மலருமோ உந்தன் இதயம் 13.2

இதையே, மதுரா இங்கே இருப்பதை அவ்வளவாக விரும்பாத அவன் தமக்கையும் வலியுறுத்தி இருந்தாள்.
அவளை அனுப்புவதை நினைக்கும் போதெல்லாம் முரண்டிய மனம், இன்று அதன் காரணத்தை ஐயமறப் புரிந்ததில் செய்வதறியாது அலைபாயவும் செய்தது!
‘சித்திக்கு என் மனம் தெரிந்தால்!’ எண்ணியவன், வீண் மனஸ்தாபங்களைச் சற்றும் விரும்பவில்லை. ஆனால், அது நடந்துவிடுமோ என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
“இப்போ அதுவா முக்கியம்? எல்லாத்துக்கும் முதல் அவளுக்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட வேண்டும். குழந்தைகள் சுகமாகப் பிறக்க வேண்டும்.” தன்னையே கடிந்து கொண்டவன், முன்னால் விரையும் அம்புலன்சையே ஏக்கமாகப் பார்த்தான்.
‘எவ்வளவு உரிமையாக ராது என்கிறேன்!’ அவனால் வியக்காதிருக்க முடியவில்லை. தன் அடிமனதில் இப்படியொரு ஆசை உறங்கிக் கொண்டிருந்திருக்கின்றதே என்கின்ற பிரமிப்பும் விலகவில்லை.
நித்தி, அப்பப்போ சிறுபிள்ளைபோல தன்னை அவளோடு சேர்த்துக் கேலிகள் செய்வதும் அதற்கு அவள் காட்டும் பிரதிபலிப்பும் நினைவில் வர, ‘என் மனம் தெரிய வந்தால் என்ன மாதிரி நடந்து கொள்வாள் என்கின்ற தவிப்பும் இலேசான பயமும் அவனுள் எழுந்தது.
அவ்வளவு இலகுவில் அவளிடமிருந்து சாதகமான பிரதிபலிப்பை அவனால் எதிர்பார்க்க முடியவில்லை. ‘ராது என்கின்ற அழைப்பையும் அவள் விளங்கிக் கொள்ளவில்லை.’ என்பதை எண்ணுகையில் இலேசாக ஆறுதலே ஏற்பட்டது.
‘இதுவரை அவளை நான் அறிந்ததிலிருந்து சொல்வதானால், குழந்தைகள் பிறக்கும் வரை சரி அவள் என் மனதை அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது.’ என்றே எண்ணினான் அவன்.
இவ்வாறு குழப்பத்தோடும் கலக்கத்தோடும் பயணப்பட்டவன், அம்புலன்ஸ் வைத்தியசாலைக்குள் நுழைய, தானும் காரை நிறுத்திவிட்டு அவசரமாக இறங்கி விரைந்தான்.
மறுபுறமோ, கணேஷை, காவல் நிலையத்தினுள் அழைத்துச் சென்றவர்கள், அவன் கெஞ்சல்களை சிறிதும் ஏற்றுக் கொள்ளவில்லை.
“இங்கபார், சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொள்; விவாகரத்துப் பெற்ற பின் அந்தப் பெண்ணை சந்தித்து துன்புறுத்த முயன்றிருக்கிறாய்! அதுவும் கர்ப்பிணிப்பெண்ணைத் தள்ளிவிட்டு குழந்தைகளையும் தாயையும் ஆபத்தில் தள்ள முயன்றிருக்கிறாய்.” என்றவர்களின் தொனியே, சிறு தயவும் வழங்க முடியாது என்று சொன்னது.
அதைப் புரிந்த கணேஷ் விடாது தன்னை நியாயப்படுத்த முனைந்தான்.
கார்த்திகேயன் அடித்த அடிகளில் நைந்திருந்தவன் அதையும் காரணமாகக் காட்டினான். “அமைதியாகப் பேச முயன்ற என்னைக் கோபம் கொள்ள வைத்தார்கள், அவர்கள் இருவரும்.” வெகுவாகச் சாதித்தான்.
அதைச்சிறிதும் ஏற்காத காவல்துறையினர், “அந்தப் பெண்ணுக்கு எதுவுமில்லை என்று சொல்லும் மட்டும் நீ சொல்வதை நாங்கள் கேட்க முடியாது! வாயை மூடிக்கொண்டு அங்கே போய் இரு!” என்றதும், செய்வதறியாது கலங்கியவாறே, அங்கே கிடந்த சோஃபாவின் மூலையில் வலியெடுக்கும் உடலை முடங்கிக்கொண்டவனின் எண்ணங்கள், கொதிப்புடன் முட்டி மோதிக்கொண்டே நடந்தவற்றை அசைபோடத் தொடங்கின.

என்னதான் தன் காதலியையும் அவள் மூலம் பிறந்த குழந்தையையும் பெற்றோர்களிடம் மறைத்து, அவர்கள் கைகாட்டியவளைத் திருமணம் செய்திருந்தாலும், தன் வாழ்வில் வந்த இரு பெண்களையும் விட்டுவிலக நினைக்கவில்லை கணேஷ்.
முதலில், பெற்றோர் பார்த்த பெண்ணை முகமும் அகமும் சுளிக்கவே தானும் பார்த்தவன், அவள் அழகில் மயங்கிப் போயிருந்தான். கூடவே, மூன்று தங்கைகளுக்கு சீரும் சிறப்புமாக மணம் முடித்துக் கொடுத்துக் களைத்துப் போயிருந்தவன்,
“மதுரா கொண்டு வரும் சீதனத்தில் கடைசித் தங்கை கல்யாணத்தை நடத்தலாம் தம்பி; நீ ஒத்த சதம் தரத் தேவையில்லை. உன் கல்யாணத்தையும் பெண்வீட்டாரே நடத்துவார்கள்.” என, தன் பெற்றோர் சொல்கையில் நிம்மதியாகவே உணர்ந்தான்.
“மகன் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறான்; கைநிறையச் சம்பாதிக்கிறான்!” என்று, அவன் பெற்றோர் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், பனியிலும் குளிரிலும் வெடவெடக்க தோட்டவேலை செய்வதும், அங்குமிங்கும் கடன்பட்டு, வட்டிக்கு வாங்கி என, பணம் அனுப்புவதும் அவனுக்குத் தானே தெரியும்.
“அப்பாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியவில்லை; ஊருக்குப் போய் வருகிறேன்; உன்னைப் பற்றியும் சொல்ல முயல்கிறேன்!” இப்படி, காதலியிடம் சொல்லிவிட்டு ஊருக்குச் சென்றவன், உள்ளம் துள்ள மதுராவை மண முடித்துவிட்டுத் திரும்பினான்.
தனக்கே தனக்கானவன் எனும் நெஞ்சு கொள்ளா எதிர்பார்ப்போடும் ஆசைகளோடும், தன்னைக் கணவனாக ஏற்றுக்கொண்ட ஓர் அப்பாவியை ஏமாற்றுகிறோம் என்கின்ற சிறு குற்றவுணர்வும் அவன் நெஞ்சில் துளிர்க்கவே இல்லை!
ஏற்கனவே தனக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுத் தந்துவிட்டு, தன்னை வெகுவாக நம்பும் ஒரு பெண்ணின் நம்பிக்கையில் லாரி லாரியாக மண்ணைக் கொட்டுகிறோம் என்ற சஞ்சலமும் கொள்ளவில்லை அவன்.
மாறாக, ‘அட..அவனவன் ஒன்றுக்கே வழியில்லாது இருக்கையில், ஒரு குடும்பத்தையே ஒழுங்காகக் கொண்டு நடத்தத் திணறுகையில் நான் இரண்டையும் எப்படிக்கொண்டு நடத்துகிறேன் என்று பாருங்க! என்னால் முடியுது செய்கிறேன்!’ அவன் நெஞ்சம் திமிரில் நிமிர்ந்தது!
அவன் காதலி இங்கேயே பிறந்து வளர்ந்தவள். ஸ்பெயின் நாட்டுத் தாய்க்கும் நெதர்லாந்து தந்தைக்கும் பிறந்தவள்; அவளின் சிறுவயதில், தந்தை, தாய் தத்தம் விருப்புகளை வெவ்வேறு வழியாக அமைத்துப் போய்விட, தாய் வீட்டிலும் தந்தை வீட்டிலும் வேண்டாத விருந்தாளியாக இருந்து வளர்ந்தவள்.
சூப்பர்மார்க்கெட் ஒன்றில் பயிற்சியாளராக இருக்கும் பொழுது தற்செயலாக கணேஷின் அறிமுகம் நிகழ்ந்து, பின், அதுவே அவர்கள் இருவரையும் ஒன்றாக வாழும் நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது.

சிறுவயதிலிருந்து அன்பை பரிச்சயம் பண்ணாது, அதற்காக ஏங்கிக் கிடந்தவளுக்கு, கரிசனையையும் அன்பையும் அள்ளிக் கொடுத்தான் கணேஷ். அதற்குப் பதிலாக அவளும் தன் நேசத்தையும் கடந்து பணமாக எவ்வளவோ உதவிகள் புரிந்திருக்கிறாள். அவன் பொறுப்புகளை உணர்ந்து அதற்குத் தானும் கை கொடுத்திருக்கிறாள்.
தம் நேசத்துக்கு ஆதாரமாக குழந்தையும் பிறக்கவே, குடும்பத்தில் ஏற்கமாட்டார்கள் என்று அவன் மறைத்த விடயத்தை எல்லாம் அவள் பெரிதாக எடுக்கவில்லை. ஊரில் வாழும் உறவுகளை அவன் முக்கியமாகப் பார்த்த மாதிரி அவள் பார்க்கவில்லை.
அதே, “கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்; என்னால் அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியவில்லை!” என, தன்முன் தலைகுனிந்து நின்றவனை உண்டு இல்லை என்றாக்கி விட்டாள் அவள்.
“உன்னை நம்பியிருந்த என்னை ஏமாற்றலாமா? எப்படி அதற்கு மனம் துணிந்தாய்?” கழுத்தில் கைவைத்துக் கேட்ட காதலியை, அவள் காதலைக் கொண்டே சமாதானப் படுத்தியிருந்தான் கணேஷ்.
தன் காதலி தன்னை பைத்தியமாக நேசிப்பது இந்த நேரத்தில் அவனுக்கு கை கொடுத்தது!
“நான் மட்டும் இதையெல்லாம் விரும்பியா செய்தேன்! என்னால் மறுக்க முடியவில்லை. அதையெல்லாம் சொன்னால் உன்னால் விளங்கிக் கொள்ள முடியாது; உங்களைப் போல இல்லை எங்கள் அம்மா அப்பா! தங்கள் விருப்பங்களை எப்படியும் எங்கள் மேல் திணித்து விடுவார்கள்; அதில் தான் அவர்கள் சந்தோஷமே அடங்கியிருக்கு!” கண் கலங்கச் சொன்னவனை அவளே தேற்றும் படி ஆனது.
தம் அன்பைத் தரமறுத்தாலும், தம் விருப்பையும் திணிக்க முயலாத, அவள் விருப்புகளுக்கு மறுப்புச் சொல்லாத பெற்றோர்கள் அல்லவா அவளுக்கு!
கணேஷை பரிதாபகரமாகவே பார்த்தாள் அவள்.
“நீ ஒன்றுக்கும் யோசியாதே! அந்த மதுரா ஒரு வாயில்லாப் பூச்சி! அவள் வரவால் உனக்கு எந்தப் பாதகமும் நிகழாது! உனக்குப் பிறகுதான் அவள்.” காதலியைச் சமாதானம் செய்தவன், மதுரா வந்த பின்னும் தன் காதலிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எள்ளளவும் குறைத்துக் கொள்ளவில்லை.
‘ஒரே ஊரில் வசிக்கும் பொழுது மதுராவுக்குத் தெரிய வந்தால்!’ என்று எண்ணினாலும், அமைதியான அவள் சுபாவமும் அவள் அவனில் காட்டிய அன்பும் தன் காதலியைப் போலவே அவளையும் சமாதானம் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டான்.

மறைத்து வைத்த விடயம் மதுராவுக்கு தெரிய வந்த பின், ஒருகட்டத்தில் மகிழ்வே அடைந்தான் கணேஷ். ‘ஹப்பாடா! இனி மறைத்து, பயந்து, போய் வரத் தேவையில்லையே!’ ஆசுவாசப்பட்டான்.
ஆனால், காலுக்குக் கீழே நசுங்கிக் கிடப்பாள், ஒன்றும் தெரியாதவள் என்று அவன் கணக்குக் போட்டிருந்த மதுரா விவாகரத்து வரை போவாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
‘எல்லாம் அந்த யோகத்தால் வந்தது; அந்த மனிசி ஏற்றிவிட்டு இவள் ஆடுகிறாள்!” விவாகரத்துக்கோரி வந்த பத்திரத்தை வெறித்தவாறே இரைந்தவன், தான் எவ்வளவு அடித்துத் துவைத்தும் அவள் காவலரிடம் மூச்சும் விடவில்லை என்றதும் மனதுள் இறுமாந்து போனான்.
‘அப்படி வாடி வழிக்கு!’ இறுமாப்புக் கொண்டவன், குழந்தையைச் சாட்டாக வைத்து அவள் மனதை மாற்ற முயன்று தோல்வி கண்டதும் மிகவும் எரிச்சல் அடைந்தான்.
தன் காதலியோடு மதுராவை ஒப்பிட்டுப் பார்த்தவனுள் ஒருவகை வன்மமும் வெறியுமே எழுந்தது!

“பலவருடங்கள் என்னோடு வாழ்ந்தவளின் வாழ்க்கையில் மூக்கை நுழைத்த உன்னை, அவள் ஒரு சொல் தூற்றவில்லை; நீ அவளை கேவலமாகப் பேசுவாயா?” கர்ஜித்தான்.
“விவாகரத்துக்கு இத்தனை ஆசைப்படும் பொழுது தரமாட்டேனா! தாராளமாக வாங்கிக் கொள்!” இது உனக்கு நான் வழங்கும் தண்டனை என்ற வகையில் சம்மதித்தான்.
அதே, மனதுள் வேறு கணக்குப் போட்டிருந்தான்.
‘போடி போ, போய்ப்பார்; வெளிநாடு என்றதும் பல்லைக் காட்டிக்கொண்டு வந்தனி, திரும்பவும் இலங்கைக்கா போவாய்!? எப்படியும் இங்கேதானே இருக்கப் பார்ப்பாய். அப்போதான் கஷ்டம் புரியும். திரும்ப வந்து என் காலடியில் விழுவாய்! அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்!’ என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, விவாகரத்துப் பற்றி, தன் வீட்டுக்கு மறைத்த மதுராவின் செயல் பலம் சேர்த்தது.
இதுதான் நல்ல நேரம் என்று தன் காதலியை வீட்டுக்கு அழைத்து வந்தவன், எந்நேரமும் மதுராவின் வரவுக்காகக் காத்திருந்தான்.
‘எத்தனை நாட்களுக்கு இந்த யோகத்தால் துணை நிற்க முடியும்? ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகள் பிறக்கும் போது சரி கட்டாயம் என்னை அழைப்பாள்! அந்த நேரத்தில் அவளால் தனியாகச் சமாளிக்க முடியுமா என்ன?’ என்ற நம்பிக்கை கொண்டிருந்தவனை, ஊரிலிருந்து வந்த பேச்சுக்கள் உசுப்பேத்தி விட்டன.
முதலில், விவாகரத்தான விடயத்தை ஊரில் அறிந்து கொண்டார்கள் என்றதும் மிகுந்த சினம் கொண்டவன், அவளைத் தூற்றி, ஒருவாறு வீட்டினரைச் சமாதானம் செய்திருந்தான்.
அதுவும், “தங்கை கல்யாணத்துக்கு பயன்படுத்திய அவளின் பணத்தை ஒத்த சதம் குறையாமல் ஒப்படைத்தேன்!” என்ற மகனிடம் ஓரளவுக்கு மேல் சீறவும் அவர்களால் முடியவில்லை.
கேட்டதும் பணம் தரும் மகனைப் பகைத்துக்கொள்ள அவர்கள் என்ன முட்டாள்களா?
அதே, தம் மகனில் கோபம் கொள்வதற்குப் பதில், மதுரா மீதும் அவள் குடும்பத்தின் மீதும் வன்மம் கொண்டார்கள்.
“எங்களைத் தலைகுனிய வைத்துவிட்டு அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்ப்போம்!” என கறுவிக் கொண்டவர்கள், ஒரு நல்ல வாய்ப்பு அமையவே அதைப் பயன்படுத்த முயன்றார்கள்.
மதுராவின் மூத்த தங்கைக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை குடும்பமும் கணேஷ் குடும்பவும் ஒரு திருமணத்தில் சந்தித்துக் கொள்ள நேரிட்டது.
காற்றுவாக்கில் மதுராவின் தங்கைக்கு பார்த்துள்ள மாப்பிள்ளை குடும்பம் என்பதை அறிந்து, நச்சு முறுவலோடு அவர்களை நெருங்கினர் கணேஷின் பெற்றோர்.
அவர்களை இன்னாரென அறிந்ததும் விறைப்பாகவே தவிர்க்க முயன்றனர், மதுராவின் சகோதரியைத் திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளை வீட்டினர் .
அப்படியே இலேசில் விட்டு விடுவாரா கணேஷின் தயார்!
“இங்க பாருங்க, மதுரா நல்ல பிள்ளை என்று என் ஒரே மகனுக்கு கட்டி வைத்து இப்போ சந்தி சிரித்துப் போய் நிற்கிறோம்! அங்கே அவள் யார் யாரோ வீட்டிலெல்லாம் தங்கியிருக்கிறாளாம்!” ஆரம்பிக்க, மதுராவின் தங்கையின் வருங்கால மாப்பிள்ளையோ, அவர்களை சுட்டுப் பொசுக்கும் பார்வை பார்த்தான்,
“போதும், இதோடு நிறுத்துங்க; எங்களுக்கு இந்தக் கதையேதும் தேவையில்லை. அதோடு, உங்க மகன் வண்டவாளம் எல்லாமே எங்களுக்கும் தெரியும்!.” திகைப்போடு இருந்தவர்களிடம் தணிந்த குரலில் உறுமினான்.
அதோடு அவன் நிறுத்தவில்லை.
“ஒரு காவாலியை பெத்த நீங்க சந்தி சிரிக்கத்தான் வேண்டும். அதோடு, அவன் செய்ததை சரி என்கின்ற மாதிரி பேசும் உங்களை என்ன செய்யலாம்! ச்சா! வெட்கம் கெட்ட மனிதர்கள். இந்த அழகில் எங்க வீட்டுப் பெண்ணைக் குறை சொல்ல எவ்வளவு தைரியம் வேண்டும் உங்களுக்கு! ஒரு அருமையான பிள்ளையின் வாழ்க்கையை, எல்லோரும் சேர்ந்து அழிக்கப் பார்த்திருக்கிறீங்க; ஆனால், அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.” கடுமையாகச் சீறியவனை, அவமானக் குன்றலோடு பார்த்தார்கள் கணேஷின் பெற்றோர்கள்.
“மதுரா ஒன்றும் யார் யாரோ வீட்டில் தங்கியிருக்கவில்லை; நல்ல மனிதர்களோடு தங்கி இருக்கிறார். நீங்க பார்த்துக்கொண்டே இருங்க, உங்க மகனின் கண் முன்னால் மதுரா நன்றாக வாழ்ந்து காட்டுவார். சீரும் சிறப்புமாக ஒரு வாழ்க்கையை வாழ்வார். அப்போ பார்ப்போம்!” கர்ஜித்து விட்டான்.
‘இத்தனை இளவயதில் கையில் குழந்தைகளோடு அப்படியே விட்டுவிடுவதா?’ என்ற எண்ணத்தில் தான் அவன் அப்படிச் சொன்னான்.
“உடனடியாக இல்லையென்றாலும் மதுராவுக்கு நல்லதொரு வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தே ஆகவேண்டும். நாங்க எல்லாம் இல்லையா? வீணாக மனதைத் தளர விடவேண்டாம் மாமி. குழந்தைகள் பிறந்ததும் மதுராவை இங்கே அழைத்து வருவோம். பிறகு பார்ப்போம்.” மகனாக வருங்கால மாமியாரிடம் சொல்லி அவரைத் தேற்றியிருந்தவன், மனதில் இருந்த சினத்தை வலிய வந்தவர்களிடம் காட்டவில்லை என்றால் தானே ஆச்சரியம்.
அவன் அவ்வளவு சொல்லியும் மற்றவைகளை விட்டு விட்டு, ‘என்ன!? வாழ்ந்து காட்டுவாளா? அதுவும் சீரும் சிறப்புமாக! அப்படியென்றால் என்ன அர்த்தம்!? அதுவும் பிள்ளைகளோடு இருப்பவள்..’ அதைப் பிடித்துக் குழம்பியவாறு தாம் கேட்டதை மகனிடம் ஒப்பித்திருந்தார்கள்.
கேட்ட கணேஷ் வெறி பிடித்தவனான்.
மதுரா விவாகரத்துப் பற்றி சொன்னாள் என்றதும், அவளது புது இருப்பிடத்தை அறிந்து சிலநாட்களுக்கு முன் இங்கு சென்றிருந்தான் கணேஷ்.
அவனை வாயிலில் வைத்தே தடுத்து நிறுத்திய நித்தி, வார்த்தைகளால் கிழி கிழியென்று கிழித்து விட்டாள். அந்தளவோடு சமாதானம் ஆகாதவள், “மதுராவோடு பேச உனக்கு ஒரு மண்ணும் இல்லை; பேசாது போய்விடு. இல்லையேல், அடிக்கடி வந்து தொல்லை தருவதாக போலீஸிடம் சொல்லி விடுவேன்!” பெண் ரவுடியாக மிரட்டிவிட்டாள்.
அவர்கள் வீட்டுக்கருகில் இருக்கும் வேலையிடத்து நண்பன் மூலம், நித்தி இன்று வீட்டிலில்லை என்பதை அறிந்த கணேஷ், மனதில் கனன்ற ஆத்திரம் புகையைப் புகைய மதுராவை பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொள்கின்ற மாதிரிக் கேட்கவே புறப்பட்டு வந்திருந்தான்.
அவ்வாறு, ஆவேசத்தில் வந்திருந்தாலும் இன்று நடந்தது போல அசம்பாவிதம் நடக்குமென அவன் சிறிதும் எண்ணவிலை. கார்த்திகேயன் பற்றி விசாரித்ததில், இங்கு பிறந்து வளர்ந்தவன் வம்பு தும்புகளுக்குப் போகாதவன் என்று அறிந்திருந்தான். மதுராவோடு அவனைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் அளவுக்கெல்லாம் இவன் சிந்தனை செல்லவில்லை.
வந்ததும், கார்த்திகேயன் மதுராவை உள்ளே போகச் சொல்லி அதிகாரம் செய்ததும், மிகுந்த எரிச்சல்தான் கொண்டான். அந்த ஆத்திரத்துக்கும் எரிச்சலுக்கும் வடிகாலாக அமைந்து வார்த்தைகள் திமிறி வர, எல்லாமே கைமீறிப் போய்விட்டது.
நடந்தவற்றை வஞ்சினத்தோடு அசைபோட்ட கணேஷ், உடலும் உள்ளமும் எழுப்பிய எரிச்சலை அடக்க வழி தெரியாது தடுமாறியபடி, வெளியில் கவிந்திருந்த இருளையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
‘பாவி செத்துத்தொலை; நானும் ஜெயிலுக்குப் போகிறேன்!’ இப்படி எண்ணி ஆவேசம் கொண்ட மனம், மறுகணம், தன்னைத் தானே கடிந்து கொண்டது.
‘அவளுக்காக நான் ஏன் ஜெயிலுக்குப் போக வேண்டும்? உனக்கு எதுவுமில்லை என்று சொல்ல வேண்டும்டி; அதுக்குப் பிறகு நான் யாரென்று காட்டுறேன்டி!’ அவனுள் வெறியே எழுந்தது.
‘குழந்தைகளை அப்படியே உன்னிடம் விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா? அதுகளும் பெட்டக் கழுதைகளாம்; கூடப் பிறந்த நாலுக்கும் செய்து செய்தே களைத்துப் போயிருக்கும் எனக்கு, இன்னுமிரண்டு எதற்கு? ஆனாலும், உன்னைப் பழிவாங்க குழந்தைகள் தான் எனக்குத் துரும்புச் சீட்டு!’ மனதில் திட்டம் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவன் பார்வை, சர்ரென்று வந்து நின்ற காரிலிருந்து பதைபதைப்போடு இறங்கிய காதலியில் ஒருவகை குற்றஉணர்வோடு பதிந்தது.

error: Alert: Content selection is disabled!!