மயங்கினேன் மழைச்சிலையே – 19

அத்தியாயம் – 19

அன்புமதிக்கு வெகு நாட்களுக்கு பிறகு ஆழ்ந்த நிம்மதியான உறக்கம். இதுநாள் வரை சக்திக்கு தன்மேல் எந்தவித பிரத்யேக உணர்வும் இல்லையோ என்ற கலக்கத்தில் உறக்கம் கூட தண்ணி காட்டியது.

நேற்றைய இரவு அவளும் தன் காதலை வெளிப்படுத்தயதில் உண்மையில் உள்ளம் குளிர்ந்து போனவனுக்கு அடைமழை முடிந்து மறுநாள் தெளிவாக புத்துணர்ச்சியுடன் விடியும் காலைப் பொழுது போல அத்தனை உற்சாகமாக இருந்தது.

வழக்கம் போல அதிகாலையில் கண்விழித்தவன் அவசரமாக தனது காலைக் கடன்களை முடித்துவிட்டு தன்னவளைக் காண ஆவலுடன் வெளியே வர, மகாராணியின் பள்ளியறை இன்னமும் திறக்கவே இல்லை.

“அவளைப் பற்றி தெரிஞ்சும் நீ இவ்வளவு சீக்கிரம் முழிச்சு வந்துட்டு அவ வரலைன்னு ஏங்குற!? உனக்கு முத்திப் போச்சுடா!” புன்சிரிப்புடன் தன் தலையில் தட்டிக் கொண்டு இருவருக்கும் காஃபியை கலக்குவதற்காக சமையலறைக்குச் சென்றான்.

அவளுக்கான காஃபியை கலந்தவன் மலர்ந்த முகத்துடன் அவளது அறைக்கதவைத் தட்ட, அவள்தான் கதவைத் திறந்தபாடில்லை. “கும்பகர்ணனுக்கே டஃப் கொடுப்பா போல, ஒருத்தன் அவளைப் பார்க்க துடிக்கறது கூட தெரியாம அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு இவளுக்கு?” ஏமாற்றம் லேசான எரிச்சலாக மாறியது.

அவளைக் காணாத ஏமாற்றத்துடனே தனது காஃபியை குடித்து முடித்தவன், மீண்டும் அவளது அறைக்கதவைத் தட்ட இப்போதும் திறக்காமல் இருக்கவே சற்று கலவரமடைந்தான் அன்புமதி.

“யுவி! கதவைத் திறடா!” மீண்டும் சற்று அழுத்தமாக தட்டவும் சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டது. ஆனால் திறந்தவளின் ஓய்ந்த தோற்றத்தில் பதற்றமான அன்பு, “என்னாச்சு கண்ணம்மா?! ஏன் முகம் எல்லாம் இப்படி வாடி இருக்கு?” பரிதவிப்புடன் கேட்டான்.

அவளால் வாயைத் திறந்து பதில் கூட சொல்ல முடியாமலும் நிற்க முடியாமலும் இருந்தவள் அப்படியே தொய்ந்து சரிய, “ஹே! என்னடா? என்னாச்சு?” சட்டென அவளைத் தாங்கி பிடித்தவனுக்கு அனலைத் தொட்டது போல இருந்தது.

“கடவுளே! என்னாச்சு யுவிமா?! நேத்து நைட்டு கூட நல்லா தானே இருந்த?” கேட்டபடியே அவளை படுக்கையில் படுக்க வைத்தவன், சில நொடிகள் செய்வதறியாது தவித்தான்.

இரவெல்லாம் பழைய நினைவுகளில் உழன்றவள், மலைப்பாம்பு போல தன்னைச் சுற்றிய பிரச்சினையிலிருந்து எப்போது எப்படி வெளிவர போகிறோம்! தனக்கென அன்பான உள்ளம் தவிக்கும் போது தன்னால் அவனுக்கும் பிரச்சனை வந்து விடுவோமோ என்றும் பயந்தாள்.

அவனிடம் அவசரப்பட்டு காதலை உரைத்து விட்டோமோ? அன்புவிடம் சொல்லாமல் இருந்தால் தனக்குள்ளே பூத்த நேசத்தை பொத்தி வைத்து மறைத்திருக்கலாம்.

இப்போது என்ன செய்வது இரவெல்லாம் யோசித்து யோசித்தே பயத்தில் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது. அன்பு முதலில் கதவைத் தட்டியபோது நினைவு தெளிந்தாள் ஆனால் திறக்க வேண்டாம் என்ற முடிவோடு எழவும் முடியவில்லை.

‘கண்ணை இறுக மூடிட்டு உலகம் இருண்டு போச்சுனு சொல்ற மாதிரி இருக்கு சக்தி! அவனை தவிக்க விடாதே!’ உள்ளுக்குள் ஒரு குரல் நேசனுக்காக பரிந்து பேசியது.

அதையும் புறந்தள்ளி அப்படியே படுத்திருந்தவளை அவனது தவிப்பான அழைப்பு தட்டி எழுப்ப, அதற்கு மேல் பிடிவாதத்தை இழுத்து பிடிக்க முடியாமல் சிரமத்துடன் எழுந்து கதவைத் திறந்து விட்டாள்.

அவளது நிலை கண்டவனது கண்களில் தெரிந்த பரிதவிப்பும் பாசமான அணைப்பும் அவனை தவிர்க்க எண்ணிய அவளது பிடிவாதத்தை தூள் தூளாக்கி விட்டது.

‘இத்தனை நேசமும் பாசமும் எனக்காகவா?! என்னை நேசிக்கும் ஒரு இதயம்! இவனை எப்படி இழக்க முடியும்?!’ கண்களை மூடி கிடந்தவளது விழியோரம் வேதனையில் கசிந்தது.

அவளருகே இருந்தவன் அவளது கண்ணீர் கண்டு, “அச்சச்சோ! அழாதேடா செல்லம்! காய்ச்சல் நெருப்பா கொதிக்குதே!” பதறிய அவனது துடிப்பு அவளை மேலும் பலவீனப்படுத்தியது.

இப்படியே இருக்க முடியாதே ஏதாவது செய்தாக வேண்டும் என்று எழுந்தவனின் டீ-சர்ட்டை இழுத்து பிடித்து அவன் மடியில் புதைந்தாள் சக்தி.

அவளது தலையை பாசமாக கோதிவிட, அவளுக்கான அவனது பாசமான ஒவ்வொரு செயலும் ‘இப்படியே செத்துப் போனாலும் பரவால்ல. இந்த அன்பை என்னால இழக்க முடியாது!’ அவளுள் தீவிரத்தை உண்டாக்கியது.

“எங்கேயும் போகலை கண்ணம்மா! இங்க டாக்டர் யாராவது இருக்காங்களா கேட்டுட்டு வர்றேன். கொஞ்சம் பொறுத்துக்கடா! என் தங்கம்ல,” அவளது நெற்றியில் முத்தம் வைத்தவனுக்கு கலைந்து கிடந்த அறை கண்ணை உறுத்தினாலும் மனதில் பதியவில்லை.

அவனது ஒரே எண்ணம் பட்டாம்பூச்சி போல துடிப்புடன் இருந்தவளை இப்படி வேரறுந்த கொடி போல காண முடியவில்லை. அவளது வேதனை கண்டு அவனுக்கும் கண்கள் கலங்கியது.

இருப்பினும் துவண்டு போய் அமரும் நேரமில்லை என்பதை உணர்ந்தவன் வேகமாக தனது அலைபேசியை எடுத்து அந்த அபார்ட்மெண்ட்டில் யாரும் மருத்துவர் இருக்கிறார்களா என விசாரிக்க தொடங்கினான்.

ஒரு கையில் அலைபேசியை பிடித்து பேசினாலும் மறுகை அவளது தலையை பரிவாக வருடி விடுவதை நிறுத்தவில்லை. அவளது உடல்சூடு அவனது உள்ளங்கையில் தகிக்க, உள்ளம் துடிக்க அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

சக்தியின் நிலை கேட்கவே வேண்டாம்! தாயை இழந்த பிறகு எத்தனை ஆண்டுகள் ஏக்கம்! ஆதாயம் தேடாத, கலங்கமற்ற இப்படியொரு அன்பு எனக்கே எனக்காகவா?! ஆழ்மனதில் உருகிக் கொண்டிருந்தாள்.

அது காலைவேளை என்பதால் அவளது நல்லநேரம் மருத்துவர் வீட்டில் இருந்ததால் விரைவாக வந்து அவளுக்கு சிகிச்சை அளித்தார். ஊசியை போட்ட மருத்துவர்,

” இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். அப்பப்போ ஸ்பான்ச்சிங் கொடுங்க. சூடு குறைஞ்சதும் சூப், கஞ்சி மாதிரி லைட்டா ஆகாரம் சாப்பிட்டுட்டு டேப்லெட் கொடுங்க. நைட் வரை ஃபீவர் இறங்கலைனா அட்மிட் பண்ணிடுங்க அன்பு.” என்றார்.

“ரொம்ப தேங்க்ஸ் ஸார்! சரியான நேரத்துல உதவி செய்தீங்க.” அன்பு அவருக்கு மனமார நன்றி கூற,”அப்றம் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் மிஸ்டர்.அன்பு! டேக் கேர் ஆஃப் ஹெர்!” அவனது தோளில் தட்டிக் கொடுத்து புன்னகையுடன் விடைபெற்றார்.

தனது பணிக்கு விடுமுறை மெய்ல் அனுப்பியவன், மருத்துவர் சொன்னது போல காட்டன் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து அவளது முகம், கை, கால்கள் எல்லாம் துடைத்து விட்டு நெற்றியில் சிறிது நேரம் வைத்து விட்டான்.

கண்களைக் கூட திறக்க முடியாமல் அரை மயக்கத்தில் இருந்தே அனைத்தையும் உணர்ந்தவளுக்கு அன்புவின் கவனிப்பில் கண்கள் கலங்க உள்ளம் உருகிப் போனாள்.

உடல்சூட்டினால் கண்களில் நீர் கசிகிறது என்றெண்ணி அதையும் துடைத்து விட்ட அன்பு, “கொஞ்ச நேரம் தூங்கு கண்ணம்மா! அப்ப தான் காய்ச்சல் சரியாகும்.” அவளது தலைகோதி நெற்றியில் முத்தமிட,

சில்லென்ற அவனது இதழ்களும் அவனது பரிவும் அவளுக்கு அத்தனை இதமாக இருக்க, ‘இந்த காய்ச்சல் குணமாகவே வேணாம்!’ அவனது கரத்தை இழுத்து கைக்குள் வைத்துக் கொண்டு மரவட்டை போல சுருண்டவள் மனம் விரும்பியது.

சற்று நேரத்தில் மருந்தின் வீரியத்தில் அவள் உறங்கி விட்டதைப் போல உணர்ந்தவன் அவளுக்கான கஞ்சி தயாரிக்க எழ முயற்சிக்க, அவனது டீசர்ட்டை இறுகப் பற்றியிருந்தவள் முணுமுணுவென ஏதோ உளற, அவளது வாயருகில் குனிந்து கூர்மையாகக் கவனித்தான்.

“என்னை விட்டு போகாதே மதி! என்ன நடந்தாலும் என்னை விட்டுட மாட்ட தானே? ப்ளீஸ் மதி! என்னை காப்பாத்துடா! நான் உன்னோட இந்த அன்பை திகட்டத் திகட்ட அனுபவிக்கனும். என்னை விட்டுடாதே மதி!” தூக்கத்தில் அனர்த்தத் தொடங்கினாள்.

அவளது ஆழ்மனம் தன்னை இந்தளவு தேடுகிறது என்பதில் மனம் மகிழ்ந்தாலும் அவளது பேச்சில் ஏதோ முரண்படுவதை உணர்ந்தான்.
“என் உயிரே போனாலும் உன்னை விட மாட்டேன்டி! எதுக்கு இந்த தவிப்பு யுவி?” நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

“நான் என்ன பொருளா? உங்களுக்கு பிறந்த பொண்ணு தானே! உங்களுக்கு எம்மேல பாசமே இல்லையாப்பா? உங்கள மாதிரி இருக்கற அந்தாளை போய் எப்படிப்பா?! வேணாம்ப்பா! ப்ளீஸ் என்னை யாராவது காப்பாத்துங்க.” அடுத்த உளறலில் திகைத்தான் அன்புமதி.

அவளது உளறலில் ஓரளவு யூகித்த அன்புவிற்கு அதை ஜீரணிக்க முடியவில்லை. அப்படி என்னதான் நடந்திருக்கும் என்பதை முழுதாக அறியாத குழப்பத்தில் மண்டை காய்ந்தது.

“என்னை விட்டு போகாதே மதி! ப்ளீஸ் எனக்கு நீ வேணும். என்னை வெறுத்துட மாட்ட தானே மதி? என்னால உனக்கு எதுவும் ஆகிடக்கூடாது. உனக்கு நான் வேணாம், பிரச்சனை இல்லாத ஒரு நல்ல பொண்ணு கூட நீ சந்தோஷமா வாழ்ந்துக்கோ.” முன்னுக்கு பின் முரணாக உளறிக் கொண்டிருந்தாள்.

“ஆனா, என் மனசு உன்னை மட்டும் தானே தேடுது! என்னால நீ கஷ்டப்படுவியோனு பயமா இருக்கு மதி. எனக்கு மட்டும் ஏன்டா இப்படி?!” அவளது ஆழ்மன பயங்களை எல்லாம் மருந்தின் வீரியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உளறிக் கொண்டிருந்தாள்.

அவளது மனநிலையை புரிந்து கொண்ட அன்புவிற்கு கண்களில் நீர் வழிய, ஒரு கையால் துடைத்து கொண்டவன் மறுகையால் அவளது தலையை வருடி முகமெங்கும் முத்தமிட்டான்.

“என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்டி. நம்பு கண்ணம்மா! நீ போறேன்னு சொன்னாலும் உன்னை விட மாட்டேன். எதையும் மனசுல போட்டு குழப்பாம தூங்குடா செல்லம்!” அவளை அணைத்தவாறு படுத்துக் கொண்டான்.

தாய்பறவையின் சிறகில் பதுங்குவது போல தன்னை பாதுகாக்கும் அரணாக அவனுக்குள் புதைந்து கொண்டவளை கன்னம் வருடி, தலை கோதி ஒருவழியாக தூங்க வைத்தான்.

அவள் உறங்கும் வரை அவள் சொன்ன விசயங்களை அசைபோட்ட அன்பு அவள் உறங்கியதை உணர்ந்ததும், மாத்திரை கொடுக்கும் முன் அவளுக்கு கஞ்சி சமைக்க வேண்டுமே என்ற எண்ணம் வந்ததும் வேகமாக தாய்க்கு அழைத்து விட்டான்.

“அம்மா! எனக்கு காய்ச்சல் வந்தா பூண்டு கஞ்சி வைச்சு தருவீங்கள்ல, அது எப்படி செய்யனும்? சக்திக்கு ரொம்ப காய்ச்சல் கொதிக்குது.” படபடவென கேட்க, விழித்தார் அவனது தாய் லீலாவதி.

“என்னடா சொல்ற?! அந்தப் பொண்ணு ஏன் அவ்வளவு காய்ச்சலோட வேலைக்கு வந்துச்சு? அவளே சமைக்கத் தானே வருவா!” அவர் கேட்ட பிறகுதான், ” ஸ்ஸ்ஸ்!” நெற்றியில் தட்டிக் கொண்டான் அன்புமதி.

“அது வந்தும்மா..” தயக்கத்துடன் துவங்கிய அன்பு, அவள் யாரென்பதையும் அன்றைக்கு அவர்களை சமாளிக்க அவளை அப்படிச் சொன்னதாகவும் கூறியவன், சக்தி ஒரு தாயில்லாத பிள்ளை என்றும் அவள் வளர்ந்த விதமும் விளக்கினான்.

அத்தோடு அவர்களது காதலையும் பற்றி கூறிவிட்டு “இப்ப அவள் தூங்கிட்டு இருக்கா, அதுக்குள்ள நான் செய்து முடிக்கனும் சீக்கிரம் ரெசிபி சொல்லுங்கம்மா.” அவசரப்படுத்தினான்.

“டேய் மகனே! நீ சொன்ன விசயத்தை நான் இன்னமும் ஜீரணிக்கவே இல்லைடா. அதுக்குள்ள அவளுக்கு சமைக்கனும்னு அவசரப்படுற? அவள் அவ்ளோ முக்கியமா போயிட்டாளா?” பொய்கோபமாக தாய் கேட்டாலும் தன் மகன் காதலில் விழுந்ததில் மம்மிக்கு அத்தனை மகிழ்ச்சி!

“ப்ளீஸ் மம்மி! உங்க மாமியார் ஜம்பம் காட்டுற நேரம் இதில்ல. உங்க மருமக தூக்கம் கலைஞ்சா என்னைத்தான் தேடுவா. அதுக்குள்ள நான் ரெடி பண்ணனும். என் செல்ல அம்மா தானே! “என சிறிது நேரம் அவரை கொஞ்சி, கெஞ்சி சமாதானம் செய்தான்.

கஞ்சி செய்முறையை பொறுமையாக கூறியவர், “பாவம்! தாயில்லா புள்ளைனு வேற சொல்ற, கொஞ்சம் கவனமா பார்த்துக்கடா கண்ணா!” கனிவுடன் கூறிவிட்டு அழைப்பை வைக்க, அன்னையை எண்ணி சிரித்துக் கொண்டு சமைக்கச் சென்றான்.

error: Alert: Content selection is disabled!!