அத்தியாயம் – 16
எஃகினால் முற்றிலும் ரிவெட்டுகள் மட்டுமே கொண்டு கட்டப்பட்ட புகழ்பெற்ற ஹவுரா பாலம் கொண்ட அந்த கொல்கத்தா மாநகரின் கணிசமாக தமிழர்கள் வசிக்கும் ஒரு பகுதியான காளிகாட்.
அந்நகரில் வசிப்பவர்கள் பலர், அந்த இடத்தை கடந்து செல்பவர்களை ஒருநொடி திரும்பி பார்க்க வைக்கும் தங்கத்தின் பளபளப்பில் மிளிரும் அந்த மாளிகையின் வாசல்.
வாசலைத் தாண்டி உள்ளே சென்றால் பழங்கால கலைநயத்துடன் நவீன கட்டடக்கலையும் சேர்ந்து கலந்து கட்டிய மாளிகை. ஆங்கிலேயர் காலத்து பெரிய தூண்களும், தென்னிந்திய பாரம்பரியமும் சேர்ந்த அந்த பங்களாவில் நவீன வசதிகளும் உண்டு.
வீட்டிற்குள்ளேயே கண்ணாடி கதவு கொண்ட லிஃப்ட், அல்ட்ரா மாடுலர் கிட்சன், வீட்டைச் சுற்றிலும் மாமரங்களும் தென்னை மரங்களும் சூழ, பளிங்கு போன்ற நீரைக் கொண்ட நீச்சல்குளம் என பணக்காரச் செழுமை எங்கும் மிளிர்ந்தது.
அத்தனை பெரிய பங்களாவில் வெகு நேரமாக ஒலித்துக் கொண்டிருந்த தொலைபேசியை எடுக்க எங்கிருந்தோ ஓட்டமும் நடையுமாக வந்தார் நாராயணன்.
“ஹலோ! யாரு?” பெங்காலியில் கேட்டவருக்கு “நேஷனல் போர்டிங் ஸ்கூல்ல இருந்து நிவேதா பேசறேன். மிஸ்டர். ரத்தன்தேவ் கிட்ட முக்கியமான விசயம் பேசனும்.” என்றது எதிர்முனை தமிழில்.
அந்த நாராயணன் தாத்தா ஒருமுறை ரீசிவரை காதை விட்டு எடுத்து பார்த்து பெருமூச்சுடன் “என்ன விசயம் எங்கிட்ட சொல்லுங்க” என்றதற்கு அவரிடம் மட்டும்தான் சொல்வேன் என்ற எதிர்முனையால், “ஐயா நம்பருக்கே கால் பண்ணுங்கம்மா.” என்றார் சலிப்புடன்.
“கால் பண்ணுனா எடுக்கலைங்க, அதான் வீட்டு நம்பருக்கு கூப்பிட்டேன்.”நிவேதாவிடம் சற்று எரிச்சல். தாத்தா தர்மசங்கடமாக விழித்து நிற்க, அவரை காப்பாற்றவே, சாம்பல் நிற கோட்சூட் அணிந்து டையைச் சரிசெய்தவாறு லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தார் இரத்தன்தேவ்.
முதலாளியை கண்டதும் பணிவுடன் குனிந்த நாராயணன், “சின்னம்மா ஸ்கூல்ல இருந்து கூப்பிடறாங்க ஐயா. உங்கள்ட்ட தான் பேசனுமாம்.” பவ்யமாக பதிலளிக்க, எரிச்சலுடன் ரீசிவரை வாங்கினார் ரத்தன்.
“யெஸ்! ரத்தன்தேவ் ஹோல்டிங்.” கரடுமுரடான அவரது பதிலில், “மார்னிங் ஸார்! நான் சக்தியோட க்ளாஸ் டீச்சர் நிவேதா பேசறேன்.” தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அவர் அதற்குள் சலிப்புடன் கைக்கடிகாரத்தை பார்வையிட்டார்.
“எல்லாம் நல்ல விசயம்தான் ஸார். உங்க பொண்ணு ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா, வீட்டுக்கு கூட்டிட்டு போய் உங்க சம்பிரதாயம் எதாவது செய்வீங்களேனு தான் இன்பார்ம் செய்றேன்.” மகிழ்ச்சியுடன் கூறினார் யுவசக்தியின் பத்தாம் வகுப்பு ஆசிரியை.
“வாட் ரப்பிஷ்! இன்னமும் எந்த காலத்துல இருக்கீங்க? வயசுக்கு வர்றதெல்லாம் பொண்ணுங்களுக்கு நார்மலா நடக்கறது தானே. இதிலென்ன சம்ப்ரதாயம்? அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவளை அங்கேயே இருக்கச் சொல்லுங்க. ”
“என்ன வேணுமோ அதை வாங்கி அவளை யூஸ் பண்ண சொல்லுங்க நான் மணி ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடுறேன். எனக்கு மீட்டிங்க்கு லேட் ஆகிடுச்சு. உங்களால எனக்கு டைம் வேஸ்ட்!” எரிச்சலுடன் கத்தியவர் அழைப்பைத் துண்டித்தார்.
ஒரு ஓரமாக நின்று அவர் பேசியதில், ‘சின்னம்மா பெரிய பொண்ணா ஆகிட்டாங்களா?!’ ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே இணைய மனம் மகிழ்ந்து போனார் அந்த பெரியவர். வேலைக்கார தாத்தாவிற்கு இருக்கும் பாசம் கூட அவளை பெற்றவருக்கு இல்லை.
ரத்தனின் பேச்சினால் மறுமுனையில் திகைத்து நிவேதா டீச்சர் விழிக்க, “என்ன மேம் அதெல்லாம் வேணாம், அவ அங்கேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாரா?” அவரருகே இருந்து கேலியாக சக்தி கேட்க, அவளை விநோதமாக பார்த்தார் அவர்.
“ஷாக்கை குறைங்க மேம்!” என சிரித்த அவளை ஆதுரமாக அவர் பார்க்க, “இதுதான் நடக்கும்னு எனக்கு தெரியுமே! அதான் ஒன்னும் வேணாம்னு சொன்னேன், நீங்க தான் கேட்கல.” இன்னமும் விளையாட்டாகச் சிரிப்புடன் கேட்டவளை பரிதாபமாகப் பார்த்தார் அவர்.
யுவசக்தி என்னதான் குறும்புத்தனமும் வாய் துடுக்கும் கொண்ட பெண்ணாக இருந்தாலும் படிப்பில் படுகெட்டி. சுற்றி இருப்பவர்களின் குணநலன்களை பற்றி உணர்ந்து அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு நீரைப் போல தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்புடையவள்.
தாயில்லா பிள்ளையான அவள் மீது நிவேதா மேடம்க்கு தனி பிரியம் உண்டு. தன் மனதிற்கு பிடித்த பிள்ளையின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு என்ற உற்சாகம் அவரை அவளது வீட்டிற்கு இந்த விசயத்தைச் சொல்லத் தூண்டியது.
ஆனால் அவளது தகப்பனின் கடித்துக் குதறிய பேச்சில் இன்னமும் நம்ப முடியாத திகைப்பில் இருந்தவர், “நீ இன்னிக்கு ஹாஸ்டலுக்கு போ சக்தி. நான் ஈவ்னிங் வந்து உன்னைப் பார்க்கறேன்.” வருத்தமான மனதுடன் அவளை அனுப்பி வைத்தார்.
பொதுவாக தமிழ்நாட்டு மக்கள் பெண்பிள்ளையின் இம்மாதிரியான நேரங்களில் அவளை வீட்டில் ஓய்வாக வைத்து, சத்துள்ள உணவுகள் கொடுத்து என அத்தனை பதமாக பார்த்து கொள்வார்கள் என்றெண்ணி தான் அவளது தந்தைக்கு அழைத்தார்.
ஆனால் ரத்தன்தேவ் பேசியதில் அவருக்கு மனவருத்தம் ஒருபுறம் என்றால், மறுபுறம் இந்த பெண் எப்படி தந்தையின் அலட்சியத்தை இத்தனை இயல்பாக எடுத்துக் கொள்கிறாள் என்ற வியப்பு!
ஆனால் தனது தந்தையின் குணத்தை என்றோ புரிந்து கொண்டாள் அவள். பிறந்தது முதலே தாயிடம் மட்டுமே ஒட்டுதலோடு இருந்த யுவசக்தி, தனக்கென இருந்த ஒரே அன்பான ஜீவனான தனது தாய் இறந்தபிறகு,
வீட்டுப்பறவையாக இருந்த சிறியவளை ‘இருக்கற பிஸினஸ் டென்சனில் பிள்ளையை எல்லாம் கவனிக்க முடியாது’ என்ற அவளது தந்தை, அவளை போர்டிங் ஸ்கூலில் ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டார்.
வீட்டிலேயே இருந்த சின்னவள் திடீரென கூண்டில் அடைத்தது போல அறிமுகம் இல்லாத சூழ்நிலையில் ஹாஸ்டலில் பொருந்திப் போக முடியாமல் திணறினாள்.
அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று கூறி வீட்டிற்கு போக வேண்டும் என நாடகமாட, ‘செத்தாலும் நீ அங்கேயே தான் இருக்கனும். இங்க வந்து என் உயிரை எடுக்காதே!’ தந்தையின் அரட்டல் அவளை நடுங்கச் செய்தது.
ஒவ்வொரு முறையும் அவள் நடத்தும் நாடகம் எதற்கென உணர்ந்த ரத்தன்தேவ் அவளது பள்ளியிலிருந்து அழைப்பு என்றாலே பெரும்பாலும் அதை ஏற்பதில்லை.
தந்தையின் குணத்தைப் புரிந்து கொண்ட சக்தி, அவரிடம் இல்லாத பாசத்தை எண்ணி ஏங்குவதைத் தவிர்த்து, தான் இருக்கும் இடத்தை ஏற்றுக் கொள்ள பழகி விட்டாள்.
அவளுக்கு படிப்பிற்கான மொத்த செலவையும் பள்ளி கணக்கில் போடுவதோடு அவரது கடமை முடிந்துவிட்டது. அதையும் அவரது பிஏ மூலமாக நடத்தி விடுவார்.
ஒருமுறை கூட அவளது பிடிஏ மீட்டிங்கிற்கு வந்ததும் இல்லை. அவளது படிப்பைப் பற்றி பெரிதாக கவலையும் இல்லை. அந்த பள்ளியில் பலருக்கு அவளது தந்தை ரத்தன்தேவ் என்பது மட்டுமே தெரியும் அவரை யாரும் பார்த்ததில்லை.
இரத்தன்தேவ்வைப் பொறுத்தவரை யுவசக்தி அவரை ஒரு தகப்பனாக சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியவள். அவளுக்கு செய்வது அவரது கடமை. அதில் அன்போ பாசமோ காட்டுவது எல்லாம் அநாவசியம்.
அவரது மனைவியுடன் கூட கடமைக்காக மட்டுமே வாழ்ந்து வந்தார். அப்படி பறந்து பறந்து யாருக்கு சம்பாதிக்கிறாரோ! அவருக்கே வெளிச்சம்!. மனைவியின் இழப்பு ரத்தன்தேவ்வை பெரிதாக பாதிக்கவில்லை.
அதுவரை அவரது அடையாளமாக பிறந்த பிள்ளையை அவரது மனைவி தான் பார்த்துக் கொண்டார். அவரது மறைவிற்கு பிறகு மகளை கண்ணும் கருத்துமாக வளர்ப்பது எல்லாம் அவருக்கு தேவையில்லாத ஆணி.
தாயை இழந்து தவித்த பெண்பிள்ளைக்கு ஒரே ஆறுதல் அவளது பெரியம்மா குடும்பம் மட்டும் தான். வருடத்திற்கு ஒருமுறை மகனுடன் இந்தியா வரும் ரோகிணி, இங்கிருக்கும் வரை தன் தங்கை மகளை தன்னுடன் வைத்து கொள்வார்.
ரத்தனுக்கு அதில் பெரிதாக எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவரது பெயர் சொல்ல ஒரு மகள் இருக்கிறாள். அவள் எங்கு எப்படி இருந்தால் என்ன!
ரோகிணி வரும் இரண்டு வாரங்கள் அவருடனும் அனிருத்துடனும் வம்பிழுத்து சண்டையிட்ட பொழுதுகளை மனதில் சேமித்து வைத்துக் கொள்வாள் சக்தி. அந்த நாட்கள் மட்டும்தான் அவளுக்கு அந்த வருடத்திற்கான வசந்த காலம்!
இப்படியாக அவளது பள்ளிப்படிப்பை முடித்து வீட்டிற்கு வந்தவளிடம், “அடுத்து என்ன பண்ணப் போற சக்தி?! இந்த லீவை வேஸ்ட் பண்ணாம எதாவது கோர்ஸ் படி. பணம் வேணும்னா சொல்லு அக்கவுண்ட்ல போடுறேன்.” இவ்வளவு தான் மகளுடன் அந்த பாசமிகு தந்தையின் உரையாடல்!?
அவராக வந்து அவளிடம் இதைக் கேட்டதையே பெரிதாகக் கருதிய சக்தி, “நான் பி. டெக் படிக்கலாம்னு இருக்கேன்ப்பா. அதுல..” அவள் ஆர்வமாக அதைப்பற்றி விளக்கமாகச் சொல்ல வர, அதற்குள் அவளை இடைமறித்தார்.
“ஓகே! தென்.. எந்த காலேஜ், ஹாஸ்டல் வசதி எல்லாம் எப்படி இருக்குனு கூகுள்ல தேடி உனக்கு பிடிச்சதை செலக்ட் பண்ணு, இல்லனா என்னோட பிஸினஸ் ஃப்ரெண்ட் மேத்தா வச்சிருக்க காலேஜ்ல சீட் புக் பண்ணிக்கலாம்.” அதற்கு தீர்வு முடிந்தது என்பது போல கிளம்பி விட்டார்.
மகளை வெளிநாட்டிற்கு எல்லாம் அனுப்பி படிக்க வைப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. அந்த நாட்டின் கலாச்சாரத்தில் எதையாவது பழகி வந்துவிட்டால் அவரது பிஸினஸ் வட்டாரத்தில் அவரது நற்பெயர் கெட்டு விடுமாம். ஒரு பெருமூச்சுடன் அவர் சொன்னதை செய்யத் தொடங்கினாள் யுவசக்தி.
“சாப்பிட்டியாடா செல்லம்? ரொம்ப மெலிஞ்சுட்டியே தங்கம்!” என்ற அன்பில் தோய்த்த வார்த்தைகள்,” எக்ஸாம் எப்படி எழுதி இருக்கடா? உனக்கு எதாவது படிக்கணும்னு ஆசை இருக்காம்மா? ” அக்கறையில் உதிரும் கேள்விகள் என்று தந்தையிடம் இருந்து இதுவரை அவளுக்கு எதுவும் கிடைத்ததில்லை.
தாய் இருந்தவரை கிடைத்த அந்த அன்பும் அக்கறையும் அவருடனே சென்று விட்டது. அவருக்கு பிறகு இதுதான் தனக்கு வாய்த்தது என தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
மும்பை ஐஐடியில் சீட் கிடைத்து தனது படிப்பைத் தொடங்கினாள் யுவசக்தி. பள்ளி போலவே கல்லூரி வாழ்க்கையும் ஓடியது. அவளது அன்பிற்கான ஏக்கம் மட்டும் மனதின் ஒரு மூலையில் அடிவண்டலாக தேங்கிக் கிடக்கிறது.
தாயின் இழப்பிற்கு பிறகு கிடைக்காத அந்த அன்பையும் பாசத்தையும் திகட்டத் திகட்ட காதலாகக் கொட்டி தன்னை கொண்டாடும் ஒருவன் வருவான் என்ற ஆசை அவள் மனதினோரமாக எப்போதும் மினுங்கிக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திமாய்!.
அவளுக்கும் அந்த பருவத்திற்கே உண்டான ஆசைகள் இருக்கும்தானே! கல்லூரியில் எத்தனையோ ஆண்கள் அவளை காதலிப்பதாகச் சொல்லி அணுகியதுண்டு. ஆனால் அவள் எதிர்பார்த்த ஒன்று அவர்களிடம் இல்லை.
அவளது அழகிற்காகவும் வசதிக்காகவும் சிலர் விரும்பினர். ஒரு சிலர் அவள் தன்னை மீறி செயல்படக்கூடாது என்ற டாக்சிக் மனநிலையில் இருந்தனர். அவர்களை கண்ட சக்திக்கு ‘இப்படியொரு காதலே வேணாம்டா சாமி!’ என்ற அலுப்பு மட்டுமே தோன்றியது.
அவள் சம்மதிக்காத போதே இந்தளவு இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் சிக்கினால் ஆயுளுக்கும் விடுதலை கிடையாது என்று அந்த காதல் ரோமியோக்களைக் கண்டு பயந்து பெரிய கும்பிடு போட்டு காதல் கனவுகளையே ஊத்தி மூடிவிட்டாள்.
ஒருவழியாக கல்லூரி முடித்து மீண்டும் அவள் தன் கூடு திரும்பிவிட, அவளது தந்தை அவள் எதிர்பார்த்த ஒரு கனவு வாழ்க்கைக்கு பெரிய ஆப்பாக சீவி அவள் இதயத்தில் இறக்க தயாராக வைத்திருந்தார்.

