அத்தியாயம் – 4
அடுத்து வந்த தினங்கள் அவளது செயல்கள் அன்புவிற்கு சிறிது கடுப்பாக இருந்தாலும் அமைதியாகவே சென்றன.
காலையில் அவன் அலுவலகம் கிளம்பும் வரை சக்தி எழுந்து வருவதே கிடையாது. அவளது அறையை தாண்டிச் செல்லும் முன் ஓரக்கண்ணால் அந்த அறைக்கதவைப் பார்ப்பவன், தோள்களை குலுக்கி தலையசைத்து விட்டுச் சென்று விடுவான்.
காலையில் தனக்கான உணவை சமைத்து உண்டு முடித்து கிட்சனில் அனைத்தையும் சுத்தம் செய்து வைத்துவிட்டு செல்லும் அன்பு, தன் வேலை முடிந்து பின்மாலையில் திரும்பி வந்த பிறகும் கூட சமையலறை அதேப்போல சுத்தமாக இருந்தது.
அவள் தனக்கான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவது தெரியாமல், தனது கண்டிஷன்படி சமைத்து விட்டு அனைத்தையும் சுத்தம் செய்து விடுகிறாள் போல என்று தவறாக எண்ணிக் கொண்டான் அன்பு.
நல்லவேளை அவளது அறைக்கதவு திறந்திருக்கும் சமயம் உள்ளே பார்த்ததில்லை அவன். முதல்நாள் அவன் குறிப்பிட்டது போல அவளது அறையை குப்பைத்தொட்டி போலத் தான் வைத்திருந்தாள்.
கழட்டிய உடைகள் சிலநேரம் ஹேங்கரில்.. பலசமயம் சேர், பெட் என எதாவது மேல் பரப்பிக் கிடக்கும். ஆர்டர் செய்த உணவுகள் பேக்கிங் செய்யப்பட்டு வந்த அதன் அட்டைப்பெட்டிகள், காகிதங்கள் ஒருபுறம் குவிந்து கிடந்தது.
அதை எல்லாம் சுத்தம் செய்ய அந்த அம்மணிக்கு விடுமுறை நாள் வரும்வரை நேரமில்லையாம், தனக்கு தானே காரணம் கூறி சமாதானம் செய்து கொள்வாள்.
இதுவரை அவள் வளர்ந்த விதமே வேறு. சுடு தண்ணீர் எப்படி வைப்பது எனக் கேட்டால், “கெட்டில்ல தண்ணி ஊத்தி ஸ்விட்சை போட்டு விட்டா, ஹாட் வாட்டர் ரெடி!” அது தெரிந்து வைத்திருப்பதே பெரிய விஷயம் என்பது போல கைகளை விரித்து பெருமையுடன் கூறுவாள்.
அத்தனை சிறப்பு வாய்ந்த யுவசக்தி, இப்படி ஒரு ஓசிடி அன்புவிடம் சிக்கிக் கொண்டாள். ‘ரூம்மை விட்டு வெளியே வந்தா தானே எல்லாத்தையும் க்ளீன் செய்யனும்!’ அதனால் தனது அறைக்குள்ளேயே அடைந்து கொண்டாள். எத்தனை நாட்களுக்கு அப்படியே இருக்க முடியும்!?
அன்று காலையில்.. அன்பு தனது அறைக்குள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, ஒரே அறைக்குள் தொடர்ந்து அடைந்துகொண்டு அதிகமான நேரம் கணினி திரையைப் பார்த்ததன் விளைவு சக்திக்கு அதிகாலையிலேயே தலைவலி மண்டையைப் பிளந்தது.
‘இப்போ ஒரு கப் காஃபி குடிச்சா எவ்ளோ நல்லாருக்கும்!’ கண்கள் மலர மனம் ஏங்கியது. “ஆனா நமக்குத்தான் அதெல்லாம் போடத் தெரியாதே!” வாய்விட்டே புலம்பியவள்,
“ஹ! அப்றம் எதுக்கு இருக்கு யூ டூபு! அதுல பார்த்து கத்துக்கறோம், இன்னிக்கு காஃபி போட்டு அசத்தறோம்!” சவாலாகச் சொல்லி அதில் குவிந்து கிடந்த பல வீடியோக்களை பார்த்துக் குழம்பி விட்டாள்.
ஏற்கனவே இருந்த தலைவலி மண்டையில் இடியாக மாறியது தான் மிச்சம்! ஏதோ ஓரளவு இப்படித்தான் என கணித்துக் கொண்டவள் அன்று தான் கிச்சன் பக்கமே செல்கிறாள்.
“வாவ்!!” என வாயைப் பிளந்து நின்ற சக்தி,” இந்த டைம்டேபிள் சமைக்கறானா? இல்லையா?! இவ்வளவு சுத்தமா வச்சிருக்கான்!” சமையலறையை ஏதோ சுற்றுலா தளம் போல சுற்றி வந்தாள்.
பிறகு “சரி, நாம வந்த வேலையைப் பார்ப்போம். காஃபி போட பால் வேணும்னு சொன்னாங்களே!” ஃப்ரிட்ஜில் தேடி பாலை எடுத்து அதை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தாள்.
அந்த பால்கூட அதிகாலை அன்பு எடுத்து வந்து உள்ளே வைத்தது. (நல்லவேளை பால் பாட்டிலில் வருவதால் சிந்தாமல் பாத்திரத்தில் ஊற்றி விட்டாள். பாக்கெட்டாக இருந்தால் இந்நேரம் அடுப்பு மேடைக்கு பாலாபிஷேகம் தான்!)
ஸ்டவ்வின் நாப்பை திருகி திருகிப் பார்த்தவள், “அதுல எல்லாரும் இப்படி தானே திருகி ஸ்டவ் ஆன் பண்ணுனாங்க! இது மட்டும் ஏன் எரிய மாட்டீங்குது?!” நகத்தைக் கடித்து யோசித்தவள்
வேகமாக தனது அறைக்கு சென்று அலைபேசியில் அந்த மாடல் அடுப்பை எப்படி பற்ற வைப்பது எனத்தேடிக் கண்டுபிடித்து செய்முறை பார்த்து வந்து வெற்றிகரமாக அடுபபைப் பற்ற வைத்து விட்டாள்.
ஆனால் பாவம் அதற்குள் காஃபி போடுவதன் அடுத்த கட்டம் மறந்து விட்டது. அடுப்பில் தீயை அப்படியே விட்டுவிட்டு மீண்டும் தன் அலைபேசியில், “இந்த வீடியோ தானே நல்லா இருந்துச்சு!?” என அவள் வீடியோக்களில் மூழ்கித் தேடிக் கொண்டிருந்தாள்.
‘நீ பாட்டுக்கு தேடு, நான் என் வேலையை பார்க்கறேன்’ என்று பால் பொங்கி அடுப்பில் வழிந்து அடுப்பை அணைந்து விட்டது. அந்த சத்தமும்,கேஸ் ஸ்மெல்லும் கூட தெரியாமல் அதிதீவிர தேடல் அவளிடம்!
உடற்பயிற்சி முடித்து அறையை விட்டு வெளியே வந்த அன்புவின் நாசியை ஒரு வாசனை முட்டி மோத, இருமுறை மூக்குறிஞ்சி பார்த்தவனுக்கு அது என்னவென்று தெரிந்தவுடன் சமையலறைக்கு ஓடினான்.
அங்கு சமையல் மேடையில் பாலாறு ஓடிக் கொண்டிருக்க பக்கத்தில் சக்தி! அவள் கையில் அலைபேசியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்க, “இடியட்!! என்ன செயது வச்சிருக்க நீ!?” பதறியபடி அர்ச்சனையுடன் விரைந்து வந்து அடுப்பை அணைத்தான் அன்பு.
திடுமென கேட்ட சத்தத்தில் ஜெர்க்கான சக்தி அதிர்ச்சியுடன் விழித்து நிற்க, அன்பு துளிகூட அன்பற்ற பார்வையோடு அவளை தீயாக முறைத்திருந்தான்.
“ஸ்டவ் ஆன் பண்ணுனா, அதை கவனிக்கனும். அதை விட்டுட்டு.. ம்ப்ச்!! யூஸ்லெஸ்! இப்போ பாரு! எப்படி நாறடிச்சு இருக்கேன்னு..” தலையிலடித்துக் கொண்டவனுக்கு பதற்றத்தில் கைகள் நடுங்கத் தொடங்கி விட்டன.
அன்பு தன் கை முஷ்டியை இறுக்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “இன்னும் ஒரு நிமிசத்துல இதெல்லாம் க்ளீன் செய்து முடிக்கற.” பற்களைக் கடித்துக் கொண்டு கர்ஜித்தவன்,
“ரூல் படி இன்னிக்கு முழுக்க இனி நீ கிட்சன்க்குள்ளயே வரக்கூடாது. மைன்ட் இட்!” ஆணையிட்டபடி முகத்தைச் சுளித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து அகன்றிட, ஏதோ கான்ஜூரிங் படம் பார்த்த எஃபெக்ட்டில் உறைந்து நின்றிருந்தாள் சக்தி.
அன்பு ஹாலில் அமர்ந்து கொண்டு சத்தமாக, “அல்ரெடி டென் செகண்ட்ஸ் ஓவர்!” அலாரம் போல் அடித்துக் கொண்டிருந்தவனுக்கு அசுத்தமான அந்த இடமே கண்களில் வலம் வந்து டென்சனாக்கியது.

