மலருமோ உந்தன் இதயம் 24 – 2

 

“உங்க மகனாக இதைச் செய்யலாம் இல்லையா?” கேட்டவன், பதிலை எதிர்பாராது விருட்டென்று மேலே சென்றுவிட்டான் .

அதுவரை அங்கு நின்ற நித்தியும் மதுராவை முறைத்தபடி நகர்ந்து விட்டாள்.

மெல்ல எழுந்து கொண்டார் கமலா. சட்டென்று நெருங்கி, கரம் பற்ற முயன்ற மகளின் கரத்தை உதறியவர், அவளைத் திரும்பியும் பாராது அறையினுள் நுழைந்து குளியல் அறைக்குள் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்த தாயை நெருங்கினாள் மதுரா.

“அம்மா, என்னோடு கதைக்க மாட்டீங்க அப்படித்தானே? நேற்று, ஏதோ ஒரு கோபத்தில் சொல்லிவிட்டேன்மா. உங்களிடம் அப்படிக் கதைக்க எனக்கு உரிமை இல்லையாம்மா?” அழுத மகளை விழிநீரோடு பார்த்தார் தாய் .

“உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் தங்கச்சிகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன். எங்களை எல்லாம் அநாதை ஆக்க நினைத்துத்தான் வருத்தத்தை மறைத்து வைத்திருந்தீங்களா?” விம்மினாள் .

“வருத்தத்துக்கு மருந்து எடுத்துக் கொண்டுதான் இருந்தேன். மருந்து குடிக்க மாட்டேன், குணமாக மாட்டேன் என்று சில முட்டாள்கள் போல பிடிவாதமாக இருக்கவில்லை.” முறைத்தார் தாய்.

சட்டென்று நகர்ந்தவர் பேத்திகளில் ஒருவரை வாரிக்கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டார்.

குழந்தையின் முகத்தையே பார்த்திருந்தவருக்கு மனம் சிறிதும் அடங்க மறுத்தது .

“பார்த்துப் பார்த்து பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கான வாழ்வையும் தேடித்தேடி அமைத்துத் தரும் போது, அது தழைத்து வளரும் என்கின்ற எதிர்பார்ப்பு மட்டும் தான் இருக்கும்.

அதுவே, ஏதோ கைமீறிய காரணத்தால் பிழைத்துப் போனால், பிழையே செய்யாது தண்டனை அனுபவிக்க வேண்டுமா?

உனக்கு மட்டுமா தண்டனை? இந்தக் குழந்தைகளும் அல்லவா உன்னோடு சேர்ந்து வருந்துவார்கள்! அது ஏன் உனக்கு விளங்க மாட்டேன் என்குது?” மகள் முகத்தைப் பாராது சீறினார்.

தன் செல்ல மகளோடு இத்தனை கண்டிப்பாகக் கதைக்க வேண்டிய நிலையொன்று உருவாகும் என, அவர் சற்றும் நினைத்திருக்கவில்லை.

அதிர்ந்து கூடப் பேசியறியாத அருமையானவள் மதுரா. அவள் வாழ்வு இன்று சிதிலமடைந்திருப்பதை அவரால் சிறிதும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதோடு, கண் முன்னால் அழகான வாழ்வு கைவிரித்து வரவேற்கக் காத்திருக்கையில் முகத்தைத் திருப்பும் மகளையும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

“அம்மா, இப்போதான் ஹொஸ்பிட்டலில் இருந்து வந்திருக்கிறீங்க; கொஞ்சநேரம் அமைதியாக இருங்கம்மா.” தாய் மீண்டும் எதையாவது இழுத்துக் கொண்டால் என்று பயந்தாள் மகள்.

“இங்க பார் மதுரா, நன் வாழ்ந்து முடித்தவள். உன் பெரிய தங்கைக்கு நல்ல இடமாகப் பார்த்து வைத்துவிட்டேன்; அவள் அமோகமாக வாழ்வாள் என்கின்ற நம்பிக்கையில்!” கசப்பாக முறுவலித்தார்.

‘அப்படித்தானே உனக்கும் கல்யாணம் செய்து வைத்தேன்.’ மனதில் அரற்றவும் செய்தார்.

“சின்னவள்…அவளுக்கு ஒரு வழிபண்ணும் மட்டும் நான் உயிரோடு இருந்தால் போதும்; மிச்சத்தை எல்லாம் இருந்து பார்க்கும் ஆசை எனக்கு இல்லை.” என்றவர், பேத்தியில் பட்டுத்தெறித்த கண்ணீரைத் துடைத்தெறிந்தார்.

“ஐயோம்மா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?! ஒருத்தனைக் கட்டி நான்… நான் பட்ட பாடு இலேசில் மறக்குமாம்மா? இரண்டு குழந்தைகளோடு இவரைக் கட்டி…முதல் அவருக்கு அப்படி என்ன தேவையம்மா. உங்க மகன் என்றால் அப்படிச் செய்து வைப்பீங்களா?” மதுராவின் குரலிலும் காரம் தலைகாட்ட, நிமிர்ந்து முறைத்தார் கமலா .

“இது என்ன அசட்டுப் பேச்சு! உன்னைக் கல்யாணம் செய் என்று அவரை யாரும் நிர்ப்பந்திக்கவில்லையே! விரும்புகிறேன் என்று தானாகத் தானே கேட்டார்.

எந்தத் தாயும் தன்மகள் வாழ்வைத் தொலைத்துவிட்டு கைக்குழந்தைகளோடு அனாதரவாக நிற்பதைப் பார்க்க விரும்ப மாட்டாள். அதற்கென்று உன்னைப் புதைகுழியிலா விழச் சொல்கிறேன்.” சீறிய அன்னையை இயலாமையோடு பார்த்தவள், தாயருகில் சென்று அவரோடு நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

“அம்மா ப்ளீஸ்மா! கொஞ்சம் கோபப்படாமல் இருங்க. திரும்ப உடம்புக்கு எதுவும்…” சொல்லிக்கொண்டு வந்தவள் தாயின் பார்வையிலும் பேச்சிலும் தன்பேச்சை நிறுத்தினாள்.

“இப்போ என்ன சொல்ல வருகிறாய் மதுரா? செத்துக் கித்துப் போய்விடுவேன் என்பதுதான் உன் பயமா? கவலைப்படாதே! வந்த இடத்தில் அப்படி உயிரை விட்டு உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டேன். இன்னும் இன்னும் எத்தனையோ கண்டு வதைபடும் தலையெழுத்து இருக்கே! அவ்வளவு சீக்கிரம் என் உயிர் போகாது.” அழுகையோடு விரக்தியாகச் சொன்ன தாயை இப்போது வெறித்தாள் மதுரா.

“நான் பட்டதுக்கு இந்த வார்த்தைகளை நான்தான் சொல்லவேண்டும்மா.” சொன்னவள் முகம், கணத்தில் இறுகி இயல்பானது.

“சரிம்மா சரி; இப்போ உங்களுக்கு என்ன வேண்டும்? நான் அவரைக் கல்யாணம் செய்யவேண்டும்; அவ்வளவும் தானே! அதுதான் உங்களுக்கு சந்தோஷம் என்றால் நான்..நான்..கல்யாணம் செய்து கொள்கிறேன்மா.” என்றதும் தான் தாமதம், சட்டென்று நிமிர்ந்த தாயின் பார்வையில் அளவு கடந்த சீற்றம்.

“என்னடி விளையாடுகிறாயா? அப்போ, விருப்பம் இல்லையென்றாலும் உன் அம்மாவுக்காக கல்யாணத்துக்கு ஓமென்கிறாய். அப்போ அந்தத் தம்பியின் வாழ்க்கை?!

விருப்பம் இல்லாதவளைக் கட்டி லோ..லோ என்று அலையவேண்டும் என்று அந்த தம்பிக்கு என்ன தலையெழுத்தா சொல்லு பார்ப்போம்?

வேண்டாம் தாயே வேண்டாம்; உன் வாழ்வை நான் கெடுத்து விட்டேன்; அழித்து விட்டேன்; அதுதான் உண்மை. அது அப்படியே இருக்கட்டும். நான் சாகும் வரை அதை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; நீ பயணத்துக்கு ஏற்பாடு செய்.” தாயின் சீறலில் வாயடைத்துப் போனாள் அவள்.

இதுவரை தாய் கடிந்து பேசி இவள் அறியவில்லை. ‘இப்போது?’ மனம் கனக்க விருட்டென்று குளியலறைக்குள் புகுந்து கதவைச் சாத்திவிட்டு அப்படியே நிலத்தில் அமர்ந்துவிட்டாள்.

“என் வாழ்வில் இப்படியெல்லாம் நடக்க நான் என்ன பாவம் செய்தேன்?” கழுத்தை நெரித்த கேள்வி சத்தமாக வர, குமுறிக் குமுறி அழத் தொடங்கினாள்.

மகளின் அழுகைச் சத்தம் செவிகளில் மோதியும் மனமும் உடலும் சோர்ந்து தளர்ந்தும், அவளை ஆறுதல் படுத்தும் எண்ணமின்றி அப்படியே அமர்ந்திருந்தார் கமலா.

“வலிய வந்த சிதேவியை எட்டி உதைத்துவிட்டாளே உன் முட்டாள் அம்மா.” குழந்தையிடம் முணுமுணுத்தவர் மனதில், மகள் வாழ்வின் களையிழந்த தோற்றம் விரிந்து இதயத்தை நடுங்கச் செய்தது.

‘என் சிறுகலக்கத்தையும் இனம்கண்டு அதைப் போக்க முயலும் உற்ற சினேகிதி சுதா! தன் அக்கா மகனின் விருப்பத்தை கேட்டதிலிருந்து என்னைவிட்டு விலகிவிட்டாள்.

‘இரண்டு பிள்ளைகளோடு இருப்பவளைக் கல்யாணம் செய்வதா? வேண்டாம் தம்பி.’ என்று சொன்னதை மகன் கேட்கவில்லையே என்கின்ற கோபத்தில் என்னோடும் முகம் திருப்பினாள்.

‘இங்கபார் கமலா, வேண்டுமென்றால் உன் சின்ன மகளை கார்த்திகேயனுக்கு செய்து வைக்க நான் சம்மதிக்கிறேன். இதற்கு எப்படி கமலா? நீயே கொஞ்சம் யோசித்துப் பார்.’ என்று, என் கையில் எதுவுமில்லை என்பது தெரிந்தே என்னிடம் முறையிட்டாள்.

அந்தத் தம்பியோ, கல்யாணம் என்றால் மதுராவோடு தான் என்று உறுதியாகச் சொன்ன பிள்ளை. அவர் அன்பை இவள் தூசாக நினைத்துவிட்டாளே!’

நினைக்க நினைக்க மகள் மீது சிறிதும் இரக்கம் வர மறுத்து அவருக்கு!

‘அப்படிப்பட்ட தம்பி, இன்றைக்கு, அந்த நினைப்பை விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார்.’ ஏக்கத்தோடு நினைத்தது அந்தத் தாயுள்ளம்.

‘அதுவும் சரிதான். விருப்பம் இல்லாதவள் பின்னால் எத்தனைக்கென்று அலைவது? அவருக்கு என்ன தலையெழுத்தா?’ இன்று கார்த்திகேயன் சொன்னதும் சரியென்றே நினைத்தார் .

“உன் அம்மா ராசி இல்லாதவள்; அதுமட்டும் தான் நிஜம் குஞ்சு!” கண்ணீரோடு பேத்தியிடம் முறையிட்டார்.

நீண்டநேரம் குளியலறையை விட்டு மகள் வெளிவராது இருக்கவே, “கதவைத் திற மதுரா; பிள்ளைகளுக்கு பால் கொடுக்கும் நேரம்; எழுந்து வெளியே வா.” கதவைத் தட்டினார்.

மௌனமாக எழுந்து முகத்தை அலம்பிவிட்டு வெளியே வந்தவள், தாயைப் பாராது பிள்ளைகளைக் கவனித்துவிட்டு, ஒரு முடிவோடு அறையை விட்டு வெளியேறினாள்.

 

error: Alert: Content selection is disabled!!