மலருமோ உந்தன் இதயம் 22 – 1

22

 

குழந்தைகளின் கோரஸான சிணுக்கத்தில் உறக்கம் அரக்கப்பறக்க விடைபெற விழித்துக்கொண்டாள் மதுரா!

எழுந்த வேகத்தில் அறையின் மின்விளக்கைப் போட்டதும் மலர்த்தியிருந்த தம் வட்டக் கரியவிழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி பாவங்கள் செய்தார்கள், அவள் பெற்ற செல்வங்கள்.

“குட்டிம்மாக்களுக்கு பசிக்குதாடா? ஹ்ம்ம்…இரண்டுபேரும் ஒரே நேரத்தில் எழுந்தால் அம்மா என்னடா செய்வது! சின்னக் குட்டி, கொஞ்சநேரம் பொறுத்துக்கோடா!” என்றவாறே மூத்தவளை வாரித்தூக்கியவள், ‘தாய்மை என்றால் இதுதானோ!’ எப்போதும் போல் வியக்கவே செய்தாள்.

குழந்தைகளின் சிறுசிறு அசைவுகளும் சற்றும் தாமதமின்றி அவள் உணர்வுகளை விழிக்கச் செய்து விடுகின்றதல்லவா! அவர்களை ஸ்பரிசிக்கும் அக்கணம் உடல் உணரும் இதம் தரும் நிறைவை, யாராலும், எந்த உறவாலும் இலகுவில் தந்துவிட முடியுமா? அந்நிறைவுக்கு பிரதியீடு ஏதுமுண்டா?

‘என் வாழ்வுக்கும் அர்த்தமுண்டென அழுத்தமாகச் சொன்னவர்கள் இவர்கள் தானே!’ எண்ணமிட்டவாறே குழந்தைக்குப் பசியாற்றியவள், ‘இவர்களையா வெறுத்தேன்! வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடித்தேன்!’ மீண்டும் வரவே வராதே என்றாலும் அடிக்கடி தலைகாட்டும் இந்நினைவால் குற்றவுணர்வு பலமாகத் தாக்க எப்போதும் போல இதயம் நொந்து போனாள்.

“அம்மா உங்களை நிரம்பவுமே வெறுத்தேன்டா செல்லங்கள்; இந்த முட்டாள் அம்மாவை மன்னித்துவிட்டீர்கள் தானே?” என்றவாறே, சிப்பி இமை மூடி பசியாறும் தன் செல்வத்தையே உற்று நோக்கின அவள் விழிகள்; புரிந்து விடை தருவாள் எனும் எதிர்பார்ப்பில்!

மெல்ல இறுகப் பொத்தியிருந்த பஞ்சுக் கரத்தைப் பற்றி தன் கன்னத்தில் வைத்து அழுத்தினாள் மதுரா. குழந்தையின் ஸ்பரிசத்தில் அவள் நேத்திரங்கள் கசியத் தொடங்கின!

“அந்த நேரத்தில் என்னையே எரித்துக் கொண்டிருந்த வெறுப்பையும் ஆத்திரத்தையும் அப்படியே காட்டுவதற்கு உங்களைவிட்டால் வேறு யார் இருந்தார்கள். அதனால்தான் இந்த பாவி அம்மா அப்படி நடந்து கொண்டேன் செல்லங்கள்.” தாய்மையின் முழுக்கட்டுப்பாட்டில் வந்திருந்த மதுராவின் இதழ்கள் மன்னிப்பு யாசித்து முணுமுணுத்தன!

பிறந்த மூன்றுவாரக் குழந்தைகள் இருவருமே தன் மனதின் அரட்டலைப் புரிந்து தன்னை மன்னித்ததாகவே உணர்ந்தவள், அடுத்தவளையும் பசியாற்றி, நாப்கின் மாற்றிக் கிடத்திவிட்டு, முகத்தை அலம்பி வந்தவள் தேநீர் குடிப்போம் என்ற நோக்கில் அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அப்போது, வெளியே செல்லத் தயாராகி மாடியால் இறங்கி வந்த கார்த்திகேயனை கண்டதும் பார்வையை விலக்கிக் கொண்டவள், ‘இந்த வெள்ளனத்தோடு எங்கே போகிறார்?’ தன்னையும் மீறி நினைத்தவாறே சமையலறையை நோக்கி நகர,

“டீ போடப் போறீங்களா? எனக்கும் ஒரு கப் கிடைக்குமா?” அவன் குரல் திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமில்லாமல், ஒரு முறைப்பையும் வீச வைத்தது.

“உங்களால் முடியாதென்றால் உங்களுக்கும் சேர்த்தே நான் போட்டுத் தாறேன்.” என்றவன், அவளைக் கடந்து சமையல் அறைக்குள் நுழைய முற்பட, “போட்டுத் தாறேன்.” முணுமுணுத்தவாறே முந்திக் கொண்டாள் அவள்.

‘அது! என்னதான் முகத்தைத் திருப்பினாலும் உனக்கு என்னில் அன்பிருக்கு! அதை ஏன் உணர்ந்துகொள்ள மறுக்கிறாய்? எதிரி போலப் பார்க்கிறாயே!’ வருத்தம் அவன் மனதை ஆக்கிரமிக்காமல் இல்லை.

கொஞ்சமும் தயங்காது இரகசியமாக அவளைப் பார்வையால் வருடினான் கார்த்திகேயன். ‘இதுமட்டும் அவள் கண்ணில் பட்டால் தெரியும் உனக்கு!’ தன்னைத்தானே குட்டிக் கொண்டவன் உதடுகளில் சிறுமுறுவல் வந்திருக்க, ‘இதில் நின்றால் அதற்கும் சீறுவாள்!’ நகர்ந்து சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.

கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கு முன், கணேஷ் இறந்துவிட்டான் என்பதைக் கேட்டதும் கலங்கி நின்றாள் மதுரா. அநியாயத்துக்கு இவனிடம் சீறவும் செய்தாள்.

அதன்பின் அமைதியடைந்தவள், இவன் முகம் பார்த்து ஒத்தவார்த்தை பேசுவதில்லை.

‘அன்றைக்கு முறைத்துக்கொண்டு சென்ற நித்தியை மட்டும் பின்னாலும் முன்னாலும் திரிந்து சமாதானம் செய்தாள்?’ இந்த நினைவெழும் போதெல்லாம் இவன் நெஞ்சம் கொஞ்சம் அதிகமாகவே கோணிக் கொள்ளும்.

ஆனாலும், அவனும் தேவையற்று அவளோடு உரையாடவோ அவள் அறையினுள் பிரவேசிக்கவோ முனையவில்லை.

“கணேஷின் உடலைச் சென்று பார்க்க விரும்புவாளோ?” அண்ணனும் தங்கையும் நினைத்திருக்க, அவளோ அதற்குச் சிறிதும் முயலவில்லை. அவன் இறந்த விடயத்தை கேள்விப்பட்ட அவன் குடும்பத்தார் தான் பெருத்த கலகமே செய்து விட்டார்கள்.

“எங்கள் ஒரே மகன் அவன். உங்க தரித்திரம் பிடித்த மகள் எங்கள் பிள்ளையைக் கொன்று விட்டாள்.” ஊரில், மதுராவின் வீட்டின் முன்னால் வந்து நின்று கத்திக் கூச்சல் போட்டு விட்டார்கள்.

“புருஷனைப் பழுது சொல்லி விவாகரத்து வாங்கிக்கொண்டு போனவளுக்கு அவன் பிள்ளைகள் மட்டும் வேண்டுமா? பிள்ளைத்தாச்சி என்று அக்கறையாகப் பார்க்கப் போனவனை போலீசில் பிடித்துக் கொடுத்தாளே ராட்சஷி! அந்த நிமிடமே என் பிள்ளை மனதுடைந்து போனான்.

பிள்ளைகள் பிறந்ததையும் சொல்லாமல் மறைத்துவிட்டாள்; அகங்காரம் பிடித்தவள். ஒருத்தன் போனதும் இன்னொருத்தன் என்று ஆள் பிடித்துக்கொண்டு மினுக்கிக்கொண்டு திரிகிறாள்; எங்க பிள்ளைதான் எங்களை விட்டுவிட்டுப் போய்ட்டான்.” நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார் கணேஷின் தாய்.

“குடும்பமே உருப்படாது; எல்லோரும் கூட்டாக அழிந்து போவீங்க!” தன் வார்த்தைகள் அப்படியே பலித்துவிடும் எனும் அகங்கார எண்ணத்தில் முற்றத்து மண்ணை அள்ளி வீசி சாபமிட்டுவிட்டே அகன்றிருந்தார் அவர்.

அங்கு நடந்தவற்றை மதுராவிடம் மூச்சும் விடவில்லை கமலா.

“என் அப்பாவி மகளுக்கு அநியாயம் நினைத்தான் இல்லையா தம்பி? அதற்குத் தண்டனையைப் பெற்றுவிட்டான். இப்போதெல்லாம் ஆண்டவன் நின்று கொள்வதில்லை; அன்றே கொடுத்து விடுவான்.” கார்த்திகேயனிடம் சொல்லி அழுதிருந்தார் அவர்.

அவனுக்கு அப்படி நடந்ததில் அந்தத் தாயுள்ளம் பெருத்த நிம்மதியைச் சுவைத்தது.

ஓர் உயிரின் கொடிய இழப்பு கூட, சில பலவேளைகளில் மகிழ்வைத் தந்து தொலைக்கும்; அந்த ஜீவன் வாழ்ந்த விதம் அப்படியாக இருக்கும்.

 

“தேத்தண்ணி..” சொல்லி, தன் முன்னால் வைக்கப்பட்ட தேநீரை எடுத்து ஒருவாய் பருகியவன் “தாங்கஸ்.” விசுக்கென்று நகர்ந்தவளின் முதுகிடமே சொல்லக் கிடைத்தது; அதைப்பற்றி அவன் அவ்வளவாகப் பெரிது படுத்தவில்லை.

‘இதோ வீட்டை விட்டுப் போகிறேன்.” எனும் பாட்டை நிறுத்தி அமைதியாக இருக்கிறாளே! அதுவே போதும்.’ என்றிருந்தது அவனுக்கு!

‘அந்த அமைதி உன்னுள் எப்படி வந்தது என்பதைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க மறுக்கிறாயே!’ என்கின்ற ஆதங்கம் அவனுள் இல்லாமல் இல்லை. அதை அவளிடம் வாய்விட்டுக் கேட்க விளைந்த மனதுக்குத் இறுக்கமாகத் தாழ்ப்பாள் போட்டிருந்தான்.

‘இதே, ஒரு அந்நியர் வீட்டில் தங்கியிருக்கையில் அவர்கள் நம் மனதுக்கு ஒவ்வாத விதமாக நடந்து கொண்டால், அப்படி ஒரு சிறு சம்பவம் நடந்தாலும் அங்கேயே தொடர்ந்திருக்க மனம் வருமா? இருக்கத்தான் முடியுமா? அதுவும் இவ்வளவு இயல்பாக!

உன் ஆழ்மனதில் எங்கள் மீதிருக்கும் நெருக்கமும் நல்லெண்ணமும் என் மனதுக்குப் புரிந்தளவுக்கு நீ உன்னை அறிந்து கொள்ளவில்லையே! அறிய முயல்கிறாயும் இல்லை!’ என்ற ஆதங்கம் அவனுள் இல்லாமல் இல்லை. ஆனாலும் அமைதி காத்தான்.

“என் பெயர் ராது இல்லை; மதுரா. இனியொருதரம் ராது என்று என் காதில் விழுந்தால் நான் பொல்லாதவள் ஆகிவிடுவேன்!” அன்று, நித்தியை சமாதானம் செய்யும் நோக்கில் பின்னால் சென்றவளும் நித்தியும் மாறி மாறி கதைத்துக் கொண்ட போது, இவள் இப்படிச் சொன்னதைக் கேட்டதிலிருந்து இவள் பெயரைச் சொல்வதையே நிறுத்திவிட்டான் இவன்.

‘பார்ப்போமடி, நீயா நானா?’ எந்நேரமும் மனதுள் கறுவிக் கொள்பவனுக்கு “வேண்டாம் வேண்டாம் என்பவர் பின்னால் ஏன்ணா போக நினைக்கிறீங்க? எனும், தங்கையின் சலிப்பு மீதுதான் இப்போதைய கண்!

“எனக்கு மதுராவைப் பிடிக்கும்ணா. அதற்கென்று என் கண்முன்னால் உங்களையோ உங்கள் அன்பையோ அவர் கேலிக்குரியதாகப் பார்ப்பதை நான் சகித்துக் கொள்ளமாட்டேன்.” இப்படிச் சீறினாலும், குழந்தைகள் அருகில் அவளும் ஆளே மாறிவிடுவாள்.

error: Alert: Content selection is disabled!!