மயங்கினேன் மழைச்சிலையே – 14

அத்தியாயம் – 14

சக்தி தனது மடிக்கணினியில் வெகு மும்முரமாக கோடிங் செய்து கொண்டிருக்க, வெகு நாட்களுக்கு பிறகு வந்த வீடியோ காலில் தீவிரமாக இருந்த அவளது முகம் பிரகாசமானது.

“ஹே என்ன மேன்!! வாட் அ சர்ப்ரைஸ்! என்னடா இந்நேரத்துல கால் பண்ணி இருக்க? அங்க இப்பதானே விடிஞ்சிருக்கும். இந்த நேரத்துல எல்லாம் நீ முழிப்பியா?!” சந்தோஷக் கூச்சலிட்டு கேள்விகளை அடுக்கினாள்.

“ஹே.. ஃபோன் பண்ணுனா முதல்ல ஹலோவாவது சொல்லுடி. அப்றம் உன் இன்வஸ்டிகேஷனை ஆரம்பிக்கலாம்.” அவளது உற்சாகத்தில் முகம் மலர புன்னகைத்து அவளை கலாய்த்தான் அனிருத்.

“ஹலோ சொல்லி நிதானமா பேசற அளவுக்கு சார் அவைலபிளா இருக்கனுமே! நீங்களே மனசு வந்து எப்பயாவது தான் வீடியோ கால் பண்றீங்க. அதுலேயும் ஹலோ சொல்லி டைம் வேஸ்ட் பண்ண முடியுமா?” அவனை வாரினாள் சக்தி.

“ஸாரிடா சக்தி! இங்க தொடர்ந்து வொர்க் ப்ரஷர், அதான்.. அதுசரி, அன்னிக்கு கால் பேசுனப்ப, உலகமே வெறுத்து போன மாதிரி டன் கணக்குல சோகமா பிழிஞ்சி தள்ளுனீங்க மேடம்,”

“இன்னிக்கு என்னமோ முகத்துல தவுசண்ட் வோல்ட் பல்பு பிரகாசமா எரியற மாதிரி இருக்கே!” அவளது மலர்ந்த முகத்தைக் கண்டு கேலியாகக் கேட்டாலும் அவனது மனம் நிம்மதியாக இருந்தது.

“அதை ஏன்டா கேட்கற! இந்த ஷிஃபூ மாஸ்டர் திடீர்னு முகத்தை தூக்கி வச்சுட்டு சுத்திட்டு இருந்தான். காரணம் ஏன்னு ஒரு மண்ணும் புரியல. அவனோட பேசி வம்பிழுக்காம இருக்க முடியலைடா. ”

“அவன் உர்ருனு கோபமா இருந்தாக்கூட சமாளிச்சுடலாம் போல, ஆனா மனசுல எதையோ நினைச்சுட்டு என்னை அவாய்ட் பண்ணிட்டு இருந்தான். அதான் ஒரே அப்செட்.” சக்தி பேசப்பேச அனிருத் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அப்புறம் சரிதான் போடானு நானும் முறுக்கிட்டு இருந்தா, அன்னிக்கு ஆஃபிஸ்க்கு போனப்ப கால் மேல கால் பண்ணுனான்!” என ஆரம்பித்து அன்று அவன் கட்டியணைத்து முத்தமிட்டதை எடிட் செய்துவிட்டு அன்பு அவளை டி போட்டு பேசியது வரை நடந்ததை விளக்கமாகக் கூறியவள்,

அதன்பிறகு மீண்டும் அவன் பேசாமல் இருந்ததில் வெறுமையாக உணர்ந்தவள் அவனிடம் சென்று சமாதானம் செய்து அவனை வழக்கமாக பேச வைத்ததையும், தற்போது எல்லாம் பழையபடி இயல்புக்கு வந்ததில் மனம் மகிழ்வாக இருப்பதாகவும் மடை திறந்த வெள்ளமாக மனதிலிருந்து கொட்டினாள்.

அவள் பேசுவதை இடையிடாமல் தீவிரமாகக் கேட்ட அனிருத், “லவ்வுல விழுந்துட்டியாடா சக்தி?” புன்சிரிப்புடன் வினவ, அதைக்கேட்ட சக்தி பேச்சற்று திகைப்படைந்தாள்.

மேலும் தொடர்ந்த அனிருத், “ஐ கெஸ் அவருமே உன்னை விரும்புறாருனு நினைக்கிறேன்.” தனது யூகத்தைச் சொல்ல, அதே திகைப்பு மாறாமல் விழித்திருந்தாள் சக்தி.

“என்..என்னடா என்னென்னமோ சொல்ற?!” ஆச்சர்யமாக திக்கித் திணறிக் கேட்ட சக்தியிடம் “அன்புவைப் பற்றி பேசும்போதே உன் கண்ணுல காதல் மின்னுதுடா. அவரோட சின்ன முக சுணக்கம் கூட உன்னை ரொம்ப பாதிக்குதுனு நினைக்கிறேன். நீயே யோசிச்சுப் பாரு உனக்கே புரியும்.” என்றான் அவன்.

சில நொடிகள் யோசித்து தன்னைத் தெளிந்தவள் , “அவரும் என்னை விரும்புறாருனு எதை வைச்சு அவ்வளவு உறுதியா சொல்ற அனி?!” தனது அடுத்தக் கேள்வியைக் கேட்டாள்.

“இதுவரை உங்கிட்ட வித்தியாசமா நடந்துக்காத அன்பு திடீர்னு உன்னை தவிர்க்கற மாதிரி மாறிப் போனதுக்கு என்ன அர்த்தம்?” என்றவன், “ஏன் சக்தி நானும் தான் உன்னை அப்பப்போ டி போட்டு பேசுறேன்.” அவளுக்கு உணர்த்த குறிப்பாகக் கேட்டான்.

“அட, அது நீ உரிமையில கூப்பிடுறதுடா..” என பேச்சைப் பாதியில் நிறுத்தியவளுக்கு அன்புவின் அன்றைய தின செய்கையில் ஏதோ பொறி தட்டியது. அவள் யோசிப்பதை அனிருத்தும் உணர்ந்து கொண்டான்.

மேலே பார்த்து தாடையில் விரலால் தேய்த்து யோசித்த சக்தி, “ஒருவேளை.. அதுவா இருக்குமோ!?” தன் சிந்தனையை வாய்விட்டே அவனிடம் கேட்க, இப்போது சத்தமாகவே சிரித்தான் அனிருத்.

“என் செல்ல மக்கு பிளாஸ்டர்! இருக்குமோ இல்ல கன்ஃபர்மா அதே தான். இன்னுமா உனக்கு புரியல மரமண்டை!?” சிரிப்புடன் அனிருத் அவளை திட்டிவிட்டு,

“மனசுல காதல் இல்லாதப்ப உங்கிட்ட இயல்பா பழக முடிஞ்ச அவரால, காதல் வந்ததும் முடியல போல, மே பி.. நீ எந்தவித சலனமும் இல்லாம இயல்பா பழகறதால தன்னை கன்ட்ரோல் பண்ணறதுக்காக உங்கிட்ட விலகலை காட்டி இருப்பாரு.” அன்புவின் மனதைப் படித்தது போல பேசினான் அனிருத்.

அனிருத் பேசிய அனைத்தையும் அன்புவின் செயல்களுடன் ஒப்பிட்டு பார்த்தவளுக்கு அவனது நடவடிக்கை எப்போதிருந்து மாறியது எனத் தொடங்கிய சக்தியின் சிந்தனை அன்றைய தினத்திற்கு வந்தது.

அவளை காணாமல் பரிதவித்து, அன்று அவளை கட்டியணைத்த அன்பு தன் காதலைச் சொன்னதும், அவள் வீட்டை விட்டுச் சென்று விட்டாளோ என்ற அவனது அந்த தவிப்பு என எல்லாம் அவளது நினைவில் வந்தது.

“அட ஆமாடா! அன்னிக்கே என்னைப் பார்த்ததும் அவர் ரொம்ப எமோஷனலாகி என்னை கட்டிப்பிடிச்சு அதைத்தான் சொன்ன மாதிரி இருந்துச்சு.” எடிட் செய்த விசயத்தை வாய்தவறி உளறி விட்டாள்.

” ஓஹோ! கட்டியெல்லாம் பிடிச்சாச்சா!!? அதுசரி, இப்ப நீயும் அவரை லவ் பண்றத உணர்ந்துட்ட வேற, எதுக்கும் கொஞ்சம் கவனமாவே இரு தாயே! அப்புறம் உங்கப்பாவை எப்படி சமாளிக்கறது?” பேச்சுவாக்கில் அவளது தந்தையை நினைவூட்டி விட்டான்.

அதுவரை அன்புமதியின் காதலை உணர்ந்து மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க பூவாக மலர்ந்திருந்த அவளது முகம் சட்டென இருளடைய, அவளது தந்தையைப் பற்றிய பேச்சை ஏன் இப்போது எடுத்தோம் என மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான் அனிருத்,

“அப்பா இன்னமும் அதே மாதிரி தான் இருக்காரா அனி?! அங்க இன்னமும் நிலைமை சரியாகலையா?” சற்று கலக்கமாக அவள் கேட்க,

“நீ அதைப் பற்றி வொர்ரி பண்ணிக்காத சக்தி. எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்.” என சமாதானம் கூறினாலும் அவள் முகம் தெளிவடையவில்லை.

“சரி, உன் ஆளு வீட்ல எல்லாரும் எப்படி? அவங்களை பற்றி உனக்கு எதாவது தெரியுமா? அவங்ககூட என்னிக்காவது அட்லீஸ்ட் பேசியாவது இருக்கியா?” குறும்புடன் கண்ணடித்து பேச்சை மாற்ற முயன்றான்.

அன்புவின் பெற்றோர் பற்றி அனிருத் நினைவூட்டவும் அதுவரை தந்தையை எண்ணி கலங்கி இருந்தவள், அவனது பெற்றோர் திடீரென வீட்டிற்கு வந்தன்று நடந்த கூத்தைக் கூறிச் சிரித்தாள்.

“அடிப்பாவி! உன் வருங்கால மாம..னாரை நார்நாராக்கிட்ட போல, பாவம் மனுசன் ஃப்யூச்சர்ல உங்கிட்ட சிக்கிட்டு சின்னபின்னமாக போறாரு.” வாய்மீது கைவைத்து வியந்து விளையாட்டாக பயந்தது போல நடிக்க, பொங்கிச் சிரித்தாள் சக்தி.

சரியாக அந்த நேரம் உள்ளே வந்த அன்பு அவளது அறை வாயிலில் நிற்பது அனிருத்திற்கு தெரிய, யுவசக்தி லேப்டாப்பிற்கு எதிரே அமர்ந்திருந்ததால் அவளுக்கு தெரியவில்லை.

“அச்சோ கடவுளே! உன்னோட பெரிய இம்சைடா.” என சலித்தவள், “லவ் யூடா அனி!” அவனது கேலியில் அவளது மனநிலையை மாற்ற முயன்ற அனிருத்தின் அன்பை எண்ணிக் கூறியவள்,

சிரிப்புடன் திரும்பி அன்புவை கவனித்துவிட, அவள் கூறியதில் அன்புவின் முகம் பேயறைந்தது போலானதை குறித்துக் கொண்ட அனிருத், அவனை இன்னமும் புகையவிட வேண்டி அவளிடம் உரிமையாகப் பேசி பாட்டெல்லாம் பாடிக் கொண்டிருந்தான்.

அன்புவை கண்டு மலர்ந்த முகத்துடன், “ஓகே அனி! நான் அப்றம் பேசறேன்.” என்றவளுக்கு அனிருத்தின் கேலியான பாடலில் வெட்கம் மேலிட “போடா” என அழைப்பை துண்டித்துவிட்டு அன்புவைத் தேடி வேகமாக வெளியே வந்தாள்.

‘இப்பதானே வந்தாரு! அதுக்குள்ள எங்க போனாரு?’ என்ற யோசனையோடு வந்தவள் கிட்சன், பால்கனி என எங்கும் தேடி அவன் இல்லாததால் ‘ஃப்ரெஷ் அப் ஆகிட்டு இருப்பார் போல’ என்றெண்ணிக் கொண்டு ஸோஃபாவில் வந்தமர்ந்தாள்.

அன்புவைப் பற்றியே எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு இதுநாள்வரை அவனது அந்த பொருள் விளங்காத பார்வைக்கான அர்த்தம் தற்போது புரிந்து, உள்ளம் ஒருவித கிளர்ச்சியில் துள்ளியது.

‘இந்த ஷிஃபூ மாஸ்டர் காதலா பார்த்ததைக் கூட புரியாத தத்தி மாதிரி இருந்திருக்கியே சக்தி! அதுசரி, அவர் காதலைச் சொன்னதைக் கூட கவனிக்காத பக்கி தானே நீ! உனக்கு இதெல்லாம் என்ன சாதாரணம்!’ தன்னைத்தானே திட்டிக் கொண்டு வெட்கப் புன்னகையுடன் இருந்தாள்.

சரியாக அதேசமயம் வெளியே வந்த அன்பு, வெட்கச்சிரிப்புடன் முகம் விகசிக்க அமர்ந்திருந்தவளைக் கண்டு வீடியோ காலில் பேசியவனை எண்ணித்தான் மயக்கத்தில் இருக்கிறாள் என்றெண்ணி கடுப்பாகி கண்கள் மூடித் திறந்து பெருமூச்செறிந்தபடி வேகமாக கிட்சனுக்குள் சென்றான்.

அவன் உள்ளே செல்வதைக் கண்ட யுவசக்தி, அவனைத் தேடி கிட்சன் வாசலில் வந்து நின்றவள் உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவனை சில நொடிகள் ரசித்துப் பார்த்தபடி நிற்க, அவனோ முகத்தில் கடுமையுடன் இருந்தான்.

அவன் மீதான காதலை உணர்ந்த பிறகு அன்புவிடம் பேசவே அவளுக்கு தடுமாற்றம். இருப்பினும் அவனிடம் பேச்சுக் கொடுக்க விரும்பிய சக்தி, “உங்களுக்கு ஆலு பராத்தா செய்யத் தெரியுமா லவ்?” அந்த லவ்வில் மயக்கத்துடன் அழுத்தம் கூட்டிக் கேட்டாள்.

அவள்மீது கோபத்தில் இருந்தவன் அதை எங்கே கவனித்தான், “எனக்கு அதெல்லாம் செய்யத் தெரியாது, போய் உன்னோட ஹனி கிட்டயே ரெசிபி கேட்டு செய்யி.” பொறாமையில் பொசுங்கி எரிந்து விழுந்தான்.

“ஹனியா!!? ஓஓ! அனியை சொல்றீங்களா? அவன் ஹனி இல்ல அனி, அனிருத்.” தன்னவனின் பொறாமையை ரசித்தபடி அனிருத்தின் பெயரை விளக்கமாக அவள் சொல்ல, பயலுக்கு இன்னமும் கடுப்பானது.

“அவன் பேர் என்னவா இருந்தா எனக்கென்ன! உனக்கு தேவையானதை உன் லவ்வர்கிட்டயே போய் கேளு.” மீண்டும் சூடான பதில் அவனிடம்.

“அனிருத் ஒன்னும் என் லவ்வர் கிடையாது. அவன் என்னோட பிரதர்.” அன்புவின் முகத்தையே அழுத்தமாகப் பார்த்து அவள் சொல்ல, “யாரா இருந்தா எனக்..” கோபத்தில் வேகமாகக் கூற வந்தவன் பட்டென பேச்சை நிறுத்தித் திரும்பினான்.

இருண்ட வானில் தோன்றும் வானவேடிக்கையில் மலரும் சிறுபிள்ளையின் முகம் போல கண்கள் ஒளிர, “என்ன சொன்ன?! அவன் உன் பிரதரா!!?” தான் கேட்டது சரிதானா என்பதை உறுதிப்படுத்தக் கேட்டான் அவன்.

அவனது உணர்வுகளை அவதானித்து கண்கள் சிமிட்டி ஆமென்று தலையசைத்தவள், “உங்களுக்கு ஆலு பராத்தா செய்யத் தெரியுமா, தெரியாதா? லவ்வர்கிட்ட கேளு சொல்லாதீங்க.” சீரியஸாகச் சொன்னவள்,

“நான் என் லவ்வர்கிட்ட தான் கேட்கறேன்.” கண்களில் குறும்புடன் காதலாக சக்தி சொல்ல அடுத்த இனிய அதிர்ச்சி அவனுக்கு.

அதுவரை நெஞ்சில் பாறையாக அழுத்திய பாரம் எல்லாம் பஞ்சாய் பறந்துவிட, உதடு கடித்துக் கொண்டு ஆனந்தமாக கண்கள் விரிய, தன் கட்டுப்பாட்டை மீறி இதழ்களில் உதிரும் புன்னகையுடன் உணர்வுகளை அடக்கப் போராடிக் கொண்டிருந்தான் அவன்.

வெயிலும் மழையும் இணையும் நொடியில் தோன்றும் அழகு மழைச்சிலையான வானவில்லைப் போல், ஒளிரும் புன்னகைடன் நின்றிருந்தவளை உள்ளே பொங்கிய காதல் கரையுடைக்க ஒரே எட்டில் நெருங்கி, இறுக அணைத்துக் கொண்டான் அன்புமதி.

error: Alert: Content selection is disabled!!