எங்கோ தூரத்தில் விடாது ஒலித்த கிண்கிணி நாதத்தில் உறக்கம் கலைந்த கார்த்திகேயன், போதிய உறக்கமில்லாததில் எரிச்சல் எடுத்த இமைகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்து நடப்புக்கு வர முயன்றான்.
அதன்பயன், அறையின் அகன்ற கண்ணாடி யன்னல்களை அலங்கரித்திருந்த தடித்த திரைகளையும் மீறி உள்ளே நுழையப் பிரயத்தனம் செய்த வெளிப்புற விடியலை உணர்ந்ததும், அடுத்தநொடி திடுக்கிடலோடு எழுந்தமர்ந்தான்.
அப்போதுதான், தன் கைபேசி மணிச்சத்தம் தான் அக்கிண்கிணி நாதம் என்பதையுணர்ந்து கைபேசியை எடுத்தவாறே நேரத்தைப் பார்த்தவனுக்கு, ‘நானா இவ்வளவு நேரம் தூங்கினேன்!’ என, ஆச்சரியமாக இருந்தது.
தங்கை அழைக்கிறாள் என்றதும் அவசரமாக அழைப்பை ஏற்று கைபேசியை காதில் பொருத்திக்கொண்டே யன்னல் திரைகளை இழுத்துவிட்டவன், பட்டென்று கண்களைத் தழுவிய ஆதவ வெளிச்சத்தில் விழிகளை இறுக மூடித்திறந்தவாறே, “சொல்லும்மா நித்தி, குட்மோர்னிங். ம்ம்ம்…முதலுமா? கேட்கவில்லையடா; அசந்து தூங்கிவிட்டேன்.” சமாளித்தான்.
“வேலையெல்லாம் இல்லம்மா; படம் பார்த்துவிட்டு படுக்க நேரமாகிட்டுது.” தங்கையை நம்ப வைத்தவன், “மதுரா…ம்ம்…சத்தத்தைக் காணவில்லை நித்தி; இன்னும் எழவில்லை போல.” மதுராவின் மூடிய அறைவாயிலைப் பார்த்தவாறே சொன்னவன், “ஆறுதலாக மதியம் எடுத்துக் கதையம்மா.” என்றதும், “சரிண்ணா, நாங்க வெளியே போகப் போகிறோம்; இனித்தான் ரெடியாக வேண்டும்.” தமையனிடம் விடைபெற்றாள் நித்தி.
“சரிம்மா, இரவைக்கு ஆறுதலாக கதைப்போம்; கவனமாகப் போயிட்டு வாங்க.” என்று வைத்தவன், ‘ஒன்பதரைக்கு போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டுமே! இப்படியா நித்திரை கொள்வேன்!’ பரபரப்பாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
விரைவாகத் தயாராகி கீழே சென்றவன், புதிதாக வேலைக்கு வந்துள்ள பல் வைத்தியரோடும் க்ளினிக்கின் ரிஷப்ஷனிஸ்ட் பெண்ணோடும் கதைத்து, தான் வரத் தாமதமாகும் எனக் கூறிவிட்டு, காஃபியும் டோஸ்டுமாக சுருக்கமாக காலையுணவை முடித்துக்கொண்டான்.
“ம்ம்…இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு.” சொன்னபடி, கரமிரண்டையும் பரபரவென்று தேய்த்துக்கொண்டு சமையலறையை நோட்டம் விட்டவன், மதுரா வந்தபின் இப்படிச் சமையலறையினுள் நுழைந்து பார்வையிடுவது இதுதான் முதல் தடவை.
கிட்டத் தட்ட மொத்த வீடும் அவளின் கைக்குள் அல்லவா இருந்தது!
மதியமும் இரவும் சுவையான உணவு சுடச்சுட மேசைக்கு வருவதை நினைத்துக் கொண்டவன், ‘இன்றைக்கு நானே சமைத்தால் என்ன? கடையில் வாங்குவோம் என்றால் கேட்காமல் எதையாவது சமைக்க நிற்பாள்!’ எண்ணியவாறே, ரைஸ் குக்கரில் அரிசியை எடுத்துக் கழுவியவன், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த காய்வகைகளில் சிலதுகளை எடுத்து நறுக்கி அதோடு கலந்தான்.
‘ஹ்ம்…சிக்கனையும் இதோடு சேர்த்து விடுவோம்.” சதைப்பகுதியாக இருந்த சிக்கன் துண்டுகளையும் கலந்து, ருசிக்குத் தேவையான பொருட்களையும் கலந்து வேகவிட்டுவிட்டு, “மேடம் இன்றைக்கு என் சமையலை ருசி பார்க்கட்டும்!” முணுமுணுத்தவாறே முறுவலோடு படிகளில் தாவி மேலே ஏறினான்.
“இன்னும் எழவில்லை போலிருக்கே!” மெல்ல அவள் அறைக் கதவைத் திறந்தவனின் பார்வை, அன்றொருநாள் போலவே அசந்துறங்கும் அவள் வதனத்தில் ஒட்டிப் பிரியமறுத்து நின்றது.
அதே, அன்று போலில்லாது அவளை இரசனையாக இரசிக்க முயன்றது அவன் மனம். மனமும் விழிகளும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு அவளில் தவழந்தன.
முகத்தின் பாதி அப்படியே தலையணைக்குள் புதைந்திருக்க போர்வைக்கு மேலாலாக ஒரு கரத்தைப் போட்டு ஒருபக்கமாகச் சாய்ந்து உறங்கியவளையே பார்த்திருந்தவன், மனம் நிறைந்த அன்பை வைத்துக் கொண்டு, தடுமாறிவிட்டேன் மன்னித்துக் கொள் என்று தான் சொன்னதை நினைத்ததும் மனம் கனத்துப் போனான்.
அதேவேளை, அதை நம்பியவள் ஓரளவேனும் சமாதானம் அடைந்ததை எண்ணி, ‘என் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் உன்னால் இப்படி ஆழ்ந்த நித்திரை கொள்ள முடியும்! இந்த நம்பிக்கை நிச்சயம் என் அன்பை உணர்ந்து கொள்ளும்; பார்த்துக் கொண்டேயிரு!’ பலத்த குரலில் மனதுள் சொல்லிக் கொண்டவன் முகம் கனிந்து கிடந்தது.
எவ்வித ஆரவாரமும் பரபரப்புமின்றி சில நிமிடங்கள் அவளை இரசித்தவன், “மதுரா …மதுரா..” வாயிலில் நின்றவாறே எழுப்ப முனைந்தான்; மறந்தும் அன்றொருநாள் போல் அறைக்குள் நுழையவில்லை.
ஆழ்ந்த நித்திரையிலிருந்த மதுரா அவன் பலதடவைகள் அழைத்த பின்னரே அருண்டெழுந்து, “குட்மோர்னிங் மதுரா!” என்றவனை கேள்வியாகப் பார்த்தாள்.
“ஒன்பது மணியாகுது, எழுந்து சாப்பிட்டுவிட்டு படுங்க.” முறுவலித்தான்.
“என்ன! அவ்வளவு நேரமாகிவிட்டுதா? நீங்க போயிட்டு வாங்க.” என்றபடி எழுந்தாள் அவள்.
“க்ளினிக்குக்கு போகவில்லை மதுரா; போலீஸ் ஸ்டேஷன் வரை போயிட்டு வருகிறேன். எப்படியும் ஒரு மணித்தியாலத்தில் திரும்பி வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.” என்றதும், அவள் முகத்தில் பதற்றத்தின் ஆக்கிரமிப்பு!
“கொஞ்சம் நில்லுங்க, நான்…நானும் வாறேன்; நீங்க தனியாக போக வேண்டாம்.” அவளின் தடுமாற்றமும் பதற்றமும் இவனுள் பன்னீர் துளிகளைத் தெளிக்க, அதன் சுகந்தத்தை நுகர்ந்தவாறே, “நீங்க வரத் தேவையில்லை; நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்றுவிட்டு, செல்லத் திரும்பியவன் மீண்டும் நின்று அவளைப் பார்த்தான்.
“மதியத்துக்குச் சமைத்து விட்டேன்; அங்கு போய் அதையும் இதையும் உருட்டத் தேவையில்லை.” பொய்யாக மிரட்டியது அவன் குரல்.
“என்ன!? சமையல் செய்தாச்சா? இவ்வளவு காலையில் ஏன்!?”
“ம்ம்…ஒருநாளைக்கு சமையல் வேண்டாம் என்றால் கேட்பீங்களா? இல்லையே! அதனால், நானே சமைத்துவிட்டேன். நீங்க சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருங்க.” அன்புக் கட்டளை!
அதை ஏற்க, துளியும் மனமின்றி சிடுசிடுத்தவளின் அகம், வதனத்தில் அதைப் பிரதிபலித்தது.
“என்ன முறைப்பு! இத்தனை நாள் நாங்க உங்க சாப்பாட்டைச் சத்தம் போடாது சாப்பிட்ட மாதிரி கொஞ்ச நாளைக்கு நீங்க சாப்பிட வேண்டும்.” என்றவன் முகத்தில் வெளிப்படையான முறுவல் வந்திருக்க, அவள் பதிலை எதிர்பாராது, “நேரமாகிட்டுது மதுரா, போயிட்டு வாறேன்.” விரைந்து இறங்கிச் சென்று விட்டான்.
நேற்றிரவு, உன்னை விரும்புகிறேன் அது இது என்று இவளைக் கலங்கடித்தவன், இன்றோ, அதன் சுவடு சிறிதுமின்றி மிகவும் இயல்பாக பேசிவிட்டுச் செல்ல, ‘அப்போ, என் நிலையில் பரிதாபப்பட்டு ஒரு வேகத்தில் அப்படி உளறியிருக்கிறார்; என் எதிர்ப்பைச் சொன்னதும் அதை ஏற்று மறந்து விட்டார்.’ என்ற முழு நம்பிக்கை வந்திருக்க. இதுவரை அவள் மனதை அழுத்திய பெரும் சுமை அகலும் உணர்வில் பெருமூச்சு வெளியேறியது.
ஆனாலும், ‘என்னதான் இருக்கட்டும், இங்கிருந்து போக இப்போதே ஆயத்தம் செய்தாக வேண்டும்.’ என்ற முடிவோடுதான் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
காலைக் கடன்களை முடித்துவிட்டு கீழே வந்த மதுராவின் பார்வை முதலில் ரைஸ் குக்கரில் தான் நிலைத்தது.
சுத்தமாக இருந்த சமையலறையைப் பார்த்துவிட்டு, “சோறு மட்டும் சமைத்திருக்கிறாரா? கறிகள்!?” முணுமுணுத்தவாறே ரைஸ் குக்கரைத் திறந்தவளின் முகம் முறுவலால் நிறைந்து போனது.
‘ஓஹோ! இதுதான் அவரின் சமையலா? எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு..’ மெல்ல முகம் சுளித்தவள், கரண்டியால் கொஞ்சமாகக் கிள்ளியெடுத்து உள்ளங்கையில் வைத்து ருசித்துப் பார்த்தாள்.
“ஹ்ம்ம்…பரவாயில்லையே! புதுவகை பிரியாணி.” சுவைத்து விழுங்கிவிட்டு ‘உறைப்புத்தான் இல்லை; பரவாயில்லை. காலையில் எழுந்து மினக்கெட்டு சமைத்து வைத்திருக்க குறை கண்டு பிடிக்கிறேனே!’ தன்னையே கடிந்து கொண்டு, தேநீர் தாயாரித்து, டோஸ்ட் போட்டு எடுத்துக்கொண்டு வந்து உணவு மேசையில் அமர்ந்தவள் உணவை உண்டபடியே யோகத்துக்கு அழைத்தாள்.
இரண்டு ரிங்கில் வந்த “ஹலோ” வில், அது யோகத்தின் மகன் சதீஷ் என அறிந்து கொண்டவள். “வேலைக்குப் போகவில்லையா சதீஷ்?” என, அவனோடு சிலவார்த்தைகள் கதைத்துவிட்டு,
“அம்மா இருக்கிறாரா?” என்றதும், “உங்களிடம் சொல்லவில்லையா மதுரா? அம்மா இரண்டு கிழமைக்கு ‘பெர்லிங்’ போயிருக்கிறார். அவரின் ஒன்றுவிட்ட தங்கச்சி மகளுக்கு கல்யாணம் வருகுது; ஊரிலிருந்து சொந்தக்காரர்கள் வந்திருக்கிறார்கள் என்று அம்மா நேரத்துக்கே போய்விட்டார்; நானும் அப்பாவும் கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் போவோம்.” என்றதும் தான், யோகம், தான் போகப் போவதாகச் சொன்னது இவள் நினைவில் வந்தது.
“பச்..ஆன்ட்டி சொன்னார்தான்; சுத்தமாக நினைவில் இல்லை.” என்றவளிடம் “என்ன விடயம் மதுரா? ஏதாவது அவசரமா? அம்மாவோடு கதைக்க வேண்டுமா? கைபேசி இலக்கம் இருக்குத் தானே, அதற்கு எடுத்துக் கதையுங்க.” என்றான் அவன்.
“இல்லையில்லை; அப்படி அவசரம் ஒன்றுமில்லை சதீஷ்.” மெல்ல இழுத்தாள்.
“அட! சொல்லுங்க மதுரா; என்ன விஷயம்? என்னிடம் சொல்லுங்க.” என்றான், அவனும் விடாது!
“ம்ம்…இல்லை சதீஷ், இங்கு வந்து இவர்களோடு இருந்து விட்டேன்; இப்படியே இருக்க முடியாது தானே!” என்றவளை, இடையிட்டான் அவன்.
“ஏதாவது பிரச்சனையா மதுரா? கார்த்திகேயன் அல்லது நித்தி ஏதாவது சொன்னார்களா?” அவசரப்பட்டான்.
தெரியாத ஊரில் வந்து இடியாக இறங்கிய செய்தியால் வாழ்வு ஆட்டம் கண்டாலும், தனித்து நிமிர்ந்து நின்ற மதுராவில் தாய் யோகத்துக்குப் போலவே அவர் கணவர், சதீஷ் எல்லோருக்கும் மிகவும் அன்பு; தம் வீட்டுப் பெண் என்கின்ற உரிமை. அதனால், அங்கு எதுவும் சரியில்லையோ என நினைத்துக் கேட்டான்.
“ஐயோ! அப்படி எதுவுமில்லை சதீஷ்.” என்றவளுக்கு கண்கள் கலங்கினாலும், நேற்று நடந்ததைச் சொல்லவில்லை.
“அம்மாவும் வந்தால் கொஞ்ச நாட்கள் நின்றுவிட்டு பாப்பாக்கள் பயணம் செய்யலாம் என்றால் இலங்கைக்கு போகலாம் என்றிருக்கிறேன் சதீஷ்.”
“ஓ! என்ன மதுரா திடீரென்று? இங்க பிறக்கும் குழந்தைகளை அங்கு அழைத்துப் போய்…ஹ்ம்…நன்றாக யோசித்துச் செய்ய வேண்டிய விடயம் மதுரா; அவசரப்பட வேண்டாம்.” தடுத்தான் அவன்.
“இல்ல சதீஷ், இங்க தனியாக இருந்து இரண்டு பேரையும் என்னால் சமாளிக்க முடியாதில்லையா? அங்கே போனால், அம்மா தங்கச்சிகள் இருக்கிறார்கள்; உதவிதானே!” சொல்லி நிதானித்தாள்.
“இப்போதான் என் கதை ஊருக்கே தெரியுமே; இனி என்ன?” தொடர்ந்தவள், குரல் மிகவும் இறங்கியிருந்தது.
“அது சரிதான் மதுரா; ஆனாலும், ஒன்றுக்குப் பத்தாக யோசியுங்க.” என்றான், அவனும் விடாது.
“என்ன என்றாலும், தொடர்ந்து இவர்கள் வீட்டில் இருக்க விருப்பமில்லை சதீஷ். கடமைப்படுத்தவும் ஒரு எல்லை இருக்கே!” அதிலேயே நின்று, ‘ஏதோ நடந்திருக்கு.’ என்ற சந்தேகத்தை அவன் மனதில் தூவினாள்.
“அதுவரை ஒரு ரூம் இருந்தால் நல்லது சதீஷ். உங்களால் பார்த்துச் சொல்ல முடியுமா? ஒன்றும் சரிவரவில்லை என்றால் சுபா ஆன்ட்டி வீட்டில் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.” முடிவாகச் சொல்ல, மிகவும் குழம்பி விட்டான் அவன்.
“என்ன மதுரா திடீரென்று? எதுவோ நடந்திருக்கு; என்ன நடந்திச்சு.” அவன் பதற்றத்தில் மெல்ல முறுவலித்தவள், “உண்மையாகவே ஒன்றுமில்லை. நான் இப்படி ரூம் தேடுவது மட்டும் தெரிந்தால் நித்தி காளி வேஷம் போடுவாள்.” என்றதும், கேட்டவன் முகம் புன்னகையால் நிறைந்தது.
நித்தியும் அவள் பேச்சுக்கள் பாவனையும் அவன் மனதில் வலம் வர, “அது என்றால் உண்மைதான்; நித்தி, காளிக்கு நெருங்கிய சொந்தம் போல.” கேலி!
“ஆங்! வந்ததும் எந்தவகை சொந்தம் என்று கேட்டுச் சொல்கிறேன்.”
இப்படி, அவள் இலகுவாகக் கதைத்ததில், பிரச்சனைகள் இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தவன், “குழந்தைகளோடு இருக்க வசதியான அறையாகப் பார்த்துச் சொல்கிறேன் மதுரா. நம்ம அவசரத்துக்குச் சரி வருமோ தெரியாது; கட்டாயம் பார்க்கிறேன்.” என, சிறிதுநேரம் பொதுவாக கதைத்துவிட்டு வைத்தான் அவன்.
சதீஷுடன் கதைத்துவிட்டு, துவைத்த ஆடைகளை மடித்துக் கொண்டிருந்தவள், சொன்ன நேரத்துக்கு முன்னரே வந்த கார்த்திகேயனின் கார்ச்சத்தத்தில் விரைந்து சென்று, முன்வாயிலைத் திறந்து வெளியில் இறங்கினாள்.
ஒருவகை இறுக்கத்தோடு நுழைந்த கார்த்திகேயனின் முகத்தில் அவள் வந்த வேகம் பார்த்ததும் மென்முறுவல் பளிச்சிட்டு வந்த தடயமின்றி மறைந்தது.
அமைதியாக காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் பொருளறியாப் பார்வையால் அவளை தொட்டுவிட்டு கடந்து செல்ல, அவள் மனம் பதற்றத்தில் மூழ்கியது.
“அங்கே என்ன நடந்தது? அந்தாளை அடித்ததற்காக உங்களை எதுவும் சொன்னார்களா?” அதுதான் அவள் கவலையே! இந்த அலைச்சலும் வீண்பழியும் இவனுக்கு தேவையற்றது அல்லவா? குற்ற உணர்வில் தடுமாறியவாறே வினவியவளை சட்டென்று திரும்பி முறைத்தான் அவன்.
அவளோ அதைச் சிறிதும் கவனிக்காது, “அந்தாள் இன்னும் அங்குதானா? அல்லது…வீட்டுக்குப் போய்விட்டு வந்திருந்தாரா?” இதைக்கேட்ட கார்த்திகேயன் விழிகள் அவளை நேராகவே சுட்டன!
‘இவளுக்கு அவனில் இன்னும் பாசம் இருக்கோ!’ அவன் மனதில் சிறுபுள்ளியென சந்தேகம் விழ முகத்தைச் சுளித்துக் கொண்டான்.
‘ராஸ்கல், என்னவெல்லாம் கதைக்கிறான்.’ பற்களை நறும்பிக் கொண்டவன், “ம்ம்..அந்தப் பெரியவரை அடித்ததற்காக ஒரு கிழமை வந்து உள்ளுக்குள்ள இருக்கச் சொன்னார்கள். கொஞ்ச வேலைகள் இருக்கு முடித்துவிட்டு வருகிறேன் என்று வந்திருக்கிறேன்.” இறுக்கமாகவே சொல்லிவிட்டு, “என்ன! உங்களை…ஏன்?” எனத் தடுமாறியவளை அலட்சியமாகப் பார்த்தவாறே, “காஃபி ஒன்று குடிப்போம்!” என்றபடி சமையலறை நோக்கி நகர்ந்தான்.
‘இவருக்கு என்னாச்சு? காலையில் போகும் போது நன்றாகத் தானே போனார்! அங்கு தான் எதுவோ நடந்திருக்கு!’ மனதில் முட்டிய கவலையோடு பின்னால் சென்று, “இதற்குத்தான் நானும் வருகிறேன் என்றேன்.” என்றவள், அவன் திரும்பிப் பார்த்த பார்வையில் சுதாகரித்தாள்.
“பொய்…பொய் தானே! என்னைத் தள்ளிவிட்டதால் தடுக்க வந்த நீங்க அடிக்க வேண்டி வந்ததாகச் சொல்லிவிட்டேனே! பிறகு ஹாஸ்பிட்டலில் இருக்கும் பொழுதும் விசாரித்தார்கள்; உங்களில் தவறில்லை என்று அப்போதும் சொன்னேன். அந்தாளைத்தான்…அந்தாளுக்குத்தான்..” தடுமாறியவள் பார்வை, அங்கு நடந்ததை சொல்லேன் என்றது.
அப்போதுதான், அவன் காஃபி தயாரிக்க முனைவது கருத்தில் பதிய, “தள்ளுங்கோ, நான் போட்டுத் தாறேன்.” என முன்வந்தவளை, மீண்டும் கூர்மையாகப் பார்த்தான் அவன்.
“தேவையில்லை; நீங்க உங்கள் வேலைகளைப் பாருங்க. சிலவேளை இன்றைக்கே அறை கிடைத்து நீங்க போய்விட்டால் நாங்க தானே எங்க வேலைகளைச் செய்ய வேண்டும்.” சொன்னவன் குரலும் முகமும் காட்டிய ஒதுக்கத்தின் காரணம் பிடிபட, அசையாது நின்றாள் அவள்.
“ஓ! இந்த வேகத்தில் உங்களிடம் சொல்லிவிட்டாரா சதீஷ்?” இலேசான கேலி.
“என்னதான் சொல்லுங்க, நான் இங்கேயே இருப்பது என்பது சாத்தியமில்லை தானே! அம்மாவும் வந்து நிற்கப் போகிறார் இல்லையா? உங்களுக்கு ஏன் வீண் தொந்தரவு. அதனால் தான் அறை பார்க்க நினைத்தேன். இப்போ அதுவா முக்கியம்?! போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது என்று சொல்லுங்க.” சமாளித்தவள்,
“தள்ளுங்க…நான் போடுகிறேன்.” காப்பி பவுடரை அவன் எடுக்க முதல் எடுத்துக்கொண்டே, “இப்படி முறைத்தால் நீங்க சமைத்து வைத்திருக்கிற குழை சோற்றை வாயிலும் வைக்க மாட்டேன்!” முறுவலிக்க முயன்றாள்.
“ஏன் மதுரா…நான் அவ்வளவு மன்னிப்புக் கேட்டும், அதைப் பெரிதாக நினைத்து வீட்டை விட்டுப் போக நினைத்து விட்டீங்களே! அப்போ, என் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையல்லவா?” என்றவன், இடையிட முயன்றவளை அனுமதியாது,
“உங்க அம்மா வரும் கதை எல்லாம் வேண்டாம்; அதைப் பற்றியெல்லாம் கதைத்து, நீங்க இங்கு இருப்பது எப்போதோ முடிவானது இல்லையா?” இறுகிய குரலில் தொடர்ந்தவனை, ஆயாசத்தோடு பார்த்தாள் அவள்.
கடமை, உரிமை, உறவு, இப்படி எவ்வித சம்பந்தமுமின்றி, தன் வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு மன உலைச்சலோடு தனக்காக இழுபடுபவனை கணநேரம் பார்த்து நின்றவள் விழிகள் மெல்லிதாக கலங்கின!
‘அறை பார்த்துப் போவதை முன்னரே செய்திருக்க வேண்டும். இங்கு வந்து அக்கடா என்று அமைதியாக இருந்தது நான் செய்த மிகப் பெரிய தப்பு!
அது தப்பு என்று மனம் உணர்ந்த பின்னும் தொடர்ந்து செய்து நம்மிடையே நிலவும் நல்ல உறவைக் கேள்விக் குறியாக்க நான் விரும்பவில்லை. அதுதான் உண்மை.
எனக்கு…எனக்கு இனிமேலும் இங்கிருக்க உண்மையாகவே பயமாக இருக்கு! அது உங்கள் மீது கொண்ட சந்தேகம் இல்லை. நிச்சயம் அப்படி இல்லை.’ மனதுள் முணுமுணுத்துக் கொண்டவள், வார்த்தை வடிவமளிக்க முடியாது திண்டாடினாள்.
“உண்மையாகவே அதைப் பெரிதாக எடுக்கவில்லை. நேற்று, உங்க கண் முன்னால் நடந்ததைப் பார்த்து வந்த பரிதாபத்தில் அப்படிச் சொன்னீங்க என்று எனக்குப் புரிந்துவிட்டது.” மெல்ல இவள் ஆரம்பிக்க, அவள் மீதிருந்த அவன் பார்வை சட்டென்று விலகிக் கொண்டது.
“அதனால், அப்படியெல்லாம் நினைக்காதீங்க. அதுவா இப்போ முக்கியம்! அங்கு என்ன நடந்தது என்று சொல்லுங்க.” காஃபி கப்பை அவனிடம் நீட்டியவாறு தொடர்ந்தாள்.
‘பரிதாபத்தில் சொன்னேனா? இல்லடி; உண்மையாகவே உன்னை நான் விரும்புகிறேன்!’ மனதுள் அலறியவாறே காஃபியை வாங்கிக் கொண்டவன், “அந்த ராஸ்கலை அங்கு கண்டதும் நான்கு மிதி போடும் ஆத்திரம் வந்திச்சு..” ஆரம்பித்து, அவள் முகம் கன்றலில் பேச்சை நிறுத்தினான்.
“என்ன மதுரா…நான் இப்படிப் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை போல! ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இன்னொருதரம் என் கையில் கிடைத்தான் அவன் தொலைந்தான்.” அடிக்குரலில் சீறினான்.
“அங்கும்…ஏதாவது… பிரச்சனையா?” இவளோ தடுமாறினாள்!
“ப்ச்…பிரச்சனை எல்லாம் ஒன்றுமில்லை. நேற்று அந்தப் பொம்பிளை வந்து கேட்டும் அவனை வீட்டுக்கு விட வில்லையாம்.” கேட்ட மதுராவின் முகம் கன்றிக் கறுத்துவிட்டது.
அவன் தனக்கு அவ்வளவு பெரிய துரோகம் செய்த போதும் அவனைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சி இவள் மனதில் ஏனோ வரவில்லை.

