மலருமோ உந்தன் இதயம் 25 – 2

நீர் முட்டிய விழிகளைத் தழைத்தவாறே விறுவிறுவென்று வெளியேற முயன்றவளை, “ராது ஒரு நிமிடம்.” கணீரென்று நிறுத்தினான் கார்த்திகேயன்.

அவன் உச்சரிப்பில் உடல் அதிர நின்றவள் திரும்பிப் பார்க்கும் திறனற்று அப்படியே நின்றாள்.

‘ராது…அவர் உச்சரிப்பே அவர் மனதைச் சொல்கின்றதா? அப்போ, அவர் தன் பிடியில் இருந்து மாறப் போவதில்லையா? என்ன மாதிரியான சித்திரவதை இது!’ அவள் மனதில் பலமற்றவளானாள்.

‘போடா போ; நீயாச்சு உன் அலட்டலாச்சு.’ என்றும் உதற முடியாது தடுமாறியது அவள் உள்ளம்.

அசையாது நின்றவளை ஓரெட்டில் அணுகியவன், “இந்தா; குழந்தைகள் பிறந்த போது எடுத்த படங்கள்; தர மறந்து போனேன்.” அவள் கரத்தில் திணித்தவன்,

“நீயே மறந்தாலும் இது சிலதுகளை உனக்கு நினைவு படுத்தும் ராது. அதில் உனக்கு விருப்பம் இல்லையென்றால் உன் கையாலேயே கிழித்துப் போட்டுவிடு.” அவளையும் முந்திக் கொண்டு வெளியேறினான்.

ஆல்பத்தை இறுகப் பற்றிய அவள் விரல்கள் நடுங்கின! ‘அப்படி எதை நினைவு படுத்திவிடும்?’ சற்றும் பொருளற்ற கேள்வியல்லவா?

‘இந்த ஆல்பத்தில் என் செல்வங்களின் புகைப்படங்கள் மட்டுமா இருக்கும்? இல்லையே! குழந்தைகளின் தந்தை நான் எனச் சொல்லாமல் சொன்னவரும் அல்லவா இருப்பார்!’ அன்று நடந்தவை மீண்டும் மீண்டும் அவள் நினைவில் மின்னி அவளை மூச்சுமுட்ட வைத்தது.

நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும், பார்க்கவே கூடாது என்று உறுதி கொண்டாலும் அவள் நினைவுகளும் விழிகளும் அந்த அல்பத்தை அடிக்கடி ஸ்பரிசிக்கத் தொடங்கின. அங்கு அவளே அவளுக்கு இட்டுக் கொண்ட கட்டளைகள் பயனற்றுத் தோற்றுப் போகத் தொடங்கின.

அடுத்தடுத்த நாட்கள் மின்னலாக நகர்ந்து கொண்டிருந்தன!

இதுவரை கூட்டணி போட்ட அண்ணன், தங்கை, தாய் கூட பேச்சுக்களைக் குறைத்துவிட்டதை உணர்ந்த மதுரா இறுக்கத்தோடு நடமாடினாள்.

இப்படியிருக்கையில் குழந்தைகளோடு பயணம் செய்வது பற்றி விசாரித்த போது, “ஒருமாதக் குழந்தைகளை கொண்டு போகும் படி அப்படி என்ன கட்டாயம்?” எனக் கேட்டவர்கள், “அங்கு சென்றிருக்கும் முடிவில் போக இருக்கிறோம்.” என, இவள் பதில் சொல்ல நிறையவே யோசித்தார்கள்.

“இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லாது தான் இருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு தூரப்பயணம்…இவ்வளவு நாட்கள் இருந்த நீங்க அவர்கள் கொஞ்சம் வளரும் வரை இருந்துவிட்டு அழைத்துப் போகலாமே! உங்களுக்கு இங்கு இருப்பதில் என்ன தேவை என்றாலும் உரியவர்களிடம் கேட்டால் செய்து தருவார்கள்.” என்ற தொனியில் தான் பேசினார்கள்.

“இல்லை, கட்டாயம் போயே ஆக வேண்டும் என்றால் போகலாம்; எதையும் நீங்களே சமாளித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேல் நாங்க என்ன சொல்வது?” என்று அவர்கள் சொன்னதில் கார்த்திகேயன் மிகவும் திருப்தி கொண்டான் என்றால், மிகவும் கலங்கிப் போனாள் மதுரா.

“பச்சைக் குழந்தைகளோடு சிறுபிள்ளைத்தனமாக விளையாட நினைக்கிறாயே!” தாய் சிடுசிடுக்க, அவளோ மிகவும் குழம்பிப் போனாள்.

‘இந்தப் பிரச்சனை ஆரம்பித்த மறுகணம் நான் அங்கு போயிருந்தால் இப்போ முளைத்துள்ள புதுப்பிரச்சனைகளும் வந்திராதே!’ காலம் கடந்து நொந்து கொண்டவள், ‘இத்தனை நாட்கள் இருந்தாச்சு; இவர்கள் கொஞ்சம் வளரவிட்டே போவோம்!’ இறுதியில் இம்முடிவுக்கே வந்தாள்.

“சரிம்மா, இவர்கள் கொஞ்சம் வளரட்டும்; ஐந்தாறு மாதங்களின் பின்னர் அங்கு வருகிறேன். நீங்க…மூன்று மாதங்கள் வரை நிற்கலாம் தானே; நின்றுவிட்டு போறீங்களா?” என்றவளின் கெஞ்சல், விழிகலங்க வைத்தாலும் மகள் விடயத்தில் சற்றும் இளகத் தயாராக இல்லை அவர்.

“இல்லை; நான் ஒருமாதத்தில் போவதாகத்தானே வந்தேன். எப்படியும் அங்குதானே வரப் போகிறாய்; பிறகென்ன? நான் அடுத்த கிழமை போகலாம் என்றிருக்கிறேன்.” முடிவாகச் சொன்ன கமலா, “அப்போ இந்த ஐந்தாறு மாதங்களும் எங்கிருக்கப் போகிறாய்?” வேண்டுமென்றே தான் கேட்டார்.

அங்கேதான் கார்த்திகேயனும் நித்தியும் அமர்ந்திருந்தனர். கமலாவின் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை கார்த்திகேயன் முகத்தில் ஓடி மறைந்த அதிர்வு துல்லியமாகக் காட்டியது.

நித்தியோ இதற்கும் எனக்கும் சிறு சம்பந்தமும் இல்லை எனும் பாவனையில் தொலைக்காட்சியில் விழிகள் பதித்திருந்தாள். அவள் செவிகளிரண்டும் இவர்கள் சம்பாஷனையில் தான் இருந்தன.

கமலா அப்படிக் கேட்டதும், ‘சபாஷ் ஆன்ட்டி!’ கற்பனையில் கமலாவை கட்டியணைத்து இறுக்கி ஒரு முத்தமும் கொடுத்திருந்தாள் நித்தி.

என்னதான் வெளிப்பார்வைக்கு மதுராவில் மனச் சுணக்கம் இருப்பதுபோல திரிந்தாலும் தமையன் மதுராவை மறக்கத் தயாராக இல்லை என்று புரிந்து கொண்டவளுக்கு அவர்கள் இருவரையும் எப்படியும் சேர்த்து வைத்துவிடவேண்டும் என்ற ஆவலே எழுந்தது.

‘வலிய வலிய நெருங்க நினைத்தால் தானே முறுக்கலும் ஒதுங்கலும்! நாங்களும் முறுக்கிக் கொள்கிறோம்; உங்களை ஒதுக்கிறோம்; அதன் வலி எப்படியிருக்கும் என்று சுவைத்துத் தான் பாருங்களேன்!’ நித்தியின் கோபமும் மனத்தாங்கலும் கொண்ட உள்ளம் மதுராவுக்கு சவால் விட்டது.

அதுபோலவே, கமலாவின் கேள்வி மதுராவின் இதயத்தில் வலியை உணரச் செய்தது. மறுகணம், அவள் பார்வை கார்த்திகேயனையும் நித்தியையும் தொட்டு விலகியது.

“அது ஒரு பிரச்சனையே இல்லை ஆன்ட்டி. உங்கள் மகள் முதலே சதீஷிடம் அறை பார்க்கும் படி சொல்லியிருந்தார். ஆறுமாதத்துக்கு இருக்கக் கூடியவகையில் ஒரு இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்.” பட்டும் படாமலும் சொன்னான் கார்த்திகேயன்.

“ஆமாம்ணா. எனக்குத் தெரிந்த இடத்தில் ஒரு அறையிருக்கு; குழந்தைகளோடு இருக்கக் கூடியளவு பெரிய அறை; அதையே பார்ப்போமா?” தன் பங்குக்கு, தாராளமாக உதவிக் கரத்தை நீட்டினாள் நித்தி.

தொண்டை அடைத்தது மதுராவுக்கு!

‘அப்படியென்றால், இந்த வீட்டில் எனக்கு இடமில்லை என்றுதானே பொருள்!’ மீண்டும் அண்ணன் தங்கையைப் பார்த்தவள் விழிகளில் அப்பட்டமான ஏமாற்றத்தின் வலி!

“போகிறேன் போகிறேன்.” என்றவளுக்கு, “இதோ, தாராளமாகப் போ.” என்றதைத் தாங்க முடியாதிருந்தது.

‘நான் எப்போதோ போகக் கேட்ட போதெல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று மறித்துவிட்டு, ஆறுமாதங்களில் போவேன் என்று தெரிந்த பின் இப்படிச் சொல்கிறார்களே!’ குமுறும் உள்ளத்தோடு சட்டென்று எழுந்து தனதறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அங்கே, அமைதியான சயனத்தில் கிடந்த குழந்தைகளையும் அந்த அறையையும் பார்த்தவளுக்கு துக்கம் பொத்துக் கொண்டு வந்தது.

“இவ்வளவு நாட்களும் உங்களையும் என்னையும் உள்ளங்கையில் வைத்துத்தாங்கத் தயாராக இருந்தவர்களுக்கு இவ்வளவு விரைவில் சுமையாகிப் போனோமா?” இதழ்கள் சொற்களை விடுவிக்க, அடக்க முடியாத துக்கம் அழுகையாக உருமாற முயன்றது.

“எவ்வளவு கஷ்டங்களை கண்ணீர் விடாது இரும்பாக நின்று தாங்கிய நான் இங்கு வந்ததிலிருந்து மிகவும் கோழையாகிவிட்டேனோ?” தன்னைத் தான் கடிந்து கொள்ளவும் முயன்றாள்.

தன்னந் தனிமை நம்மில் மோதி அதிர வைக்கையில், அதன் சவால்களை எதிர்கொள்ள, கண்ணீரே பெருந்தடை எனப் புரிந்துகொள்ளும் மனம் அதைத் தூர ஒதுக்கி விடுவதையும், அதே, தாங்கிக்கொள்ள துணையுண்டு எனக் கண்டால் பொசுக்கு பொசுக்கென்று கண்ணீரின் துணையை நாடுவதையும் உணர மறந்தாள் அவள்.

“உங்களை ஏஞ்சல் என்று கொஞ்சியவர்கள் இப்போ வேறு இடம் பார்த்துத் தருகிறார்களாமே! இதுதான் நிஜம்!” கசப்புடன் சொன்னவாறே திரும்பியவள் அப்படியே செயலற்று நின்றாள்.

அவளது அறைவாயிலை அடைத்துக் கொண்டு நின்றார்கள் அண்ணன், தங்கையும் இவள் அன்னையும்.

மூவர் பார்வையும் இவளைத் துளைத்த விதத்தில் பார்வையை விலக்கிக் கொண்டாள் மதுரா. ‘ச்சே! நான் பேசியதைக் கேட்டு விட்டார்கள் போலிருக்கே! என்ன நினைத்துக் கொள்வார்கள்? ஏதோ பெரிதாகச் சொன்னாள்; இப்போ எங்களோடு அட்டைபோல ஒட்டிக் கொள்ள நினைக்கிறாள் என்றா?’ அதற்கும் முரண்டியது மனம்.

‘நித்தியோ அவள் அண்ணாவோ அப்படியானவர்கள் இல்லவே இல்லை.’ என்ற அவள் நினைவுகளைத் தடைப்படுத்தியது கார்த்திகேயனின் குரல்.

“சுமையா? யார் யாருக்கு சுமை ராது” மின்னல் அதிர்வோடு அவனைப் பார்த்தாள் மதுரா.

மகளை ராது என்று அழைத்த கார்த்திகேயனை திரும்பிப் பார்த்த கமலா, நித்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு உணர்வு துடைத்த முகத்தோடு மகளைப் பார்த்தார்

“உமக்கு இங்கிருப்பதில் கஷ்டம் இருக்கலாம் என்றுதான் அப்படிச் சொன்னேன். அப்படியில்லை, இங்கு இருக்க விருப்பமென்றால் போ என்று யாரும் சொல்லப் போவதில்லை.” சொல்லி நகர்ந்தவன், நின்று திரும்பி, அசைவற்று நின்றவளை உற்று நோக்கினான்.

“இப்போதும் இந்த வீட்டில் ஒருவராகத்தான் உம்மையும் குழந்தைகளையும் எண்ணுகிறோம்.” சொன்ன வேகத்தில் சென்று மறைந்தான்.

இதுவரை அவன் ‘ராது’ என்ற சொல்லை உதிர்க்கும் போது இவள் மனதில் அளவற்ற எரிச்சலே முன்னிற்கும். இன்றோ, ஏதோ ஒருவகையில் ஆறுதல் வாசத்தை நுகர்ந்தது அவள் இதயம்!

 

error: Alert: Content selection is disabled!!