மயங்கினேன் மழைச்சிலையே – 26

அத்தியாயம் – 26

சக்தியின் பிரச்சனையை தீர்த்து அவளின் நிம்மதிக்காக அவன் மேற்கொண்ட செயல்களை ஏதோ சாகச கதை போல அவள் கேட்டுக் கொண்டிருக்க, “இப்படியே கதை கேட்டுட்டே இருந்தா, சாப்பிட வேணாமா தூங்க வேணாமா மேடம்?” கேலியாகக் கேட்டான் அன்பு.

“எனக்கு அதெல்லாம் எதுவும் வேணாம், இப்படியே இருந்தா போதும்.” அவனது தோளில் தலை சாய்த்துக் கொண்டவளுக்கு தானே தெரியும் அவனது விலகலான பேச்சிற்கு பிறகு அவள்பட்ட வேதனை!

அடைமழைக்கு பிறகு உண்டான இதமான அமைதி போல அவள் மனம் ‘போய்விடு’ என்ற அவனது சொல்லில் புயலில் சிக்கிய சிறு பூவாக அலைக்கழித்து வேதனையில் உழன்றிருக்க, திடுமென தன் சொர்க்கம் மீண்டும் கிடைத்து விட்டதில் தற்போது அமைதியில் திளைத்தது.

அது தந்த இதத்தில் அவனது தோளில் சாய்ந்தவள் சில நொடிகளில் அப்படியே உறங்கிவிட, தன்மீது பாரமேறிய உணர்வில் அவள் உறங்கியதை உணர்ந்தவனுக்கு அவள் மனநிலை நன்றாக புரிந்தது.

அவளது உறக்கத்தை தொல்லை செய்யாமல் அப்படியே அவளை கைகளில் ஏந்தியபடி அவள் அறைக்குள் தூக்கிச் சென்றவன் படுக்கையில் அவளை அலுங்காமல் படுத்து வைத்து, அவள் முகத்தில் மோதிய முடிக்கற்றையை ஒதுக்கி நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு புன்னகையுடன் அகன்றான்.

ஓயாத அலைச்சலில் அவனுக்குமே உறக்கம் கண்களை சுழற்ற, தனது படுக்கையில் விழுந்தவனுக்கு விடியும் வரை எதையும் உணர முடியவில்லை எங்கோ தூரத்தில் ஏதோ சத்தம் விடாமல் கேட்பது போலிருக்க விலுக்கென விழித்தான்.

அவனது அலைபேசி தான் விடாமல் சிணுங்கிக் கொண்டிருந்தது. எடுத்து பார்த்தவன் தாயிடமிருந்து பல தவறிய அழைப்புகள் இருக்கவும் பதற்றமடைந்து வேகமாக தாயின் எண்ணிற்கு அழைத்தான்.

அழைப்பு ஏற்கப்பட்டதும், “யாருக்கு என்னாச்சும்மா? நீங்க ரெண்டு பேரும் நல்லா தானே இருக்கீங்க?” தாய் தந்தைக்கு எதுவும் பிரச்சனையோ என்ற பதற்றத்தில் பரபரப்பாகக் கேட்டான் அன்பு.

“அதெல்லாம் நல்லா தான் இருக்கோம். முதல்ல நான் சொல்றதை கேளு கண்ணா. சக்தியை கூட்டிட்டு உடனே நீ இங்க வந்து சேரு.” தாயின் ஆணையில் புரியாமல் விழித்தவன்

“என்னம்மா திடீர்னு இப்படி சொல்றீங்க? அப்பாகிட்ட சக்தியைப் பற்றி சொல்லிட்டீங்களா?! இப்ப சடர்னா லீவு எல்லாம் போட முடியாதும்மா.” வினவியவன் தனது நிலையைக் கூறினான்.

“நீ ரொம்ப லீவெல்லாம் போட வேண்டாம்டா கண்ணா. சக்தியை மட்டும் கூட்டிட்டு வா!” என்றவரிடம் ஏன் எதற்கு என கேள்விகளால் குடைந்த மகனால் பொறுமை இழந்து விட்டார் லீலாவதி.

“உனக்கு உன் வாழ்க்கை முக்கியமா இல்ல வேலை முக்கியமா? சும்மா கேள்வியா கேட்காம நான் சொன்னதை மட்டும் செய் அன்பு. சக்தியை கூட்டிட்டு இங்க வா! ” அவ்வளவு தான் விசயம் என்பது போல அழைப்பை வைத்தவர், கூடுதல் தகவலாக சக்திக்கு சற்று அதிக உடைகளை எடுத்து வைக்கச் சொன்னார்.

‘இதென்ன திடீர்னு!!? இத்தனை நாள் லீவு முடிஞ்சு இன்னிக்காவது ஆஃபிஸ் போகலாம்னு நினைச்சா அம்மா இப்படி சொல்றாங்களே! என்னவா இருக்கும்?”

“சக்தியை பற்றி அப்பாகிட்ட பேசிட்டாங்களா? அவர் என்ன சொன்னாருனு தெரியலையே அவளுக்கு மட்டும் எதுக்கு நிறைய ட்ரெஸ் எடுத்து வைக்க சொல்றாங்க?!’ யோசித்து குழம்பிப் போனவனுக்கு தூக்கமெல்லாம் பறந்து போனது.

தனது அறையை விட்டு வெளியே வந்தவன் சக்தி அறைக்குச் சென்று பார்க்க அவள் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்ததில், தனது வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு ஆஃபிஸிற்கு வீட்டிலிருந்து வேலை பார்ப்பதாக மெய்ல் அனுப்பி வைத்தான்.

சக்தி எழுந்ததும் விசயத்தைச் சொல்லி, ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றதில் அன்புவின் தந்தையை எண்ணி அவளுக்கு உள்ளுக்குள் பயப்பந்து சுழன்றது.

அன்புவிற்கு என்ன விசயமென்று தெரியாத குழப்பத்துடனும், யாரோவாக இருந்த போது இயல்பாக அவரிடம் வாயாடிய சக்திக்கு தற்போது தன்னவனின் தந்தை என்றானபிறகு ஒருவித பீதியுடனும் இருவரும் கிளம்பி அன்புவின் வீட்டிற்கு பயணப்பட்டனர்.

********

“என்ன வெளாடுறீங்களா? உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் முடிவு பண்ணுவீங்கள்னா அப்றம் நான் எதுக்கு வெட்டியா வீட்ல இருக்கேன்?” உச்சக்கட்ட கோபத்தில் குதித்தார் சிவபாலன்.

“இப்ப என்ன நடந்துடுச்சுனு இப்படி கோப்படுறீங்க? அவங்க ரெண்டு பேருக்கும் மனசு ஒத்து போச்சு. ஒரு கல்யாணத்துக்கு அந்த ஒரு தகுதி போதாதா? என்னமோ கொலை குற்றம் பண்ணுன மாதிரி குதிக்கறீங்க?” முறைப்புடன் கேட்டார் லீலாவதி.

மனைவியின் பேச்சில் இன்னமும் கோபமேற மூச்சை இழுத்து விட்டு, “தேவையில்லாம பேசி கோபத்தை அதிகமாகக்காதே லீலா!” எச்சரிக்கும் குரலில் கூற, லீலாவதி சற்று பின்வாங்கினார்.

“எதுக்குங்க கோபப்படுறீங்க? அவன் என்ன இன்னமும் ஒன்னும் தெரியாத சின்ன பிள்ளையாங்க! அவனுக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவனுக்கு உரிமை இல்லையா?”

“எந்த பொண்ணுமே அவன்கிட்ட நெருங்கிப் பழக விரும்பாத போது அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குனா, பெரியவங்க நாம தானே அவங்கள சேர்த்து வைக்கனும்.” நயமாகவே பேச, சிவநாதன் அமைதியாக இருந்தவர்,

“அதுக்காக!? குடும்பம், பழக்கவழக்கம்னு நாலு இடத்துல நாம விசாரிச்சு நம்ம மகனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கற மாதிரி வருமா லீலா?” தனது மனதிலிருந்ததை ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“உங்க எண்ணம் புரியுதுங்க. ஆனா, பிள்ளைங்க ஆசைப்படும் போது நம்மோட ஆசைக்காக அவனோட மனசை கஷ்டப்படுத்தக் கூடாதுல, நாளைக்கு வாழப் போறது அவங்க ரெண்டு பேரும் தானே!” கணவனுக்கு எப்படியாவது இயல்பை விளக்கிவிடும் வேகம் அவருக்கு.

மனம் சமாதானம் அடையாமல் மறுப்பாக தலையசைத்த சிவநாதன், “அந்த பொண்ணு யாரோ என்னவோ!? வயசு பொண்ணா இருந்துட்டு இப்படி ஊரு விட்டு ஊரு வந்து தனியா ஒரு ஆம்பள பையனோட தங்கி இருக்காள்னா..” சிவநாதன் பேச்சை முடிக்கவில்லை அதற்குள்,

“போதும் நிறுத்துங்க. அம்மா இல்லாத பொண்ணு அப்பாவும் பார்த்து வளர்க்காத பொண்ணுனு நான் சொன்னேன் தான். அதுக்காக யாருன்னே தெரியாத பொண்ணோட ஒழுக்கத்தை குறை சொல்லுவீங்களா?”

“நீங்க அந்த பொண்ணை மட்டும் சந்தேகப்படலை, அன்புவை, நம்மோட வளர்ப்பையும் தான் தப்பா சொல்றீங்க.” லீலாவதி பொங்கி எழ, “வர்ற கோபத்துக்கு அடிக்க வைச்சுடாதே லீலா. என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேட்கறதே இல்ல.”அவரும் கோபத்தில் பல்லைக் கடித்தார் அவர்.

அதில் லீலாவதி அமைதியாகி விட,” நம்ம பையனைப் பற்றி எனக்கு தெரியாதா? அப்படி அந்த பொண்ணு தப்பானவளா இருந்தா, இவன் எப்பவோ அந்த பொண்ணை வீட்டை விட்டு விரட்டி இருப்பான். நான் சொல்ல வந்தது அது இல்ல.”

“தாயில்ல, தகப்பனும் பொறுப்பில்ல அத்தோட ஹாஸ்டல்ல வளர்ந்த பொண்ணுனு வேற சொல்ற. அவளோட அப்பா எப்படிப்பட்டவரு, அங்க எதாவது பிரச்சனையா இப்படி எதுவுமே தெரியாம, நம்ம பையன் அதுல மாட்டிக்க கூடாதேனு நினைச்சு நான் சொன்னா, நீ உன் இஷ்டத்துக்கு என்னென்னமோ சொல்லிட்டு இருக்க?” கடிந்து கொண்டார் சிவநாதன்.

‘இவ்வளவு தானா!’ என ஆசுவாசமான லீலாவதி, ” அந்த பொண்ணு தான் அவனோட வாழ்க்கைனு முடிவு பண்ணின பிறகு அப்படியே எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கற அளவுக்கு நம்ம பையனுக்கு தைரியம் இருக்குங்க.”

” சுத்தம், ஒழுங்குனு நீங்க படுத்தி எடுத்ததுல தான் என் பிள்ளை இப்படி இருக்கானே ஒழிய, மற்றபடி பிரச்சனையை சந்திக்கற அளவுக்கு அவன்ட்ட மனதிடம் நிறையவே இருக்கு.” பேச்சுவாக்கில் கணவனுக்கு ஒரு குட்டு வைத்தார்.

மனைவியை முறைத்த சிவநாதன்,” ம்ப்ச்! என்ன இருந்தாலும்.. என்னால மனசார ஏத்துக்க முடியல லீலா. அந்த பொண்ணு நான் யாருன்னு தெரியாதப்பவே அப்படி பேசுச்சு, அந்தப் பொண்ணைப் போய் நம்ம வீட்டு மருமகளா.. எனக்கு உடன்பாடு இல்ல. இதுக்கு மேல உங்க இஷ்டம்!”என்றவர் குழப்பத்துடன் இருந்தார்.

லீலாவதிக்கு கணவனின் மனநிலை நன்கு புரிகிறது. சக்தியுடனான அவரது முதல் சந்திப்பு அவர் மனதிற்கு உவப்பானதாக இல்லாததால் அவளை மருமகளாக ஏற்க தயங்குகிறார். சக்தியுடன் பழகி பார்த்தால் கண்டிப்பாக அவரது மனம் மாறிவிடும் என்று நம்பினார்.

அதனால், “நீங்க இத்தனை தயங்கற அளவுக்கு சக்தி மோசமானவ இல்லைங்க, வேணும்னா ஒன்னு பண்ணலாம். சக்தியை கொஞ்ச நாள் இங்க வந்து இருக்கச் சொல்லலாம்.”

“அவளோட பழகுன பிறகும் உங்களால அவளை மருமகளா மனசார ஏத்துக்க முடியலைனா..” அவர் முடிப்பதற்குள், “அப்ப இந்த பேச்சை விட்றுவீங்களா?!” ஆர்வமாகக் கேட்ட கணவனை முறைத்தார் லீலாவதி.

“அதெல்லாம் விட முடியாது. அவங்கள தனிக்குடித்தனம் வைச்சுடலாம். அவங்க வாழ்க்கையை அவங்க சந்தோஷமா வாழட்டும். நீங்க இங்க சந்தோஷமா இருங்க.” என்ற லீலாவதியின் மிதப்பான பதிலில் பொசுக்கென்றானது அவருக்கு.

கணவனிடம் இரு நாட்களாக ஓயாமல் பேசி இந்த யோசனைக்கு சம்மதிக்க வைப்பதற்காக லீலாவதி தலையால் தண்ணிக் குடிக்க “என்னமோ பண்ணித் தொலைங்க.” என்று ஒருவழியாக கணவர் சொல்லும் வரை விடவில்லை அவர்.

சக்தியைப் பற்றி தன் கணவன் சொன்னதை எல்லாம் விளக்காமல் அன்புவிற்கு அழைத்து இருவரையும் உடனே கிளம்பி ஊருக்கு வரச் சொல்லி விட்டார்.

அதன்படி மறுநாள் அதிகாலையில் இருவரும் வந்திறங்கிட, அழைப்பு மணியோசை கேட்டதில் சமையலில் வேலையாக இருந்த லீலாவதி கணவனைச் சென்று கதவைத் திறக்கச் சொன்னார்.

யாரோ என்றெண்ணி கதவைத் திறந்தவர் வெளியே நின்ற மகனையும் அவனருகில் நின்ற சக்தியையும் கண்டு ஒரு நொடி திகைத்து கதவைத் திறந்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

அன்புவும் சக்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சக்தியின் விழிகளில் தவிப்பைக் கண்டவன் அவளது கரத்தை ஆதரவாகப் பற்றி அழுத்தி வலது காலெடுத்து வைத்து வீட்டிற்குள் அடி எடுத்து வைக்க, கதவைத் திறந்தவர் நேராக சென்று நின்றது மனைவியிடம் தான்.

“ஏன்டி நேத்துதான் அந்த புள்ளைய வரச் சொல்றதைப் பற்றி பேசிட்டு இருந்த?! நான் இன்னமும் சரினு கூட சொல்லலையே, அதுக்குள்ள ரெண்டு பேரும் இங்க வந்து நிக்கிறாங்க.” முறைப்புடன் லீலாவதியிடம் பரபரத்தார் அவர்.

“அடடே வந்துட்டாங்களா! என்னங்க நீங்க புள்ளைங்க முதன்முதலாக வீட்டுக்கு வர்றாங்க, கொஞ்சம் முன்னேயே வந்து சொல்லக்கூடாதா?!ஆலம் கூட எடுக்கலை.” கைகளை வேகமாக துடைத்தபடி சென்ற மனைவியை ஆனமட்டும் முறைத்து நின்றார் சிவநாதன்.

‘நான் என்ன சொல்றேன், இவ என்ன புலம்பிட்டு போறா பாரேன்!’ காண்டாகி தலையிலடித்துக் கொண்டு மனைவியின் பின்னால் சென்றார்.

வீட்டிற்குள் நுழைந்த சக்தி உள்ளுக்குள் சற்று படபடப்புடன் கண்களைச் சுழலவிட்டு வீட்டை அலச, “ஹே சக்திமா! வாடா வா! ஏன்டா முதன்முதலா வீட்டுக்கு வர்ற புள்ளைய ஏதோ க்ளாஸ் ரூம்ல டீச்சர் முன்னாடி நிக்கற மாதிரி நிக்க வைச்சிருக்க?!” மகனைக் கடிந்து கொண்டு அவளை வரவேற்றார்.

அதுவரை ஏதோ தயக்கத்துடன் நின்றிருந்த சக்திக்கு அவளது லீலும்மாவை கண்டதும் உற்சாகம் வந்து விட,”ஹை!! லீலும்மா! எப்படி இருக்கீங்க?” உரிமையுடன் அவரைக் கட்டிக் கொண்டாள்.

“அதுசரி, ரெண்டு பேரும் சேர்ந்தாச்சா! இனி உங்களுக்கு நானெல்லாம் கண்ணுக்கே தெரிய மாட்டேனே.” சிரிப்புடன் கூறிய அன்புமதி புதிதாக தெரிந்தான் அவனது தந்தைக்கு.

தன் மகன் மட்டுமல்ல.. தன் மனைவியும் அந்த புதியவளும் ஏதோ ஆண்டாண்டு காலமாக பழகியதைப் போல உறவாடிக் கொள்ள அனைத்தையும் உள்ளுக்குள் வியப்புடன் கண்டிருந்தாலும் வெளியில் விரைப்புடன் நின்றிருந்தார் சிவநாதன்.

error: Alert: Content selection is disabled!!