மயங்கினேன் மழைச்சிலையே – 15

அத்தியாயம் – 15

அன்புவின் முகத்தில் வந்து போன உணர்வுகளை ரசித்துக் கொண்டிருந்த சக்தி அவனது திடீர் அணைப்பில் ‘ஹக்’ என அதிர்ந்து விழி விரிய நின்றாள்.

அன்று காரணம் புரியாத அவனது தவிப்பும் அந்த அணைப்பும் அவளை சிலையென சமையச் செய்ய, இன்று காதலை உணர்ந்தவளுக்கு அவனது அணைப்பு சுகமாகதொரு இம்சையாக இருந்தது.

அவளை அணைத்தவன் அவளது கன்னங்களை கைகளில் தாங்கி அவள் விழிகளில் கலந்து ஆர்வ மிகுதியில் அவள் இதழ் நோக்கிக் குனிய, இருவரின் இதழ்களுக்கும் இடையே நூலிழை இடைவெளியில் கையை கொண்டு வந்து தடுத்து மறுப்பாகத் தலையசைத்தாள் சக்தி.

அவளது வெட்கம் கண்டு “சரி, கிஸ் பண்ணல. போதுமா?!” மென்னகை புரிந்தவனிடமிருந்து அவள் விலகப் பார்க்க, அவளை தன் கைகளுக்குள் இறுக்கி கொண்டவன்,

“போகாதேடி. கிஸ் பண்ணல பட், ரெண்டு நிமிஷம் இப்படியே இரேன். ப்ளீஸ் எனக்காக!” கண்களில் கெஞ்சலுடன் கேட்டவன் அவளது தோள் வளைவில் தலைசாய்த்து இளைப்பாறினான்.

“உனக்கு எம்மேல எந்த ஃபீலிங்குமே இல்லையோனு நினைச்சு பலநாள் ராத்திரி தனிமையில தூக்கம் இல்லாம மனசு வெம்பி இருக்கேன்டி.” என்றவன் அணைப்பை இறுக்கி தன் தவிப்பை வெளிப்படுத்தினான்.

“ஒருவேளை உனக்கு எம்மேல காதலே வராம போனால்.. நீ என்னை விட்டு போயிட்டா.. அப்படி நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சே பார்க்க முடியல யுவி!” அவளை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொள்ளும் தவிப்புடன் இறுக்கி அணைத்து மனதிலிருந்து பேசிக் கொண்டிருந்தான்.

அவளுக்கான அவனது தவிப்பை அவன் விவரிக்க அதைக்கேட்டு வியந்து அவனது அணைப்பிற்குள் இருந்த சக்தி, அன்புவின் அளவில்லாத காதலில் மெய்மறந்து உருகிக் கரைந்தாள்.

‘இவன் இந்தளவு என்னை காதலிக்க அப்படி என்ன நான் செய்து விட்டேன்!?’ வியப்புடன் நெஞ்சம் நிறைத்த அக்கேள்வியை அவனை அணைத்துக் கொண்டு வாய்விட்டே கேட்டாள்.

“நீங்க இப்படி உருகி உருகி காதலிக்கற அளவுக்கு நான் அப்படி என்ன செய்தேன் மதி?! உங்கள எப்பவுமே கோபப்படுத்திட்டு தான் இருந்தேன்.” சிறு குற்றக் குறுகுறுப்புடன் மெல்லிய குரலில் கூறினாள் அவள்.

அதில் நிமிர்ந்து அவளது முகத்தைக் கண்ட அன்புவின் இதழ்களில் மந்தகாச புன்னகை மலர, “அதுல தானேடி என்னை மயக்குன! என்னோட எந்த கோபமும் உன்னை பாதிக்காத மாதிரி இயல்பா கடந்துட்டு ஒவ்வொரு முறையும் துள்ளலோட என்னைத் தேடி வர்ற தேவதை யுவி நீ!”

“உனக்கு ஒன்னு தெரியுமா? உம்மேல இருக்கற காதலை நான் உணர்ந்த பிறகு, எனக்கு உன்னை பார்க்கற ஒவ்வொரு முறையும் உன்னைத் தவிர வேறெதும் பெருசா தெரியல.” கண்கள் சிமிட்டிக் கூறினான்.

“கலைஞ்சு கிடக்கிற அந்த ரூம் கூட என் மூளையில் பதியாம என் கண்கள் அவளை மட்டுமே ஏக்கத்தோட தேடி துலாவுற மாதிரி செய்துட்டாள் இந்த என் செல்ல ராட்சசி!” சிரிப்புடன் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

அன்புவின் அதீத காதலை தாங்க முடியாமல் சக்தியின் விழிகள் கலங்கிட, “யார் எதிர்த்தாலும், என்ன சொன்னாலும் எம்மேல இருக்கற உங்களோட இந்த காதல் எந்த சூழ்நிலையிலும் கடைசிவரை இப்படியே மாறாமல் இருக்குமா மதி?! ” எதையோ நினைத்தவள் அவனது காதலை இழந்து விடுவோமோ என்ற தவிப்புடன் விழிகள் அலைபாயக் கேட்டாள்.

அவளது அலைபாயும் விழிகளில் மென்மையாக முத்தமிட்ட அன்பு,” என் அப்பாவை நினைச்சு கலங்குறியா யுவி?” எனக் கேட்க, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

‘உங்க வீட்டை நினைச்சு பயப்படலை மதி. என் வீட்டைப் பற்றி நினைச்சா தான் என் நெஞ்சமெல்லாம் நடுங்குது!’ மனதிற்குள் அவனுக்கு பதிலளித்தவள் பயத்தில் அவனை இறுக அணைத்தாள்.

அவளது அணைப்பில் நடுக்கத்தை உணர்ந்தவன் அவன் சொன்ன காரணம் தான் என்று நினைத்து “அவரை எப்படி சமாளிச்சு சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும்டா. நீ அதை நினைச்சு பயப்படாதே.” அவளது கண்களை நேருக்கு நேர் சந்தித்து அவளுக்கு தைரியம் கூறினான்.

அப்போதும் அவளது தெளிவில்லாத முகம் கண்டு, “என் உயிர் இருக்கிறவரை என்னோட இந்த காதல் மாறாது கண்ணம்மா! போகப் போக நீயே அதை புரிஞ்சுப்ப.” விழிகளில் கலந்து நெற்றியில் முத்தமிட்டு காதலாகி கசிந்துருகி கூறியவன் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பில் அடங்கியவள் மனம் நிம்மதியில் திளைக்க, அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அது இருவருக்குமே உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைய, நொடிகள் நிமிடங்களாக கடந்தன.

” பசிக்குது மதி! ஆலு பராத்தா சாப்பிடனும் போல இருக்கு.” என்ற சக்தி அவனிடமிருந்து விலகி, கண்கள் சுருக்கி வயிற்றைத் தடவிக் கூற அவளது செய்கையில் உருகிப் போனான் அன்பு.

“தோ, டென் மினிட்ஸ்! இப்பவே செய்து தர்றேன்டி செல்லம்!” கன்னம் கிள்ளி அழுந்த முத்தமிட்டவன் வேகமாக திரும்பி அதற்கான பொருட்களை எடுத்து சமைக்கத் தொடங்க, அவன் வேலை செய்யும் பாங்கினை ஓரமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஒருபுறம் உருளைக்கிழங்கை எடுத்து குக்கரில் போட்டு அடுப்பில் வேகவைத்துவிட்டு, மறுபுறம் ஆலு பராத்தா செய்ய வேகமாக மாவை பிசைந்து என அவன் பரபரப்பாக வேலையைச் செய்ய, அவள் வேடிக்கை பார்ப்பதைக் கண்டவன்,

“மகாராணி என்னை வேடிக்கை பார்க்கறதை விட்டுட்டு எனக்கு ஹெல்ப் பண்ணுனா சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.” புருவம் உயர்த்தி சற்று கறாராகக் கூறினான்.

“மன்னிச்சூ.. ஷிஃபூ மாஸ்டர்! ஐம் ஆன்!” சல்யூட் வைத்துக் கூறியவள் அவனுக்கு உதவி செய்ததை விட, மாவை சமையல் மேடையில் சிதறி.. உருளைக்கிழங்கு மசாலா வைத்து விரித்த பராத்தாவை எடுத்துத் தருகிறேன் என்று கிழித்து, இப்படி அவனை டென்சனாக்கியது தான் அதிகம்.

“யம்மா தாயே! நீ உதவியே செய்ய வேணாம். நானே முடிச்சுட்டு கூப்பிடறேன், வந்து கொட்டிக்க.” கையெடுத்துக் கும்பிட்டு அவளை கிட்சனை விட்டு வெளியே தள்ளி அனுப்பிவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் வேலையைத் தொடர்ந்தான்.

அவனது எரிச்சலான குரலில் வழக்கம் போல் எந்த பாதிப்புமடையாத சக்தி, “ஓகே மாஸ்டர்!” விறைப்பாக கூறிவிட்டு துள்ளலுடன் ஓடியவள், டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு குதூகளித்து தாளம் தட்டிக் கொண்டிருக்க, உள்ளிருந்து அதற்கும் ஒரு அதட்டல் வந்தது அவனிடமிருந்து.

ஒருவழியாக சமையல் முடித்து வாய் ஓயாமல் பேசியவளின் வாயில் ஆசையாக உணவை ஊட்டிவிட்டு, அவனும் சாப்பிட்டபிறகு அனைத்தையும் சுத்தம் செய்து முடித்து சிறிது நேரம் ஒருவர் மீது ஒருவர் தலை சாய்த்து ஓய்வாக அமர்ந்தனர்.

“நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்கக் கூடாது.” என்ற பீடிகையுடன் தொடங்கியவளை அவன் என்னவென்று நிமிர்ந்து பார்க்க, “இல்ல, நீங்க இப்படி சின்ன சின்ன விசயத்துக்கு கூட டென்சன் ஆகிறது உங்க உடம்புக்கு நல்லதில்ல மதி.”

சிறிய பொருள் என்றாலும் அது சரியாக இல்லாமல் இருந்தாலும், சிறிதளவு அழுக்காக இருந்தாலும் அவனது மாறும் நடவடிக்கை பற்றி எடுத்துரைத்து”இதுக்கு டாக்டரை கண்சல்ட் பண்ணி கவுன்சிலிங் மாதிரி ட்ரை பண்ணலாமேப்பா!” தயக்கத்துடன் கூறியவள்,

“என்னால உங்கள புரிஞ்சுக்க முடியுது மதி. ஆனா இப்படி அடிக்கடி டென்சன் ஆகிறது உங்க ஹெல்த்தை பாதிக்குமே, அதனால்தான் சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க.” அவன் அவளை தவறாக எண்ணிவிடக் கூடாதே என்ற தவிப்புடன் முடித்தாள் சக்தி.

“எனக்கும் புரியுதுடா. ஆனா என்னால என்னை மாத்திக்க முடியல யுவி. சில நேரங்கள்ல எல்லாரையும் போல நம்மால இயல்பா இருக்க முடியலையே, அப்படி சின்னச்சின்ன தவறுகளை கடந்து போற மாதிரி இருந்தா எங்கூடவும் எல்லாரும் நார்மலா பேசி பழகுவாங்கனு நினைச்சு ஏங்கி இருக்கேன்.”

“அதை நினைச்சு ரொம்ப டிப்ரஷஸ்ட்ஆ ஃபீலாகி தான், இப்ப கொஞ்ச நாளா நீ சொன்ன மாதிரி கவுன்சிலிங் போயிட்டு இருக்கேன். சீக்கிரமே குணமாகிடுவேன்.” தன்மீது அக்கறை கொண்ட அவளது அன்பில் கனிந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விளக்கினான்.

“ஐய்யே! குணமாக இதென்ன வியாதியா? லூசுத்தனமா பேசாதே மேன்! அது ஒரு டிஸாடர் அவ்வளவு தான். மனசளவுல யோசிக்கறத மாத்துனா சரியா வந்துடும்.” அவனது தலையில் லேசாக தட்டி அதட்டினாள்.

“சரிங்க டாக்டரம்மா! நான் இனிமே அப்படி சொல்லல போதுமா?” அவனை கடிந்து கொண்ட அவளது அன்பில் மலர்ந்த சிரிப்புடன் நெற்றி முட்டி அவளை அணைத்தவாறு மனம் அமைதியில் நிறைந்திருக்க அதை அனுபவித்தபடி அமர்ந்திருந்தவன்,

திடுமென,” ஆமா யுவி, நீ வீடியோ கால்ல பேசிட்டு இருந்தவன் உன் பிரதர்னு சொன்னியே ஆனா அன்னிக்கு நீ உன் வீட்டைப் பற்றி சொன்னப்ப அப்பாவை மட்டும் தானே சொன்ன, இவனைப் பற்றி எதுவும் சொல்லலையே!?” அன்பு ஆர்வமாகக் கேட்க, சக்தியின் முகம் கலவரமானது.

எங்கே தன் தந்தையைப் பற்றி கேட்டு விடுவானோ என கலவரமடைந்தவள் அவன் அனிருத் பற்றி கேட்டதும் சற்று ஆசுவாசமாகி, “அனிருத் என் பெரியம்மா பையன். அம்மா உயிரோட இருந்தவரை ரெண்டு பேரும் அடிக்கடி சேர்ந்து விளையாடுவோம். அவங்க போன பிறகு, பெரியம்மா குடும்பத்தோட கனடா போயிட்டாங்க.”

“என்னை விட ரெண்டு வயசு பெரியவன் அதனால அவனுக்கு மரியாதை எல்லாம் கிடையாது. சின்ன வயசுல இருந்தே அவனை வாடா போடானு தான் கூப்பிடுவேன்.” குறும்பாகச் சொல்ல, அவளது பாவனையில், “அதுசரி, நீ மரியாதை கொடுத்தா தான் ஆச்சரியம்!” அவளை கேலி செய்து புன்னகைத்தவன்,

“சரி, உன் அப்பா எப்படிப்பட்டவர், என்ன பண்றாரு அதெல்லாம் இதுவரை நீ சொன்னதே இல்லையே!?” எனக் கேட்க, அதுவரை இருந்த இலகுவான மனநிலை மாறி அவளது முகம் பீதியுடன் வெளிறிப் போனது.

சட்டென தெளிந்தவள்,”எல்லாத்தையும் இன்னிக்கே பேசனுமா? எனக்கு தூக்கம் வருதுப்பா.” கொட்டாவி விட்டுக் கொண்டு கூறிட அவளது முக மாற்றத்தைக் கவனிக்காதவன் சரியென்று விட்டு விட்டான்.

அவள் தனது அறைக்கு வந்து உறங்க விரும்புவாளோ என அவன் ஆர்வமாக அவள் முகம் பார்க்க, “குட் நைட் மதி!” என்றவள் தனது அறைக்குள் சென்று அடைந்து கொள்ள,”அதுக்குள்ள என்னடா அவசரம் உனக்கு!? பொறுத்திரு.”தன்னைத்தானே தேற்றிக் கொண்டு உறங்கச் சென்றான்.

தன் காதல் அங்கீகரிக்கப்பட்ட நிம்மதியில் அன்புமதி உதட்டில் உறைந்த புன்னகையுடன் உறங்கிவிட, அவளது வீட்டைப் பற்றி அவன் கிளப்பி விட்ட கேள்விகளால் தூக்கம் தொலைத்து விட்டத்தை வெறித்திருந்தாள் யுவசக்தி.

error: Alert: Content selection is disabled!!