26
நாளும் பொழுதும் இறக்கை கட்டிக்கொண்டு பறப்பதாக உணர்ந்தாள் மதுரா.
கண்களின் முன்னால் குழந்தைகளின் வளர்ச்சி அவள் மனதை இலேசாக்கியது என்றால், அவர்களில் அதிக உரிமையை வெளிப்படுத்தும் நித்தி, இவளோடு பாராமுகம் காட்டுகையில் மனம் சுணங்கித்தான் போகிறாள்.
தவறாது அழைத்தாலும் அளவாகப் பேசும் தாயின் செயலில் மனதில் அடிபட்ட வேதனையென்றால், ‘உனக்காக நானிருக்கிறேன்!’ என, உரிமையையும் கனிவையும் சொல்லாமல் சொல்லும் கார்த்திகேயனின் செயல்களில் மிக மிக அல்லாடியும் போகின்றாள்.
சிலநாட்களுக்கு முன் வந்திருந்த யோகம், நித்தியை தம் வீட்டு மருமகளாக்குவதில் தமக்குள்ள விருப்பத்தை இவளிடம் சொன்னவர், “அண்ணாவின் கல்யாணம் முடிந்த பிறகுதான் என் கல்யாணம் பற்றி யோசிப்பேன் ஆன்ட்டி; அது எப்போது என்று தெரியாது; நீங்கள் வீணாக காத்திருக்க வேண்டாம்.” என, நித்தி, பட்டும் படாமலும் சொல்லி விட்டாள் என வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.
“என் மகன் நித்தியை பிடித்திருக்கு என்கிறான்மா; எங்களுக்கும் அவளை பிடிக்கும்; அருமையான பிள்ளை இல்லையா? ஆனால், அது நடக்காது போலிருக்கே!” என கவலைப்பட்டவர், வேறு எதையும் இவளோடு கதைக்கவில்லை.
“உன்னை மனதில் வைத்துக்கொண்டே திருமணப் பேச்சை தட்டிக் கழிக்கிறார் கார்த்திகேயன். என்னதான் உன் முடிவு? இன்னொருதரம் அதைப்பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க மாட்டாயா?” இப்படி அவர் கதைத்திருந்தால் இவள் மனம் சமாதானம் ஆகி இருக்குமோ என்னவோ!
அவர் அப்படிக் கேட்பார் என்று மிகவும் எதிர்பார்த்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மனித மனம், என்றாவது ஒரே நேர்கோட்டில் சிந்தித்திருக்குமா?
நெளிவு சுளிவுகளை, ஒரேயடியான திருப்பங்களை, ஏற்ற இறக்கங்களை எல்லாம் தழுவிச் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுமல்லவா?
இவள் மனம் மட்டும் அதற்கு விதிவிலக்காகிடுமா!?
இவளின் இக்கட்டான வேளைகளில், பெற்றெடுத்த அன்னைபோல அன்பையும் கண்டிப்பையும் கரிசனையையும் காட்டித் தாங்கிய யோகம், தன் மனம் நோகும் என்றெண்ணி கார்த்திகேயனின் பேச்சைத் தவிர்த்ததைப் புரிந்து கொண்டவளுக்கு, ‘என்னால் எத்தனை பேருக்கு கஷ்டம்?’ மிகவும் சங்கடமாக இருந்தது.
இந்த வீட்டை விட்டுப் போவது, இலங்கை போவது என்று பரபரத்த மனமோ, ஏதோ ஒருவிதத்தில் அமைதியை நுகர்ந்து அதில் மயக்கம் கொள்ள முனைந்தது.
அதைத் துல்லியமாக உணர்ந்தாலும் ஆழமாக ஆராய முனையவில்லை இவள். காரணம், அந்த முயற்சியே ஆபத்தானதோ எனும் வகையில் ஒருவித பயம் அவள் மனதைக் கவ்விக் கொள்கின்றதே!
அதோடு, ‘மிகவும் நெருங்கி இருந்த நித்தியின் ஒதுக்கத்தை சகித்துக்கொண்டு அங்கே தொடர்ந்து இருக்கவேண்டிய தேவைதான் என்ன?’ என்ற கேள்வியையே தவிர்த்தாள் மதுரா.
ஆரம்பத்தில் ‘கொஞ்ச நாட்கள் தானே; அதன்பிறகு போய் விடுவோமே!’ என்று எண்ணி சமாதானம் சொல்லிக் கொண்டவள், பின்னரோ, ‘நித்தி சின்னப்பிள்ளை, கொஞ்ச நாட்களில் என்னைப் புரிந்து கொள்வாள்.’ என்று மனச்சுணக்கத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டாள்.
இப்படி நகர்ந்த நாட்களில், நித்தியும் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தாள். பெரும்பாலும் காலை போனால் மாலை நான்கு மணிவாக்கில் தான் வீடு வந்தாள்.
ஆரம்பத்தில் போலவே சமையல் வேலைகளோடு குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட மதுரா, அங்கிங்கு அசையவோ அதையிதைப் பற்றிச் சிந்தித்து உழல்வதற்கோ நேரமின்றிப் போகவே, பம்பரமானாள்.
அதேவேளை, ‘இது என் வீடு.’ என்கின்ற எண்ணம் அவளையும் அறியாது அவளுள் படிந்திருந்ததை, அவள் தன் செய்கைகளில் மற்றவர்களுக்கு உணர்த்தியதை, அவளால்தான் சிறிதும் உணர்ந்துகொள்ள முடியாது போய்விட்டது.
“மத்தியானங்களில் சமைத்து மினக்கட வேண்டாம் மதுரா; நித்தியும் வரவிட்டு இரவில் சமைத்துக் கொள்ளலாம். குழந்தைகளோடு கஷ்டப்பட வேண்டாம்.” தடுத்துப் பார்த்தான் கார்த்திகேயன்.
மதியம், தான் உண்ண வருவேன் என்று அவள் பார்த்துப் பார்த்துச் சமைத்து வைப்பதில் உள்ளம் துள்ளியதை இழுகுவாக மறைத்துவிட்டு, அவள் கஷ்டப்படுகின்றாள் எனும் ஆதங்கத்தில் அவன் சொன்னதை, அவளோ, காதிலும் வாங்கிக் கொள்ளவில்லை.
உணவு மேசையில் சாப்பாடுகளை வைத்து விட்டு குழந்தைகளைக் கவனிப்பவளை, “நீரும் சாப்பிட்டுவிட்டே அவர்களைக் கவனிக்கலாமே.” என்று சொல்லிப் பார்த்தவன், அவள் வேண்டுமென்றே தன்னோடிருந்து உண்பதைத் தவிர்க்கிறாளோ எனும் ஐயம் கொண்டதும்,
“சேர்ந்து சாப்பிடவில்லையென்றால் எனக்கு மதியச் சாப்பாடு வேண்டாம் மதுரா. என்ன, மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே; அதற்குப் பிறகு இலங்கை போய் விடுவீர்.” அப்பப்போ கேலி போல் சொல்லிச் சொல்லிக் காட்டி, அவளை மிகுந்த எரிச்சல் கொள்ள வைத்தவன், சேர்ந்து உண்ணவும் வழியமைத்துக் கொண்டான்.
இப்படித்தான் அன்றும், உண்டு முடித்த வேகத்தில் சென்று ஆரணியை தூக்கிக்கொண்டு வந்து வரவேற்பறைச் சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
“குட்டிம்மா, பாப்பா குடித்தீங்களா?” அவளைக் கொஞ்சிக்கொண்டே, “ஆரபி சண்டைக்கு வரப் போகிறாள்; அவளையும் தூக்கித் தந்துவிட்டு உம் வேலையைப் பாரும்.” சாப்பாட்டு மேசையை ஒதுக்கிக் கொண்டிருந்தவளை அழைத்தான்.
“இப்போதுதான் பால் குடித்தார்கள். இரண்டு பேரையும் எப்படி வைத்திருப்பீங்க? அவள் தன் பாட்டில் இருக்கிறாள்; விடுங்க.” சொன்னவள் தன் வேலையைத் தொடர, வரவேற்பறையின் ஒருபக்கத்தில் போடப்பட்டிருந்த சிறு ‘ப்ளேபென்’னில் கிடந்த ஆரணி எக்கி எம்பி முனகினாள்.
“இந்தா அவள் என்னைப் பார்த்து முறைக்கிறாள்; எப்படி என்னைவிட்டு விட்டு அக்காவைத் தூக்கலாம் என்கிறாள்; ஒருக்கா தூக்கித் தாருமன்; இப்போ, உமக்கு அதில் என்ன கஷ்டம்.”
இப்படித்தான் இருவரும் குழந்தைகளை முன்னிறுத்தி மிகவும் சகஜமாகப் பேசிக் கொள்வர்.
“சொன்னால் கேட்க மாட்டீங்க; பிறகு அன்றைக்குப் போலவே அவள் சத்தி எடுத்து விடுவாள்.”
“அந்தக் கவலை உமக்கு வேண்டாம்; நீர் தூக்கித்தாரும். என்னடா செல்லம், இந்த அம்மாவிடம் ஒரு வேலை சொல்லிச் செய்வதற்குள் விடிந்துவிடும் இல்லையா?” ஆரணியைக் கொஞ்சியவன், மாபிள் விழிகளைச் சிமிட்டி பொக்கை வாய்திறந்து அழகாகச் சிரித்த குழந்தையில் மயங்கியே விட்டான்.
சோஃபாவில் சாய்ந்தவாறு அமர்ந்து குழந்தையை தன் நெஞ்சில் போட்டுக் கொஞ்சியவனை சிடுசிடுப்போடு பார்த்தாள் மதுரா.
“வயிறு அமத்துப்பட்டு பால் எல்லாம் வெளியே வரப் போகுது!” அவள் எச்சரிக்கையை அவன் காதிலும் வாங்கிக் கொள்ளவில்லை.
“ஆஆ அப்பாவுக்கு நோகுதடா குட்டி; உங்கம்மா தலைமயிரைப் பிடித்துப் பழகி..” அடிக்கடி மிகவும் இயல்பாக இப்படி ‘அப்பா’ என்று தன்னைச் சொல்கையில் கேட்டுக் கொண்டிருக்கும் மதுரா தளர்ந்துவிடுவாள்.
இன்றும் அவனிடம் கொடுக்கவென்று சின்னவளைத் தூக்கிக் கொண்டிருந்தவளின் செவிக்குள் அது நுழைந்து அதிர்வோடு நிமிர வைத்தது மட்டுமில்லாமல், திரும்பி அவனை முறைக்கவும் வைத்தது.
அந்த முறைப்பு, தன் காரத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டே வருவதை, அவன் உணர்ந்தளவில் அவள் உணர்ந்து கொள்ளவில்லை என்பதே நிஜம்.
இப்போதெல்லாம், அவள் முறைப்பை மிகவும் அசட்டையோடு எதிர்கொள்வது போலவே இன்றும் எதிர்கொண்டான் அவன்.
“நீங்க இந்த எண்ணத்திலிருந்து மாறப் போவதே இல்லை அல்லவா?!”
“பச்…நீர் உமது எண்ணத்திலிருந்து மாறுவீரா? ஹே…ஹே கொஞ்சம் பொறும். இப்படிப் பார்த்தால் எப்படி? அங்க பாரும், உம் கையில் உள்ளவளும் சரி என் கையில் உள்ளவளும் எங்க அம்மா இவ்வளவு அசிங்கமா என்று முகம் சுளிக்கிறார்கள். எனக்கென்ன, நீர் இப்படியே இருந்தால் இவர்கள் உம்மிடம் வரவே பயப்படுவார்கள்.” முறுவலோடு சொன்னவன், அவள் முகம் தொடர்ந்து இறுகவும்,
“சரி சரி; எதில் விட்டேன்? நீர் மட்டும் பிடித்த பிடியென்று இருப்பதுபோல எங்களுக்கும் சில கொள்கைகள் இருக்கு!” பிடிவாதத்தில் இறுகிய உதடுகளில் விஷமச் சிரிப்பு நெளிய, அவளை ஆற அமர பார்வையிட்டுச் சிடுசிடுக்க வைத்தான்.
“இப்போ என்ன உம்மையா கொஞ்சினேன்? என் மகள் என்னோடு இருக்கும் மட்டும் கொஞ்சிவிட்டு போகிறேன்.” என்றவன்,
“நாளைக்கு குழந்தைகள் இருவரும் டாடா காட்டிவிட்டு இலங்கை போனதும் பின்னால் வரவா போகிறேன்?” அவள் விழிகளின் மினுமினுப்பை பார்த்தவாறே தொடர்ந்தவன் குரலும் முகமும் கணத்தில் நிறம் மாறியது.
“பயப்படாதேயும்; கடைசிவரையும் அப்படி வர மாட்டேன்.” தீர்மானமாகச் சொன்னவன், “சரி, அவளைத் தாரும்; இன்னும் அரைமணியில் திரும்பிப் போகவேண்டும்.” விசுக்கென்று குழந்தையைத் தந்துவிட்டு தனதறைக்குள் மறைந்தவளை திருப்தியான முறுவலோடு பார்த்தான்.
“ம்ம்ம… என் செல்லங்கள் அப்பாவோடு இருந்தால் இந்த அம்மாவுக்கு என்னவாம்? இல்லையா குஞ்சுகள். ஹ்ம்ம்…உங்கம்மாவுக்கு கொஞ்சமே கொஞ்சமாக எரிச்சல் வருகுதோ!” சத்தமாகவே சொல்லி குழந்தைகளைக் கொஞ்சி வம்பு செய்தவன், உள்ளத்திலோ மிகையாக நகைத்துக் கொண்டான்.
இப்போதெல்லாம் ‘ராது’ என்று இவன் அழைத்தால் திடுக்கிட்டுத் திரும்பினாலும் அவளிடமிருந்து எதிர்ப்பு வருவதில்லை!
அது மட்டுமா? ‘அப்பா’ என்று இவன் குழந்தைகளை உரிமையாகக் கொஞ்சும் போதெல்லாம் அவள் விழிகளில் மினுக்கத்தைக் கண்டுள்ளான். வருத்தம் படரும் அவள் விழிகளில் வெறுப்பையோ கோபத்தையோ இவன் கண்டதில்லை; மாறாக, அந்த கொஞ்சலை இரசிப்பதையும் அறிந்திருக்கிறான்.
மிக இயல்பாக, குழந்தைகளைப் பற்றிப் பேசுவதிலும், “இவளைக் கொஞ்சம் பிடியுங்க; பால் எடுத்துக்கொண்டு வாறேன்.” சிணுங்கும் குழந்தையை தன்னையும் மீறித் தந்துவிட்டு தடுமாறுவதையும் கண்டு மனம் நிறைந்திருக்கிறான்.
அவள் தன்னையும் அறியாது தன்னை நோக்கி வருவதை அறிந்து கொண்டவன், அந்தத் தைரியத்தில், வெளிப்படையாகவே அப்பா அப்பா என்று கொஞ்சுவான்.
நித்தியும் தன் பங்குக்கு, “அத்தை…அத்தை சொல்லுங்கடா. முதல் அப்பா சொல்லப்படாது; அத்தை சொல்ல வேண்டும்; இல்லையோ எனக்குக் கெட்ட கோபம் வருமாக்கும்.” நான்கு மாத குழந்தைகளோடு மல்லுக்கு நிற்பாள்.
இதையெல்லாம் பார்த்தும் பாராத மாதிரி சென்று விடுவாள் மதுரா.
அறையினுள் நுழைந்த வேகத்தில் கட்டிலில் அமர்ந்து கொண்ட மதுராவின் மனமும் விழிகளும் போட்டிபோட்டுக் கலங்கின!
அவளையுமறியாது நகர்ந்த வலக்கரம் தலையணைக்கடியில் இருந்த ஆல்பத்தை மெல்லப் பற்றிக் கொண்டது.
நீண்ட நேரமாக அதையே வருடிக்கொண்டு அமர்ந்திருந்தவள், ஏனோ அதைத் திறந்து பார்க்க முனையவில்லை.
இது அவள் கரத்தில் வந்த தினத்திலிருந்து எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவள் விழிவழி உள் நுழைந்து, அவளுள் பலவகை உணர்வுப் பேரலைகள் திவ்வியமாக உருவாக்கியது போலவே, இன்றும், பாராமலேயே அந்த உணர்வுப் பிடிக்குள் அகப்படத் தொடங்கினாள் அவள்.
மனம், நம் வசம் இருக்கும் வரைதான் எல்லாம் அது அது நினைத்த படி நடக்கும். அது, எப்போது தட்டுத் தடுமாறி சிறிதாக நிலைகுலைகின்றதோ அதன்பின் எவ்வளவுதான் முயன்றாலும் அதனைக் கட்டுப்படுத்துவதும் அவ்வளவு இலகுவல்லவே!
அந்நிலையில் இருந்தாள் மதுரா.
வர வர அதிகரிக்கும் கார்த்திகேயனின் சீண்டல்கள், பார்வைகள், பேச்சுகள், குழந்தைகள் என்னவர்கள் என்ற பாவனையிலான கொஞ்சல்கள்; அவளை அந்நிலைக்கு இட்டுச் சென்றன.

