முதல் நாள் மாலையிலிருந்து இரவு கண்ணயரும் வரை நடந்தவை ஒன்றொன்றாக மனதில் முட்டி மோத, கணேஷின் செயலில் விரக்தியை ருசித்த மனம், கார்த்திகேயனின் பேச்சில் மிகுந்த ஆக்ரோஷமே கொண்டு நின்றது. அவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் வயிறு பசியில் கிடந்து துடிக்க மெல்ல எழுந்தமர்ந்தாள்.
நேற்றிரவு கார்த்திகேயன் கொண்டு வந்து வைத்த உணவும் பாலும் சீண்டுவார் இன்றியிருப்பதைப் பார்த்ததும் மனதில் குற்ற உணர்வு வேறு தாக்கியது.
‘யார் மீதோவுள்ள கோபத்தை உணவு மீது காட்டிவிட்டேன்; அவ்வளவும் வீணாகிவிட்டுதே!’ மனதில் கடிந்தவாறே குளியலறை சென்று வந்தவள், “கீழே போய் பாலும் பிஸ்கட்டும் சரி சாப்பிடவில்லை என்றால் என்னால் இப்போது தாங்கவே முடியாது.” மெல்ல வாயிலை நோக்கி நகர்ந்தாள்.
‘இவ்வளவுக்கும் பிறகு இந்த வீட்டிலிருந்து உண்ண வேண்டி இருக்கே!’ என்ற நினைவெழுந்தாலும், குறுகிய காலத்தில் சொந்த வீடு போல் பழகிய இடம் அந்நினைவைத் தோன்றிய வேகத்தில் விரட்டிவிட, சத்தம் செய்யாது கதவைத் திறந்தாள்.
தனது அறைக்கு நேர் எதிரில் கார்த்திகேயனின் அறை என்பதால் சத்தம் செய்யாது கீழே செல்வோம் என எண்ணி, தன் அறையின் மின்குமிழை அணைக்க முயன்றவள், திறந்திருந்த கதவினால் கசிந்து வராண்டாவில் பாய்ந்த வெளிச்சத்தில் கண்ட காட்சியில் அப்படியே அசையாது நின்றாள்.
இரண்டு பேர் அமரக் கூடிய சோஃபாவில் தன் நீள உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தான் கார்த்திகேயன். சட்டென்று அவன் இங்கு படுத்திருந்த காரணம் புரிபட, மனம் கடுகடுத்ததையும் மீறி விழிகள் கலங்கிவிட்டன!
‘இவருக்கு ஏன் இந்த வேலை!’ மனதில் அவன் மீதிருந்த கோபத்தையும் மீறி அவன் மீதான அக்கறையில் தடுமாறினாள் அவள். தன் பசியை மிகையாக உணர்ந்தவள் அப்போதுதான் அவனும் உண்டானோ என எண்ணினாள்.
‘ஹ்ம்…சாப்பிட்டும் இருக்க மாட்டார்; அதோடு இந்த சின்ன சோஃபாவில் இரவு முழுதும் கிடந்தால் கழுத்து பிடித்துக் கொள்ளாதா?’ எண்ணிவாறே, அவளையும் அறியாது முன்னேறி அவனை எழுப்ப முயன்றவள் சட்டென்று அமைதியானாள்.
‘இப்போ நான் எழுப்பி விட்டால் அதையும் தனக்குச் சாதகமாகத்தான் நினைப்பார்; எப்படியும் போகட்டும்!’ நினைத்தவாறே திரும்பி படிகள் நோக்கி நகர்ந்தவள், “பசிக்குதா மதுரா? ஸ்டெப் லைட்டைப் போட்டுவிட்டு இறங்கு.” அவன் குரலில் ஸ்தம்பித்தாள்.
‘அப்போ முழித்தா இருந்தார்! கண்கள் மூடி இருந்துதே! நான் அருகில் போனதையும் கண்டிருப்பாரா?’ மனதுள் தடுமாற்றத்தோடு திரும்பியவளின் முகம் முறைப்பில் இறுகி இருந்தது.
“இப்போ எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு சோஃபாவில் படுத்திருக்கிறீங்க? லைட் இல்லாமல் படியில் இறங்கி விழ நானொன்றும் சின்னக் குழந்தையில்லை.” கறாராகச் சொல்லி திரும்பி நகர்ந்தவள், அடுத்த கணம் ஒளிர்ந்த வெளிச்சத்தில் நின்று மீண்டும் திரும்பினாள்.
நித்திரை விலகாத வாடிக் களைத்த முகமும் கலைந்த கேசமுமாக நின்றவனில் பதிந்த விழிகளை திருப்பிக் கொண்டவள், “என்றாலும் இவ்வளவு பிடிவாத குணம் கூடாது மதுரா; குழந்தைகளுக்கு இந்தக் குணம் வராமல் இருந்தால் சரிதான்!” கேலிபோல் சொன்னவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.
‘உப்ஸ்…இவளை என்ன செய்யலாம்?’ புரியாது திகைத்தாலும், “எனக்கும் பசிக்குது மதுரா. டீ போட்டால் எனக்கும் ஒரு கப் ப்ளீஸ்…” விடாமல் பேச்சை வளர்த்தவன் செயல் அவள் விழிகளைக் கலங்கடித்தது.
‘எவ்வளவு சந்தோஷமாக, எவ்வித விகல்பமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த உறவுக்குள் என்னவெல்லாம் சொல்லி இத்தனை குழப்பத்தையும் உருவாக்கி விட்டு விட்டு, இப்போ, எதுவுமே நடவாத மாதிரி சாதாரணமாக நடந்து கொள்கிறாரே! இவரால் எப்படி இது
முடிகின்றது!?’ மனதுள் அரட்டியவளுள், ‘இப்போ, என் பசியையைக் கவனிக்கத்தான் வேண்டுமா?’ என்ற எண்ணம் எழுந்தது.
சற்றே தயங்கியவளை பசி வெற்றிகொள்ள, சமையலறை நோக்கி நகர்ந்தன அவள் கால்கள்.
விறுவிறுவென்று தேநீரைத் தயாரித்தவள், படிகளால் இறங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயனை கண்டதும் உணவு மேசையில் அவனுக்கான தேநீரை வைத்துவிட்டுத் திரும்பிய வேகத்தில் தன் கப்பில் பாலை ஊற்றி ‘மைக்ரோ வேவி’னுள் வைத்துவிட்டு அதையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
அவளையே பார்த்துக்கொண்டு வந்தமர்ந்தவன், தனது கப்பில் அவள் வைத்துவிட்டுச் சென்ற தேநீரைப் பார்த்ததும், முகம் அன்பில் கனிய அவளையே விழிகளால் தொடர்ந்தபடி தேநீரைப் பருகத்தொடங்கினான்.
“சாப்பிடவில்லைதானே மதுரா?” பேச்சை ஆரம்பித்தவன், அவள் அசைவின்றி நிற்பதைப் பார்த்துவிட்டு,
“பால் மட்டும் போதுமா? கேக் சாப்பிடலாமே! நீ சாப்பிட்டால் நானும் ஒரு பீஸ் சாப்பிடுவேன். வயிறு பசியில் அலறுது மதுரா!” விடாது தொடர்ந்தவனை சட்டென்று திரும்பி முறைத்தவள், சமையலறை அலுமாரியிலிருந்த கேக் டின்னை எடுத்துச் சென்று மேசையில் வைத்துவிட்டு வந்து, தனது பாலை எடுத்துக்கொண்டு அவனைக் கடந்து செல்ல முயல, சட்டென்று எழுந்து அவள் முன்னால் நின்று கொண்டான் கார்த்திகேயன்.
“மதுரா ப்ளீஸ்…தெரியாத்தனமாக எதையோ உளறிவிட்டேன்; ஸாரிம்மா!” உருக்கத்தோடு சொன்னவனை, சுடும் பார்வையால் நோக்கினாலும் அவள் நயனங்கள் இரண்டும் நிறைந்து விட்டன!
‘என் முகம் பார்த்து அப்படிச் சொல்லும் பொழுது கொஞ்சம் கூட கூசவில்லையா?’ நா நுனியில் துடித்துக்கொண்டு நின்ற வார்த்தைகளை கடினப்பட்டு விழுங்கிக் கொண்டாள்.
“கொஞ்சம் தள்ளுங்க, நான்…நான் மேலே…அறைக்குப் போக வேண்டும்!” இரும்பாகச் சொன்னவளை, இலேசில் விட்டுவிடும் எண்ணம் அவனுக்கிருக்கவில்லை.
‘இப்போ மட்டும் நான் சமாதானம் ஆகாமல் விட்டால், நாளைக்கு முதல் வேலை எப்படி வீட்டை விட்டுப் போகலாம் என்றுதான் நீ யோசிப்பாய்.’ தன்னுள் சொல்லிக் கொண்டவன்,
“இப்போ, இந்த இடத்தில் நித்தி இருந்திருந்தால் நான் தெரியாமல் உளறியதை மறந்து மன்னித்திருப்பாளா அல்லது அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பாளா மதுரா?” சொல்கையில் அவன் விழிகள் கலங்கிச் சிவந்துவிட்டன!
‘என்னால் நீ துன்பப்பட்டாய் என்று ஒருநாளும் இருக்கக் கூடாது. நெஞ்சு முட்டும் என் நேசம் என்றாவது உனக்குப் புரியும் ராது. அப்போ, இந்தக் கணம் என்மனம் படும்பாடும் உனக்குப் புரியும்!’ மனம் அரட்ட, வெளித்தோற்றத்தில் அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.
நித்தியை நடுவில் இழுத்துப் பேச்சை வளர்ப்பவனை உற்றுப் பார்த்தவளுக்கு அவன் கலக்கம் பளிச்சென்று தெரிய, விழிகளில் முட்டிய கண்ணீர் வழியத் தொடங்கியது.
“என்ன பேச்சுப் பேசிவிட்டு, தவறுதலாகச் சொன்னேன் என்று சொல்லுறீங்க! இதெல்லாம் விளையாட்டுப் பேச்சா? நித்தி மட்டும் இப்போ இங்கிருந்தால், உங்களை விடுங்க…என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? பாவப்பட்டு அடைக்கலம் தந்த வீட்டில் கொஞ்சமும் நன்றியில்லாது…” பேச்சைத் தொடர முடியவில்லை அவளால்!
நடுங்கும் உதடுகளை அழுந்தக் கடித்து பீறிட்ட விம்மலை அடக்க முயல, கேட்டவனுக்கோ அய்யோ என்றிருந்தது!
“இதென்ன பேச்சு மதுரா! நான் தானே அப்படிச் சொன்னேன். நீயா சொன்னாய்? இதில் உன்னை குறைகொள்ள என்ன இருக்கு!?” விழிகளிரண்டும் இடுங்கக் கேட்டவனுள் கோபம் துளிர்க்க ஆரம்பித்தது.
“நித்தி…நித்தி…என் தங்கச்சி என்னை…” தொடர்ந்து தடுமாறியவன், “ச்சே! மன்னித்துக் கொள்ளம்மா தாயே, மன்னித்துக் கொள்! வேண்டுமென்றால் நாலு அறை அறைந்துவிடு; வாங்கிக் கொண்டு போகிறேன்.
அதைவிட்டுவிட்டு இப்படியான நேரத்தில் உண்ணாவிரதம் இருப்பது, வீட்டை விட்டுப் போகப் புறப்படுவது என்று மட்டும் எதையும் செய்து என்னைக் குன்ற வைத்துவிடாதே தாயே!” என்றவன் பேச்சிலும் பாவனையிலும் அதிர்ந்தவள், பின்னால் இரண்டடி தள்ளி நின்று கொண்டாள்.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்? உண்மையைத் தான் சொல்கிறேன். அம்மா… அம்மா இல்லாது தவித்துப் போயிருந்த வீட்டில் நீ வந்ததிலிருந்து அம்மா கூடவே இருப்பது போலவே இருந்தது.” சொல்லி நிறுத்தியவன், அந்த நிஜத்தை அணுவணுவாக உணர்ந்தான்.
“அதுதான், என்னையும் அறியாது ஏதேதோ உளறிவிட்டேன். இனி இப்படி ஒரு பேச்சுப் பேசினால் ஏன் என்று கேள்!” விடுவிடுவென்று சொன்னவன், “ப்ளீஸ்மா..இவ்வளவுக்கும் பிறகு என்னைப் பார்த்தால் கொஞ்சமும் இரக்கம் வரவில்லையா? மன்னிப்புத்தானே கேட்கிறேன்; நான் சொன்னது சொன்னதுதான், உன்னை விரும்புகிறேன் தான் என்று அடித்துச் சொல்கிறேனா? இல்லையே!” ஆற்றாமையோடு சொல்லிக்கொண்டே சென்றான்.
அவன் பேசப் பேச அப்படியே தளர்ந்து போனாள் மதுரா.
‘இவர்கள் மட்டுமா? நானும் தானே இங்கு வந்ததிலிருந்து உற்ற உறவையும் இதத்தையும் பாதுகாப்பையும் உணர்ந்து அனுபவித்தேன்!’ நிஜத்தின் உரத்த நகைப்பில் விழிகள் தாழ்த்தினாள்.
‘இந்த நிலை வந்தே இருக்காமல் இருக்கலாம்; ஆனாலும் தவறுதலாகப் பேசிவிட்டேன் என்று இப்படிக் கெஞ்சுகிறாரே! உண்மையாகவே ஏதோ தடுமாற்றத்தில் கதைத்துவிட்டார் போல!’ தனக்குப் பிடிக்காததை, தனக்குப் பிடித்த விதத்தில் ஆராய முயன்றது அவள் உள்ளம்!
குழம்பிய மனதோடு கரத்திலிருந்த பால் கப்பை இறுகப் பற்றியவாறே கதிரையை இழுத்தவள், மெல்ல அதில் தன்னைப் பொருத்திக் கொண்டாள்.
‘ஹப்பாடா!’ என்றிருந்தது கார்த்திகேயனுக்கு!
‘ஹ்ம்… சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறாள். அந்த மட்டில் நான் தப்பினேன். அவசரக் குடுக்கை வேலை செய்து எல்லாவற்றையும் கெடுக்க இருந்தேன்.’ ஆசுவாசப்பட்டுக் கொண்டவன் அவள் பேச்சில் கலைந்தான்.
“உண்மையாகவே..மனதிலிருந்து எதையும் சொல்லவில்லையே!” அப்போதும் சந்தேகம் கேட்டவளை இமைக்காது பார்த்தவனுள், எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு அவளை இழுத்தணைத்து, “உண்மை தான்டி சொன்னேன்; என்றைக்கும் மாறாத நிஜம் அது. நீ…நீதான் என் மனைவி; உனக்குப் பிறக்கும் குழந்தைகள் என் மூத்த பிள்ளைகள்.” உரத்துக் கத்தும் ஆவேசம் எழுந்தது.
மனதை அடக்கிக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டுப் போனான் அவன். உணவில்லாத வயிறின் காந்தலோடு இணைந்து அவன் நேசம் கொண்ட நெஞ்சும் காந்தியது! அவள் அன்பைப் பெற ஏங்கியது. கையிலிருந்த தேநீர் கப்பை மேசையில் வைத்தவன், கனத்த சிரத்தை கரங்களில் தாங்கிக் கொண்டான்.
தான் கேட்டதற்குப் பதில் சொல்லாது அமைதியாகி, தலையைத் தாங்கிக் கொண்டவனை மீண்டும் சந்தேகப் பார்வை பார்த்தாள் மதுரா.
தன்னை மீட்டுக்கொண்டு மெல்ல நிமிர்ந்து அவளின் நம்பிக்கையற்ற பார்வையைச் சந்தித்தவன் உதடுகள், வருத்த முறுவலில் நெளிந்தது.
“என்னில் மிகுந்த நல்லெண்ணம் இல்லையா மதுரா?” குரலில் வருத்தம் மறையாது வெளிப்பட்டது.
“நான் தான் சொன்னேனே; அப்படிச் சொன்னதை மறந்து விடுங்க. இனி என் வாயால் அப்படிச் சொல்ல மாட்டேன் மதுரா; நம்புங்க.” மனதை மறைத்து நெஞ்சறிய பொய்யுரைத்தவன், எழுந்து சென்று இரு சிறுதட்டுக்களை எடுத்து வந்து கேக்கில் ஒரு துண்டை வைத்து அவளிடம் கொடுத்தான்.
“சாப்பிட்டுவிட்டுப் பாலைக் குடியுங்க.” அவனையே அமைதியாகப் பார்த்திருந்தவளிடம் சொல்லிவிட்டு தானும் ஒரு துண்டை எடுத்து உண்ணத் தொடங்கினான்.
அதன் பின் அங்கு பேச்சு இருக்கவில்லை. வேகமாக கேக்கை உண்டு பாலைக் குடித்தவள், அவனது தட்டையும் கப்பையும் எடுத்து டிஷ் வாசரில் வைத்துவிட்டு, “தூங்கப் போகிறேன்!” முணுமுணுத்தவாறே நகர்ந்தவள் நின்று திரும்பினாள்.
அவளையே பார்த்திருந்தவன் சட்டென்று சாமாளித்து எழுந்தான்.
“தயவு செய்து அப்படிச் சோஃபாவில் தூங்க வேண்டாம்; உள்ளே போய்த் தூங்குங்க.” சட்டென்று முகம் மலர்ந்தவனை அவள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
“ஏதாவது தேவையென்றால் கட்டாயம் எழுப்புவேன்!” சொன்ன வேகத்தில் மேலே ஏறினாள்.
அவளின் சிறு அக்கறைப் பேச்சில் அளவற்ற ஆனந்தம் கொண்டது அவன் உள்ளம். அமைதியாக மேலே சென்றவன் தனது அறைக் கதவை அகலத் திறந்து வைத்துவிட்டு படுக்கையில் தொப்பென்று விழுந்தான்.

