மலருமோ உந்தன் இதயம் 2- 2

 

“அது எங்கம்மா! சண்டை முடிந்திருந்தால் பரவாயில்லையே! தொடர்ந்து ஒரே சத்தம். மெல்ல வெளியே போய்ப் பார்த்தன்; ரெண்டு பேரும் மாறி மாறிக் கதைக்கிறது கேட்டுச்சு! கையில கிடைச்சதை எல்லாம் போட்டு உடைச்சான் போல! படுபாவி! என்னால, அதுக்குப் பிறகும் அமைதியா இருக்க முடியேல்ல! என்ர கணவர் வேணாம் என்றும் கேட்காமல் போய் ஹாலிங் பெல்லை அடிச்சன்! விடாமல் அடிச்ச பிறகு வந்து திறந்தான் பாழாப் போனவன் கணேஷு!

பாவி! பாவி! அரண்டு போய் வந்து திறந்தவனுக்கு என்னைக் கண்டதும் குளிர் விட்டுப் போச்சு! ‘கண்ட கண்ட ஆட்கள் பேச்சையும் கேட்காத, பழகாத என்றால் கேட்கிறதில்ல! அதையும் இதையும் சொல்லி அவளுக்கும் எனக்கும் சண்டை மூட்டி விட்டதே நீ தான்.’ என்று, என்னோடு சண்டைக்கு வந்துவிட்டான்!

நான் பேச மறந்து நிற்க, அவன் பேச்சில் கோபம் கொண்ட என் வீட்டுக்காரர், ‘இங்க பாரும் கணேஷ், வாய்க்கு வந்தபடி கதைக்க(பேச) வேணாம்! நீங்க இரண்டுபேரும் அடிச்சுக் கொள்ளுங்க, சேர்ந்து கொள்ளுங்க அதைப் பற்றி நாங்க கேட்கவே மாட்டம். அது வெளியில் தெரியாதிருக்கும் வரை, எங்களைத் தொல்லை செய்யாதிருக்கும் வரைதான் நாங்களும் பொறுமையாகப் பார்த்திருக்கலாம்.’ என்று குரலை உயர்த்தியதும், கப்சிப் ஆகிட்டான் நாசமாப் போறவன்.

நானும் உள்ளே போய் மதுராவைப் பார்க்கிற துணிவு இல்லாமல் என்ர கணவரின் ஒத்த முறைப்பில் திரும்பி வந்திட்டன்!” படபடவென்று சொல்லி நிறுத்த, பதற்றமானார்கள் கார்த்திகேயனும் நித்தியும் .

“அப்ப, மதுராவுக்கு என்ன நடந்திட்டு?” என்று கார்த்திகேயனும்,

“சொல்லுங்க ஆன்ட்டி, மதுரா இப்ப எங்க?” நித்தியும் பதற, நடந்ததை முழுமையாகச் சொல்லிவிடும் நோக்கில் கோர்வையாகச் சொல்வதைத் தொடர்ந்தார் யோகம்.

“அடுத்தநாள், அந்தக் கடன்காரன் எப்ப போவான் என்று பார்த்துக்கொண்டிருந்து, மத்தியானத்திற்கு மேல அவன் கிளம்பிச் சென்றபிறகு மதுராவைச் சந்திக்கப் போனன். கடவுளே! அந்தப்பிள்ளை இருந்த கோலத்தை என்ர ஐயனே என்னால சொல்ல முடியாது பிள்ள! அப்படிப் போட்டு அடிச்சுத் துவைச்சிருக்கிறான் பாவி! என்ர பிள்ளை முகம் வீங்கி, கலைந்த தலையோடு இருந்த கோலம் பார்த்து என்ர வயிறே காந்திச்சு! பெற்றவள் பார்த்திருந்தால்!” என்று அவர் சொல்லச் சொல்ல கார்த்திகேயனின் முகம் இறுகியது! அவனும் இரு சகோதரிகளோடு பிறந்தவன் தானே!

‘ஊர்விட்டு ஊர் திருமணம் செய்து அழைத்து வந்து இப்படி நடத்துபவர்களை என்ன செய்யலாம்!’ மனம் குமைய அப்பெண்ணின் இன்றைய நிலையை அறியும் துடிப்புடன் நின்றான் அவன்.

நித்தியோ, “என்ன ஆன்ட்டி சொல்லுறீங்க! அவனையெல்லாம் சும்மாவா விடுறது! ராஸ்கல்; போலீசில் பிடிச்சுக் குடுக்க வேணும்!” ஆத்திரத்தில் முகம் சிவக்க நின்றாள்.

அவர்கள் கோபம் பார்த்து அப்பெண்மணியின் முகத்தில் ஒரு கசந்த முறுவல்!

“அவன்கள் வந்து என்னம்மா சொல்வான்கள்! ஒன்றாக இருக்க முடியவில்லையா? இருவருக்கும் ஒத்துப் போகவில்லையா? சுமூகமாக பிரிந்து போங்க என்பதைவிட வேறென்ன சொல்வார்கள்!” சலித்துக்கொண்டார்.

“எனக்குமே இரத்தம் கொதிச்சுது தான்! என்னம்மா நடந்திச்சு என்று மதுராட்டக் கேட்டன்; அவள் வாயே திறக்க இல்லை! அதுக்குப் பிறகு நானும் தான் என்ன செய்வது? அன்றைக்கு அவள் சமைக்கவும் இல்லை; நான் தான் சாப்பாடு குடுத்து ஆறுதல் சொன்னன்.

சரி, ஏதோ வாக்குவாதம்; சமாதானம் ஆகீருவார்கள் என்றுதான் நானும் இருந்தன்! அது பார்த்தால், சண்டை நிற்காமல் தொடரத் தொடங்கீட்டு. எவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் இருந்த மதுரா, ஒருநாள் மத்தியானம் போல எங்கட வீட்டுக்கு வந்தவள், ஓவென்று கதறி அழுதிட்டாள்!

அவளைச் சமாதானம் செய்யிறதுக்குள்ள நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும் பிள்ளைகள். நானும் அருகில இல்லாமல் இருந்திருந்தால், என்னோடயும் மனம் விட்டுப் பழகாமல் இருந்திருந்தால் அவள் என்ன செய்திருப்பாள்? இன்றைக்கும் என்னால நினைச்சுப் பார்க்க முடியேல்ல. தப்பாக ஏதாவது செய்திருந்தால், நீங்க இப்போ ஆற அமர விசாரிச்சு வரேக்க எல்லாம் முடிஞ்சிருக்கும்!”

‘அப்பாடா!’ என்றிருந்தது கார்த்திகேயனுக்கு!

“அப்ப, மதுரா நல்லா இருக்கிறார் தானே?” அவர் பேச்சில் ஊகித்ததை நிச்சயம் செய்ய முயன்றான்.

அவரோ, பதில் சொல்வேனா என்று அடம் பிடிக்கும் பாவனையில் தான் சொல்ல நினைத்ததைத் தொடர்ந்தார்.

“அந்தக் கடன்காரன் அப்படி இப்படி என்று கேள்விப்பட்டிருக்கிறன் தான். ஆனால், ஒருத்தியோடு இருந்து குடும்பம் நடத்தி பிள்ளையும் இருக்கு என்று சொன்னதைச் சத்தியமா நம்ப முடியேல்ல தம்பி!” அப்போதும் அதிர்வோடு சொன்னார் யோகம்.

அவர் சொன்னதைக் கேட்ட அண்ணனும் தங்கையும் உச்சகட்டமாக அதிர்ந்து போனார்கள்.

“என்ன ஆன்ட்டி சொல்லுறீங்க? மதுராவின்ட…புருசனா?” தடுமாறினாள் நித்யா. கருவுற்றிருக்கிறாள் என்று சொல்லி இருந்ததால், ஏதாவது சுகயீனமோ என்றுதான் நினைத்திருந்தார்கள் இவர்கள். ஆனால், இப்படி ஒரு விடயத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே!

“அடச் சீ! அவன் அவள் புருசனா? அதெல்லாம் தலைமுழுகியாச்சு! சட்டப்படியே பிரிஞ்சிட்டீனம்; பிறகென்ன!” அடுத்த அதிர்ச்சி!

மதுராவை காண்பதற்கென்று புறப்படும் பொழுது, இப்படியான சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பாள் என்று இவர்கள் துளியும் எண்ணவில்லையே! அதுவும், அவள் தாய்க்குத் தெரியாமல் விவாகரத்து!?

அண்ணனும் தங்கையும் ஒருவர் ஒருவரைப் பார்த்தவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! அதிர்ந்து நின்றவர்களைப் பார்த்தவாறே தொடர்ந்தார் யோகம்.

“முதல் முதல் சண்டை நடந்துதே, அன்றைக்கு மதுரா நித்திரை என்று நினைச்சுக்கொண்டு தனக்கு வந்த ஃபோனை அவளுக்குப் பக்கத்தில வச்சே கதைச்சிருக்கிறான் அந்தச் சண்டாளன்! அப்பத்தான் அவனுக்கு இன்னொரு குடும்பம் இருக்கின்ற விசயம் மதுராவுக்குத் தெரிஞ்சிருக்கு!

அதை அவள் கேட்க, முதல் அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லி இருக்கிறான் .விடாமல் கேட்க, ‘என்னையே சந்தேகப்படுகிறாயா? யார் இப்படிச் சொன்னது? அந்தப் பக்கத்து விட்டு மனிசியா?’ என்று கையோங்கி இருக்கிறான். அவள்தான் வேற ஒருவரோடும் பழகிறதில்லையே! அப்ப, அவன்ட வண்டவாளத்தை நான்தான் சொல்லியிருப்பன் என்று நினைச்சிட்டான்!

அடுத்தடுத்த நாட்களும் உண்மையை அறிஞ்சிர வேணும் என்று அவளும் மல்லுக்கு நிற்க, ‘ஆமாம்டி! எனக்கு இன்னொரு குடும்பம் இருக்குத்தான்; அவள் வெளிநாட்டுப்பொம்பள. வீட்டில் சொல்லி அவர்களை மனம் வருத்த விருப்பம் இல்லை. அதனால் தான் உன்னைப் பேச அமைதியாக இருந்தன்.’ என்று, இடியை இலேசாக அவள்ட தலையில் இறக்கிவிட்டான்.

‘இங்கபாரு, நீதான் என் சட்டப்படியான பெஞ்சாதி; இப்பவரைக்கும் உனக்கு எந்தக் குறையும் வைக்காத மாதிரி இனியும் வைக்க மாட்டன். ஆனால், அவர்களையும், அதாவது என் மூன்றுவயது மகனையும் கிளாரியாவையும் என்றைக்கும் ஒதுக்கவும் மாட்டன்.’ என்று இரைந்திருக்கிறான்.

ஒருகிழமைக்கு முதல் தான், தான் கருவுற்றிருப்பதாக ஓடிவந்து சொல்லி இருந்தாள்! அட, இப்பவே வெளியில் சொல்வதாம்மா! மூன்றுமாதங்கள் போகவிட்டுச் சொல்லலாம் என்று நான் சொல்லியிருந்தன். அவளோ சந்தோசம் தாங்காமல் ஊருக்கும் அடித்துச் சொல்லியிருந்தாள். தாயைக் கூப்பிடப் போறதாகவும் சொன்னாள். அவ்வளவு சந்தோசத்தில் மிதந்தவளுக்கு இதைக் கேட்க எப்படி இருந்திருக்கும்!

அது போதாதென்று, அந்த கடன்காரியையும் மகனையும் வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்திட்டனாம். அந்த நிமிசமே இவள் என்னட்ட வந்திட்டாள். ‘இனி அந்த வீட்டுக்குப் போகவே மாட்டன்!’ என்று கதறினவள், அவன் வந்து எவ்வளவோ கூப்பிட்டும் போக இல்லை. ஒருகிழமை என்னோடதான் இருந்தாள். பிறகு, தனக்கு இனி அவனோடு வாழமுடியாது என்று முடிவெடுத்துச் சட்டப்படி பிரிஞ்சிட்டீனம்!”

கடகடவென்று ஒப்பித்தவர், தான் சொன்ன செய்தியில் அதிர்ந்து நிற்பவர்களை அமைதியாகப் பார்த்தார்.

“ரெண்டு பேரும் சம்மதம் என்ற பிறகு அவேக்கு என்ன! பிரிஞ்சு போய் நிம்மதியா உங்கட உங்கட வாழ்க்கையைப் பாருங்க என்று சொல்லிட்டான்கள்!” தொடர்ந்தார்.

“அப்ப, இப்ப மதுரா எங்கே? அந்த வீட்டில் இருக்கிறவன் தான் அந்த கணேஷா?” யாரென்று தெரியாதென்றாலும் மதுராவை அந்த நிலைக்குள்ளாக்கியவன் மீது கட்டுக்கடங்காத சினம் எழுந்தது கார்த்திகேயனுக்கு!

“மதுராவை ‘அல்க்மாரில்’ எங்களுக்குத் தெரிஞ்ச வீட்டில் தங்க வச்சிருக்கிறம்! பக்கத்தில இருக்கிற ஒரு கடையில் பார்ட் டைமா வேலைக்கும் போறாள்!” என்றவர்,

“அவன் இப்படி என்று தெரிஞ்சதும் அந்தக் குழந்தை வேணாம் என்று ஒரே பிடியா நின்றாள். அவளை அந்த எண்ணத்திலிருந்து மீட்க நாங்க பட்டபாடு! அப்பப்பா! கவுன்ஸிலிங் அங்க இங்க என்று அலைஞ்சு இப்பத்தான் அமைதியாக இருக்கிறாள். ஆனாலும், பழைய மதுரா காணாமல் போயிட்டாள்!” பெருமூச்சுடன் சொன்னார்.

“அப்ப அந்த கணேஷ்?” மீண்டும் கேட்டான் கார்த்திகேயன்.

“அந்தக் கடன்காரன் தான் உங்களோடு கதைச்சவன்; அந்தக் குடியைக் கெடுத்தவள் தான் இப்ப அங்க இருக்கிறது! விவாகரத்து கிடைத்த மறுநாள் நிரந்தரமாக அவளைக் கூட்டிக்கொண்டு வந்திட்டான்!”

அதைக் கேட்ட கார்த்திகேயனுக்கு அவனைப் போட்டு அடித்துத் துவைக்கும் ஆவேசம் தான் வந்தது.

“என்னமாதிரி பொய் சொன்னான்! அப்பவே எனக்குச் சந்தேகம் வந்திச்சு; அவனும் அவன்ட பார்வையும்!” பற்களை நறும்பினான்.

“ஓம் அண்ணா! வெளியூருக்குப் போய்ட்டீனம்; வந்ததும் கதைப்பீனம் (பேசுவார்கள்) என்றானே! வாங்கண்ணா, போய் இழுத்து வச்சு நாலு குடுத்திட்டு வருவம். கேட்க ஆளில்லை என்றுதானே ஆடினான்.” கொதித்தாள் நித்தி.

“அவனை அடிச்சு என்னம்மா வரப் போகுது? வீண் பிரச்சனைதான் வரும்.” என்ற யோகம், “இப்படியான நேரத்தில் எவ்வளவு ஆறுதல் தேவை அவளுக்கு? தாயிட்ட சொல்லுவம் என்றதுக்கும் ஒரேயடியா வேணாம் என்றிட்டாள்.

‘அப்பாவும் அண்ணாவும் ஒன்றாக இறந்ததிலிருந்தே அம்மா உடைஞ்சு போய்ட்டார் ஆன்ட்டி; எங்களுக்காகத்தான் அவர் நடமாடுறதே. எவ்வளவு சந்தோசமாக கல்யாணம் செய்து வச்சார்; இப்ப இப்படியென்று சொன்னால் அவரால் தாங்க முடியாது. அதோட, இரண்டு தங்கச்சிகள் இருக்கீனம்; அவேண்ட கல்யாணமும் முடியட்டும்; ஆறுதலாகச் சொல்வம்.’ என்று விட்டாள்!”

“என்ன இது? இதெல்லாம் தெரியாமல் போகுமா? இப்போதைக்கு மறைத்தாலும் அவன்ட வீட்டில் சொல்ல மாட்டீனமா?” வியந்தாள் நித்தி.

“இப்போதைக்கு மறைச்சாலும், தெரிய வேண்டிய விசயம் தானேம்மா! அவன்ட பிள்ள வேணாம் என்றவளுக்குக் கடவுள் இரட்டைக் குழந்தைகளைக் குடுத்திருக்கிறார். எல்லாம் சுகமாக முடியட்டும்; அவளோடு கதைச்சிட்டு வீட்டுக்கு எடுத்துச் சொல்லலாம்.” என்ற பெரியவரிடம், “நாங்க மதுராவைச் சந்திக்க முடியுமா ஆன்ட்டி!” கேட்டான் கார்த்திகேயன்.

“அதுக்கென்ன! அவளுக்கும் ஆறுதலாக இருக்கும்.” என்றவர், “என்றாலும், அவள் விரும்புவாளோ தெரியாது தம்பி; ஒருதரம் கேட்டுப் பார்க்கவா?” சட்டென்று யோசனையோடு கேட்கவும் செய்தார்.

“இல்லை இல்லை வேணாம் ஆன்ட்டி. கேட்டு மாட்டன் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. இப்பவே போவம். நீங்களும் எங்களோடு வாங்களன்!” அவசரப்பட்டாள் நித்தி.

 

 

error: Alert: Content selection is disabled!!