இறுதி அத்தியாயம் – 27
“டீ இந்தாங்க அங்கிள்! லீலும்மா கொடுத்தாங்க.” என்று கோப்பையை நீட்டிக் கொண்டிருந்தவளிடம் இருந்து முறைப்புடன் அதைப் பெற்றுக் கொண்டார் சிவநாதன்.
இது சக்தி இங்கு வந்தபிறகு வழக்கமாக நடக்கும் ஒன்று தான்.
சக்தியை ஊருக்கு அழைத்து வந்தபிறகு அவளை விட்டு பிரிந்து செல்ல அடம் பிடித்த அன்புவை வம்படியாக அனுப்பி வைத்தார் லீலாவதி.
“நீ தான் லீவெல்லாம் போட முடியாது சொன்னியேடா. சக்தியை கூட்டிட்டு வர்றது மட்டும் தான் உன் வேலை, அது முடிஞ்சது நீ கிளம்பு.” என்ற தாயை கண்களால் எரித்தான் மகன்.
“அவ இல்லாம நான் மட்டும் அங்க எப்படி தனியா இருக்கறது?! அதெல்லாம் முடியாது வேணும்னா ரெண்டு நாள் இருந்துட்டு அவளை கையோட கூட்டிட்டு போறேன்.” முரண்டு பிடித்தவனை முறைத்தார் தாய்.
“இத்தனை வருசமா ஸாரு தனியா தானே இருந்தீங்க?! இப்பயும் அதே மாதிரி இருந்துடுங்க. எங்களுக்கு இங்க நிறைய வேலை இருக்கு. நீ கிளம்பற வழியைப் பாரு.” கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி விட்டார் லீலாவதி.
சிணுங்கிக் கொண்டே ஊருக்குச் சென்றவன் தினமும் இரவு அவளை தூங்க விடாமல் அலைபேசியில் படுத்தும்பாடு சக்திக்கு மட்டுமே தெரியும். அதற்கும் விரைவில் ஆப்பு வைத்தார் லீலாவதி.
நான்கைந்து நாட்களாக சக்தியின் இமைகள் வீங்கி முகம் வாடித் தெரிய என்னவென்று விசாரித்தவர், இரவில் அவள் ஒழுங்காக உறங்கவில்லை என்றும் அதற்கு காரணம் தன் மகனென்றும் அறிந்து அவனை திட்டித் தீர்த்து இரவில் அவளது அலைபேசியை தன்னுடனே வைத்துக் கொண்டார்.
இப்படியாக நாட்கள் நகர, சக்தியிடம் தன் கணவனை இயல்பாக பழக வைக்க தன்னாலான அனைத்தையும் முயற்சிக்கிறார் லீலாவதி.
சக்தியைக் கொண்டு தினமும் காலையில் அவருக்கு தேநீரை தருவது, என்ன சமைக்க வேண்டும் என அவரிடம் கேட்டு வரச் செய்வது, சின்ன சின்ன விசயங்களுக்கு மனைவியை அவர் அழைத்தால் இவளை அனுப்பி வைப்பது என விடாமுயற்சி எடுக்கிறார் அவர்.
தற்போதும் அப்படித்தான் காலைத் தேநீரை அவளிடம் கொடுத்தனுப்ப, அதை முறைப்புடன் அவர் பெற்றுக் கொள்ள “உங்களுக்கு டீ குடிக்க பிடிக்காதுனா ஏன் அங்கிள் வேண்டா வெறுப்பா அதைக் குடிக்கிறீங்க?” வாய்வரை வரும் கேள்வியை அடக்கிக் கொண்டு சமர்த்து பெண்ணாக இருக்கிறாள் சக்தி.
அவளை முறைத்த சிவநாதன் குடித்து முடித்த கோப்பையை எப்போதும் அங்கேயே வைப்பவர் இன்று மனைவியிடம் பேச வேண்டும் என்ற முடிவுடன் சமையலறைக்குச் சென்றார்.
“ஏன் லீலும்மா அங்கிளுக்கு டீ பிடிக்கலைனா எதுக்கு வம்படியா அதையே கொடுக்குறீங்க? பாவம்! தினமும் ஏதோ கசாயத்தை கண்டது போல கடுப்போட வாங்கி குடிக்கிறார். இருந்தாலும் நீங்க இவ்ளோஓஓ ஸ்ட்ரிக்ட் ஆபிஃஸரா இருக்க வேணாம்.”
சமையல் மேடையில் அமர்ந்து காலை ஆட்டியபடி சிவநாதனுக்காக பரிதாபப்பட்டு அவள் பேச,”அடிப்பாவி! அவருக்கு பொழுதன்னிக்கு கொடுத்தாலும் டீயை குடிப்பாருடி. என்னமோ நாந்தான் அவருக்கு கட்டாயப்படுத்தி குடிக்க கொடுக்கற மாதிரி சொல்ற! ” வேகமாக பதிலளித்தார் லீலாவதி.
“அப்டியா சொல்றீங்க!!? ஆனாலும் அங்கிளோட முகத்தைப் பார்த்தா அப்படி தெரியலையே!” அவள் யோசனையுடன் தலையைத் தட்டிக் கொண்டிருக்க, தொண்டையைச் செருமி அங்கே வந்தார் சிவநாதன்.
அவரைக் கண்டதும் துள்ளிக் குதித்து இறங்கி சமாளிப்பாக புன்னகைத்தவளை முறைத்துவிட்டு, “என் பொண்டாட்டியோட நான் தனியா பேசனும்.” விரைப்புடன் அவர் சொல்ல, விட்டால் போதுமென நைசாக அங்கிருந்து அகன்றாள் சக்தி .
“ஏன்டி என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? எப்போ பாரு அந்த பொண்ணையே எல்லாத்துக்கும் அனுப்பற. எனக்கு எரிச்சலா வருது.” படபடவென்று பொரிந்தவர்,
“இதுல அங்கிள் அங்கிள்’னு சொல்லி கடுப்பேத்துது அந்தப் பொண்ணு. நீ மட்டும் லீலும்மாவாம் என்னைய மட்டும் அங்கிளாம்! என்னடி உறவுமுறை இது!? கடுப்பாகுது.” கடைசியில் எரிச்சலுடன் சொன்னவரை கூர்மையாக பார்த்தார் லீலாவதி.
அடுப்பை அணைத்து விட்டு கணவரைப் பார்க்க திரும்பியவர், “இப்ப அவ டீ கொடுக்கறது பிரச்சனையா? இல்ல என்னைய அம்மா’னு கூப்பிட்டு உங்கள அங்கிள்’னு கூப்பிடறது உங்க பிரச்சனையா?” உதட்டில் சிரிப்பை அடக்கிக் கொண்டு மனைவி வினவியதில் தடுமாறினார் அவர்.
தன்னைப் பார்ப்பதை தவிர்த்தவரின் முகத்தை தன்னை நோக்கி திருப்பிய லீலாம்மா, “சக்தி உண்மையிலேயே ரொம்ப பாவம்ங்க. தாயில்லாத பொண்ணு தான், ஆனா அவளோட தகப்பன் எப்படிப்பட்டவர்னு உங்களுக்கு தெரியுமா?” என்றவரை புரியாமல் பார்த்தார் சிவநாதன்.
சக்தி இங்கு வந்த அன்றே தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் லீலாம்மாவிடம் கூறியவள் அந்த இடரிலிருந்து அவளை மீட்க அன்பு செய்த பெரிய காரியத்தையும் விவரித்து, “நீங்க எல்லாம் என் வாழ்க்கையில எனக்கு கிடைச்ச வரம் லீலும்மா!” கண்ணீருடன் அவரை அணைத்துக் கொண்டாள்.
‘இப்படியுமா ஒரு தகப்பன் இருப்பான்!? இவனெல்லாம் எதற்கு பிள்ளைய பெற்றுக் கொள்ள வேண்டும்? ‘ அவளது தகப்பன் மீது கோபம் வந்த அதேசமயம் இத்தனை ஆண்டுகளாக சக்தி அன்பிற்காக எப்படி எல்லாம் ஏங்கி இருப்பாள் என்றெண்ணி வருத்தமடைந்தார் லீலாவதி.
தன் மகன் அவளுக்காக தன் உயிரையே பணயம் வைத்து காப்பாற்றியதில் அவள்மீது அவன் கொண்ட காதலை உணர்ந்தவருக்கு இவர்களது திருமணத்திற்கு தன் கணவனை சீக்கிரமே சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது.
சக்தியின் தகப்பனைப் பற்றியும் அவள் கடந்து வந்த பிரச்சனை பற்றியும் கூறிய லீலாவதி, “இந்த சின்ன வயசுல இத்தனை வேதனை மனசுல இருந்தும் அத்தனையும் தனக்குள்ள போட்டு அழுத்திட்டு சிரிப்போட வலம் வர்றா அவள்.”
“அவளை பொக்கிஷமா நினைக்கிறான் நம்ம மகன். அவளும் அன்புக்காக தான் ஏங்கி இருக்காள்ங்க. அவளுக்கு மனசார அந்த பாசத்தைக் கொடுக்க நம்மால முடிஞ்சும் அதைக்கூட செய்யலைனா நாம எல்லாம் என்னங்க மனுசன்? ” கணவனிடம் உருக்கமாகக் கேட்டார் லீலாவதி.
சக்தியைப் பற்றி அறிந்த சிவநாதனுக்கு அவளது தகப்பனை எண்ணி வெறுப்பாக இருந்தது. அவளுக்காக தன் மகன் ரிஸ்க் எடுத்து அவளை அவ்வளவு பெரிய சிக்கலிலிருந்து மீட்டு விட்டதில் அவனது காதலையும் உணர்ந்து கொண்டார்.
சக்தி இங்கு வந்ததிலிருந்து அவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். எதாவது விசயம் இருந்தால் பேசுவதற்கு மட்டுமே வாயைத் திறக்கும் லீலாவதி இவள் வந்தபிறகு அவளிடம் அடிக்கடி மனம்விட்டுப் பேசிச் சிரிக்கிறார்.
வீட்டில் ஒரு பெண்பிள்ளை இருந்தால் எப்படி இருப்பாரோ லீலாவதி அந்தளவு மகிழ்ச்சியை சக்தியினால் அடைந்தார். இருவரும் கேலி கிண்டல் செய்து பேசும் அந்த அழகான காட்சியை சக்தி வந்தபிறகு தான் உணர்கிறார் சிவநாதன்.
தன் மனைவியை அவள் ‘லீலும்மா’ என்றழைப்பது வெறுமனே பெயருக்காக இல்லாமல் ஆத்மார்த்தமான அன்போடு அழைத்து உரையாடுவதில், தன்னை அவள் அவ்வாறு அன்போடு அழைத்து உரையாடுவதில்லை என்ற பொறாமை சக்தி வந்த சில தினங்களிலேயே உள்ளூர ஏற்பட்டு விட்டது அவருக்கு.
சக்தியிடம் அதை வாய்விட்டு கேட்க ஈகோ தடுப்பதால் இத்தனை நாட்களாக பொறுத்துப் பார்த்தவர் இன்று மனைவியிடம் புகார் வாசிக்க வந்து விட்டார்.
ஆனால் சக்தியை பற்றி முழுதாக அறிந்தவருக்கு அவளை எண்ணி வருத்தமாக இருந்தது. லீலாவதி பேசிய அனைத்தும் கேட்டவர் அமைதியாக வெளியேறி விட, ஒரு பெருமூச்சுடன் தன் பணியைத் தொடர்ந்தார் லீலாவதி.
பூனை போல பின்னால் வந்த சக்தி அவரை அணைத்துக் கொண்டு “என்னாச்சு லீலும்மா?! நான் அவரைப் பற்றி பேசுனதைக் கேட்டு கோபப்பட்டாரா?” அவரது முகம் வாடி இருப்பதில் கவலையாகக் கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லடா செல்லம்! அவருக்கு நீ அங்கிள்னு கூப்பிடறது பிடிக்கலையாம் கடுப்பாகுதாம்!” லீலாவதி சொல்ல சக்தியின் முகம் வாடிப் போனது.
“அதென்ன அவளுக்கு நீ மட்டும் லீலும்மா, நான் மட்டும் அங்கிளா’னு கேட்டு கோபப்பட்டுட்டு போறாரு.” நமட்டுச் சிரிப்புடன் வருத்தமாக சொல்ல, சக்தியின் வாடிய முகம் சில நொடிகளில் விசயம் புரிந்து பிரகாசமானது.
“அவ்வளவு தானே! இனி பாருங்க இந்த சக்தியோட பர்ஃபார்மன்ஸ்!” அவரது கன்னத்தில் முத்தமிட்டு துள்ளலோடு ஓடிச் சென்ற சக்தியை ஆதுரமாக பார்த்தார்.
ஹாலில் அமர்ந்து நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தவர் முன்பு பிரசன்னமான சக்தி, “அப்பா! டின்னருக்கு தோசையா சப்பாத்தியா’னு லீலும்மா கேட்டுட்டு வரச் சொன்னாங்க.” உரிமையோடு கேட்ட சக்தியின் கேள்வியில் விழிவிரித்தார் அவர்.
உடனே தன் பார்வையை மாற்றிக் கொண்டு, “என் பொண்டாட்டி கஷ்டப்படாம இருக்க நீயும் ஹெல்ப் பண்ணுவ’னா சப்பாத்தியே செய்யச் சொல்லு.” மிதப்பாகக் கூறினார்.
“கண்டிப்பா உதவறேன்ப்பா! ஆனா, சப்பாத்தியில வேர்ல்ட் மேப் வந்தால் உங்களுக்கு ஓகேனா, எனக்கு நோ ப்ராப்ளம்ப்பா!” சல்யூட் வைத்து வேகமாக சொல்லிவிட்டு கிட்சனைப் பார்க்க ஓடினாள் அவள்.
“ஹேய்.. நில்லுமா! அதெல்லாம் எனக்கு பிடிக்காது. சப்பாத்தி கரெக்ட்டா ரவுண்டா வரனும்.” கறாராக சொன்னவரிடம் திரும்பி வந்தவள் ஓரிரு நொடிகள் யோசனையுடன் நின்றாள்.
“ஓகே டன்ப்பா! நான் காம்பஸ் வைச்சாவது சப்பாத்தியை ரவுண்டா செய்துடுவேன் ஆனா, அந்த ரவுண்ட் சப்பாத்தியை நீங்க மடக்காம கிழிக்காம அப்படியே முழுங்கனும். டீலா! நோ டீலா? ” என்றதில் வாயடைத்துப் போனார் சிவநாதன்.
“சீக்கிரம் சொல்லுங்கப்பா! நான் போய் சப்பாத்தி செய்யனும், டைம் ஆகுது.” வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல தயாராக இருந்தவளின் சவாலில் விழி பிதுங்கினார் அவர்.
“உன் இஷ்டம் போல செய் தாயி! நான் சாப்பிட்டு தொலைக்கறேன்.” வேண்டா வெறுப்பாக கும்பிடு போட்டு அவளை அனுப்பி விட சமையலறை வாயிலிருந்து இந்த சம்பாஷணையை கேட்ட லீலாவதிக்கு சிரிப்பு தாளவில்லை.
அடுத்து வந்த நாட்களில் சக்தியின் ஆட்டம் ஆரம்பம்! அப்பா அப்பா என்று எதற்கெடுத்தாலும் அவரிடம் வந்து நின்றாள். முதலில் விரைப்புடன் பதிலளித்தவர் அவளின் அடுத்தடுத்த படையெடுப்பில் ஈகோவை கீழே போட்டுவிட்டு அவளிடம் இயல்பாக உரையாடத் தொடங்கி விட்டார்.
அந்த வார இறுதியில் வீட்டிற்கு வந்த அன்புவிற்கு தன் தந்தையிடம் இயல்பாக கேலி பேசி வாயாடிய சக்தியைக் கண்டு வாய்க்குள் ஒரு ஈ, மூன்று கொசு போவது கூட தெரியாமல் வாயைப் பிளந்து நின்றான்.
முன்பெல்லாம் மாதம் ஒருமுறை வரும் மகன், சக்தி இங்கு வந்தபிறகு வார விடுமுறைக்கே அங்கிருந்து ஓடி வந்து விடுகிறான். அந்த இரு தினங்களும் அவள் எங்கு இருக்கிறாளோ அங்குதான் அன்புவும் இருப்பான்.
சக்தி சிவநாதனிடம் இயல்பாக உரையாடத் தொடங்கிய பிறகு அன்பு தொல்லையிலிருந்து தப்பிக்க அவரிடம் சென்று அவள் பேச்சு கொடுக்க, தந்தையின் முன்பு பேசவே தடுமாறுபவன், பாவம் ஏங்கி விட்டான் பையன்!
இருவரது கண்ணாமூச்சி விளையாட்டை கண்ணுற்ற சிவநாதன், “ஷ்ஷப்பா! முதல்ல சோசியரைப் போய் பார்த்து ஒரு நல்ல முகூர்த்த நாளை குறிச்சு இதுங்க ரெண்டுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கனும். ”
“அவன்கிட்ட இருந்து தப்பிக்கறதுக்காக எங்கிட்ட வந்து மூச்சு விடாம பேசிட்டே இருக்கா, இந்த சக்திப்புள்ள தொல்லை தாங்க முடியல. அது மட்டுமா என் பொண்டாட்டி கிட்ட கூட என்னால நிம்மதியா பேச முடியல.” அலுப்புடன் சொல்லி புலம்ப லீலாவதிக்கு மனம் நிறைந்து போனது.
சக்தி இங்கு இருந்த நேரத்தில் அவளது தந்தை மீது அவள் கொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்க, அவள் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அன்பு வந்து சொன்னபோது என்னதான் அப்போது வேகத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டாலும் தனக்கென இருந்த ஒரு ரத்த சொந்தமும் இப்படியானதில் மனம் சோர்ந்து விட்டாள்.
எப்போதும் கண்முன்னே கலகலவென வளைய வந்த சக்தியின் முகம் வாடியதில் “இப்ப என்ன நடந்துடுச்சுனு இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க? உன் அப்பா அப்படி எல்லாம் இல்லாம இருந்தா, நாங்க எல்லாம் உன் லைஃப்ல வந்திருப்போமா? ”
“எங்களுக்கும் இப்படி ஒரு சுட்டிப்பெண் மகளா கிடைச்சிருப்பாளா? எங்ககிட்ட நீ வரனும்னு தான் இப்படி எல்லாம் நடந்ததா நினைச்சுக்க சக்தி, அப்போ வருத்தமா தெரியாது.” இப்படிச் சொன்னது சாட்சாத் சிவநாதன்.
அவரது நேர்மறையான பேச்சில் மனம் நெகிழ்ந்த சக்தி,”அப்பா!” என அவரிடம் ஓடிச்சென்று தோளில் சாய்ந்து கொள்ள, வழக்கம் போல ஒருவனுக்கு மனதிற்குள் புகைந்தது.
சக்தியின் தந்தைக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தனசேகர் வெளியே வர முடியாதபடிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. இனி அவனது அந்திமம் சிறையில்தான்.
ஒரு சுபயோக சுபதினத்தில் பெற்றோரின் மனமார்ந்த வாழ்த்துகளுடன் யுவசக்தியின் கழுத்தில் மங்கலநாணை பூட்டி தன்னவளாக்கினான் அன்புமதி.
யாரோ ஒரு அநாதைப் பெண்ணை அன்பு மணக்கப் போகிறானே என புரளி பேசிய வாய்களுக்கு பூட்டு போடுவது போல, அவளது தாயாக ரோகிணியும் அவரது கணவரும் வந்து நின்று அவளுக்கு வைரத்தில் நகை பூட்டி திருமணத்தை சிறப்பித்தனர்.
அனிருத் மாப்பிள்ளைக்கு செய்த சீரில் வாயைப் பிளந்து நின்றது உறவினர் கூட்டம். ரேயானும் தன் நண்பனுக்கு திருமணப் பரிசாக ஆடி காரை வழங்கி சிறப்பிக்க வாயடைத்து போயினர் வந்தவர்கள்.
முதலிரவு அறைக்குள் அவளுக்காக காத்திருந்த அன்பு வெகு நேரமாகியும் அவள் வராததால் வெளியே வந்து பார்க்க, அவளது பெரியம்மா குடும்பத்துடன் அன்புவின் பெற்றோரும் சேர்ந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இப்படியாக குடும்பமாக அமர்ந்து கதை பேசுவதை இதுவரை கண்டிராத இந்த அம்மணி அவர்கள் பேசுவதை சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருக்க, அதைப் பார்த்து காண்டாகிப் போனான் அன்புமதி.
“அங்க ஒருத்தன் உனக்காக காத்திட்டு இருந்தா, நீ இங்க உட்கார்ந்து கதை கேட்டுட்டு இருக்க? ஏம்மா! அவள் தான் உட்கார்ந்துட்டாள்னா பெரியவங்க நீங்களாவது அவளை உள்ளே அனுப்பி வைக்கலாம்ல,” படபடவென வெடித்தான் சக்தியின் கணவன்.
“சும்மா குதிக்காதேடா! நாங்க எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து பேசுறத புள்ள ஆசையா கேட்டுட்டு இருந்தாள். அதுவுமில்லாம நீ எங்க போகப் போற, ஆனா இவங்க நாளைக்கு கனடா கிளம்பிடுவாங்கள்ல அதான் பேசிட்டு இருக்கா.”
“நாங்க பேசி முடிச்சுட்டு பொறுமையா அனுப்பி வைக்கறோம். அதுக்குள்ள நீ போய் தூங்கறதுனா தூங்கு போ!” தாய் சொல்ல சக்தியை ஆனமட்டும் முறைத்தவன் மச்சானிடம் ‘நீயாவது புரிஞ்சுக்கோடா!’ என கண்களால் சமிக்ஞை காட்டினான்.
ஒரு படத்தில் வடிவேலு பஞ்சாயத்தை கலைத்து விட்டதைப் போல ஆண்மகனின் மனதைப் புரிந்து கொண்ட ஆண்மகனாக அனிருத் ஏதேதோ காரணத்தைக் கூறி ஒவ்வொருவராக கிளப்பி விட, தன் மனைவியை இழுத்துக் கொண்டு ஓடிய அன்பு விடிந்தபிறகு கூட கதவைத் திறக்கவில்லை.
சிறு வயதிலிருந்தே அன்பிற்காக ஏங்கிய யுவசக்திக்கு அன்புமதியின் மூலமாக அவள் எதிர்பார்த்த அன்பும் பாசமும் நேசமும் கொள்ளை கொள்ளையாக கொட்டிக் கிடைத்தது.
தனது ஓசிடி பழக்கத்தால் ரேயானை தவிர யாருடனும் ஒட்டாத அன்புமதியின் வெறுமையான வானில் பெய்த மழையாக.. அதில் ஒளிரும் மழைச்சிலையாக வந்தவளிடம் மயங்கியவனுக்கு அவனது வாழ்வே வர்ணமயமாக மாறியது.
அவர்களின் வாழ்வு இதேப்போல் வண்ணமயமான பூத்தோட்டமாக மலர்ந்து மணம் வீசிட நாமும் வாழ்த்தி விடைபெறுவோமாக!
🌺சுபம்🌺
என்றும் அன்புடன்
உங்கள்
~ புவி MRK ~

