“ஹ்ம்ம்…வரச் சொன்னார்கள்; பயப்படத் தேவையில்லை. நம்ம நல்ல நேரம் டாக்டர் ஸ்மித் டியூட்டியில் நிற்கிறார்.” சொன்னவாறே வாயிலை நோக்கி நகர்ந்தவன், “ஜுஸ் கொண்டு வாறேன் குடி; நான் உடுப்பை மாற்றிவிட்டு வந்து விடுகிறேன்.” மின்னலென மறைந்தான்.
“குழந்தைகள் திரும்பவில்லை கார்த்திகேயன். ஹ்ம்ம்…எட்டரை மாதத்துக்கு இன்னும் சிலநாட்கள் இருக்கில்லையா? என்றாலும் இப்போது சிஸேரியன் செய்வதைவிட வேறு வழியில்லை.”
“சிசேரியன் தான் என்றால் நேரத்தைக் கடத்தாது ஆயத்தப்படுத்துங்க டாக்டர். மற்றும் படி குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள் தானே!” சொந்தத் தந்தைபோல வினவியவனை தான் போட்டிருந்த மூக்குக்கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்த்த மருத்துவர், “ஒரு பிரச்சனையும் இல்லை.” முறுவலோடு சொன்னவர்,
கலக்கம் மொத்தமும் ஆக்கிரமிக்க கட்டிலில் சோர்ந்திருந்த மதுராவின் கன்னத்தில் தட்டி, “குழந்தைகள் வளர்ச்சியில் எந்தக் குறையும் இல்லை; அதனால் ஒன்றுக்கும் யோசிக்கத் தேவையில்லை; சிசேரியனுக்கு ஆயத்தம் செய்வோம்.” என்றபடி, அருகில் நின்ற தாதியிடம் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டு அப்பால் நகர்ந்தார்.
“முழுவதும் மயக்காமல் முதுகெலும்பில் ஊசி போட்டு இடுப்பிலிருந்து உணர்விழக்கச் செய்து ஆபரேஷன் செய்யலாம். இப்போ, அந்த ஊசி போட அழைத்துச் செல்லப் போகிறார்கள் மதுரா.” கட்டிலின் தலைமாட்டில் சாய்ந்து நின்று இடக்கரத்தை அவள் இறுகப் பற்றியிருக்க, வலக்கரத்தால் ஆதரவாக அவள் தலையை வருடிக் கொண்டே சொன்னான் கார்த்திகேயன்.
வைத்தியசாலைக்குச் செல்லவென்று காரில் ஏறியதிலிருந்து பேச்சைத் தொலைத்திருந்தாள் இவள். வைத்தியர் கேட்டவை கூட அவளுக்குப் புரியவில்லை; ஒத்தவார்த்தை புரியாதவள் போல முழியை உருட்டினாள்.
ஒவ்வொன்றுக்கும் கார்த்திகேயன் முகத்தைப் பார்க்க, அவன் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்ல பதிலை முனகினாள். அந்தளவுக்கு, அவள் மனம் மொத்தமும் ஒருவகைத் திகிலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது!
வேண்டாத கற்பனைகள் பலதும் இதயத்தைக் கசக்கிப் பிழிய கண்ணீர் சொரிந்து கொண்டே இருந்தாள்.
வைத்தியர், தாதி, கார்த்திகேயன் என்று யார் சொன்ன சமாதானமும் அவள் புலன்களால் உணர்ந்தால் போலவும் இருக்கவில்லை.
கார்த்திகேயனுக்கோ, முற்றிலும் புதுவகை அனுபவம் இது! திருமணம் முடித்தவன் என்றால் சரி மனைவியோடு சேர்ந்து இந்நேரத்துக்காகத் தன்னைத் தாயார்ப்படுத்தி இருப்பான். ஆனால் இப்போதோ, அவனும் மனம் நடுங்க பதறித்தான் போனான். அதைச் சற்றும் வெளியில் காட்டாது அவளுக்கு ஆறுதல் சொன்ன வண்ணமே இருந்தான்.
‘பச்.. சின்னப் பிள்ளை என்றாலும் நித்தி இருந்திருந்தால் இவள் கொஞ்சம் தெம்பாக இருந்திருப்பாளோ!’ என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
‘யோகம் ஆன்ட்டியும் இல்லையே! இருந்திருந்தால் இப்போது ஓடி வந்திருப்பார்.’ உள்ளத்தில் தவித்தவன், ‘யாரும் தேவையில்லை ராதும்மா; நான் இருக்கிறேன்.’ கைப்பிடியை அழுத்தி அவளுக்குப் புரியவைக்க முயன்றான்.
வீட்டிலிருந்து வந்ததிலிருந்து அவளை விட்டு அசையாது இருந்தவன் அவளைப் பரிசோதிக்க மருத்துவர் ஆயத்தம் செய்ய, மெல்ல அறையை விட்டு வெளியில் வந்துவிட்டான்.
“அவள் என் மனைவி.” இதயம் உறுதியாகச் சொன்னாலும், ‘நீ என் கணவன் என்று அவள் சொல்வாளா? ஒருகணம் சரி அப்படி அவளால் எண்ணிப்பார்க்க முடியுமா?’
முடியாது என்பது நன்றாகப் புரிந்த பின்னும் அவனால் அங்கு நிற்க முடியவில்லை. அவள் அதை விரும்ப மாட்டாள் என்று நன்கு உணர்ந்து, ‘இந்த நேரத்தில் அவளைக் கஷ்டப்படுத்துவானேன்!’ என எண்ணி, வெளியில் வந்து நின்றான்.
அதற்குப் பிறகு அவன் கரத்தைப் பற்றிய மதுராவே அவனை அப்பால் இப்பால் நகர விடவில்லை.
ஒன்றுக்கு இரண்டாக காதில் மோதிய குழந்தைகளின் இதயத் துடிப்புகள் அவள் உடலின் ஒவ்வொரு அணுக்களையும் தாய்மையை உணரச் செய்து சிலிர்க்க வைத்தது.
‘என் செல்வங்களை நான் காணப் போகிறேன்!’ மனதில் எண்ணியவள், ‘அவர்களைக் காண நான் உயிரோடு இருப்பேனா?’ திடீரென்று மிகுந்த சந்தேகம் கொண்டாள்.
‘நெஞ்சை எல்லாம் எதுவோ செய்யுதே! எனக்கு ஏதாவது நடந்துவிட்டால்! நான்…நான் செத்துப் போனால் குழந்தைகள் என்னாவார்கள்!?’ புதிய கவலையை கஷ்டப்பட்டுக் கட்டி இழுத்தாள். நேரம் போகப் போக பயத்தால் நடுங்கியவளுக்கு அவன் கரத்தின் ஸ்பரிசம் மட்டுமே தைரியம் சொன்னது.
“நான்…எனக்கு எதுவும் ஆகிவிட்டால் குழந்தைகளை…” சொன்னவளை மேலும் பேசவிடாது அவள் வாயைப் பொத்தியிருந்தவனின் முகம் கோபத்தில் மின்னியது.
“.இதெல்லாம் என்ன பேச்சு! இதையும் அதையும் யோசித்துக் குழம்ப வேண்டாம். இப்போ ஏன் இப்படிக் கண்ணீர் விடுகிறீர்.” கடிந்து கொள்ள முயன்றவாறே கண்ணீரைத் துடைத்து விட்டவன், கட்டிலோடு ஊசி போட அழைத்துச் செல்ல முயன்ற தாதியிடம், “நானும் வரலாம் தானே.” கேட்டு, கூடவே நடந்தான்.
ஊசி போட்டு வந்தவளை ஆபரேஷன் தியேட்டர் உள்ளே கொண்டு செல்ல முதல், “பயப்படாமல் போயிட்டு வா; நான் இதிலேயே நிற்பேன்.” குரல் தடுமாறச் சொல்லி, தன் கரத்தை விடுவிக்க முயன்ற கார்த்திகேயனின் கண்கள் கசிந்து விட்டன!
அவளை விட்டுச் சிறிதும் விலக அவன் துளியும் விரும்பவில்லை. ஆனால் அவளோடு உள்ளே செல்வதை அவள் விரும்பமாட்டாளே! மனச் சுணக்கத்தால் சுருங்கிய முகத்தோடு விலக முயன்றவன் கரத்தை விடாது பிடித்துக் கொண்ட மதுராவையும், கலக்கத்தோடு நிற்கும் கார்த்திகேயனையும் முறுவலோடு எதிர்கொண்டார் டாக்டர் ஸ்மித்.
கார்த்திகேயனின் செய்கை ஒவ்வொன்றிலும் அவள் மீதான அவன் நேசத்தைக் கண்டவர், “கார்த்திகேயன், நீங்களும் உள்ளே வருவது என்றால் வரலாம்.” அவர் சொல்ல, ஏக்கத்தோடு அவன் பார்வை அவளிடம் அனுமதி வேண்டி நின்றது.
“நான்..நான் உள்ளே வரவா?” வேண்டாமென்று சொல்லிவிடாதே என, விழிகளால் கெஞ்சினான்.
அவளோ, குளம் கட்டிய விழிகளின் நீர் கரை கடந்து வழிந்து செவிகளைத் தொட்டு, தலையணையை நனைக்க, “என்னை…விட்டுவிட்டுப் போகாதீங்க கார்த்தி; பயமாக இருக்கு!” கேவலோடு குழறினாள்.
அந்நிமிடம் தன்னை மறந்தான் கார்த்திகேயன். தன் மனதை அவளுக்குக் காட்டக் கூடாது என்று எச்சரிக்கையோடு நடக்க முயன்றதையும் மறந்தான்.
“ராது… என்னம்மா பயம்! உன்னைவிட்டு எங்கும் போகமாட்டேன்; எல்லாம் நல்லபடி நடக்கும்; இன்னும் கொஞ்ச நேரத்தில் நம் குழந்தைகளைப் பார்க்கப் போகிறோம்; அமைதியாக இருக்க வேண்டும்.” கண்ணீரைத் துடைத்து விட்டவன் அவள் நெற்றில் அழுந்த முத்தமிட்டான்.
பயத்தின் மொத்த பிடியில் தடுமாறிக் கிடந்த மதுராவுக்கு கார்த்திகேயன் அருகாமை மட்டுமே ஆறுதல் தந்தது. ஆனாலும் அவன் ராது என்று அழைத்துக் கூறியவை இதயத்தை ஸ்தம்பிக்கச் செய்ய, அவன் இட்ட முத்தமோ உடலை விறைக்கச் செய்தது.
கண்களில் மொத்த நேசத்தையும் தேக்கி அவன் பார்த்த பார்வையில் நிஜம் முகத்தில் அறைய சட்டென்று தொய்ந்தாள் அவள். ‘அப்போ, உன்னை விரும்புகிறேன் என்றது உண்மையா?’ மனதில் எழுந்த கேள்வி அவளை ஆட்கொள்ள ஆட்கொள்ள குளிர் வந்தவள் போல உடல் நடுங்கத் தொடங்கியது.
அவனோ இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை. தாதியோடு நகர்ந்தவன், ஆபரேஷன் தியேட்டருள் போடும் பச்சை உடையை மாற்றி தலைக்குத் தொப்பி போட்டு ஆளே மாறி வந்து அவள் தலைமாட்டில் அணைந்து நின்று கொண்டான்.
அங்கிருந்த தாதி ஒரு உயர்ந்த ஸ்டூலை இவன் அருகில் வைத்துச் செல்ல இழுத்து அமர்ந்து கொண்டவன், தன் கரத்தால் அவள் தலையோடு வளைத்து அணைந்தவாறே அவள் முகத்தையே உற்று நோக்கினான்.
சற்று முன்வரை அவன் முகத்தை ஆக்கிரமித்திருந்த அத்தனை ஆதங்கமும் கலக்கமும் எங்கு சென்றதெனக் காணாது போயிருக்க, ஒருவகை எதிர்பார்ப்பில் கனிந்திருந்தது அவன் முகம்.
ஒருகணம் அவனையே இமைக்க மறந்து பார்த்தாள் மதுரா! மறுகணம், அவன் விழிகள் தன் முகத்தை விட்டு விலகாதிருக்கவே விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள்.
உணர்வற்றிருந்த வயிற்றுப் பகுதியில் வைத்தியர் தன் வேலையைக் கவனிப்பதை உடலில் ஏற்பட்ட அதிர்வு அவளுக்கு உணர்த்தினாலும் மனமோ சுத்தமாக மரத்துப் போயிருந்தது.
மெல்ல மெல்ல அரைமயக்க நிலைக்குச் சென்றிருந்தவளுக்கு, எழுந்தமர்ந்து, ‘என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகின்றது?’ என்று அவன் கன்னத்தில் விளாசும் ஆவல் அதிர்வோடு எழுந்தது.
‘நம் குழந்தைகள்’ என்று அவன் சொன்ன சொல்லில் தேகம் காந்துவதாக உணர்ந்தவள், மெல்ல மெல்ல சிந்திக்கும் சக்தி அற்று அப்படியே தொய்ந்தாள்.
விழிமூடியவளின் உடல் நடுக்கத்தை மிகையாக உணர்ந்த கார்த்திகேயன் , “இவளுக்கு நடுங்குது டாக்டர்..” என்றவன், “ராது கண்ணைத் திறந்து பார்.” கன்னத்தில் தட்டினான்.
சட்டென்று வந்து பார்த்த தாதி, வெதுவெதுப்பான கம்பளியைக் கொண்டுவந்து அவள் தோளோடு போர்த்திவிட அதைச் சரி செய்தவாறே, “ராதும்மா இன்னும் கொஞ்சநேரம் தான்; பயப்படாதேடா!” முகத்தைத் தடவிக் கொடுத்தவனை எதிர்த்துத் தடுக்கும் திராணியின்றிக் கிடந்தாள் மதுரா.
“இதோ முதல் குழந்தை வரப் போகிறாள்.” டாக்டரின் குரலில் மதுராவை நோக்கிச் சாய்ந்தவன், “ராதும்மா கண்ணைத் திறந்து கொள்ளுடா…பார் அதோ…வந்துவிட்டாள்.” குரலில் பரவசத்தோடு சொன்னவன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அவள் உள்ளத்தில் கொஞ்ச நஞ்சமிருந்த இயக்கத்தையும் அசரடித்தான்.
“வாவ்! அப்படியே அம்மா போலவே இருக்கிறார்!” என்ற ஸ்மித் குழந்தையின் தொப்புள் கொடியை கார்த்திகேயனைக் கொண்டு துண்டிக்க வைத்து தாதியிடம் அவளைக் கொடுத்து விட்டு, அடுத்த குழந்தையைக் கவனிக்கலானார்.
“இரண்டாவது ஏஞ்சல், மூன்று நிமிட தாமதத்தில் இதோ..” என்று தூக்கி எடுத்தவர், “ஹப்பா! இவளும் அச்சு அசல் அம்மா தான்! இருவரும் ஒரே அச்சு!” அவர் குரல் செவிகளில் மோத, இவ்வளவு நேரமாக மூடியிருந்த மதுராவின் விழிகள் மெல்லத் திறக்க, நிறைந்திருந்த நீர் வெளியேற, குழந்தைகளைப் பார்க்க முயன்றாள்.
அவளது தொப்புள் கொடியையும் கார்த்திகேயனே துண்டித்தான். ‘நான் இவர்கள் தந்தை.’ அவள் அனுமதியை எதிர்பாராது தானே உரிமையை எடுத்துக் கொண்டான் அவன்.
அவள் கண்ணில் இதுவரை இருந்த பயத்தையும் கலக்கத்தையும் விரட்டி விட்டு வெறுமை குடிவந்திருந்ததை அவன் சிறிதும் உணரவில்லை. அந்தளவு மகிழ்வில் நிறைந்திருந்தான் அவன்.
இரு குழந்தைகளையும் துணியில் சுற்றி அவள் நெஞ்சின் மீது கிடத்த அவளோடு சேர்த்து அப்படியே வளைத்துக் கொண்டவன், அக்கணம் அக்குழந்தைகள் தன்னதில்லை எனத் துளியும் எண்ணவில்லை. கலங்கிய கண்களோடு மதுராவை ஏறிட்டவனையும் தாய் குழந்தைகளையும் அழகாக தனது கமராவில் சட்டுச் சட்டென்று கிளிக்கிக் கொண்டாள் தாதி.
“ம்ம்…இனி கார்த்திகேயன் கொஞ்சம் வெளியில் இருங்க” வைத்தியர் சொல்ல, மீண்டும் மதுராவின் நெற்றியில் அழுத்தமாக தன் உதடுகளைப் பதித்துவிட்டே வெளியேறினான் அவன்.
இடுப்புக்கு கீழே போலவே இதயமும் மரத்துப்போகக் கிடந்தவள் அப்படியே விழிகளை மூடிக் கொண்டாள்.

