மலருமோ உந்தன் இதயம் 24 – 1

24

 

 

“ஆன்ட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை நித்தி; அவரோடு ஹாஸ்பிட்டல் போய்க் கொண்டிருக்கிறேன். மதுரா அழுது கொண்டிருக்கிறாள்; வீட்டில் வந்து நில்லும்மா.” வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் அழைத்துச் சொல்லியிருந்தான் கார்த்திகேயன்.

விபரம் கேட்க முதல் அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க விரைந்து வீடு வந்தவள், வரவேற்பறைச் சோஃபாவில் மதுரா அமர்ந்திருந்த கோலத்தில் திகைத்துப் போனாள்.

‘அண்ணா கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றாரே; அப்படியில்லையோ!’ வந்த வேகத்தில் மதுராவை நெருங்கி அமர்ந்து கொண்டே, “ஆன்ட்டிக்கு என்னாச்சு மதுரா? நான் போகும் பொழுது நன்றாகத் தானே இருந்தார்!” தான் வந்ததையும் உணராது அழுது கொண்டிருந்தவளை கனிவாக விசாரித்தாள்.

கொந்தளித்த குற்றவுணர்வுக்குள் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த மதுராவோ, நித்தியை ஏறிட்டும் பார்க்கவில்லை.

“இப்படி அழுதுகொண்டே இருந்தால் நான் எதையென்று நினைப்பது மதுரா?” நித்தியின் குரல் உயர, சட்டென்று அவளை நோக்கியவளின் முகத்தில் கோபத்தின் சாயல்!

“அம்மா எங்களுக்காகவே வாழ்பவர் நித்தி. அவரை எதிர்த்துப் பேசியதாகவோ மனம் நோகச் செய்ததாகவோ எனக்கு நினைவில்லை. தங்கச்சிகளும் அப்படித்தான். எங்களுக்காகப் பார்த்துப் பார்த்து செய்பவரை நான்..நான்…” என, விக்கியழுதபடி, “என்ன வார்த்தை சொல்லிவிட்டேன்!” அரட்டியவாறே கனத்த தலையை, கரங்களுக்குள் புதைத்துக் கொண்டாள்.

சிகைக்குள் புதைந்த அவளின் மெல்லிய விரல்கள் தலையில் கொடுத்த அழுத்தம் அவள் மனதை தெள்ளத் தெளிவாகக் காட்டியது.

“இங்க பாருங்க மதுரா, ஆன்ட்டிக்கு ஒன்றுமே இருக்காது; முதல் அழுகையை நிறுத்துங்க.” ஆதரவாகச் சொல்லி, தலையிலிருந்து அவள் கரங்களைப் பிரித்தெடுத்து தன் கரங்களுள் பொத்திக் கொண்டாள் நித்தி.

“முடியாமல் போகின்ற அளவுக்கு அப்படி என்ன சொன்னீங்க மதுரா? அல்லது ஏற்கனவே அவருக்கு ஏதாவது வருத்தம் இருந்ததா? இப்போ என்ன நடந்தது?” தொடர்ந்தவளை, கண்ணீரோடு பார்த்தாள் மதுரா.

“நான் அறிந்து, அம்மா வருத்தமென்று ஒருநாளும் சொன்னதில்லையே நித்தி. கதைத்துக் கொண்டிருக்கும் போதே மயங்கிவிட்டார். உன் அண்ணாதான் 112 அழைத்தார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு ‘ஹை பிரஷர்’ இருக்கு. ஹொஸ்பிட்டலில் செக் பண்ணுவதுதான் நல்லது என்று அழைத்துப் போயிருக்கிறார்கள்.” விசும்பிக் கொண்டே சொன்னவள்,

“விருப்பமில்லை என்று அவ்வளவு தெளிவாகச் சொன்ன பிறகும் அம்மாவிடம் கதைத்திருக்கிறார் உம்மட அண்ணா. இப்ப நானும் குழந்தைகளும் இலங்கை போவது பற்றிக் கதைத்தால், அவரைக் கல்யாணம் செய்துகொள் என்கிறார் அம்மா. நானும் கோபத்தில்…ச்சே..என்ன பேசுவதென்று தெரியாது..” மீண்டும் அழ, அசைவற்றுப் போனாள் நித்தி.

அதுவும் ஒருகணம் தான்! என்ன நடந்திருக்குமென தெளிவாகப் புரிய மனதில் சுறுசுறுவென்று கோபமெழ, ‘அட! உங்க வாழ்வை நேராக்க நாங்க பாடுபட்டால் எங்களையே குற்றம் சொல்வீங்களா?’ மனம் கடுகடுக்க அவளை முறைத்தாள்.

அதேவேகத்தில் தள்ளி அமர்ந்து கொண்டவள் சிறிது நேரம் எதுவும் கதைக்கவில்லை. அந்தளவுக்கு மனதுள் கோபம் கொண்டாள்.

“உங்களைச் சுற்றியுள்ள எல்லோரும் உங்கள் நல்லதை மனதில் வைத்தே எதையும் செய்ய நினைக்கிறோம். அது உங்களுக்கு கொஞ்சமும் விளங்குதில்லையே! விளங்கிக்கொள்ளவே மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களை என்ன செய்யலாம் சொல்லுங்க. ஒரு தாயாய் உங்க அம்மாவின் வருத்தம் உங்களுக்குப் புரியவில்லையல்லவா?” நித்தியின் குரலில் மருந்துக்கும் சிநேகம் இல்லை.

“சரி..சரி மறுகல்யாணம் என்பதை நீங்க நினைக்கவும் தயாரில்லை அப்படித்தானே? விட்டுவிடுவோம் மதுரா; விட்டுவிடுவோம்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? என்னைவிடவும் அக்காதான் அண்ணாவோடு நெருக்கமானவர். இருவரும் நல்ல நண்பர்கள் போலத்தான் பழகிக் கொள்வார்கள். இப்ப, இந்த விடயம் தெரிந்த நிமிடத்திலிருந்து அக்கா அண்ணாவோடு கதைப்பதில்லை.

சுதா சித்திக்கும் சரியான மனவருத்தம். அப்படியிருந்தும், அண்ணா தன் முடிவில் தீர்மானமாக இருக்கிறார். ஆனால், அதை நீங்க…பச் விடுங்கப்பா விடுங்க.” சலிப்பும் கோபமும் ஆத்திரமும் அவள் குரலில் கலந்து வந்தன!

“அன்றைக்கு உங்களை எங்களோடு அழைத்து வந்தது நான் தானே மதுரா! நீங்க அங்கேயே இருந்திருந்தால்..” முகம் சுருங்க மதுராவைப் பார்த்தாள்.

“உங்கள் பாட்டைப் பார்த்துக்கொண்டு சந்தோஷமாக இருந்திருப்பீங்க தானே? உங்களை இங்கு அழைத்து வந்து நிறையத் தொந்தரவு செய்துவிட்டோம்; அதற்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்க மதுரா.” சொன்னவளின் குரலில் கிட்டத்தட்ட கடுமையே விரவி நின்றது.

“ஏன் நித்தி இப்படியெல்லாம் பேசுறீர்? நான் அப்படிச் சொன்னேனா? நீங்க மட்டும் இல்லையென்றால் நான் என்ன பாடுபட்டிருப்பேன் என்று எனக்கு விளங்காதா?” பரிதாபமாக ஒலித்தது மதுராவின் குரல்.

நித்திக்கோ அவள் மீது சிறிதும் ஒட்டுதல் வர மறுத்தது.

“தேவையில்லாத பேச்சு எதற்கு மதுரா! உங்கள் விடயத்தில் நிறையவும் உரிமை எடுத்துக்கொண்டு விட்டோம். அதற்கெல்லாம் நாங்க யார்?

நிச்சயம் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்த்து உதவிகள் எதையும் செய்யவில்லை. அண்ணா தன் விருப்பத்தை சொன்னார்; உங்களுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. அவ்வளவும் தானே! போனதெல்லாம் போகட்டும் விட்டிடுங்க மதுரா.” என்றவள்,

கூர்மையான பார்வையோடு, “நீங்க இலங்கை போகும் ஆயத்தங்களைப் பாருங்க.” சொன்ன வேகத்தில் விருட்டென்று எழுந்து திரும்பியும் பாராது மாடியேறி மறைந்தாள்.

‘நித்தியா இவள்?!’ நம்பமுடியாத அதிர்வில் சிலையாக அமர்ந்திருந்தாள் மதுரா.

‘சந்தித்த முதல் தருணத்திலிருந்து சிநேகம், அன்பு, கனிவு, கரிசனை என அனைத்தும் கலந்து புண்பட்டிருந்தவளுக்கு நன்மருந்தாக விளங்கியவள் அல்லவா இவள்! என்னை விட வயதில் சிறியவளாக இருந்தாலும் என் தாய் என்றளவுக்கு ஆறுதலும் தேறுதலும் தந்தவள்! இன்று, அம்மாவின் நிலையறிந்து தடுமாறி நிற்கையில் இத்தனை கடுமை காட்டுமளவுக்கு நான் செய்துவிட்ட தவறுதான் என்ன?’

துளியும் அன்போ கனிவோ ஒட்டுதலோ இன்றி, பெரியவளாக, ‘இதுதான் முடிவு.’ என்றவகையில் சொல்லிச் செல்லும் நித்தியை வெறித்தாள் மதுரா.

‘இப்போது கூட என் மனம் உங்களுக்குப் புரியவில்லையே! நான் ஏன்தான் இந்த வீட்டுக்கு வந்தேனோ!’ விழிகள் நிறைய எழுந்தவள் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அன்று வைத்தியசாலையில் தங்கியிருந்த கமலா அடுத்தநாள் பத்துமணியளவில் வீடு வந்திருந்தார்.

“என்னதான் இன்சூரன்ஸ் போட்டிட்டு வந்திருந்தாலும் வந்த இடத்தில் உங்களை நிரம்பத் தொந்தரவு செய்து விட்டேன் தம்பி.” உள்ளே வந்தமர்ந்த கமலா, கலங்கும் விழிகளோடு கார்த்திகேயனின் கரங்களைப் பற்றிக்கொண்டார்.

“என் மகன் உயிரோடு இருந்திருந்தால் உங்க வயது தான் இருக்கும் தம்பி.” மறைந்த உற்ற உறவுகளின் பிரிவு இன்று நடந்தது போல் முகத்தில் அறைய, விசும்பியவரை ஆறுதலாக அணைத்துக் கொண்டான் அவன்.

“தேவையில்லாதவற்றை நினைத்து மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டாம் ஆன்ட்டி. இப்போ என்ன, என்னை உங்க மகனாக நினைத்துக் கொள்ளுங்க.” கனிவோடு தேற்றியவன்,

“இப்படியா உடம்பைப் பார்த்துக் கொள்ளாமல் இருப்பீங்க. சாப்பாட்டில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டாமா? இதெல்லாம் உங்களுக்கு சொல்லித் தெரியவா வேண்டும்? இரண்டு வருடங்களுக்கு மேல ஹைபிரஷருக்கு மருந்து எடுக்கிறீங்க. உங்க வீட்டில் ஒருவருக்கும் தெரியாது.” என்றவன் பார்வை, கலக்கத்தோடு தாயைப் பார்த்து நின்ற மதுராவை நாடிவிட்டுத் திரும்பியது.

அவளுக்கும் அதே அதிர்ச்சி தான். தாய் ‘உயர் இரத்த அழுத்தம்’ உள்ளவர் என்பதுவும் அதற்காக மருந்து எடுத்துக் கொள்கிறார் என்பதும் அவளுக்கு மட்டுமில்லை, அவள் சகோதரிகளுக்குமே தெரியாதே!

“ப்ச்! அவர்களுக்குச் சொல்லி என்னவாகப் போகுது தம்பி! தேவையில்லாத கவலைதான் மிச்சம். எப்போதும் சாப்பாட்டில் கவனமாகத்தான் இருப்பேன்; இப்போ, இங்கு வந்திருக்கும் பொழுது அதையெல்லாம் பார்க்க முடியுமா என்று…” சொல்லி நிறுத்தியவர், தன்னைக் கனிவோடு பார்த்திருக்கும் அண்ணன் தங்கையைப் பார்த்துக் கலங்கினார்.

‘இந்தப் பிள்ளைகளின் கலக்கம் ஏன்? உள்ளத்திலிருந்து செய்யும் இவர்களின் ஒவ்வொரு செயலிலும் அன்பு மட்டுமே தெரிகின்றது. எவ்வளவு அருமையான குழந்தைகள்.’ பாசத்தோடு இருவரையும் மாறிமாறிப் பார்த்தவரின் பார்வை, மின்வெட்டாய் மதுராவைச் சீண்டிவிட்டு முறைப்போடு திரும்ப மறக்கவில்லை.

“பரவாயில்லை விடுங்க தம்பி. என் சின்ன மகளுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும் வரையில் சுகமாக நடமாடினால் எனக்குப் போதும்.” என்றவர், மீண்டும் மகள் புறம் திரும்பவில்லை.

“என்ன பேச்சு ஆன்ட்டி இது!” நித்தியின் கண்டிப்புக் குரலோடு இணைந்தது கார்த்திகேயனின் குரல்.

“மருந்து, சாப்பாடு என்று கவனித்தால் இது பெரிய வருத்தமே இல்லை.” சமாதானம் செய்தான்.

பின், சிறுபொழுது ஏதோ சிந்தனையில் இருந்தவன் ஒரு முடிவோடு கமலாவை நோக்கினான்.

“ஆன்ட்டி, நல்லா இருந்த நீங்க திடீரென்று மயங்கிக் கலங்கடித்து விட்டீங்க. முதலில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. பிறகுதான் நித்தி நடந்ததை சொன்னாள்.” என்றவன் பார்வை, ஒருகணம் மதுராவை துளைத்து மீண்டது.

“அன்றைக்கு உங்கள் மகளில் எனக்கு விருப்பம் என்று சொன்னதில் உங்களுக்குச் சந்தோசம் மட்டுமே தர விரும்பினேன். அதுவே இப்படி உங்களைப் பிரச்சனையில் வீழ்த்தும் என்று துளியும் நினைக்கவில்லை.” குரல் இறுகத் தொடர்ந்தான்.

“இப்போ சொல்கிறேன் ஆன்ட்டி, விருப்பமில்லை என்பவரை கஷ்டப்பட்டுக் கல்யாணம் செய்ய வேண்டுமென்று நான் ஒருநாளும் நினைக்கவில்லை. உங்க மகள் தன் வாழ்வு பற்றி முடிவெடுக்க அத்தனை உரிமையும் உள்ளவர். அதில் நான் ஏன் மூக்கை நுழைப்பான்! அதனால் இப்படியே விட்டுவிடுவோம் ஆன்ட்டி.” கூறி, அவர் கரத்தை ஆறுதலாக அழுத்தினான்.

“குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இலங்கை போவது பற்றி விசாரித்து ஒழுங்கு செய்து தருவது என் பொறுப்பு!” கண்ணீரோடு பார்த்தவரின் விழிகளைத் துடைத்து விட்டான்.

error: Alert: Content selection is disabled!!