மயங்கினேன் மழைச்சிலையே – 7

அத்தியாயம் – 7

அரைவட்டமாக தன் தட்டிலிருந்த கடைசி தோசையை பார்த்த அன்பு, எதிரில் இருந்த சக்தியின் தட்டிலிருந்ததைக் கண்டு குழப்பமடைந்தான்.

“பரவால்லயே! நான் தோசை ஊத்தறதுக்கு தான் சொல்லி கொடுத்துட்டு வந்தேன். நீ என்னமோ புதுசா சிப்ஸ் எல்லாம் ட்ரை பண்ணி இருக்க போல, அதென்ன ராகில செய்ததா?” கருப்பான துண்டுகளாக அவளது தட்டிலிருந்ததைக் கண்டு ஆச்சர்யமாக வினவினான்.

முகத்தைச் சுழித்து அவனை பாவமாகப் பார்த்தவள், “விளையாடாதீங்க மாஸ்டர். நீங்க சொன்ன மாதிரி தான் தோசை ஊத்துனேன். ஆனா எனக்கு மட்டும் இப்படி வந்திருக்கு!” உதட்டைப் பிதுக்கி சோகமாக விடையளித்தாள் சக்தி.

அது தோசையின் மிச்சசொச்சம் என்பதே அதை உற்றுப் பார்த்தவனுக்கு அவள் கூறியபின்பு தான் தெரிகிறது. அந்தளவுக்கு அடையாளத்தை மாற்றி இருந்தாள் அந்த பரதேவதை.

“என்னம்மா இது!!? நீ தவாவுல மாவை ஊத்துறவரை நாந்தான் நின்னு பார்த்துட்டு தானே வந்தேன். அப்றம் எப்படி!!?” காரணம் விளங்காமல் மண்டை குழம்பிப் போய் அவன் கேட்க,

அந்த அம்மணி தீயை குறைக்காமல் வெந்துவிட்ட தோசையை வெகுநேரமாக திருப்ப முயன்றதில் ‘வரமாட்டேன் போ’ என கல்லோடு ஒட்டிக் கொண்ட தோசையின் காதல் கருகிப் போன விபத்துதான் அது.

அவள் விளக்கத்தைக் கேட்டவன் தலையில் கைவைத்த அடுத்த நொடி அலறியடித்துக் கொண்டு கிட்சனுக்குள் ஓட, அந்த இடமே வெண்மேகமாக சிந்திய மாவுப் புள்ளிகளுடன், கருகிய துணுக்குகள் மழைச்சாரலாக சிதறி போர்க்களம் போல காட்சியளித்தது.

அசுத்தமான இடத்தைக் கண்டு அன்புவிற்கு ஏற்பட்ட பதற்றத்தில் நடுங்கிய கை முஷ்டியை இறுக்கி, கண்களை மூடிக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்தியவன், வேகமாக திரும்பி விட்டான்.

அவனது பின்னோடு வந்தவளுக்கு அவன் செய்கையிலேயே அவனது கோபம் புரிந்து விட, “ஸாரி ஆபிஃஸர்! இப்பவே க்ளீன் பண்ணிடறேன். ப்ளீஸ் நீங்க போங்களேன்!” அவனிடம் தன்மையாகவே கூறி அங்கிருந்து அகற்றினாள்.

டைனிங் டேபிளில் நிலையில்லாமல் பதற்றமாக அமர்ந்திருந்தவனிடம் சில நொடிகளில் சுத்தம் செய்துவிட்டு வந்த சக்தி கிட்சனுக்கு அழைத்துச் சென்று காட்ட, சுத்தமான இடத்தைப் பார்த்த பிறகுதான் அமைதியானான் அவன்.

தவறிழைத்த சிறுபிள்ளையாக அவள், “எனக்கு சமைக்க வர மாட்டீங்குது மாஸ்டர். நான் என்ன செய்வேன்?” தோற்றுப் போன மனநிலையில் செய்து வைத்த காரியத்திற்காக வருத்தத்துடன் கூறினாள் சக்தி.

மூச்சை நன்கு இழுத்து விட்ட அன்புமதி அவளது கூம்பிய முகமும் வருத்தமான பேச்சையும் கேட்டு “அப்படி எல்லாம் இல்லமா. எல்லாமே ப்ராக்டிஸ் பண்ணா வந்துடும். கவலைப்படாதே.” ஆறுதலாய் கூறினான்.

அவள் இன்னமும் வருத்தமாகவே இருக்க, “வேணும்னா இன்னிக்கு பீட்ஸா ஆர்டர் போடலாமா? நான் பே பண்றேன். ப்ரேக் அப் ஆன தோசைக்காக,” நமட்டுச் சிரிப்புடன் கூறி அவளை இயல்பாக்க முயன்றான்.

இதழோரம் லேசான சிரிப்புடன் அவள் சரியென சம்மதிக்க, வழக்கமாக இரவு சீக்கிரம் உறங்கச் செல்பவன் அவளுக்கான உணவு வந்து, அவள் சாப்பிட்ட பிறகுதான் உறங்கச் சென்றான்.

படுக்கையில் விழுந்த அன்புவிற்கு, அவளுக்காக தான் ஏன் இத்தனை மெனக்கெடுகிறோம்?! என்ற வினா மனதில் எழ, அன்றைய தினம் நடந்த உரையாடல் நினைவில் வந்தது.

அன்புமதி அவளது தாயைப் பற்றி கேட்டதும் சில நொடிகள் மௌனமாக இருந்தவள் முகம் சோகத்தைக் காட்ட, “என்னாச்சு?! நான் எதாவது தப்பா கேட்டுட்டேனா?!” தயக்கத்துடன் வினவினான் அன்பு.

“அதெல்லாம் ஒன்னுமில்ல ஆபிஃஸர்.” சோர்வான குரலில் பதிலளித்தவள், ” நான் ஃபிப்த் படிக்கும் போதே என் அம்மா என்னை தனியா விட்டு இறந்துட்டாங்க. அப்பா பிஸினஸ்ல ரொம்ப பிஸி..”

“ஸோ, என்னைப் பார்க்க எல்லாம் அவருக்கு நேரமில்ல. அப்றமென்ன! ஸ்டடிஸ் ஃபுல்லா போர்டிங் ஸ்கூல், காலேஜ் ஹாஸ்டல் இப்படித்தான் போச்சு. அதனால சமைக்கறதுக்கான சான்ஸே இல்ல.” இலகுவாக தோள்களை குலுக்கினாள் சக்தி.

யுவசக்தி கூறியதைக் கேட்ட அன்புவிற்கு ரேயானின் நினைவு வந்தது. அன்புவின் உயிர் நண்பன் ரேயானின் நிலையே வேறு. வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் பொதுவாக ஒரு வயதிற்கு மேல் அங்கெல்லாம் குடும்பத்திற்குள் இருக்கும் பாண்டிங் பெரிதாக யோசிக்க மாட்டார்கள்.

பிள்ளைகளும் அதை எதிர்பார்க்கவும் மாட்டார்கள். அப்படிப்பட்ட ரேயான் கூட கல்லூரியில் படிக்கும் காலத்தில் அன்புவின் வீட்டிற்கு சென்றபோது அன்புவின் தாயோடு அவனுக்கு இருக்கும் பிணைப்பை ஆச்சர்யமாக பார்ப்பான். அதில் புதிதாக ஒன்றைப் பார்த்த வியப்பு மட்டுமே மேலிடுமே தவிர ஏக்கம் இருக்காது.

அன்புவின் ஓசிடியால் அவனிடம் யாரும் பெரிதாக நட்பு பாராட்டாத நிலையில், அன்புவின் பிரச்சனையை பொருட்டெனக் கொள்ளாமல் அவனுடன் நட்பு கொண்ட ரேயான், அன்புவின் தாய் லீலாவதிக்கு தன் வயிற்றில் பிறக்காத மகனாகிப் போனான்.

இவளானால் சிறு வயது முதலாக தாயில்லாதவள் என்பதை இயல்பாக கூறினாலும் அவளது வார்த்தைகளில் புதைந்திருந்த வெறுமையை உணர்ந்த அன்பு, அவளுக்காக வருந்தினான்.

இத்தனை வயதான தனக்கே சிலநேரங்களில் தாயை எண்ணி ஏக்கம் வரும்போது, பெண்பிள்ளை தாயன்பிற்காக எவ்வளவு ஏங்கி இருப்பாள் பாவம்! என்று அவன் வருந்திக் கொண்டிருக்க,

“ஆனா, இப்போ இங்க வந்தபிறகு தான் சிலநேரம் நீங்க சமைக்கற வாசனை என் ரூம் கதவைத் தாண்டி என் மூக்கை சுரண்டும் போது, ச்சே! நாமளும் சமைக்க கத்து இருக்கலாம்னு தோணுது.”

ஏதோ ராக்கெட் மிஷனை தவறவிட்ட தோரணையில் யோசனையுடன் அவள் தலையாட்டிச் சொன்ன விதத்தில் அன்பு சிரித்து விட,” என்னா சிரிப்பு!? சமைக்க தெரியுதுனு நக்கலா மிஸ்டர். லவ்!?”பக்கவாட்டு பார்வையில் அவனைப் பார்த்து முறைத்தாள் சக்தி.

அவளது ‘லவ்’வில் ஆஃப் ஆகி போன அன்பு, தனது பார்வையை அங்குமிங்குமாக திருப்பி, “சமைக்க கற்றுத்தர சொல்லி நேரடியா கேட்டா, பதில் சொல்லப் போறேன். அதுக்கு ஏன் இப்படி நாசா விஞ்ஞானி ரேன்ஜ்க்கு பேசிட்டு இருக்க?!” உதட்டோர புன்னகையுடன் கேட்டான்.

“அப்ப எனக்கு குக்கிங் சொல்லி தர்றீங்களா?!” விழிகள் விரிய ஆர்வமாகக் கேட்டவளிடம், “ஆனா ஒரு கண்டிஷன்!” என்றவனைப் பார்த்து “ம்க்கும்! ஏன் பாஸ் உங்களுக்கு கண்டிஷன் போடாம எதுவுமே செய்யத் தெரியாதா?!”கண்களைச் சுழற்றி அலுப்புடன் கேட்டாள் சக்தி.

அன்பு புருவம் உயர்த்தி அசையாமல் அவளை பார்க்க,”சரி, சரி.. என்ன பெரிய கண்டிஷன் சொல்லப் போறீங்க?, எதையும் அழுக்கு பண்ணக்கூடாது, சுத்தமா இருக்கனும்னு என்னமோ மிஸ்டர் க்ளீன் ஆட் மாதிரி சொல்லுவீங்க.” கேலியாகக் கூறினாள்.

அன்பு எதுவும் பேசாமல் அமைதியாக நகரப் போக, “நில்லுங்க பாஸ்! அதுக்குள்ள ஓட்றீங்க. நான் வாய்க்கு ஜிப் போட்டுட்டேன். நீங்களே சொல்லுங்க.” வாய்மீது ஜிப் போடுவது போல செய்தவள் விரல் வைத்து நின்றாள்.

அவள் சொன்ன அதே விசயத்தை இன்னமும் கொஞ்சம் மேக்கப் போட்டு பாலிஷாக அவன் கூறியதில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் நிற்க, போலியாக அவளை முறைத்தவனும் சிரித்து விட்டான்.

இப்படியாக தொடங்கிய சமையல் வகுப்புகள்.. இரத்தச் சிவப்பில் தொட்டாலே ‘நெருப்புடா!’ என எரிய வைக்கும் தக்காளி சட்னி, கொழகொழவென கூழாகிப் போன மேகி..

தண்ணீர் ஊற்ற மறந்ததால் குக்கரோடு கருகிப் போன அரிசி சாதம்(சாதமா? அரிசி? மன்னிக்கவும் தெளிவாக தெரியவில்லை.), உப்பே இல்லாத உப்புமா என தினம் ஒரு தினுசாக தொடர்கிறது.

பெற்றோரின் அன்பான அரவணைப்பு, பாசம் எதுவுமே இல்லாமல் வளர்ந்தவளிடம் கோபத்தைக் காட்ட முடியாமல் மனம் தடுமாறுவதில் ‘நிற்கவா? போகவா? ‘ எனக் கேட்கும் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பொறுத்துப் போகிறான்.

error: Alert: Content selection is disabled!!