அத்தியாயம் – 25
மூடவிருந்த லிஃப்ட் கதவிடுக்கில் பளீரென பளிங்கு கால் ஒன்று கதவு மூடாமல் தடுக்க, வேகமாக உள்ளே நுழைந்தவள் ‘அப்பாடா!’ என நெஞ்சுக்கூடு ஏறி இறங்க மூச்சு வாங்கினாள்.
அதுவரை அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனைப் திரும்பி பார்த்தவள் லேசான சிரிப்பை உதிர்த்து, “ஸாரி ஸார்! கொஞ்சம் அவசரம்! அதான்.. நீங்களும் இங்கதான் ஒர்க் பண்றீங்களா?” பேச்சைத் தொடங்கினாள்.
பதிலேதும் பேசாமல் தலையசைத்தவன் பார்வை அவளைத் தான் மேய்ந்தது. “இந்த பாஸ் கொஞ்சம் முசுடோ?! ஏன்னா ஏதோ புக் மறந்துட்டா டீச்சர் திட்டுவாங்கன்ற ஸ்கூல் பிள்ளை மாதிரி, எங்கப்பா கால் பண்ணி அரண்டு போய் புலம்புறாரு.”
“ரொம்ப முக்கியமான இந்த ஃபைல் கொண்டு வந்தா தான், அந்த ரக்கர்ட் பாஸ்ட்ட இருந்து தப்பிக்க முடியும்னு என்னைய வலுகட்டாயமா கொண்டு வரச் சொல்லி அழுது தள்ளிட்டாரு.” படபடவென பேசி புன்னகைத்தவள் அவனது பார்வையை உணரத் தவறவிட்டாள்.
அந்த அலுவலகத்தின் தளம் வந்ததும் கதவு திறந்துவிட வெளியேறும் முன்,” உங்க பாஸ் பற்றி நான் கிண்டல் பண்ணுனதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. எனக்கு பயமெல்லாம் இல்ல, ஆனா பாவம் ரவிக்கு தெரிஞ்சா பயத்துல பேதி ஆகிடும்.”
என்று கூறி வாய்விட்டு சிரிக்க, அவன் புரியாமல் விழிக்கவும் “ஓ! ரவி யாருனு யோசிக்கிறீங்களா? இங்க அந்த ரக்கர்ட் ரங்குட்டானோட டேமேஐர் ரவிகிரண் தான்” புன்னகையுடன் சென்று விட்டாள்.
அலுவலகத்திற்கு வந்தவன் பரபரப்பான வேலை முடிந்தபின் ரவிகிரணிடம் அலுவலக விசயமாக சிறிது நேரம் பேசி விட்டு, அவரது மகளைப் பற்றி விசாரிக்க அவளைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும் என்று கேள்வியாக பார்த்தவரிடம் லிஃப்ட்டில் சந்தித்ததை மட்டும் கூறினான்.
ஓரிரு நாட்களில்..
“என்னையும் எதுக்குப்பா இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க? இது யாரு வீடு?!” தந்தையின் அருகில் எதுவும் புரியாமல் அமர்ந்திருந்தவள் கேட்டாள்.
அவளை திரும்பிப் பார்த்து புன்னகைத்து,” இது என்னோட பாஸ் வீடுடா. அன்னிக்கு ஒருநாள் உங்க பொண்ணு என்ன பண்றாங்கனு கேட்டார். நீ இன்ஜினியரிங் படிச்சு முடிச்சுட்டு வேலைக்காக காத்திருக்கறதை சொன்னேன்.”
“அதான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னாரு. அநேகமா எங்க கம்பெனியிலேயே வேலை கொடுப்பாருனு நினைக்கிறேன்.” மகளுக்கு வேலை கிடைக்கப் போகும் மகிழ்வுடன் கூறினார் ரவிகிரண்.
‘இதென்ன புது விதமா இருக்கு!!’ அவள் யோசனையுடன் இருக்க மாடிப்படிகளிலிருந்து அவர்களைப் பார்த்தபடி இறங்கி வந்தவனைக் கண்டு அவளது விழிகள் அதிர்வுடன் விரிந்தது.
“என்ன கிரண் நான் சொன்ன அந்த டென்டர் டீடெய்ல் ஃபைல் கொண்டு வந்திருக்கீங்களா?!” அதிகார தோரணையுடன் அவன் கேட்க, விழித்தார் அவர்.
அவன் அப்படி எதுவும் சொன்ன மாதிரி நினைவில்லை. ‘அப்படி எல்லாம் எதுவும் சொல்லலையே!’ எனக் கேட்க முடியாத நிலையில் அவர் முழிக்க, அந்த ஃபைலைப் பற்றி கூறியவன், “ஸோ! கொண்டு வரலை, அப்படித்தானே?” கூர்மையாகக் கேட்டான்.
‘சொல்லாத ஃபைலை எப்படி கொண்டு வர்றது? இதை அவர்ட்ட கேட்கவும் முடியாதே’ அவர் சங்கடத்துடன் கையைப் பிசைய “உங்க பொண்ணை கூட்டிட்டு வரும்போது அதையும் கொண்டு வாங்கனு சொன்னேன், சரி விடுங்க, இப்ப நீங்க போய் அதை எடுத்துட்டு வாங்க.”
“அதுவரை நான் உங்க பொண்ணுகிட்ட பேசிட்டு இருக்கேன்.” என்றவன் பார்வை அவள்மீது படிய, அன்று லிஃப்ட்டில் பார்த்தவன் தான் தன் தந்தையின் முதலாளி எனத் தெரியாமல் அவனிடமே கேலி பேசிய பீதியுடன் இருந்தாள் அவள்.
மகளை தனியே விட்டுச் செல்ல தயங்கியவர், “ஸார் கூட நீ பேசிட்டு இருடா குட்டி! அப்பா போயிட்டு உடனே வந்துடறேன்.” மகளிடம் கூறியவர் அவனிடம் தலையசைத்து வேகமாக வெளியேறினார்.
கையைப் பிசைந்தபடி அமர்ந்திருந்தவள், “ஸாரி ஸார்! அன்னிக்கு நீங்க தான் பாஸ்னு தெரியாம..” தான் பேசிய பேச்சுக்காக மன்னிப்பை வேண்ட, “உன் பேர் என்ன? “எனக் கேட்டவனிடம், சற்று பயத்துடனே “ரித்திகா!” என்றாள் அவள்.
“உன்னை மாதிரி துறுதுறுனு இருக்கற பொண்ணுங்க எல்லாம் மன்னிப்பை இப்படி கேட்டா எனக்கு பிடிக்காதே!” என்றவனது பேச்சில் அவள் விழித்திருக்க அவளிடம் நெருங்கி வந்த தனசேகர் அவளது தோளில் கை வைத்தான்.
பட்டென அவனது கையை தட்டி விட்டவள் கோபமாக அங்கிருந்து எழுந்து வெளியேற முனைய, அட்டகாசமாக சிரித்தவன்,” இது என்னோட இடம். நீ எங்கேயும் போக முடியாது.” குரூரமாகச் சொல்ல, எச்சில் கூட்டி விழுங்கினாள் ரித்திகா.
அவளை ஒரே எட்டில் நெருங்கி பிடித்தவன், “நீயா அமைதியா எங்கூட இருந்துட்டா, கொஞ்ச நேரம் தான் வேலை, முடிஞ்சதும் யாருக்கும் தெரியாம நல்ல பொண்ணா வீட்டுக்கு போயிடலாம். இல்லனா..” இழுத்தவனின் குரலில் மிரண்டாள் அவள்.
அவளை அறைக்குள் இழுத்துச் சென்றவன் தன் இச்சைக்கு அடிபணியச் சொல்லி அவளை மிரட்ட, உயிரே போனாலும் அது மட்டும் நடக்காது என உறுதியுடன் சொன்னவளை கொலைவெறி கொண்டு பார்த்தான்.
இதுவரை தனசேகர் ஆசைப்பட்ட எந்த பெண்ணையும் விட்டு வைத்ததில்லை. அவன் காட்டிய காசுக்காகவோ, உயிர் பயத்திலோ அவனிடம் அடங்கிப் போனவர்கள் பலர்.
ரித்திகாவை கண்டதுமே அவளது துறுதுறுப்பான பேச்சும், புன்னகையும் அவளை எப்படியாவது ருசித்தே தீரவேண்டும் என்ற அவனது வெறியைத் தூண்ட, அப்போதே முடிவு செய்து விட்டான்.
அவளது தந்தையின் நேர்மை பற்றி அறிந்தவன் இம்மாதிரியான விசயங்களுக்கு ஒத்து வர மாட்டார் என்பதால் வேலை தருவதற்காக பேச வரச் சொல்லி இருந்தான். அந்த அப்பாவி அப்பாவும் மகளை அழைத்து வந்து விட்டார்.
தற்போது அவளிடம் தனசேகர் தன் வேலையைக் காட்டிட, சிலிர்த்துக் கொண்டு நின்றவளைக் கண்டு வெறியேற, அவளது தந்தையை கொன்று விடுவதாகக் கூட மிரட்டிவிட்டான்.
பொதுவாக தனசேகருக்கு அவனது மிரட்டலில் பெண்கள் தானாக அவனது ஆசைக்கு இணங்க வேண்டும், இந்த ஓடிப்பிடித்து, துரத்தி எல்லாம் தன் படுக்கையில் அவர்களை வீழ்த்த மாட்டான்.
அவனது மிரட்டலுக்கு அடிபணியாமலும் எதற்கும் அசராமல் அவனிடம் விரைத்துக் கொண்டு நின்றவளைக் கண்டு பொறுமையிழந்தவன் “சொன்னா கேட்க மாட்டியாடி?” வெறி கொண்டு அவளது தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்தான்.
அந்த வலியிலும் துளி பயம் இல்லாமல் அவனை எரிக்கும் பார்வை பார்த்தவளைக் கண்டு அவனுக்கு அப்படியே கொலைவெறி உச்சத்திற்கு ஏற, அவளது தலையை பிடித்து சுவற்றில் அடித்தே கொன்று விட்டான்.
வெறிபிடித்த மிருகமாய் நின்றவனது கையிலிருந்து துவண்டு விழுந்தவளின் வயிற்றிலேயே “ஆஆஆ!” என கத்திக் கொண்டு எட்டி உதைத்தவன்,
“இப்படி செத்து போறதுக்கு எங்கூட படுத்து சுகத்தை கொடுத்துட்டு போயிருக்கலாம்ல, இப்ப யாருக்கும் இல்லாம.. ச்சே! வேஸ்ட்!” என்றவன் தனது அடியாள்களை அழைத்து அவளது உயிரற்ற உடலை அடையாளம் தெரியாமல் அழிக்கச் சொல்லி வெறியோடு அமர்ந்திருந்தான்.
அடுத்து சில நொடிகளில் மூச்சு வாங்க வந்த ரவிகிரணிடம் அவரது மகள் வீட்டிற்கு கிளம்பி விட்டதாக சொல்லிவிட, முதலில் குழம்பியவர் வீட்டிற்கு செல்ல அவள் அங்கு வரவே இல்லை என்றார் அவரது மனைவி.
அவனது வீட்டிற்கு மீண்டும் வந்தவர் தன் மகளைப் பற்றி விசாரிக்க, அவன் சொன்னதையே திரும்பச் சொல்ல, மகள் காணாமல் போனதில் பதறிய ரவிகிரண் போலீஸில் கம்ப்ளைன்ட் செய்தார்.
அவள் கடைசியாக இருந்தது தனசேகரின் வீடு என்றதும் அங்கு சென்று சோதனையிட்டு சிசிடிவி மூலமாக விசயமறிந்த போலீஸ் அதிகாரியை தனசேகர் பணத்தினால் அடக்கிவிட, அவள் காணாமல் போனதாகவே கேஸை நிலுவையில் வைத்து விட்டனர்.
மகளை இழந்த ரவிகிரண், தனசேகரின் மீது சந்தேகம் கொண்டு அவன்தான் தன் மகளை ஏதோ செய்து விட்டதாகக் கூறி வழக்குத் தொடுக்க, அந்த வழக்கும் போதிய ஆதாரமின்றி கிடப்பில் போடப்பட்டது.
ஆண்டுகள் மட்டுமே கடந்து செல்ல ரித்திகாவின் பெற்றோர் மகளை இழந்து ஒவ்வொரு நாளும் தவியாய் தவித்து வந்தனர். அனிருத்திடம் தனசேகரைப் பற்றி விசாரித்த போது ரித்திகாவின் மரணம் பற்றிய விசயம் அன்புவிற்கு தெரிய வந்தது.
அதைப் பற்றியும் தனசேகர் இல்லீகலாக பணம் சேர்த்த விதத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள, சென்னையிலிருந்த சக்திக்கு தாயை துணையாக வைத்துவிட்டு ட்ரைனிங் போவதாக பொய் சொல்லி கொல்கத்தாவிற்கு சென்றான் அன்பு .
ரித்திகாவின் பெற்றோர் மூலமாக அனைத்து விசயங்களையும் அறிந்த அன்புவிற்கு, தனசேகரை அடக்க இதுமட்டும் போதாது எனத் தோன்றியதால், தனசேகரின் சொத்து விவரங்களை தன் ஐடி நண்பன் ஒருவன் மூலமாக தனசேகரின் சிஸ்டமை ஹேக் செய்து கண்டறிந்தான்.
தனசகேரின் சொத்து சம்பந்தமாக அன்பு சேகரித்த அனைத்து தகவல்களையும், ரேயானின் உறவினர் டெல்லியில் சிபிஐ அதிகாரியாக இருப்பதால் அவரிடம் கொடுத்து தனசேகர் மீது நடவடிக்கை எடுக்க வைத்து விட்டான்.
அதேசமயம் கொல்கத்தா போலீஸ் டிஜிபிக்கு ரித்திகா கொலையில் கிடைத்த சிசிடிவி ஆதாரங்களை அன்பு அனுப்பிவிட, தனசேகருக்கு துணையாக இருந்த அதிகாரியை பணிநீக்கம் செய்ததோடு தனசேகரைத் தேடியும் வர வைத்து விட்டான்.
இந்த வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் ரத்தன்தேவ்விற்கு சக்தி தற்போது தலைமறைவாக இருக்கும் இடத்தை தெரியப்படுத்த, எப்படியும் அவர் தனசேகரை அழைத்து வருவார் என அன்பு திட்டமிட்டப்படி அவர்களும் வந்து வசமாக மாட்டிக் கொண்டனர்.
ரித்திகாவின் கொலையை தனசேகர் தன் வாய்மொழியாகவே கொடுத்தது இன்னமும் அவ்வழக்கை உறுதியாக்கிட, நில மோசடி செய்து சொத்து சேர்த்த வழக்கும் சேர்ந்து விட்டதில் இனி அவன் வெளியே வரவே முடியாது.
சக்தியின் தந்தையின் மீது அவள் கொடுத்த புகாரின் பேரில் ரத்தன்தேவ் கைது செய்யப்பட்டதோடு அவருக்கும் எப்படியும் சில வருடங்களுக்கு சிறைதண்டனை கிடைக்கப் போகிறது.
சக்தியை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வந்த அன்புமதி அவளை தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டு நடந்த அனைத்தையும் விளக்கமாகச் சொல்ல, அவனை பிரமிப்புடன் பார்த்திருந்தாள் சக்தி.
தான் ஏதோ வெளிவர முடியாத சுழலில் சிக்கியதாக எண்ணிக் கொண்டிருந்த சக்திக்கு, ‘தன்னை மீட்க அவன் எத்தகைய ஆபத்தான காரியங்களை செய்திருக்கிறான்.’
‘இதில் எங்கேயாவது தவறியிருந்தால், அந்த தனசேகருக்கு விசயம் தெரிந்திருந்தால் இந்நேரம் இவன் உயிரோடு இருக்க மாட்டானே!’ பயத்தில் அவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“எனக்காகவா மதி! இத்தனையும் எனக்காக செய்தீங்களா!? நான் உங்களுக்கு அத்தனை முக்கியமானவளா? அப்புறம் ஏன் நான் விசயத்தை சொன்னப்ப எங்கிட்ட அப்படி சொன்னீங்க?!” எல்லா விசயத்தையும் இப்போதே தெளிவுபடுத்திக் கொள்ள நினைத்தாள் அவள்.
அவளது தலையைக் கலைத்துவிட்டு, “இதெல்லாம் உங்கிட்ட சொல்லி இருந்தா, உன் ஆக்ஷன் ப்ளாக்கை பார்க்க முடியாம போயிருக்குமே!” கண்களை சிமிட்டி அன்பு குறும்பாகச் சிரிக்க, நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தாள் சக்தி.
“ஒருவேளை எனக்கு அங்க வேற எதுவும் நடந்திருந்தா..” முழுதாக சொல்லாமல் சற்று பயத்துடன் அவள் கேட்க, அவளை இறுக்கி அணைத்து விடுவித்தவன், “அப்படி எல்லாம் விட்றுவேனா?! அதான் அந்த ரூம் முழுக்க அங்கங்கே ஸ்பை கேமரா இருக்கே!”என்றிட ஆ’வென்று பார்த்தாள் அவள்.
அவளது பாவனையில் சிரித்தவன் அவளது வாயை மூடி விட்டு,”ரித்திகா கொலை வழக்குல அந்த பொண்ணு ரூமுக்குள் போன வரை மட்டும் தான் சிசிடிவி ஃபுட்டேஜ்ல இருக்குடா. ”
“வேற யாராவது அவளை கொன்னதா சொல்லி கூட அவன் ஈசியா வெளியே வர சான்ஸ் இருக்கு. அவன் வாக்குமூலமா அந்த கொலை விசயம் தெரிய வந்தா இன்னமும் ஸ்ட்ராங்கா இருக்கும்னு நினைச்சு செட் செய்தது.” என்றவன் அதன் மூலம் உள்ளே நடப்பதை கண்காணித்ததை விவரித்தான்.
அவளிடம் உண்மையை சொல்லி அனுப்பி இருந்தால் அவள் கோபத்தில் எதாவது உளறி விட வாய்ப்பிருந்ததால் அவளிடம் எதுவும் கூறாமல் அனுப்பியதற்கு மன்னிப்பையும் கேட்டான் அன்பு.

