மலருமோ உந்தன் இதயம் 14.1

மின்சாரத்தின் தயவில் பளிச்சென்றிருந்தது அந்நீண்ட வராண்டா!
அதன் தொடக்கத்தில், சிவப்பு வண்ண அரைச்சுவர்த் தடுப்பின் பின், கணனியின் முன்னால் அமர்ந்திருந்த இளம் தாதிகள் இருவர் தம்முள் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் நிலவிய அமைதியை மெல்லக் கலைத்துக் கொண்டிருந்தது, யாரோ ஒருவரின் பாதணிகளின் டொக் டொக் ஒலி!
அது ‘மகப்பேறு பகுதி’ என்பதை அடையாளம் காட்டும் வகையில், மூடிய அறையையும் மீறி பெண்ணொருத்தியின் வேதனை முனகல் செவிகளில் வந்து மோத, அதை உள்வாங்கிக் கொண்ட கார்த்திகேயன், உடலும் உள்ளமும் சில்லிட அமர்ந்திருந்தான்.
குழந்தையைப் பெற்றெடுப்பது, ஓர் உயிரை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்வதென்பது மறுபிறப்புக்குச் சமமெனக் கேள்விப்பட்டிருந்தவன், இப்போது, மனதை வியாபித்த நடுக்கத்தோடு அதை உணரவும் முயன்றான்.
‘எட்டரை மாதங்களுக்கே இன்னும் சிலநாட்கள் உண்டே! வயிற்றில் அடிபட்டிருக்குமா? அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமா? குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ?’ சிந்தனைகள் கட்டுப்பாடின்றி நேரெதிர்ப் பாதையில் பயணிக்க, அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்துத் தடுக்க முடியாது தடுமாறினான் அவன்.
கண்முன்னால் அவளுக்கு ஏற்பட்ட துன்பம் தன்னை இந்தளவுக்கு பாதிக்குமென்று சிலநாட்களின் முன்பாக யாராவது சொல்லி இருந்தால் நிச்சயம் முழுமையாக நம்பியிருக்க மாட்டான். அந்தளவுக்கு, “அவள் நலமே உள்ளாள்.” என்கிற வார்த்தைகளை, வைத்தியர் வாய்மொழியாக அறியத் துடித்துக் கொண்டிருந்தான் அவன்.
காதல் என்ற சொல்லைக் கேட்டால் கடையிதழில் ஒரு முறுவல் வந்து போகும் இவனுக்கு! அந்தச் சொல்லை ஒவ்வொருவரும் கையாளும் விதத்தில், ‘அதன் நிஜப் பொருள் என்ன?’ கல்லூரிக்காலத்தில் நண்பர்களாக விவாதித்து நகைத்திருக்கிறார்கள்.
அவனுக்கு, இதுவரை அப்படி ஒரு உணர்வு எந்தப் பெண்ணிலும் உருவாகவில்லை.
“அம்மா, இவனுக்கு ஆண் நண்பர்களை விட பெண் நண்பிகள் தான் அதிகம்; பார்த்துக்கொண்டே இருங்க, ‘சுரினாம்’காரியோ ‘அரூபா’வோ அல்லது நெதர்லாந்தோ தான் உங்களுக்கு மருமகளாக வருவாள்!” இவன் தமக்கை எப்போதும் கேலி செய்து கலாட்டா செய்வாள்.
“யார் வந்தாலும் எனக்கு சரிதான்!” எனும் தாய், மனதில் சிறிதாகக் கலங்குவதும் இவனுக்குத் தெரியும்.
“ம்மா! கவலைப்படாதீங்க. நான் ஒரு ‘கொலம்பியா’க்காரியைத்தான் அழைத்து வருவேன்!” என்று தாயை முறைக்க வைப்பவன், அவர் உயிரோடு இருக்கும் பொழுது அவர் மருகளை காட்டவில்லை; அதற்கான அவர் முயற்சியும் வெற்றிபெறவில்லை.
ஆனால் இப்போது!
‘ராது, என் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டாள்மா; உங்க மருமகளை பிடித்திருக்கு தானே?’ ஆத்மார்த்தமாக தாயுருவைக் கண்டு பேசியவன், ‘அவளுக்கும் குழந்தைகளுக்கும் எக்கஷ்டமும் வராது நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.’ மறைந்த பெற்றோரை எப்போதும் தெய்வமாக எண்ணுபவன், இக்கணம், அவர்களின் துணையை வெகுவாக நாடி நின்றான்.
அருகில் நெருங்கி அமர்ந்ததற்கே முறைப்போடு பதறி விலகியவள், இன்று, தன்னுள் ஒன்றிக் கதறியதை நினைத்துக் கொண்டவன் இதயம் வலியில் தடுமாறியது.
‘ஹ்ம்ம்…நிச்சயம் அவள் சுய உணர்வோடு என்னில் ஆறுதல் தேடவில்லை!’ அந்த நேரத்திலும் அவன் நெஞ்சம் கசப்புடன் நினைக்க முயல, சிடுசிடுப்போடு அடக்கியவன், ‘அவன் மட்டும் இன்னொருதரம் என்னிடம் மாட்டுப்பட்டால் தொலைந்தான்!’ கணேஷை உண்டு இல்லை என்றாக்கும் ஆத்திரம் கொண்டான்.
‘படுபாவி! தான் செய்தவை எதையுமே பிழையெனக் கருதவில்லையே! அப்படி எண்ணுபவன் பேச்சு இப்படியா இருக்கும்! என்ன பிறப்போ! அவனை லேசில் விட்டுவிடக் கூடாது.’ கறுவிக் கொண்டான்.
மெத்தென்றிருந்த சோஃபாவின் கைபிடி, அவன் கரம் பற்றுதலில் நெரிந்து முழிபிதுங்க, அலைபாயும் மனதோடு அமர்ந்திருந்தவனின் கைபேசி ‘என்னைக் கவனியேன்!’ என்றது.
துளியும் விருப்பின்றி எடுத்துப் பார்த்தவன், தங்கை அழைக்கிறாள் என்றதும் சட்டென்று நிமிர்ந்தமர்ந்து கொண்டான். அழைப்பை ஏற்றவனுக்கு குரல் எழவே மாட்டேனென்று அடம்பிடிக்க, மிகவும் தடுமாறியவனின் விழிகள் கலங்கி மின்னின!
‘வெளியூர் போயிருப்பவள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? நடந்தவற்றைக் கேள்விப்பட்டால் மிகுதி நாட்களை அவளால் நிம்மதியாக கழிக்க முடியுமா?’ அரற்றிய மனதை மெல்ல அடக்கியவன், “நித்திம்மா, எப்படிம்மா இருகிறாய்? இன்று எங்கெங்கு போனீர்கள்?” என ஆரம்பித்து பொதுவாகவே உரையாடி, அழைப்பைத் துண்டிக்க முனைந்தான்.
“மதுரா எங்கேண்ணா, பக்கத்தில் இருந்தால் கொடுங்க; ஹாய் சொல்லிவிட்டு வைக்கிறேன்!”
“மதுரா..மது..ரா..” சட்டென்று தடுமாறினான்.
“பக்கத்தில் இருக்கிறாரா அண்ணா?”
“கொஞ்சம் களைப்பாக இருக்கென்று நேரத்தோடு தூங்கச் சென்றுவிட்டார்மா.” அமைதியாகவே பதில் சொல்ல முயன்றான்.
“நீ மதியம் கதைத்ததாகச் சொன்னாவே!”
“ம்ம்…கதைத்தேன் தான்!” மெல்ல இழுத்தவள், “இன்னமும் ஒன்பது மணியாகவில்லை, அதற்குள் தூங்கப் போய்விட்டாரா!?” என்றவள், “அதுசரி; நானுமில்லை; உங்களோடு இருந்து எதைக் கதைப்பது என்று தூங்கப் போய்விட்டார் போல!” கேலி!
“சரிண்ணா…மதுராவை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்க; காலையில் எடுக்கிறேன்!” என்று அவள் அழைப்பைத் துண்டிக்க, வைத்துவிட்டு நிமிர்ந்தவன், மதுராவைப் பரிசோதித்துக் கொண்டிருந்த அறைக்கதவு திறப்பட விருட்டென்று அவ்விடம் நோக்கி விரைந்தான்.
அதுவரை அவர் விழிகளுக்கு கவசமாக இருந்த அழகிய சில்வர் ஃபிரேம் போட்ட மூக்குக்கண்ணாடியை நெற்றியின் மேலாக ஏற்றிவிட்டவாறே, தன்னை நோக்கி விரைந்து வரும் கார்த்திகேயனை முறுவலோடு பார்த்திருந்தார் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்மித்.
மதுராவை வைத்தியசாலை அழைத்து வந்ததிலிருந்து அவனைக் கவனித்ததில், வீட்டில் தங்கியுள்ள உறவுக்காரப்பெண் என்பதையும் தாண்டிய துடிப்பு அவனது என்பதை நன்றாக விளங்கிக் கொண்டவர், தன்னை நெருங்கியவனை தோளோடு அணைத்துக் கொண்டார்.
“மதுராவுக்கு ஒன்றுமில்லையே! குழந்தைகளும் தாயும் நன்றாக இருக்கிறார்கள்தானே!” பதற்றம் சிறிதும் விலகாது நெதர்லாந்து மொழியில் வினவியவனை கனிவோடு நோக்கினார் மருத்துவர்.
“குழந்தைகளும் தாயும் நன்றாக இருக்கிறார்கள்.” என்றவர், வாயிலில் நின்றவாறே திரும்பி, கட்டிலில் படுத்திருந்த மதுராவை நோக்கினார்.
நனைந்து, சிவந்து வீங்கியிருந்த அவள் விழிகளும் இவர்களில் தான் பதிந்திருந்தன.
“ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை. அதிர்ச்சியில் வந்த மயக்கம்தான்; வேறொன்றுமில்லை.
நல்லவேளை, சுவரில் மோதும் போது கையால் தடுத்ததால் அடி பெரிதாக படவில்லை. நெற்றியில் காயத்துக்கு மருந்து போட்டிருக்கிறோம். வலக்கை பெருவிரலில் நோ என்கிறார். விரல் லேசாக மடங்கியத்தில் தான், வேறு ஒன்றும் இல்லை. இரண்டு நாட்களில் சரியாகிடும். மற்றும் படி ஒன்றும் பிரச்சனை இல்லை. வரச் சொன்ன திகதிக்கு வாங்க. அதுக்கு முன் எதுவும் என்றாலும் வாங்க.” கனிவோடு கூறி, அவன் முதுகில் தட்டிவிட்டு அப்பால் நகர்ந்தார் டாக்டர்.
மருத்துவர் சொன்னதை உள்வாங்கி, விழிகளை அழுந்த மூடித்திறந்தவனின் உடலும் உள்ளமும் ஒருங்கே களைப்பில் தள்ளாடியது.
“ஹப்பாடா!” வாய்விட்டே மூச்சுவிட்டவன் அப்படியே நிலைப்படியில் சாய்ந்து நின்றுவிட்டான். இதுவரை, அறிந்த தெரிந்த தெய்வங்களுக்கெல்லாம் உதவி மனுப்போட்டிருந்தவன் இப்போதோ, மனமார நன்றிக் காணிக்கை செலுத்தத் தொடங்கினான்.
நெஞ்சில் கனத்துக் கிடந்த அழுத்தம், மருத்துவர் வார்த்தைகளால் இருந்த சுவடின்றி மறைந்திருக்க, தேகமும் மனமும் தள்ளாடினாலும் அவன் விழிகள் மதுராவின் வதனத்தில் பதிந்து நகர மறுத்தன!
அவளும் அவனையே தான் பார்த்திருந்தாள். ‘அந்தரித்து நின்றவளுக்கு ஆறுதல் தந்து தம்மோடு தங்க வைத்து, பாசமும் பரிவுமாகப் பார்த்துக் கொண்டவர்களுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுத்துவிட்டேன்!
இவரைப் பார்த்து எவ்வளவு கேவலமாகக் கதைத்து விட்டான் அந்த ராட்சஷன்!’ மனம் அரற்ற, விழிகள் மின்ன பார்த்திருந்தவளை ஓரெட்டில் அணுகினான் கார்த்திகேயன்.
“மதுரா, அதுதான் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டார்களே! இனி ஒன்றும் பயமில்லை.” அவள் விழிநீரைத் துடைந்துவிட, சட்டென்று அவன் கரத்தை விலக்கியவள்,
“உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் தந்துவிட்டேன்! நல்ல காலம் நித்தி வீட்டில் இருக்கவில்லை; இல்லையென்றால் அவளுக்கும் கஷ்டம்!” மளுக்கென்று கண்ணீர் சொரிந்தவளை, “பச்..இதென்ன பேச்சு மதுரா!” இப்படிப் பிரித்துப் பேசியதை தான் இரசிக்கவில்லை என்பதை அப்பட்டமாகக் காட்டினான்.
“நீங்க என்ன சமாதானம் சொன்னாலும், நான் சொல்வதுதான் உண்மை. அந்தாளுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.” என்றவள், அவன் முகம் கடுகடுப்பதைப் பொருட்படுத்தாது, “நீங்க…நீங்க போலீஸ் ஸ்டேஷன் போகத்தான் வேண்டுமா?” தழுதழுத்தாள்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை மதுரா; நான் பார்த்துக் கொள்கிறேன். அதைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம்.” என்றவனின் இடக்கரம் உரிமையும் பரிவுமாக கலைந்து கிடந்த அவள் தலையை வருடியது!
இவன் சிறுசிறு விடயங்களிலும் தன் தங்கையைத் தாங்கும் போதெல்லாம், தன்னையும் அறியாது மனதளவில் மிகவும் ஏங்கியிருக்கிறாள் இவள். அதிலும், கார்த்திகேயனின் கரிசனையும் அன்பும் இவளுக்கும் கிடைத்த போதெல்லாம் அதை எவ்வித மனச்சங்கடமும் இல்லாது அனுபவிக்க முடியாது மிகவுமே தடுமாறி இருக்கிறாள்.
வீண் கற்பனைகள் என்று ஒதுக்கினாலும் அவள் மனதில் தேவையற்ற கலக்கம் எழாதிருக்கவில்லையே! அப்போதெல்லாம், ‘இதே, இவர் என் அண்ணனாக இருந்திருந்தால்!’ என, அவளால் எண்ணாமல் இருக்க முடிந்ததில்லை. இப்போதும் அந்த நினைவுதான் எழுந்தது.
“எனக்கு…எனக்கு..” நீரில் தத்தளித்த விழிகள் அவன் உருவை மறைக்க, “ஒரு அண்ணன் இல்லையே என்கின்ற ஏக்கத்தை நீங்க போக்கிவிட்டீங்க!” அவள் சொல்லி முடிக்க முன், பட்டென்று விலகிவிட்டான் கார்த்திகேயன்.

error: Alert: Content selection is disabled!!