“எனக்கு அப்படியொன்றும் கஷ்டமாக இல்லை; எப்போதும் போலத்தான் இருக்கிறேன்!” என்றவள், “நீங்க போய் உங்க வேலைகளைப் பாருங்க!” சொல்ல நினைத்த நாவை இழுத்துப் பிடித்து அடக்கினாள்.
காலையில் புறப்படும் பொழுது, “உங்க மனதில் அண்ணாவுக்கு இடம் இருக்கின்றதா?” கேலியும் கிண்டலுமாக நித்தி வம்புப் பேச்சை ஆரம்பிக்க, அதைக் கேட்டு நின்ற இவனும் தன் விழிகளை மதுராவின் விழிகளோடு உறவாட விட்டு, ஒருவித எதிர்பார்ப்போடு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.
இது, அவன் அனுமதியை எதிர்பாராது அவன் மனமே சுயமாக நடத்திக் கொண்ட விளையாட்டு! ஏதோ ஒருவித பரபரப்போடு அவள் பதிலை அறிந்துவிடத் துடித்தது அவன் மனம்.
தன் பார்வையை அவள் இனம் கண்டுவிட்டாள் என்பதை உணர்ந்த பின்னும், மற்ற சந்தர்ப்பங்களைப் போல தன்னைத்தான் சுதாகரிக்க அவன் முயலவில்லை. அவன் பார்வையில் இருந்த ஆர்வத்தில், நெஞ்சக்கூடு சில்லிட அசைவற்றுப் போனாள் மதுரா.
இதுவரை அவன் பார்வை வேறுபாட்டில் கலங்கினாலும், அடுத்த நொடி அவன் சாதாரணமாக இருப்பதைப் பார்த்து, ‘ச்சேச்சே! அவர் சாதாரணமாகத்தான் நடந்து கொள்கிறார்; நாம் தான் காமாலைக் கண் கொண்டு பார்க்கிறோம்! எல்லாத்துக்கும் காரணம் இவர் என்னில் காட்டும் பரிவும், நித்தியின் கேலிப் பேச்சுக்களும் தான்!’ என்று நினைத்திருந்தவள், அக்கணம், அவன் பார்வை தன்னைவிட்டு விலகாது ஒருவித பிடிவாதத்தோடு நிலைத்திருந்ததைப் பார்த்து கிலியின் பிடியில் சிக்கி நின்றாள்.
அவனோ, மனம் சுளித்து அவள் அமைதியைச் சுவாசித்தவன், முகச் சுணக்கத்தோடு திரும்பி நடந்து காரில் ஏறியிருந்தான்.
அதை இப்போது நினைத்துக் கொண்டவள், ‘வழமையாக இப்படிப் பேசும் தங்கையைக் கடிந்து கொள்பவர் இன்று ஒத்த வார்த்தை பேசவில்லையே! இவர் மனதில் என்னைப் பற்றி என்ன நினைத்துள்ளார்!’ ஒருபோதுமின்றி, கார்த்திகேயன் மீது கோபம் கொள்ள முயன்றது அவள் மனம்!
‘புருஷன் என்கின்ற மிருகம் கைவிட்டு, பரிதாபகரமான நிலையில் எங்க தயவில் வந்திருக்கிறாள் என்றதும், என்னை அவ்வளவு இளக்காரமாக எண்ணிக் கொண்டாரோ!’ தொடர்ந்து எண்ணியவளால், பிழையான நோக்கையோ, தீமையையோ அவனோடு பொருத்திப் பார்க்க முடியவில்லை.
‘நான் ஒரு கண்ணியவான் என்பதை, தன் ஒவ்வொரு சிறுசிறு செயலிலும் பேச்சிலும் காட்டுபவர் அவர்.’ பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டவள், ‘குழந்தைகள் பிறந்ததும் இந்த வீட்டிலிருந்து விலகிவிடவேண்டும்; அம்மாவோடு இலங்கை போவதுதான் சரி!’ என்ற எண்ணம் வலுப்பெற, மறந்தும் அவன் புறம் திரும்பாது தன் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.
“வெங்காயம் உரித்துத் தரட்டுமா மதுரா?” வெங்காயம், உள்ளியை எடுத்து சமையல் மேடையில் வைத்துவிட்டு பிரிஜ்ஜைத் திறந்தவள், அவன் குரல் காதில் விழாத பாவனையில் பெரிய கரட் இரண்டையும் ப்ரோகோலியையும் எடுத்து வெளியில் வைத்துவிட்டுத் திரும்ப, வெங்காயம், உள்ளியை எடுத்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்.
“ஹைய்யோ, என்ன நீங்க! இது என்ன பெரிய வேலையா? நான் பார்த்துக் கொள்கிறேன்; தயவு செய்து அங்கால போங்க; எனக்கு யாரும் பக்கத்தில் நின்றால் சமைக்க வராது!” அவளையும் அறியாது சிடுசிடுத்தாள்.
எடுத்த வெங்காயங்களை இருந்த இடத்தில் வைத்தவன், அவளையே கூர்ந்து பார்த்தான்.
அவள் முகத்தில் பரவிக் கிடந்த இறுக்கம் அவன் மனதை அப்படியே பாதித்தது!
‘நான் என்ன செய்துவிட்டேன் என்று இப்படிச் சீறுகிறாள்! இவள் மனதில் என்னைப் பற்றி என்ன நினைத்து வைத்திருக்கிறாள்!’ அவன் மனம் கோணிக் கொண்டது!
அதேவேகத்தில் சட்டென்று திரும்பி வாயிலை நோக்கி நடந்தவனின் முதுகை வெறித்த மதுராவுக்கு, உதவி வேண்டுமா என்று வந்தவனை அப்படி அனுபியத்தில் மனதில் சங்கடமே எஞ்சி நின்றது.
“காஃபி அல்லது டீ குடித்துவிட்டுப் போங்கோவன்!” தயக்கத்தோடு வந்த அவள் குரலில், மனமும் முகமும் மலர, திரும்பினான் கார்த்திகேயன்.
“ம்ம்.. ஒரு கப் டீ!” என்றவன், “பரவாயில்லையா மதுரா? அல்லது காஃபி போடுவது இலகுவென்றால் அதைத்தாங்க!” என்றவாறே உணவு மேசையின் நடுவிலிருந்த பெரிய பழக்கூடையிலிருந்து இரண்டு பெரிய ஆரஞ்சுகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் வந்தவன், ஜுஸ் மேக்கரை எடுத்து மளமளவென்று ஜுஸ் தயாரிக்கத் தொடங்கினான்.
இவளோ, தேநீர் போடவும் மறந்து அவனையே பார்த்திருந்தாள்.
அவள் பார்வை தன்னில் இருப்பதுணர்ந்தும் சிறிது நேரம் திரும்பாது நின்றவன், பின்னர் மெல்ல அவளை நோக்கி, “என்ன மதுரா, டீ அல்லது காஃபி கிடைக்குமா?” இதழ்கடையோரம் உதித்த முறுவலோடு வினவினான்.
“ம்ம்…இதோ போடுகிறேன்; ஆனால், இது எதுக்கு?” ஆரஞ்ஜுசைப் பார்த்தாள்.
“அதுவா? கொஞ்சம் பொறுங்க, ஜுஸ் போட்டுவிட்டுச் சொல்கிறேன்; நீங்க டீயைப் போடுங்க!” என்றவன், ஜூசை பெரிய கிளாஸ் ஒன்றினுள் நிறைத்து வைத்துவிட்டு ஜுஸ்மேக்கரை சுத்தம் செய்தான்.
“வையுங்க; நான் க்ளீன் பண்ணி வைக்கிறேன்!”
“இல்ல பரவாயில்லை, இதோ முடிந்துவிட்டது.” அதைத் துடைத்து இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவள் நீட்டிய தேநீரை வாங்கிக்கொண்டே, மறுகரத்தால் ஜூசை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவன் தயாரிக்கத் தொடங்கும் பொழுதே இதை அறிந்திருந்தவளுக்கு மீண்டும் முணுக்கென்று கோபம் வந்தது.
முகம் இறுக ஜூசை வாங்காது நின்றவளை விரிந்த முறுவலோடு நோக்கினான் அவன்.
“என்ன மதுரா இது! நீங்க செய்வது உங்களுக்கே நியாயமாக இருக்கா?” என்றவனை, ‘இப்போது என்ன புதிதாக?’ என்ற பாவனையில் ஏறிட்டாள் அவள்.
“இங்கு வந்த இத்தனை நாட்களில், நீங்க எதைத் தந்து சாப்பிடச் சொன்னாலும் அடுத்த வார்த்தை பேசாமல், சொட்டும் மீதி வைக்காமல், சப்புக் கொட்டிச் சாப்பிட்டு விட்டு போகிறனானா இல்லையா? அதே, நான் ஒரு கிளாஸ் ஜுஸ் தந்தால் அது கசக்குமா?” கேலிபோல் ஆரம்பித்தவன் குரல் இறங்கிவிட, அவன் முகத்தைப் பார்க்காது விழிகளை விலத்திக் கொண்டாள் மதுரா.
“இதே, நித்தி போட்டுத் தந்தால் குடிப்பீங்க தானே!” அப்போதும் அமைதியாக நின்றவளை ஒருவித இயலாமையோடு நோக்கிவிட்டு, “பரவாயில்லை மதுரா, நீங்க இதைக் குடிக்க வேண்டாம்!” மேடையில் வைக்க முயல, “இல்லை, தாங்க!” சட்டென்று வாங்கிக் கொண்டவள், “இதை நான் போட்டுக் குடிக்க மாட்டேனா?” என்றவளுக்கு ஏனோ கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது!
மனைவி, அதுவும் குழந்தையைத் தாங்கி நிற்கிறாள் என்றால் கணவனின் சிறுசிறு கரிசனைகள் எவ்வளவோ இருக்குமே! அவையெல்லாம் இவள் மட்டில் கனவாகியதேன்!?
‘நீ என்னவள்’ என்கின்ற உரிமையோடு அரவணைக்க வேண்டிய உறவு உதறி விட, யார் யாரோவெல்லாம் தம் கரிசனையால் இவளைத் திக்குமுக்காட வைக்கிறார்களே!
அதில் மனம் ஒப்பி மகிழ முடியாது திக்கித் திணறி, ‘நீ ஏன் எனக்கு இதைச் செய்ய வேண்டும்?’ என, பரிவையும் கரிசனையையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க முனையும் மனதை, என்ன சொல்லி அடக்குவது?
நடுங்கிய விரல்களால் ஜுஸ் கிளாசை இறுகப் பற்றியவாறே, மளுக்கென்று வழிந்த விழிநீரை மறுகையால் துடைத்த மதுராவை இயலாமையோடு பார்த்து நின்றான் கார்த்திகேயன்.
வெளியில் காட்டவில்லை என்றாலும் தன்னுள் அடக்கி வைத்து மறுகும் நிலைக்கு இக் கண்ணீர் எவ்வளவோ மேலென்றே அவன் மனம் எண்ணியது.
அமைதியாக சென்று மீண்டும் அமர்ந்து கொண்டவன், “மதுரா” அழைத்தவன், “ம்ம்..” என்று திரும்பியவளிடம் , “ஜுசைக் குடியுங்க.” என்று தேநீரைப் பருகத் தொடங்கினான்.

