“அதுவும், பகலில் நித்தி வீட்டில் இராது போவதில் இவர் மிகவும் சந்தோசப்படுகிறாரோ என்றளவில் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறாரே!” மெல்ல முணுமுணுத்தபடி, நடுங்கிய விரல்கள் மெல்ல மெல்ல ஆல்பத்தைப் பிரிக்க, மனமோ விழிகளின் துணைகொண்டு, தன்னுள் நிறைந்துள்ளதை சரி பார்க்க முயன்றது.
குபுக்கென்று நிறைந்த விழிகள் சூடான உப்புநீரைத் தாமதியாமல் கசிய விட, ‘என்னதான் சொல்லுடி…நீ சரியான பேராசைக்காரி!’ அவள் மனசாட்சி அவளைக் குத்திக் காட்ட முனைந்ததோ!
மறுகணம், திடுக்கிட்டு சுதாகரித்துக் கொண்டவள், ‘வர வர என் போக்கு எனக்கே பிடிபடுதில்லையே! தன் விருப்பத்தைச் சொன்னவரை வேண்டாம் முடியாது என்று மறுத்து ஒதுக்கினேன். பிறகு..” தலையைக் குலுக்கிக் கொண்டாள்.
‘இனியும் பிரச்சனைகளைச் சந்திக்கும் அளவுக்கு எனக்குத் தெம்பிருக்கா? இப்போதெல்லாம் நான் என்ன செய்ய நினைத்து என்ன செய்து கொண்டிருக்கிறேன்.’ இலேசாக சுய அலசல் செய்ய முயன்றவளுக்கு அது சற்றும் உவப்பானதாக இருக்கவில்லை.
என்னதான் முரண்பாடு இருந்தாலும், குழந்தைகள் பிறந்த தினத்தில் எடுத்த அந்தப் புகைப்படங்கள் ஆகட்டும், குழந்தைகளோடு கார்த்திகேயனின் ஒட்டுதலான தருணங்கள் ஆகட்டும் இவள் மனதை மிகுந்த ஏக்கத்தில் தள்ள முயல்கின்றது என்பதே உண்மை.
அவ்வற்புத தருணங்களையெல்லாம் களைக்க களைக்க இரசிக்கவே மிகுந்த அவாக் கொண்டாள் என்பதே அறுதியிட்ட நிஜம்.
“ஆம் நிஜமே!” கையாலாகாத் தனத்தோடு முணுமுணுத்தவள் அதற்கு மேல் அவ்வெண்ணதிற்கு அழகு வர்ணம் பூச மிகவும் தயங்கினாள்.
போகின்ற போக்கில், ‘அவ்வளவு பிகு பண்ணியது நீதானா?’ என்று மற்றவர்களின் எள்ளல் பேச்சுக்கு ஆளாகும் வண்ணம் மாறிவிடுவேனோ!’ என்கின்ற ஐயம் வேறு தோன்ற, நடுக்கத்தோடு எழுந்தவளை, “ராது, ஓடிவாரும்; ஆரபி சத்தி எடுத்து விட்டாள்.” கார்த்திகேயனின் அழைப்பு விரைந்து செல்ல வைத்தது.
“முதலே சொன்னேன் தானே? இப்போதான் பால் குடித்தாள்.” முணுமுணுத்தபடி சென்றவள் ஆரணியை சோஃபாவுக்கும் அவனுக்குமிடையில் கிடத்திவிட்டு மற்றவளை நெஞ்சோடு அணைத்திருந்தவனை அலுப்போடு பார்த்தாள்.
அவன் நெஞ்சில் சத்தி எடுத்திருந்த ஆரபி, வாயோரம் திரைஞ்ச பாலோடு முகத்தைச் சுளித்துக் கொண்டு அழ ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தாள்.
“இதோடு எத்தனையாவது தடவை? பால் குடித்த குழந்தையை கையைக் காலை ஆட்டக் கொஞ்ச நேரம் விட்டால் தானே!” முணுமுணுத்தவாறே, அங்கிருந்த டிஷுவை எடுத்து குழந்தையைத் துடைத்து அணைத்து ஏந்திக் கொண்டவள், “எந்த நேரமும் அண்ணனும் தங்கச்சியுமாக தூக்கித் தூக்கி இரண்டுபேரும் கொஞ்சநேரம் தனியாக இருக்கிறார்கள் இல்லை.” அவன் நெஞ்சில் இருந்த சத்தியையும் துடைத்தெடுத்தாள்.
அவள் இயல்பாகச் செய்த செயலில் கார்த்திகேயனோ இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தான்.
“சேர்ட்டை மாற்றிவிட்டு க்ளினிக் போங்க.” என்றவள் நிமிரும் பொழுது அவளின் ஒற்றை ஜடை அவன் முகத்தை வருடிச் செல்ல, தன்னையே மறந்தான் கார்த்திகேயன்.
நெஞ்சு நிறைய அவள் மீது நேசம் கொண்டவன் அல்லவா? திருமணம் என்ற சடங்கில், அந்த உறவில் இணையவில்லையே ஒழிய, என் துணைவி, என் குழந்தைகள் என்ற அவன் மனதின் வைராக்கிய முடிவுக்கு மாற்றுக் கருத்தே அவனை இதுவரை தீண்டியதில்லையே!
“இவளைக் கிடத்திவிட்டு வாறேன். பார் என்ன மாதிரி கிடக்கிறாள்.” ஆரணியைப் பார்த்துச் சொன்னவாறே நகர்ந்த மதுரா, “ராது!” என்ற குரலில் திரும்பியவள், அக்குரல் அவளுள் ஊடுருவிச் சென்று அவள் உள்ளத்தை உலுப்பிப் பார்க்க, அவன் பார்வையில் அசைய மறுத்து நின்றது என்னவோ ஒரே ஒரு கணம் தான்; மறுகணம், ஒரே ஓட்டமாக தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.
இதயம் தன் துடிப்பை எக்கச் சக்கமாக அதிகரித்திருக்க, குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவளின் மூளை சிந்திக்கும் ஆற்றலுக்கு தற்கால விடுமுறையை திடீர் அறிவிப்புச் செய்திருக்க, அலங்க மலங்க விழித்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியாது, அவளருகில் யாரோ அமரும் அரவத்தில் சட்டென்று கலைந்தவள், தன்னருகில் அமர்ந்திருந்த கார்த்திகேயனையும் அவன் முகத்தில் தவழ்ந்த மகிழ்வு கலந்த முறுவலையும் பார்த்ததும் சட்டென்று எழுந்து விலகினாள்.
அவன் முகம், சட்டென்று சுருங்கிவிட்டு வழமைக்குத் திரும்பியது.
“இவளையும் பிடியும் மதுரா. நேரம் போய்ட்டுது நான் போக வேண்டும்.” என்றவன், குழந்தையை கட்டிலில் கிடத்திவிட்டு நகராது, அவள் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் போல் பிடிவாதமாக நிற்க, உள்ளே சுறுசுறுவென்று கிளம்பிய கோபத்தை முகத்தில் காட்டினாள் அவள்.
“அவளை கட்டிலில் கிடத்தி விட்டுப் போங்க.” என்றவாறே, தன் கரத்தில் இருந்தவளை தொட்டிலில் போட்டுவிட்டுத் திரும்ப, அவனோ குழந்தையோடு அப்படியே அமர்ந்திருந்தான்.
அதுவும், துளைக்கும் அவன் பார்வை அவள் இதயத்துள் நுழைந்து அவளை அவளுக்கு உணர்த்திவிட முயன்றன!
மீண்டும் மதுராவின் சிந்தை ஒருவித மயக்கத்தின் பிடியில் அகப்பட முயன்றது.
“உங்களுக்கு…இப்போதெல்லாம்…க்ளினிக்கில் வேலையே இல்லையா? எந்தநேரமும் வீட்டில் தானே நிற்கிறீங்க?” தடுமாற்றத்தோடு ஆரம்பித்தவள் நிமிர்வாகவே கேட்டபடி, “ம்ம்…அவளைத் தந்துவிட்டு போங்க.” கரத்தை நீட்ட, எழுந்தவன், “வேலை இல்லையென்று யார் சொன்னது?! ஒருத்தனை ஒழுங்காக வேலை செய்யவிட்டால் தானே!” மிக்க பவ்வியமாக குழந்தையைக் கொடுத்தான்.
“நான் நிம்மதியாக வேலையில் கவனம் செலுத்துவது, நித்தியின் கல்யாணம், இன்னும் இந்த வீட்டின் மொத்த சந்தோஷமும் உன் கையில் இருக்கு ராது. அது விளங்கியும் விளங்காத மாதிரி இருக்கிறாய்.” அவன் வார்த்தைகளைச் செவிமடுக்காத பாவனையில் நகர முயன்றவளை, தோள்களில் பற்றி நிறுத்தினான் அவன்
சட்டென்று முறைத்தாள் மதுரா. “கையை எடுங்க.” அவன் கரத்தைத் தட்டிவிட்டுவிட்டு விலக, கூர்மையாகப் பார்த்தவன் பார்வையில் பொறுமையின்மை தெளிவாகவே தெரிந்தது.
“கோபப்படுகிறாயா ராது? அதை நான் செய்ய வேண்டும்.”
“உங்களை கோபப்பட வேண்டாம் என்று யார் சொன்னா? நன்றாகக் கோபப்படுங்க; சந்தோஷப்படுங்க; என்னவும் செய்யுங்க, அது உங்க விருப்பம்; என்னோடு வேண்டாம்.” சீறினாள் இவள்.
“நீ பேசுவதைப் பார்த்தால் உனக்கே வேடிக்கையாக இல்லையா ராது? பொறுமை என்ன விலை என்று கேட்டு விடுவேனோ என்று பயமாக இருக்கு. உன் மனதில் எனக்கு நிச்சயம் இடம் இருக்கு; அதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதல்லவா?” கேட்டவனின் குரல், மிகவும் இறங்கியிருந்தது.
சுறுசுறுவென்று அவளுள் எழுந்த கோபம் வந்த இடம் தெரியாது புகையாக விலக, விழிகள் கலங்க அவன் பார்வையைத் தவிர்த்தாள் அவள்.
“ஏன் ராது, இவ்வளவு நாட்கள் ஒரே வீட்டில் இருக்கிறோம், இன்னும் என் மீது சின்னதாகவேனும் நம்பிக்கை வரவில்லையா?
“நம்பிக்கையா?!” கேட்டவள் விழிகள் நிறைந்தே விட்டன!
“நம்பிக்கை இல்லாமலா இங்கு நான் இருக்கிறேன்? என்னைவிட உங்களில்..” மென்று விழுங்கியவள், “உங்களில் நிறையவே நம்பிக்கை இருக்கு!” என்றதும் ,
“அப்போ பிறகென்ன ராது.”
“பிறகென்னவென்றால், எதைக் கேட்கிறீங்க என்று புரியவில்லை. உங்களுக்கு நான் கொஞ்சமும் பொருத்தமற்றவள் கார்த்தி. உங்களுக்கேற்றவளைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்க. அந்த முடிவில் நான் ஒருபோதும் மாற மாட்டேன்.
கொஞ்சம் கண்டிப்பாகச் சொல்லி நித்தியின் திருமணத்தை நடத்த வேண்டியதும் உங்க பொறுப்பு. இந்த வீட்டின் மகிழ்வும் உங்க பொறுப்பு. இதில் ஏன் என்னை இழுத்து விடுறீங்க?
நான்..நான் இன்று இருந்துவிட்டு நாளை போகப் போகின்றவள்.”
கணீரென்று உரைத்துக்கொண்டு வந்தவளின் குரல் தட்டுத் தடுமாறியது.
கலங்கிய விழிகளை அவனுக்கு காட்டப் பிரியப்படாது மறுபக்கம் திரும்பிக் கொண்டவளின் முதுகை, செய்வதறியாது பார்த்திருந்தவன், “நீ எனக்குப் பொருத்தமற்றவள் என்பதை நீயே முடிவு செய்வாயா ராது? என் விருப்பம் அதில் முக்கியமில்லையா? உன்னை நீயே ஏன் குறைத்துக் கொள்கிறாய்? அப்படி எந்த விதத்தில் நீ எனக்குப் பொருத்தமின்றிப் போனாய்?” கேட்டுக்கொண்டே நெருங்கி, அவளைப் பிடித்துத் தன் புறமாகத் திருப்பினான் .
நீரில் மிதந்த அவள் விழிகளைப் பார்த்தவனுக்கு கோபமே வந்தது.
“இல்லாததையும் பொல்லாததையும் நினைத்து உன்னை நீயே குறைத்துக் கொள்ளாதே ராது.
எனக்கு உன்னைவிட யாருமே பொருத்தமாக அமைய முடியாது. அதேபோன்று, உனக்கும் நான் நல்ல துணையாக இருப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கு. உன் அடிமனதிற்கும் இந்த நிதர்சனம் தெரியும் ராது.” அவள் விழிகள் வடித்த கண்ணீரை மெல்லத் துடைத்து விட்டவன் ஆழ்ந்த குரலில் தொடர்ந்தான்.
அவன் குரல் அவளுள் நுழைந்து எது எதுவோ செய்விக்க ஆடாமல் அசையாமல் அப்படியே உறைந்து நின்றாள் அவள்.
“வார்த்தைகளுக்காகச் சொல்லவில்லை ராது; உன்னோடு மட்டும் தான் என் வாழ்வு மகிழ்வாக அமையும். அதில் என் மனம் தீர்மானமாக இருக்கு. இதை ஏன் உன்னால் நம்ப முடியவில்லை. சொல்லு ராது என்ன காரணம்?”
அவன் கேள்விக்குப் பதில் சொல்லும் திரானியின்று மௌனியாக நின்றாள் மதுரா.
‘நீங்க சொல்லும் நேசத்தின் அஸ்திவாரம் பரிதாபம் தானே? அதில் எழுப்பும் வாழ்வெனும் கட்டிடம் நிலைத்து நிற்குமா? நாட்கள் உருண்டோட கலகலத்துப் போகாதா? அது ஏன் உங்களுக்குப் புரியுதில்லை! இன்று சுகமாகத் தெரிபவர்கள் நாளை சுமையானால்!?’ அவள் மனதில் அரற்றல் இவன் மனதைத் தொடவில்லை.
பேச்சற்று, கலங்கி நின்றவளின் நிலை பரிதாபத்தை உருவாக்கினாலும், அதையும் கடந்து ஆத்திரம் தான் உருவானது அவனுக்கு!
“இதற்கும் மேல், என்னால் என்னை எப்படி உனக்குப் புரியவைக்க முடியும்? சத்தியமாக விளங்கவில்லை ராது. உனக்கு என்னில் சற்றும் நம்பிக்கை இல்லை என்றுதான் நான் நினைக்க வேண்டியுள்ளது.” குரல் இறுகத் தொடர்ந்தவன்,அடுத்த நொடி அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

