மயங்கினேன் மழைச்சிலையே – 22

அத்தியாயம் – 22

லீலாவதியின் வருகையே ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றால் திருமணம், மருமகள் என்று அவர் மகிழ்வாக பேசுவதில் வியப்படைந்த சக்திக்கு சொற்கள் வரவில்லை.

“என்ன சக்தி பயந்துட்டியா?! அன்பு எல்லா விசயமும் சொன்னான்டா. எனக்கு ரொம்ப சந்தோஷம்! உன்னை அன்னிக்கு பார்த்ததுல இருந்தே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.” ஆசையாக அவள் கன்னம் வழித்து கூறியவர்,

“உனக்கொரு ரகசியம் சொல்லட்டா, அன்னிக்கு அவன் அப்பாவை வாயடைக்க வைச்சியே, அப்பவே இந்த புள்ளையே நம்ம வீட்டுக்கு வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினைச்சேன்.” கண்கள் சிமிட்டி புன்னகையுடன் முடிக்க ஆ’வென்று பார்த்திருந்தாள் சக்தி.

“அது வந்து.. ஆன்ட்டி..” அவள் ஏதோ சொல்ல வர, “இன்னும் என்ன ஆன்ட்டி? உரிமையா, அழகா, அத்தைனு கூப்பிடுடி செல்லம்!” என்று உரிமையோடு சொன்னவரிடம்,

“நான் உங்கள அம்மானு கூப்பிடட்டுமா?! உரிமையா அம்மானு கூப்பிட்டே ரொம்ப வருசமாகுது.” ஏக்கமாகக் கேட்டவளை அணைத்துக் கொண்டு, “உனக்கு எப்படி கூப்பிட பிரியமோ அப்படி கூப்பிட்டுக்கோடா. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.” என்றவர்,

“இனிமே இந்த மாதிரி ஏக்கமா எல்லாம் கேட்காத. எதனாலும் உரிமையா கேளு சரியா!? எனக்கு அந்த வாயாடி சக்தியை தான் ரொம்ப பிடிக்கும். ஆமா, உனக்கு உண்மையிலேயே என் பிள்ளைய பிடிச்சிருக்கு தானே!” திடீரென சந்தேகம் கேட்டார்.

அதில் இயல்புக்கு வந்து சக்தி, “வேற வழியில்ல லீலும்மா! உங்க பிள்ளையை படுத்தியெடுக்கற டாஸ்க்கை கடவுள் எங்கிட்ட தான் கொடுத்திருக்காரு. அவரால மட்டுமில்ல உங்களாலேயும் இனி தப்பிக்க முடியாது.” மனம்விட்டு சிரித்தாள்.

” ஆத்தி!! அப்ப இனி தப்பிக்க வழியே இல்லையா?!”போலி பயத்துடன் வாயைப் பொத்தியவர்,” உனக்கு காய்ச்சல்னு அன்பு சொன்னானே, இப்ப எப்படி இருக்குடா தங்கம்?” நெற்றியில் கைவைத்து அவளது உடல்சூட்டை சோதிக்க, கண்கள் கலங்கியது அவளுக்கு.

அதைக்கண்ட லீலாவதி, “சூடு இல்லையே, ஆனா கண்ணெல்லாம் கலங்கி இருக்கு. என்னடா செய்யுது? அன்பு உன்னைப் பற்றி சொன்னதும் எனக்கு அங்க இருப்பே கொள்ளலை, அதான் உன் மாமாவை சமாளிச்சுடடு ஓடி வந்துட்டேன்.” அவர் வந்ததற்கான காரணத்தைக் கூறினார்.

அதைக்கேட்டு சக்தியின் மனம் நெகிழ்ந்து போக, ‘இந்த தாய்க்கும் மகனுக்கும் நான் அவ்வளவு முக்கியமானவளா?! என்னைக் கொண்டாடவும் சில தேவதைகள்!’ உள்ளம் உவகையில் பொங்கியது.

” உங்க மகனோட கவனிப்பிலேயே காய்ச்சல் தலை தெறிக்க ஓடிடுச்சு. இது ஹேப்பி டீர்ஸ்! மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. எனக்காக துடிக்கவும் ஆளு இருக்காங்க அப்படீன்ற சந்தோஷம்!” கண்கள் சிமிட்டி சொன்னவள் சலுகையாக அவர்மீது சாய்ந்து கொண்டாள்.

“அவ்ளோ தானா?! நாங்கூட பயந்துட்டேன். இரு, இந்த பைய இன்னமும் என்னத்த சமைச்சுட்டு இருக்கான்?! காய்ச்சல்ல விழுந்து சரியான புள்ளைக்கு எவ்வளவு பசிக்கும், அது தெரியுதா பாரேன் இந்த மக்கு பயலுக்கு!? ” அன்புவை திட்டிக் கொண்டிருந்தார்.

“என்ன மாமியாரும் மருமகளும் என் தலையை உருட்டுற மாதிரி இருக்கு. அதெல்லாம் சமைச்சு ஒருபாடு நேரமாகுது. உங்களத் தான் காணலையே தேடி வந்தா, நீங்க என்னைய வறுத்துட்டு இருக்கீங்க.” அவர்களை அழைக்க வந்த அன்பு தன் தாயிடம் பொய்யாக கோபம் கொண்டான்.

” லீலும்மாவை திட்டுனா, நீங்க சுத்தம் பண்ணி வைச்ச ரூமை மறுபடியும் கலைச்சு போட்றுவேன் லவ்! பி கேர்ஃபுல்! ” லீலாவதியை தோளோடு அணைத்துக் கொண்டு சக்தி விளையாட்டாக அன்புவை மிரட்ட, வெகு நாட்களுக்கு பிறகு அவள் சொன்ன ‘லவ்’ வில் உருகி நின்றான் பையன்.

“சரி, அவன் ட்ரீமுக்கு போயிட்டான். நாம போய் சாப்பிடலாம் வாடா செல்லம்!” மகனை கலாய்த்த லீலாம்மா சக்தியை இழுத்துக் கொண்டு செல்ல சட்டென தெளிந்த அன்பு,

“ஹே! நில்லுடி! முதல்ல குளிச்சிட்டு வா. நேத்தும் குளிக்கலை. அழுக்கோட டைனிங் டேபிளுக்கு போன, அவ்வளவு தான் சொல்லிட்டேன்.” பதறியடித்து வந்து மிரட்ட, அவளை ஸோஃபாவில் அமர வைத்தார் லீலாவதி.

“அச்சச்சோ! என் ஸோஃபா அழுக்காக போகுது! தாயே! போய் முதல்ல குளிச்சிட்டு வாடி உனக்கு புண்ணியமா போகும்.” சக்தியிடம் மிரட்டல் வேலைக்கு ஆகவில்லை என்றதும் கெஞ்சலில் இறங்கி விட்டான்.

பாவம்! அவள் ஒருத்தியை சமாளிக்கவே அவனுக்கு பிபி ஏறிவிடும். இதில் இலவச இணைப்பாக தாயும் உடன் சேர்ந்து விட்டதில் கதிகலங்கி போனான் பையன்.

“அவனைப் பார்க்கவும் பாவமாத் தான் இருக்கு. அதோட உனக்கும் காய்ச்சல் கண்ட உடம்புல கண்ணு, அதனால ஃப்ரெஷா குளியல் போட்டா நல்லதுதான். ஓடிப்போய் சட்டுனு குளிச்சிட்டு வந்துடு தங்கம்.” லீலாவதி அவளை கொஞ்சி அனுப்பிவிட கொலைவெறியில் பார்த்தான் மகன்.

“ஓகே லீலும்மா! அம்மா சொன்னா, கண்டிப்பா செய்வேன்.” அறிவிப்பாக சொன்னவள் சலுகையாக அவரது கன்னத்தில் முத்தமிட்டு ‘காய்ச்சல் என்னடா காய்ச்சல்?!’ என்று துள்ளிக் குதித்து ஓடியவளை கண்டு புகைந்தான் அன்பு.

நேற்றிலிருந்து பசி தூக்கமின்றி அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட தனக்கு இல்லாத முத்தம், இப்போது வந்த தன் தாய்க்கு கிடைத்ததில் பொறாமையில் புகைவண்டி போல மூக்கில் காற்றடித்து நின்றவனின் தோளைத் தட்டினார் அவன் குடியிருந்த கோவில்.

“என்னா ஃபீலிங்கு! உன் மைன்ட்டை நான் கேட்ச் பண்ணிட்டேன். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான். படவா ராஸ்கல்! போய் வேலைக்கு கிளம்பற வழியைப் பாருடா மவனே!” அவனது காதைப் பிடித்துத் திருக வலியில் “ஸ்ஸ்ஆஆ!!” அலறினான் பையன்.

“சக்திக்கு உடம்பு முழுசா குணமாகலையே அப்பறம் எப்படி அவளை விட்டுட்டு நான் ஆஃபிஸ்க்கு போறது?!” அப்பாவியாக கேட்ட மகனை புருவம் உயர்த்தி பார்த்தார் தாய்.

” இதெல்லாம் செல்லாது மகனே! அப்பறம் நான் எதுக்கு இருக்கேனாம். உன்னையே வளர்த்துன எனக்கு இந்த பச்சை மண்ணை பார்த்துக்க தெரியாதா? ஒழுங்கு மரியாதையா ஆஃபிஸ்க்கு ஓடிரு சொல்லிட்டேன்.” அவனை விரட்ட,

“உங்கள யாரு இப்ப வரச் சொன்னது?! நான் உங்கள கூப்பிட்டேனா? உங்களால எனக்கு தான் நஷ்டம்! ம்ஹ்ம்!”சிணுங்கலுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிறுபிள்ளை போல சென்ற மகனை மனம் நிறைந்த புன்னகையுடன் கண்டிருந்தார் லீலாவதி.

தன் மகனது ஓசிடி குணத்தால் தலைதெறிக்க ஓடிய பெண்களைக் கண்டு, எங்கே அவனுக்கென குடும்பம், குழந்தைகள் அமைந்து மகிழ்வாக அவன் வாழ்வதை கண்நிறைந்து பார்க்க முடியாமல் போய் விடுமோ என்று எத்தனை ஏக்கம் கொண்டுள்ளார்.

தேவதை போல ஒருத்தி வந்து அவரது ஏக்கத்தைப் போக்கியதோடு மகனின் சிணுங்கல், பொறாமை, போன்று இதுவரை அவர் அவனிடம் கண்டிராத உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்த சக்தியை அவருக்கு அவ்வளவு பிடித்தது.

கணவனிடம் பேசி கூடிய விரைவில் இருவருக்கும் திருமணத்தை முடித்து, புன்னகை முகமாக வளைய வரும் மகனைக் காண வேண்டுமென அந்த தாய் மனதிற்குள் உறுதி பூண்டார். ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பது அவர் அறியாமல் போனார்.

சக்தி குளித்துவிட்டு வந்த பிறகு, மூவரும் சேர்ந்து உணவை முடிக்க, அலுவலகம் செல்ல முரண்டு பிடித்த மகனை ஏதோ முதல்நாள் பள்ளிக்கு வலுக்கட்டாயமாக அனுப்புவதுபோல விரட்டியடித்தார் லீலாவதி.

சக்தியின் உடலில் மீண்டும் சூடு ஏற, மாத்திரைகளை விழுங்கச் செய்து அவளை மடியில் படுக்க வைத்து உறங்க வைத்த லீலாவதி, அவள் உறங்கியதும் அவளுக்கு காய்ச்சலுக்கு தரும் கஞ்சியை மதிய உணவாக சமைக்கச் சென்றார்.

உறங்கி எழுந்தவளுக்கு “சாப்பாடு ரெடி!” என்று ஆர்ப்பாட்டமாக சொன்னவர் கஞ்சியை நீட்ட, “உவ்வே! வேணாம் லீலும்மா, நாக்குக்கு ருசியா வேற எதாவது தாங்களேன்! ப்ளீஸ் என் செல்லம்ல,” கண்கள் சுருக்கி பாவமாக அவரிடம் கெஞ்சினாள்.

“இன்னிக்கு ஒருநாளைக்கு இதைக் குடி கண்ணு! காய்ச்சல் முழுசா விட்டதும், அம்மா உனக்கு வகைவகையா செய்து தாரேன். என் தங்கம்ல,” அவளது கன்னம் பிடித்து கெஞ்சி ஊட்டி விட, தன் அன்னையே மறு உருவம் எடுத்து வந்தது போல இருந்தது அவளுக்கு.

சக்தி உள்ளம் நெகிழ மறுநொடியே, “ஓகேம்மா!” என சல்யூட் வைத்து ஒரு சொட்டு மீதி வைக்காமல் குடித்து முடிக்க,” என் தங்கப்புள்ள! மாத்திரையை போட்டுட்டு தூங்குடா. அப்ப தான் சீக்கிரம் குணமாகும். நாம ஒன்னா சேர்ந்து லூட்டி அடிக்கலாம்.” கண்கள் சிமிட்டி சிரித்தார்.

லீலாவதி வந்த மறுநாளே சக்திக்கு ஏதோ சூப்பர் பவர் வந்தது போல காய்ச்சலில் இருந்து பூரண குணமடைந்து விட, அன்புவிற்கு அவளை கண்ணாரப் பார்க்கவே வழியில்லை, இதில் எங்கே பேசச் செய்வது!

அவளிடம் உதட்டைச் சுழித்து முகத்தைத் திருப்பிக் கொண்டு அலைந்தவன் அடுத்து வந்த தினங்களில் வேலையில் ட்ரைனிங்கிற்கு செல்ல வேண்டி இருப்பதாகச் சொல்லி வெளியூர் கிளம்பி இருந்தான்.

இரு பெண்களுக்கும் கொசு தொல்லையாக இருந்த அன்பு வெளியூர் செல்வதாகச் சொல்ல, அவர்கள் குதியாட்டம் போடாத குறையாக மகிழ்ந்தனர்.

ஊருக்கு கிளம்பும் முன்பு சக்தி தனியாக சிக்கிய சமயத்தில், “நான் ஊருக்கு போறேன்னு சொல்றேன் கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம உனக்கு என்னடி அவ்வளவு சந்தோஷம்?! ”

அவளை கிட்சனில் கைகளுக்குள் சிறைபிடித்து, தாபமாக அவள் இதழ்களில் விழிகளை மேயவிட்டவன் சொற்கள் கோபமாகத் தெரிந்தாலும் அவளை தன் தாயுடன் அத்தனை மகிழ்வாக காண்பதில் உள்ளுக்குள் அவனுக்கு ஆனந்தம்தான்.

“இல்லயா பின்னே! ‘இதை ஒழுங்கா வை!எடுத்ததை எடுத்த இடத்துல வைக்க மாட்டியா? அதை ஏன் இப்படிச் செய்த, இதை ஏன் அங்க வைச்ச’னு உங்க தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்ல,” குறும்புடன் பதிலளித்தாள் அந்த வாயாடி.

அவளது குறும்பு கூத்தாடும் விழிகளில் விழுந்தவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், பேசிய அவளது அந்த இதழ்களின் குற்றத்திற்கு முத்த தண்டனை கொடுத்தான் கேடி. பின்னே, அவள் தனியாக கிடைப்பதே இப்போது எல்லாம் அரிதாகி விட்டதல்லவா!

சில நொடிகள் அவனது தண்டனையில் லயித்து போனவளிடமிருந்து தானாக விலகியவன், “நீ எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்கனும்டா கண்ணம்மா!” கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றான்.

அன்பு ஊருக்குச் சென்று ஒரு வாரம் ஓடிவிட்டது. இப்போதெல்லாம் சக்தியின் முகத்தில் மலர்ந்த புன்னகையை தவிர வேறு உணர்வுகளே இருப்பதில்லை.

அவனைக் காணாத ஏக்கம் கூட இரவு வேளைகளில் அழைக்கும் அவனிடம்”எப்ப வருவீங்க லவ்!” எனக் கேட்டு வெளிப்பட்டாலும், அவளது லீலும்மாவுடன் பொழுதை கழிப்பதே அவளுக்கு அத்தனை இன்பமாக இருந்தது.

அன்பு வீட்டில் இல்லாததால் மாமியாரும் மருமகளும் இஷ்டம் போல சமைத்து தோன்றியது எல்லாம் செய்து கொண்டிருந்தனர். சக்தியை வெளியில் கூப்பிட்டால் மட்டும் வர மறுத்து ஏதாவது காரணம் கூற அவரும் அவளை வற்புறுத்தாமல் விட்டு விட்டார்.

“அந்த நாகாத்தம்மன் கோவில்ல அம்மனுக்கு பழங்களை மட்டுமே வைச்சு எவ்வளவு அழகா அலங்காரம் செய்து வைச்சிருக்காங்க தெரியுமா? நீ தான் வர மாட்டேனுட்ட. மிஸ் பண்ணிட்ட தங்கம்!”

சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு கேரட்டை கொறித்துக் கொண்டிருந்தவளிடம் அவர் குறைப்பட, “அடுத்த முறை கண்டிப்பா வர்றேன் லீலும்மா!” அவரது கன்னத்தை பிடித்து ஆட்டி கொஞ்சியவளின் அலைபேசி சிணுங்கியது.

புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பை அவள் யோசனையுடன் பார்த்திருக்க, “எடுத்து பேசுடா.” லீலாவதி சொல்லவும், “ஹலோ!” என்று தயக்கத்துடன் அழைப்பை ஏற்றபடியே கிட்சனை விட்டு வெளியேறி அறைக்குள் வந்தாள்.

“என்னடி நீ என்னமோ படிக்க போயிட்டதா உங்கப்பன் கதை சொன்னான். கோடி கணக்குல கொடுத்த பணத்தை வசூல் பண்ணாம எங்கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா உன்னால?! ” அட்டகாசமாக சிரித்த தனசேகர்,

“உங்கப்பன் உசுரு இப்ப எங்கையில,” கரடுமுரடான குரலில் மிரட்டியவன் அழைப்பை வைத்து விட, அலைபேசியை பிடித்திருந்த கரம் சில்லிட்டு போக உறைந்து போய் நின்றாள் சக்தி.

error: Alert: Content selection is disabled!!