28
“அன்று அம்மா பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் நிஜம் மட்டும் தான் இருந்தது உஷா. அதோடு, நான்…என்னால்…” சற்றே தடுமாறியவள், “என்னால் சுற்றியிருந்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகியது.
சுதா மிஸ் சொன்னதில் பிழையேதும் இல்லையே! கண்ணிருந்த குருடியாக, சுயநலவாதியாகத்தான் என்னை நானே பார்த்தேன்.
கார்த்தியின் அன்பை, அவர் குழந்தைகளில் காட்டிய பாசம், பரிவை மனமார ஏற்ற என்னால், அவரைத் திருமணம் செய்வது பற்றி நினைத்தும் பார்க்க முடியவில்லை.
அவருக்கு ஒரு நல்ல மனைவியாக இருக்க எந்தத் தகுதியுமில்லை என்றே என் மனம் அடித்துச் சொன்னது.
அப்போ, ‘அண்ணா கல்யாணம் முடிந்தால்தான் என் கல்யாணம்.’ என்று காத்திருக்கும் நித்தி வாழ்வு? கார்த்தி வாழ்வு?”
மூச்சு விடாது பேசியவள், நீண்ட நாட்களின் பின், பிரவாகமாக வழியும் விழிநீரை வேதனை முறுவலோடு துடைத்துக்கொண்டாள்.
“நிறையவே யோசித்தேன் உஷா. அம்மாவுடன் பேசிய பின் கிட்டத்தட்ட ஒருகிழமையாக முழுநேர வேலையே அதுதான்.
என் வாழ்வு இடிந்து போனபோது தனியாக நிற்கத் துணிந்த எனக்கு, இனியும், யார் உதவியும் இல்லாது வாழ முடியுமென்றே தோன்றிச்சு!
அதைவிட, வாழவேண்டும் என்கின்ற வெறி, வாழ்ந்து காட்டுவேன் என்கின்ற தீர்மானம், கார்த்தி வீட்டிலிருந்து, அவர் பார்வையிலிருந்து, ஏன் அவர் எண்ணத்திலிருந்து மொத்தமாக விலக வைத்தது.
அதுவே, அம்மாவிடம் போக வேண்டுமென்ற எண்ணத்தை என் மனதில் கொஞ்சமும் வரவிடவில்லை.” என்றவள், இவ்வளவு நேரமாக, தன் மொத்தக் கதையையும் கேட்டுவிட்டு அதிர்வும் கண்ணீருமாக அமர்ந்திருக்கும் ஆருயிர்த் தோழியைப் பார்த்து இலேசாக முறுவலித்தாள்.
“நீ இப்போ ஏன்டி அழுகிறாய்? என் தலையில் எழுதியது இதுதான்; அதை நான் அனுபவிக்க வேண்டாமா? இப்போதெல்லாம் நடப்பவற்றை மிகவும் யாதார்த்தமாக எதிர்கொள்ளும் தைரியம் என்னுள் இருக்குப்பா; நீ கண்ணைத் துடைத்துக் கொள்ளடி!“ தோழியை அதட்டினாள்.
“நீ நினைப்பதுபோல அம்மாவில் எனக்குச் சிறிதும் வருத்தமில்லை உஷா. அப்படி ஒரு நன்றி கெட்ட காரியம் செய்வேனா? அம்மாவின் மனம் எனக்கா தெரியாது.” மீண்டும் விழிகள் கலங்க, சமாளித்துத் தொடர்ந்தாள்.
“அம்மாவின் மனம் எனக்கு நன்றாகவே தெரியும்டி. அன்றைக்கு வந்ததும் வராததுமாக கார்த்தியைக் கல்யாணம் செய் என்றபோது எரிச்சலும் கோபமும் தான் வந்திச்சு; அதே, கொஞ்சநாட்களுக்குப் பிறகு யோசிக்கையில், நடந்த பழைய கதைகளைத் துருவி என் மனக்காயத்தை கிளறாமல் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுவோம் என்ற அவரின் ஆதங்கம் விளங்கிச்சு!
தான் திட்டினால், பேசாமல் ஒதுங்கினால் சரி, கார்த்தியை கல்யாணம் செய்யச் சம்மதிக்க மாட்டேனா என்றுதான் நினைத்திருப்பார்.
அவர் ஆசையை நிவர்த்தி செய்ய முடியாத நான், சுமையாகப் போயிருந்து அவர்களை வருத்த விரும்பவில்லை.”
“இது என்னடி பேச்சு? ஆன்ட்டி உன்னையும் குழந்தைகளையும் சுமையாக நினைப்பாரா?” தோழியின் வாய்மொழி மூலம் அவள் வாழ்வில் நிகழ்ந்தவற்றைக் கேட்டு, பேச்சின்றி இருந்த உஷா, கோபத்தோடு வாய் திறந்தாள்.
“ஒருகணமும் அப்படி நினைக்க வேண்டாமே என்று நினைத்தேன் உஷா.
அப்படியே இல்லையென்றாலும் என்னைப் பார்க்கும் போதெல்லாம், தன்னால் தான், தான் செய்து வைத்த திருமணத்தால் மகள் வாழ்வு இப்படியானதே என்று வருந்துவாரா இல்லையா?
அதோடு, நான் இலங்கை வருவேன் என்று யாரோ சொல்லி அதை அறிந்த அந்த ஆட்கள்…” சொல்லிக்கொண்டு வந்தவள் தோழியின் கேள்விப் பார்வையில் நிதானித்தாள்.
“அதுதான் கணேஷின் அம்மா..” அப்பெயரை உச்சரிக்கும் பொழுது எவ்வித வேறுபாடும் அவளில் தெரியவில்லை. யாரோ ஒருவர் பற்றி பேசுவது போலவே பேசியவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் உஷா.
‘அப்போ, கடந்த கால கசப்பை இவள் வென்றுவிட்டால் என்றுதானே அர்த்தம்! அந்த நினைவுகளை மறப்பதோ அடியோடு அழிப்பதோ சாத்தியமற்றது என்றாலும், குப்பையாக ஒதுக்கித் தள்ளுவது சாத்தியம் தானே! அழுக்கு என்று அழுந்தத் தேய்த்துக் கழுவித் தள்ளியதை நினைத்து வருந்துவது இயல்பில்லையே!’ என, மனதுள் எண்ணிக்கொண்டாள் உஷா.
“நான் அங்கு வந்தால் தம் பேரப்பிள்ளைகளை அழைத்துப் போய்விடுவோம் என்றார்களாம்; இதையும் அம்மா சொல்லவில்லை; தங்கச்சி சொன்னாள். அதற்குப் பிறகும் அங்க போய், அப்படி நடக்குதா இல்லையா என்று பரீட்சித்துப் பார்க்க விரும்பவில்லையடி.
அம்மாவுக்கு என்னதான் என்னைப் பற்றிக் கவலையிருந்தாலும் இந்த இரண்டு வருடங்களில் அது குறைந்திருக்கும் தானே? மகள் எங்கோ தன் பிள்ளைகளோடு வாழ்கிறாள் என்றிருப்பார்!”
“அதெப்படிடி உனக்குத் தெரியும்! உன்னை நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தால்!” சீறினாள் தோழி.
“கவலை இல்லாமல் இருக்காதுதான் உஷா; நான் அவர்களோடு இருந்திருந்தாலும் அது இருக்கும் தானே? இப்படி, கண்ணுக்குத் தெரியாது இருக்கும்பொழுது நாள் செல்லச் செல்ல கவலைகள் நிச்சயம் உருமாறி விடும்டி!
அதனால் தான், எனக்கு உதவி தேவை என்று என் நிலையைச் சொல்லிக் கேட்க, அரசாங்கமே எல்லா உதவியும் செய்து தந்தார்கள்.
கார்த்தி வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து விதுராவோடு மெயிலில் தொடர்பிருக்கு; அப்பப்போ பிள்ளைகளின் ஃபோட்டோக்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்; அதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டு, உள்ள நிலையை நான் ஏற்றுக் கொண்டது போல் அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.” எனச் சொல்லி, மென்மையாக முறுவலித்த தோழியை கரித்துக்கொண்டு வந்த விழிகளால் ஏறிட்டாள் உஷா.
“நீ என்னதான் சொல்லுடி மது, இதையெல்லாம் என்னால் கற்பனையிலும் காணக் கஷ்டமாக இருக்கே; அனுபவித்த உனக்கு!” கண்ணீரோடு சொன்ன தோழியின் அருகில் சென்றமர்ந்து கொண்டாள் மதுரா.
“எவ்வளவு வருடங்களாச்சி நாம சந்தித்து!? A/L(பிளஸ்டூ) முடிந்த கையோடு கொழும்பு போன நீ, அப்படியே அவுஸ்ரேலியா போயிட்டாய். இப்போ பார், இத்தனை வருடங்களின்பின் நான் வாடகைக்கு இருக்கும் வீட்டின் சின்ன மருமகளாக உன்னை கண்டதில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன். அதை விட்டு விட்டு, முடிந்துபோன என் சோகக்கதையைக் கேட்டுப் புலம்புகிறாயே!
ஆன்ட்டி, சின்னமகன் குடும்பம் அவுஸ்ரேலியாவில் என்று சொல்லி இருக்கிறார்தான்; நான் இங்குவர முதல்தான் நீங்க விடுமுறைக்கு வந்து போனீர்கள் போல!
“ஆமாம்டி ஆமாம். அப்போதும் நீ இங்கிருப்பது தெரியாமல் போச்சே! தொடர்பில்லாமல் போனதால் பச்…”
“சரி சரி விடு; இப்போது சரி கண்டோமே! ஆன்ட்டியின் பெரியமகன் குடும்பம் இலண்டனில் இருப்பதால் அடிக்கடி வந்து போவார்கள். இப்போதும் உன்னை இங்கு கண்டதை என்னால் நம்ப முடியவில்லையடி உஷா.”
இவளைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்த தன் மாமியாரிடம் விபரம் கேட்டுவிட்டு நேரில் வந்து கேட்ட உஷாவிடம், தன் வாழ்வில் நடந்தவற்றை மறைக்காது பகிர்ந்து கொண்டவள், அதைக்கேட்டு கலங்கி நிற்கும் தோழியைத் தேற்றும் விதமாக பேச்சை மாற்றினாள்.
“போடி லூசு…வீட்டு ஹாலில் பெரிதாக எங்க கல்யாணப்படம் மாட்டி இருக்கே; அதை, இந்த இரண்டு வருடங்களில் ஒருதரம் சரி காணவில்லையா?” என்ற உஷா,
“அது எங்கே, நீதான் நான்கு வார்த்தைகளோடு ஐந்தாவதைச் சேர்க்கவே ஐந்து மாதங்கள் யோசிப்பாயாமே! மாமி தான் சொன்னார். பிறகெப்படி வீட்டுக்குள்ள வருவது? ஃபோட்டோவைப் பார்ப்பது?” கேலி போல் கடிந்த தோழியை சிறுமுறுவலோடு பார்த்தாள் மதுரா.
“அப்படி எல்லாம் இல்லையடி. இங்கு வந்த பின், கொஞ்சநாட்களில் உற்றவர்களாகப் பழகியவர்களை ஒரேநாளில் பிரிந்த பிறகு…” சொல்லி நிறுத்தியவள் விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள்.
அவள் மனக்கண்ணில் தோன்றிய யோகம் குடும்பமும் நித்தியும், ‘இவ்வளவு செய்த எங்களை அவ்வளவு இலகுவில் உதற முடிந்ததா?’ கடினமாகவே கேட்டு விட்டு மறைந்தனர்.
சாதுவான வரிவடிவமாகத் தோன்றி, மெல்ல மெல்லப் பிரகாசமாக அவளை வியாபித்து, அவளுடலின் ஒவ்வொரு அணுக்களையும் சிலிர்க்கச் செய்தான் கார்த்திகேயன்.
அவன் ஆதிக்கத்தில் தடுமாறித் தள்ளாட்டம் போட்ட மனதை எப்போதும் போல ஏக்கமாகப் பார்க்க மட்டுமே செய்தாள் மதுரா.
அவனை முதல் முதல் சந்தித்த கணம், அவன் விழிகளில் பளிச்சிட்ட பரிதாபப்பார்வை; கணத்தில் அதை துடைத்து மிகச் சகஜமாக, நட்பாக, உரிமையாக, உறவாக, உன் குழந்தைகளின் தந்தை நான் என நேரிடியாகச் சொல்லி, செயலில் காட்டியவனின் துணிவும் அன்பும் எப்போதும் போல் அவள் இதயத்தை தடதடக்கச் செய்தன!
அந்த அதிர்வில் இன்பமும் துன்பமும் கலந்து இறுகப் பின்னிப் பிணைந்திருந்ததை துல்லியமாக உணர்ந்து நிலைகொள்ளாது தவித்தது அவளுள்ளம்.
அதோடு நிற்காது, பலத்த குற்றச்சாட்டோடு மனதுள் ஆட்சி செய்து நின்றவனின் விழிகளை எதிர்நோக்கத் திராணியின்றி டப்பென்று விழிகளைத் திறந்து தோழியைப் பார்க்க, அவளும் இவளையே தான் பார்த்திருந்தாள்.
சட்டென்று மென்முறுவலில் சமாளித்தாள் மதுரா.
“யாரோடும் நெருங்கிப் பழகுவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன் உஷா. அதோடு, ஆரம்பத்தில் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு சமாளிப்பதே பெரிய சவாலாக இருந்தது. அவர்களை எக்குறையும் இல்லாது வளர்க்க வேண்டும் என்கின்ற வைராக்கியம் தான் என்னை இன்றுவரை நிமிர்ந்து நிற்க வைக்குதடி.

