நவ்யா ஓவென்று அழத் தொடங்கினாள்.
“அந்த உருவம் ஆணா, பெண்ணா மேடம்? ஏதாச்சும் அடையாளம்?” என்று இன்ஸ்பெக்டர் அவசரமாகக் கேட்டார்.
நவ்யா அழுகைக்கு நடுவே யோசித்தாள். “அந்த உருவம் என்னை விடக் கொஞ்சம் உயரமா இருந்தது. ஆனா… அவங்க உடம்புல இருந்து ஒரு மெல்லிய மல்லிகைப் பூ வாசனை வந்தது மாதிரி ஞாபகம் இருக்கு சார்…” என்றாள்.
மல்லிகைப் பூ வாசனை என்றதும் இன்ஸ்பெக்டரின் புருவங்கள் சுருங்கின. ‘அப்படியானால் கொலை செய்தது ஒரு பெண்ணா?’ என்ற சந்தேகம் அவருக்குள் வலுத்தது.
சார் இப்போது ஆண்களும் மல்லிகைப் பூ செண்ட் பயன்படுத்துறாங்களே என்று ஏட்டு சொல்லவும், யோசனையில் இருந்த இன்ஸ்பெக்டர் அதுவும் வாஸ்தவம் தானென்றார்.
செடி வளரும்…

