மயங்கினேன் மழைச்சிலையே – 17

அத்தியாயம் – 17

சக்தி கல்லூரியில் இருந்த நான்கு வருடங்களும் தனது வீட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை. ரோகிணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர்களும் இந்தியா வரவில்லை.

அவளுக்கு வரவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் அங்கு நடந்த விசயங்கள் யாருக்கும் எதுவும் தெரியாமல் இருந்தது.

கல்லூரியில் படிப்பை முடிக்கும் போதே இண்டிகோ ஸ்டூடியோவில் கேமிங் டிசைனராக சக்திக்கு வேலை கிடைத்து விட்டதில், “கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகிட்டேன்ப்பா!” அந்த சந்தோஷத்தை தந்தையிடம் பகிர ஒரு செய்தியாக கேட்டுக் கொண்டார் அவளது தந்தை.

கம்பெனியை பற்றி மற்றும் அதன் வளர்ச்சி அதில் அவளது வேலை, சம்பளம் என எதையும் ஆர்வமாகக் கேட்காமல், “கன்க்ராட்ஸ் சக்தி.” என்றதோடு முடித்துக் கொண்டார்.

அவளது மகிழ்ச்சி சட்டென புஸ்வாணமாகி விட, அவரது இயல்பே அதுதானே என தன்னைத் தேற்றிக் கொண்டவள், கடைசி தேர்வை எழுதி முடித்து கொல்கத்தாவில் தன் வீட்டிற்கு திரும்பி இருந்தாள்.

அவள் வந்தது முதல் அவ்வப்போது தந்தையை கவனித்தாள். எப்போதும் பரபரப்புடன் இருப்பவர் ஏனோ மிகவும் ஓய்ந்து போய் சோர்வுடன் தெரிய நாராயணன் தாத்தாவிடம் எப்போதிருந்து அவர் இப்படி இருக்கிறார் என விசாரித்தாள்.

அந்த வீட்டில் அவளது தாய் உயிரோடு இருந்த காலத்திலிருந்தே வேலை செய்பவர். தனிக்கட்டையான அவருக்கு ‘தாத்தா’ என்ற உறவைச் சொல்லி அழைத்து அன்பாகப் பேசும் சக்தியிடம் தனிப்பிரியம் உண்டு.

“தெரியலை பாப்பா! ஆனா நீங்க காலேசு போன பிறகு ரொம்ப நாளாவே ஐயா இப்படித்தான் இருக்காங்க. அடிக்கடி புதுசா ஒருத்தர் வீட்டுக்கு வருவாரு. அவங்கள்ட்ட ஐயா தீவிரமா பேசறத பார்த்து இருக்கேன். மத்தபடி என்ன விசயம் ஏதுனு எனக்கு தெரியாது கண்ணு!” தனக்குத் தெரிந்ததை கூறினார் அவர்.

அவர் கூறியதில் ‘அது யாராக இருக்கும்?!’ என குழம்பிய சக்தி அவரது பிஸ்னஸ் நண்பர்கள் யாராவது வந்து இருப்பார்கள் அதைத்தான் இந்த தாத்தா கூறிகிறார் போல என்றெண்ணி விட்டு விட்டவள், தந்தையிடம் பேச சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்தாள்.

அன்று காலையில் அனிருத்திடம் பேசியதில் மனம் சற்று இலகுவாக உணர்ந்த சக்தி, மாடியிலிருந்து துள்ளலுடன் ராகம் பாடியபடி படிகளில் கீழே இறங்கிவர, ஹாலில் அமர்ந்திருந்த புதிய முகத்தைக் கண்டு அமைதியாகி விட்டாள்.

அவளது சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த அந்த புதியவர், “என்ன மிஸ்டர்.ரத்தன் வீட்டுக்குள்ளேயே கச்சேரி தான் போல,” சக்தியை ஆர்வமாக பார்த்தபடி கேலி செய்துச் சிரிக்க, ரத்தன் சங்கடமாக புன்னகைத்தார்.

“ஆமா யார் இது புதுசா இருக்கு?! நான் இதுக்கு முன்னே இங்க வந்தப்ப பார்த்ததே இல்லையே!” ஆச்சர்யமாக அவர் கேட்க, “ஹலோ அங்கிள்! நீங்க தான் இங்க புதுசு. நான் இந்த வீட்டுக்கு ரொம்ப வருச பழசு. அவரோட பொண்ணு!” துடுக்குத்தனமாக பதிலளித்தாள் சக்தி.

வந்திருக்கும் புதியவர் தனது தந்தையின் தொழில் நண்பராக இருக்கக்கூடும் என யூகித்து தந்தையின் வயதொத்த மனிதர் என்பதால் சற்று விளையாட்டாக வாயாடினாள் அவள்.

ஆனால் ரத்தன்தேவ்,”சக்தி! நீ உன் ரூமுக்கு போ! கொஞ்ச நேரம் நாங்க பேசிட்டு இருக்கோம், எங்களை டிஸ்டர்ப் பண்ணாதே.” வழக்கம் போல அவளை கடிந்து கொள்ள, முகம் வாடிய சக்தி தனது அறைக்குள் சென்று மறைந்து விட்டாள்.

“அடடா! என்ன ரத்தன் இது! அழகு பொண்ணு எத்தனை ஆசையா பேசிட்டு இருந்தா, இப்படி விரட்டுறீங்களே!” பரிதாபமாக அந்த புதியவர் பேசியது உள்ளே செல்லும் முன் சக்தியின் காதுகளில் விழுந்தது.

அன்றைய தினத்திற்கு பிறகு சக்தி அந்த பெரியவர் ஓரிரு முறை வந்தபோது அவர் இருப்பது தெரிந்தாலே ஏற்கனவே சோர்வாக இருக்கும் தந்தையை மேலும் டென்சாக்க வேண்டாமென அவள் வெளியே வருவதில்லை.

ஆனால் அதன் பிறகு வந்த நாட்களில் ரத்தன்தேவ் சதாசர்வ காலமும் யோசனையோடு சுற்றிக் கொண்டிருந்தார். அவரைக் காணும் போதெல்லாம் ஓய்ந்து போன அவரது தோற்றம் சக்தியை மிகவும வாட்டியது.

தனக்கென உலகில் இருக்கும் ஒரே உறவு, அவரும் இப்படி நலிந்து கொண்டே செல்வதில் உண்மையில் பயங்கொண்டாள் சக்தி. அவருக்கு அவள்மீது பாசம் இல்லை என்றாலும் அவளுக்கு தந்தை என்ற பாசமும் அக்கறையும் உண்டு. அவருக்கு உடல்நிலை எதுவும் சரியில்லையோ என்ற பரிதவிப்பில் அவரிடமே நேரடியாகக் கேட்க எண்ணினாள்.

அன்று இரவு அவரது வரவிற்காக காத்திருந்த சக்தி அவளது தந்தை வந்ததும் உணவை மறுத்து அவரது அறைக்குள் சென்றுவிட, அவரிடம் பேச வேறு சந்தர்ப்பம் இல்லாததால் முதல்முறையாக அவரது அறைக்கதவை தட்டினாள்.

“சாப்பாடு வேணாம் நாராயணா!” வேலைக்கார தாத்தா என நினைத்து அவர் பதிலளிக்க, “அப்பா!” மகளது அழைப்பில் சிறிதுநேர மௌனத்திற்கு பிறகு “உள்ளே வா!” அனுமதி அளித்தார்.

அவரது முகத்தை ஆராய்ந்தபடியே உள்ளே வந்த சக்தி, “ஏதாவது பிரச்சினையாப்பா? நானும் இங்க வந்ததுல இருந்தே உங்கள பார்த்துட்டு இருக்கேன். ரொம்ப டல்லா இருக்கீங்க.” உண்மையான அக்கறையுடன் கேட்டாள்.

பொதுவாக உடலும் மனமும் தெம்பாக இருக்கும்போது யாரைப் பற்றியும் கவலை கொள்ளாத மனிதர்கள் கூட ஆக்டோபஸ் போல ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மூச்சு முட்டித் திணறும் போது யாராவது தன் துக்கத்தை காது கொடுத்து கேட்க மாட்டார்களா? என்றெண்ணி ஏங்குவர்.

ரத்தன்தேவ் இப்போது அப்படி ஒரு மனநிலையில் இருந்தார். இதுவரை யாரையும் எதிர்பாராமல் இருந்தவருக்கு சமீப காலமாக மனதை அழுத்தும் பெரும் பிரச்னையில் மூச்சு விடவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

தனது அறைக்குள் அமர்ந்து கொண்டு இருளடைந்தது போகப் போகும் தன் சாம்ராஜ்யத்தை எண்ணி தினமு‌ம் நொந்து போகும் நிலையில் சக்தி வந்து அக்கறையாகக் கேட்டது உண்மையில் அவருக்கு நெகிழ்வை தந்தது.

“ஒன்னுமில்லனு சொல்ல ஆசை தான் சக்தி. ஆனா உண்மையிலேயே அப்படி ஆகிடுவேனோனு ரொம்ப பயமா இருக்கு!” எங்கேயோ பார்வை பதித்து குரல் நடுங்க மனதிலிருந்து கூறினார் ரத்தன்.

“என்னாச்சுப்பா?! பிஸ்னஸ்ல எதாவது ப்ராப்ளமா? எங்கிட்ட சொல்லுங்கப்பா, பிரச்சினைக்கு தீர்வு காண ஒருத்தர் மட்டுமே யோசிக்கறதுக்கு எங்கிட்டவும் சொன்னீங்கள்னா நானும் எதாவது ஐடியா கொடுப்பேன்ல,” மனதார கூறினாள்.

அவளை ஆழமாகப் பார்த்த ரத்தன்தேவ், “உண்மையிலேயே அதோட தீர்வு உங்கிட்ட தான் இருக்கு, ஆனா அதைக்கேட்க எனக்கு தான் யோசனையா இருக்கு.” வெளிப்படையாக சொன்னார் அவர்.

என்றுமில்லாமல் தன் தந்தை தன்னிடம் ஆலோசனை எல்லாம் கேட்க முனைவதில் மகிழ்ந்து போன சக்தி, “எங்கிட்ட என்ன தயக்கம்? என்ன பிரச்சினைனு சொல்லுங்கப்பா, என்னால முடியும்னா கண்டிப்பா நான் அதுக்கு சொல்யூஷன் சொல்றேன்.” வேகமாக பதிலளித்தாள்.

அவளையே யோசனையுடன் பார்த்த ரத்தன் பின்பு, ” இல்லம்மா, வேணாம். நீ போய் தூங்குடா” பாசமாக உரைத்திட, இதுவரை கேட்டிராத தந்தையின் பாசமான வார்த்தைகளில் அவளது மனதின் அன்பிற்கான ஏக்க அடிவண்டல் லேசாக மேலெழும்ப கலங்கிய மனதுடன் தந்தைக்காக உருகிப் போனாள் சக்தி.

” உங்கள இப்படியே விட்டுட்டு என்னால எப்படி நிம்மதியா தூங்க முடியும்? என்ன பிரச்சினைனு சொல்லுங்கப்பா.” தந்தையின் மனதை மகிழ்வித்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன் வற்புறுத்திக் கேட்டாள் மகள்.

ஆர்.டி மேனுஃபேக்கரிங்! கனரக இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, அதன் உரிமையாளர் தான் இந்த ரத்தன்தேவ். உள்நாட்டில் அவரது இயந்திரங்களுக்கு மார்க்கெட்டில் தனி மதிப்பு உண்டு.

தன் கம்பெனியின் பெருமையில் எப்போதும் ரத்தன்தேவ்விற்கு தனி கர்வம். அப்படிப்பட்ட கம்பெனியை உலகளவில் பிரபலமாக்கும் முதல் முயற்சியாக இத்தாலியில் ஒரு பெரிய ஆர்டர் கிடைத்துவிட்டது.

முதல் வெளிநாட்டு ஆர்டர் கிடைத்ததில் அவருக்கு தலைகால் புரியவில்லை. அதனால் அந்த இயந்திரங்களை தயாரிக்க பெரும் முனைப்புடன் இருந்தார்.

அதனால் வங்கியில் கடன் பெற்று உதிரி பாகங்கள் வாங்கியவர், அது மட்டுமில்லாமல் தனியாக வட்டிக்கும் பணம் வாங்கிப் போட்டு வேலைகளை மும்முரமாக தொடங்கி விட்டார். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது.

அவருக்கு ஆர்டர் கொடுத்த கம்பெனியின் ஓனர் காலமாகிவிட, புதிதாக தலைமை ஏற்றவர்கள் இவருக்கு கொடுத்த ஆர்டரை கேன்சல் செய்து விட்டனர். தெரியாமல் அகலக்கால் வைத்து இப்போது திக்கித் திணறுகிறார்.

ரத்தனுக்கு பணம் கொடுத்த அந்த பெரிய மனிதன் தனசேகர் அவ்வப்போது வீட்டிற்கு வந்து ரத்தனிடம் நாசூக்காக மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கிறார். இருக்கும் கடன்களை அடைக்கவில்லை என்றால் இத்தனை வருடங்கள் வளர்த்த கம்பெனி திவாலாகி விடும் நிலையில் உள்ளது.

தனது சந்தோசம் மற்றும் நிம்மதிக்காக எதையும் செய்யும் மனம் கொண்ட ரத்தன்தேவ் என்றுமில்லாத திருநாளாக இன்று மகளிடம் இத்தனையும் விலாவாரியாக சபீனா போட்டு விளக்கிக் கொண்டிருக்க, அதில் மிகப்பெரிய உள்குத்து உள்ளது என்று அந்த அம்மணிக்கு தெரியாது.

தந்தையின் கஷ்டத்தை எண்ணி வருந்தியவள், “கவலைப்படாதீங்கப்பா. நாம எதாவது வழி கிடைக்குமா பார்ப்போம். வேணும்னா பெரியம்மா வீட்டுல உதவி கேட்டுப் பார்க்கலாமா?” தனக்கு தெரிந்த ஆலோசனையைக் கூறினாள்.

அவர்களது மொத்த சொத்தைக் கொடுத்தால் கூட கடனை வட்டியுடன் அடைக்க முடியாத அளவிற்கு மூன்று ஆண்டுகளில் அது குட்டி போட்டு வளர்ந்து விட்டது என சோகமாகக் கூறினார்.

தந்தையின் துயர் போக்க மகள் தீவிர சிந்தனையில் இருக்க,”நான் பேங்க்ல வாங்குன கடனோட, அவரோட கடனையும் வட்டியோட கேட்க மாட்டேன்னு தனசேகர் சொல்றாரு ஆனா அதுக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான்.”சக்தியின் முகத்தைப் பார்த்தவாறே சிறிய குரலில் கூறினார்.

அத்தனை பணத்தை சுலபமாக வேண்டாம் என்று சொல்கிறாரா!? சக்தி ஆச்சரியம் அடைந்த அதேவேளையில் கண்டிப்பாக அந்த நிபந்தனை நல்ல விசயமாக இருக்காது என அவளது உள்மனம் அடித்துச் சொன்னது.

இருப்பினும் அது என்னவென்று தெரிந்து கொள்ள தந்தையை அவள் கேள்வியாக நோக்க, “அவரோட சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க அவருக்கு பிறகு வாரிசு இல்லைனு சமீப காலமா தான் வருத்தமா இருக்காராம். அதனால உன்னை,” தயக்கத்துடன் அவர் நிறுத்த,

“அதுக்கு.. என்னைய பொண்ணா தத்தெடுக்க கேட்கறாரா?! வாட் நான்சென்ஸ்!” சுறுசுறுவென மூண்ட கோபத்துடன் சக்தி கேட்க, மறுப்பாகத் தலையசைத்தார் ரத்தன்.

“உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறாரு. உன்னை அவருக்கு மேரேஜ் செய்து கொடுத்தா, என்னோட கடனை எல்லாம் கேன்சல் பண்றேன்னு சொல்றாரு. இல்லனா காசைக் கேட்டு கோர்ட்க்கு இழுத்து அசிங்கமா போயிடும்னு சொல்றாரு. இந்த வயசுல என்னால மானம் மரியாதை இழந்து ஜெயிலுக்கு எல்லாம் போக முடியாது.”

” யோசிச்சு பாரு சக்தி! அவரோட கடன் போக, பேங்க் கடனையும் கூட அடைக்க பணம் கொடுக்கறேன்னு சொல்றாரு. இது நமக்கு எவ்வளவு பெரிய ஆஃபர்! நீ அவரை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா எல்லா ப்ராப்ளமும் சால்வ் ஆகிடும். ”

“என்னோட பணத்தை தண்ணியா செலவழிச்சு உன்னை இத்தனை வருசமா வளர்த்து படிக்க வைச்ச எனக்காக நீ இதை செய்து தான் ஆகனும்!” கெஞ்சலில் தொடங்கி இறுதியில் உறுதியாக முடிக்க, உறைந்து போனாள் யுவசக்தி.

error: Alert: Content selection is disabled!!