29
“மது, ஒரு ஐந்து நாளைக்குத்தான்; உனக்கும் சேர்த்து ‘பீச் ஹவுஸ்’ புக் பண்ணியாச்சு; பெரிசா பிகு பண்ணாதேப்பா; நீதான் எங்குமே போவதில்லையாமே! மிஞ்சிப் மிஞ்சிப் போனால் அருகிலுள்ள ‘பார்க்’வரைதான் போவாயாம்; மாமி சொன்னார்.” என்ற தோழியை, பதில் சொல்லாது ஒருபார்வை பார்த்தாள் மதுரா.
“அட…சும்மா வாடி; குழந்தைகளும் என்ஜாய் பண்ணுவார்கள். சம்மர் லீவு விடுவது வீட்டுக்குள் இருந்து பழங்கணக்குப் பார்க்க இல்லை.” விடாது சீண்டினாள் உஷா.
“நான் ஒன்றும் பழங்கணக்குப் பார்க்கவில்லை.” பட்டென்று சொன்னாலும் தோழியின் வற்புறுத்தலில் இருமனதாக ஒப்புக்கொண்டு, தயாரானாள் மதுரா.
விடுமுறை என்பதால் வேறெந்த சாட்டுக்களையும் சொல்ல முடியவில்லை என்பதோடு, குழந்தைகளின் குதூகலம் பார்த்தவள் அமைதியாகவே ஆயத்தமானாள்.
ஐந்துநாட்களுக்குத் தேவையான உடுப்புகள், பிள்ளைகளுக்கு தேவையான பொருட்கள் என எடுத்து வைத்தவளை, சிற்றுண்டிகள் எதையும் தயார் செய்ய வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டு விட்டாள் உஷா.
அன்று காலையில் எட்டுமணி போல அனைவரும் புறப்பட ஆயத்தமானார்கள்.
சின்னமகன் வந்து நிற்கும் ஒருமாதத்துக்கும் வானொன்றை வாடகைக்கு எடுத்து விட்டிருந்தார் உஷாவின் மாமனார்.
“எங்க பொருட்கள் எல்லாம் வானில் வைத்து விட்டோம்; உன் பொருட்களை தா!” வந்து கேட்ட உஷா, இவள் மறுக்க மறுக்கக் கேட்காது இரு பெட்டிகளையும் தானே இழுத்து ஏற்றினாள்.
அனைவரும் ஏறிக்கொள்ள, உஷாவின் கணவனே வானை ஓட்டினான்.
கோடையின் சிறுதுளியையும் உணரவிடாது வானின் கறுப்புக்கண்ணாடிகளும் ஏசியும் துணை செய்ய, குழந்தைகள், தாத்தா பாட்டியோடு பின்னாலிருந்து குதூகலமாகக் கதைத்துக்கொள்ள, அருகருகருகே அமர்ந்திருந்த உஷாவும் மதுராவும் பலகாலத்துக்குப் பின் தம் பாடசாலை நாட்களை மீட்பதில் முனைந்தனர்.
“வாஷ் ரூம் போக வேண்டுமென்றால் சொல்லுங்க; நின்று விட்டே போகலாம்.” என்ற கணவனை இலேசாக முறைத்த உஷா, “அதெல்லாம் தேவையில்லைப்பா; ஒரு இரண்டு இரண்டரை மணி ஓட்டத்தில் போய் விடுவோம் இல்லையா? ஒரே இழுவையாக இழுங்க.” என்றாள்.
மனைவியின் முறைப்பை உள் கண்ணாடியால் பார்த்த அவள் கணவன், அவள் சொன்ன விதத்தில் எழுந்த முறுவலோடு வானை ஓட்ட, “ஏன் உஷா, அப்படி என்ன அவசரம்? நின்று ஆறுதலாக போகலாம்; ஆன்ட்டி அங்கிள் வாஷ் ரூம் போக வேண்டியிருக்கும்.” மதுரா முடிக்க முன், “இல்லம்மா; எங்களுக்குத் தேவையென்றால் சொல்வோம்; நீ போ ராசா!” உஷாவின் மாமியார் சொல்ல, வாகனம் விரைந்தது.
புதிய வாகனப்பயணம் ஆரணி, ஆரபி இருவரையும் தாலாட்ட, விழிகளைச் சொருகி உறக்கத்துக்கு ஆயத்தமானவர்களில் ஒருபார்வையோடு தோழியோடு அளவளாவிக் கொண்டு வந்தாள் மதுரா.
இப்படியே பேச்சு சுவாரஸ்சியத்தில் இருந்த தோழிகள், “பரவாயில்லையே! இரண்டு மணித்தியாலத்தில் வந்துவிட்டோம்.” என்றவாறே வானை நிறுத்திய உஷாவின் கணவரின் குரலில் நடப்புக்கு வந்தார்கள்.
உறக்கத்திலிருந்த குழந்தைகளைப் பார்த்துவிட்டு வெளிப்புறம் பார்த்த மதுராவின் நெற்றி சுருங்கியது.
கணத்தில் தொற்றிய பரபரப்போடு சுற்றிலும் திரும்பித் திரும்பிப் பார்த்தவள் அப்படியே அதிர்ந்து போனாள்.
“உஷா!” அவளையும் அறியாது குரல் உயர்ந்திருந்தது.
“கடற்கரைக்குப் போகப் போவதாகச் சொல்லிவிட்டு…” வார்த்தைகளை முடிக்காது வெறித்தவளை அமைதியாகப் பார்த்தாள் உஷா.
“இங்க பாருடி, உன்னை மிகவும் அமைதியானவள் என்று என் கணவரிடம் சொல்லி வைத்திருக்கிறேன். அந்த வார்த்தைகள் சுத்தப் பொய் என்று நிரூபித்துவிடாதே!” கண்டிப்புடன் சொன்னவளை, இயலாமையோடு பார்த்துவிட்டு சட்டென்று பின்புறம் திரும்பினாள்.
“ஆன்ட்டி! என்ன ஆன்ட்டி இதெல்லாம்? நீங்க சரி ஒருவார்த்தை என்னிடம் சொல்லவில்லையே! இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன்; இவள் முதலிலிருந்து ஆரம்பிக்கப் பார்க்கிறாள்.” தீனக்குரலில் சொல்லி விம்மியவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள் உஷா.
“அசடு! லூசி மாதிரி பேசாதேடி. எதடி நிம்மதி? முதல் எத்தனை நாளைக்கு?” குரல் கனிய கடிந்து கொண்டாள்.
“நீங்க இறங்குங்கப்பா; பிள்ளைகளும் மாமி மாமாவும் இறங்குங்க; ஒரு ஐந்து நிமிடம் வெளியில் நில்லுங்க; இவளைக் கூட்டிக்கொண்டு வாறேன்” அவர்கள் இறங்க, செய்வதறியாது பார்த்திருந்தாள் மதுரா.
“இங்கு வந்த இடத்தில் உன்னைத் தற்செயலாகக் கண்டேன் என்று நினைக்கிறாயா மது?” தோழி கேட்ட தொனியில் திடுக்கிடலோடு அவளைப் பார்த்தாள் மதுரா.
“இல்லையடி; அது உண்மை இல்லை. உன் கதை முழுவதும் தெரிந்தபின் உன்னைக் காணவேண்டும் என்றுதான் இவ்வளவு அவசரமாக வந்தோம். இல்லையென்றால், இம்முறை மாமா மாமிதான் அங்கு வர இருந்தார்கள்.” என்றவளை, மின்னலாகத் தாக்கிய அதிர்வோடு பார்த்தாள் அவள்.
“ஒருமாதத்துக்கு முதல் மாமாவின் பிறந்த நாள் ஃபோட்டோக்கள் அனுப்பி இருந்தார்கள். அதில் ஆரபி ஆரணியைக் கண்டதும்…” சொல்லி நிறுத்திய உஷாவின் விழிகள் கலங்கின.
“என் செல்லத் தோழியின் அச்சைக் கண்டால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்! ஹ்ம்ம்…உடனேயே ஃபோனைப் போட்டுக் கேட்டால், உன் பிள்ளைகள் என்று அறிந்து கொண்டேன். அதோடு, உன்னைப் பற்றி தமக்குத் தெரிந்ததைச் சொன்னார் மாமி. அவருக்கு கார்த்தி அண்ணா, நித்தி பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.
மாமி சொன்ன உடனேயே உன் அம்மாவின் நம்பர் எடுக்க எவ்வளவோ முயன்றேன். என் அவசரத்துக்கு முடியவில்லை. அப்படி இருக்கையில் ஒருநாள் இவரின் ஃப்ரெண்ட் குடும்பம் லஞ்சுக்கு வந்திருந்தார்கள்.
ஏதோ பேச்சுவாக்கில் உன் கதை வந்தது. அதுவும், அந்த அக்காவும் நெதர்லாந் என்பதால் தான் பேசவே ஆரம்பித்தோம். அப்போ, அந்த அக்கா உன் பெயரைக் கேட்டதும் திகைத்துப் போனவர், துருவித் துருவிக் கேட்டார். உன் குழந்தைகளின் படங்களை வாங்கிப் பார்த்தவர், பிறகுதான் தன் தம்பி கார்த்தி பற்றிச் சொன்னார்.” கேட்டுக் கொண்டிருந்த மதுராவோ அப்படியே தளர்ந்து சாய்ந்தாள்.
‘எங்கிருந்து எப்படி எப்படியெல்லாம் மீண்டும் தொடர்பு?’ வியப்பை மீறிய கலக்கம் அவள் மனதில்.
‘இதோ, கார்த்தி வீட்டின் முன்னால் நின்று கொண்டிருக்கிறாய். இறங்கி ஓடு மதுரா.’ கொள்ளை ஆசையோடு மனம் கட்டளையிட்டாலும் புத்தி ஏற்க மறுக்கின்றதே!
‘அவரின் அக்கா அப்படி என்ன சொல்லியிருப்பார்!? அவர்களுக்குத்தான் என்னைப் பிடிக்காதே! பிள்ளைகளோடு வந்து என் தம்பியிடம் ஒட்டிக்கொள்ளப் பார்த்தாள் என்று சொல்லியிருப்பாரோ?’ விசனம் கொண்டது அவள் புத்தி.
செவிகளிரன்டையும் பொத்திக் கொண்டவள் தோழியை கோபமாகவே ஏறிட்டாள்.
“போதும்டி; நீ சொன்னது வரை போதும். அப்போ, என்னைப்பற்றித் தெரிந்து கொண்டே திரும்பவும் என் வாயால் சொல்ல வைத்தாயா? அதில் என்னத்தைக் கண்டாய்?
இப்போ ஏன்டி இங்க கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்? இந்த இரண்டு வருடத்தில் அவர்கள் என்னை மறந்தும் இருக்கலாம். மீண்டும் தேவையில்லாத பிரச்சனைகள் வரவா?” என்றவளின் பார்வை, அமைதியாக வெளியில் நின்ற தோழியின் கணவனில் கெஞ்சலோடு பாய்ந்தது.

