யன்னலைளைத் திறந்து, “அண்ணா, தயவு செய்து வீட்டுக்கே வண்டியை விடுங்க.” சொல்லி முடிக்க முன், அவள் தொடையில் ஒரு அடி போட்டாள் உஷா.
“பைத்தியமாடி நீ! அல்லது எங்களைப் பார்த்தால் எப்படித் தெரியுது? எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு அத்தூரமிருந்து வந்தது உன் அசட்டுப்பேச்சைக் கேட்கவா? நான் ஒன்றும் உன் கார்த்தி இல்லை; உன் அம்மாவும் இல்லை.” சீறினாள் உஷா.
“என்ன முறைக்கிறாய்? நீ நினைத்தபடி விட்டவர்கள் தானே அவர்கள். நீ இப்படி தனியே போயிருப்பதில் கமலா ஆன்ட்டி அப்படியே சந்தோசத்தில் மிதக்குறாவாக்கும். ‘பெற்ற பிள்ளையின் ஒரு சொல் என் காதில் விழாதா என்று ஒவ்வொருநாளும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்மா. அவள் மனம் என்றைக்கு இரங்கும்.’ என்று என்னிடம் அழுதார் தெரியுமா?
ஆனாலும் உனக்கு இப்படி கல் நெஞ்சம் வந்திருக்க வேண்டாம் மது; உன் அம்மாவோடு ஒருவார்த்தை பேச உன்னால் முடியவில்லையே!”
தன்னைக் குற்றவாளியாக்கிய தோழியிடம் தன்னிலை விளக்கமளிக்க முயலவில்லை அவள்.
‘என் உயிரினும் மேலான அம்மாவோடு கதைக்காது இருப்பதில் எனக்கு மட்டும் சந்தோசமா என்ன?
அதோடு, என்றைகாவது அம்மாவின் சொல்மீறி நடந்தவளா நான்! இல்லையே! அவரை, என் தங்கைகளை, இவன் தான் உனக்கு என்று அவர்கள் கைகாட்டியவனை என்று அனுசரித்தே நடந்திருக்கிறேன்.
அப்படியிருக்கையில் எனக்கு நடந்ததுதான் என்ன?
நான் அனுபவித்த வலிகளும் கஷ்டங்களும் நானே வருந்தி வரவழைத்தவையா?
அப்போதெல்லாம் அம்மா, தங்கச்சிகள் வாழ்வு என்று பார்த்து, என் துக்கத்தை நானே விழுங்கிக்கொண்டு தனிமையில் துடிக்கவில்லையா?
அதே, அன்று, உன் வாழ்வை மலரவைக்கும் மறுவாழ்வு என்று என் முன்னால் இருந்ததை நினைக்கையில், என்னுள் அமைதி பரவுவதற்குப் பதிலாக அதிர்வும் பயமுமே ஆக்கிரமித்திருந்தது.
அம் மனநிலையில், என் வாழ்வை மலர வைக்க, ‘உன்னை நேசிக்கிறேன்!’ என்றவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க நான் விருப்பவில்லை. முகத்துக்கு நேரே அவர்களை மறுக்கும் துணிவற்று ஒதுங்கிப் போனேன்.
அம்மாவுக்கு என்றாலும் ஆறுதலுக்கு தங்கச்சிகள் இருக்கிறார்கள். விதுராவின் குடும்பம், அவள் குழந்தை என்றிருக்கு! எனக்கு? என் குழந்தைகளுக்கு?’
அப்படியும் இப்படியும் அரற்றியது அவளுள்ளம்! அவளோ, தலைநிமிராது இருந்தாள்.
“எவ்வளவோ இழுபறிக்குப் பிறகு நித்தி கல்யாணம் நடந்திருக்கு; அதுவும் ஒருவருடத்துக்கு முதல்தான். இப்போ ஆறுமாதங்களாக அவள் இலண்டனிலாம்; அவள் கணவனுக்கு அங்கு வேலையாம்.” என்ற தோழியை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் மதுரா.
‘ஹப்பாடா!’ அக்கணம் அவள் நெஞ்சின் அழுத்தம் குறைந்ததை தெள்ளத் தெளிவாக உணர்ந்தும் கொண்டாள்.
மறுகணம், “அப்போ கார்த்தியும் கல்யாணம் செய்து விட்டாரா?” அவள் மனம் மணக்கோலத்தில் அவனை பொருத்திப் பார்க்க தீர்மானமாக மறுத்தாலும் இதழ்கள் கேட்டுவிட்டன!
“ஏன்டி கேட்க மாட்டாய்? இப்போ உன் விருப்பம் என்ன? அவர் கல்யாணம் செய்திருக்க வேண்டுமா? அல்லது உன்னையே நினைத்துக் கொண்டு அலைய வேண்டுமா?”
“ஏன் உஷா இப்படியெல்லாம் பேசுகிறாய்?! நான் ஒருநாளும் அப்படி நினைக்கவில்லை; அவர் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று மனதார நினைப்பவள் நான். அப்படி இருக்கவேண்டும் என்றுதானே ஒதுங்கி வந்தேன்.”
“ஆங்! நீங்க ஒரு தியாகச் செம்மல் என்று எங்களுக்குத் தெரியுமே!” கேலியாகச் சாடினாள் உஷா.
மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள் மதுரா. ஆனால், அவளிதயமோ வெகுவாகப் பரபரத்தது. வர்ணனைக்கு அப்பாற்றபட்ட உணர்வுகளின் படையெடுப்பில் உள்ளம் கொந்தளிக்க, மெலிதாக நடுங்கியது அவள் தேகம்!
‘கார்த்தி ஒருவேளை கல்யாணம் செய்திருந்தால் என்னை இவள் அழைத்து வந்திருக்க மாட்டாள்.’ பரபரப்பிலும் சிலிர்த்தாள்.
மலரவா விடவா என்ற ஐயத்துக்கு இடமளிக்காது இதழ் விரித்தது அவளிதயம்!
வாழ்வில் வஞ்சிக்கப்பட்டவள் அப்படியே அழிந்திடவில்லை! நமக்கிட்டதென்று அதில் அமிழ்ந்திடவுமில்லை! வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நிமிர்ந்து நின்று எதிர்கொண்டாள். ஆதரவுக்கரம் நீட்டி நேசத்தை வழங்க முற்பட்டவனை இலாவகமாக ஒதுக்கி, ஒதுங்கிப் போனாலும் அந்த பிடிவாதக்காரன் அவள் இதய ஆழத்தில் நிரந்தரமாக உறைந்துவிட்டதை அறிந்தே இருந்தாள் இவள்.
தன்னால் அவன் வாழ்வு மலராது என்றெண்ணி அவன் பார்வையிலிருந்து விலகியவள், அவனது நினைவுகளை உதறத் துணியவில்லையே! அவையே தன் மிகுதி வாழ்வின் பிடிமானம் என எண்ணினாளோ என்னவோ!
இதுவரை, அவளின் போக்குக்கு வழிவிட்டு ஆழ்மனதில் அடைந்து கொண்ட அவனது எண்ணங்கள் மெல்ல மெல்ல இளகி, மனதை அள்ளும் நறுமணமாகி, மலரிதயத்தால் கசிந்து அவளை ஆட்கொள்ள முயன்றன!.
‘இந்த ஆறுமாதமும் தனியாக எவ்வளவு கஷ்டப்பட்டாரோ? அன்று நான் போனபின், இங்கே தான் இருக்கிறேன் என்பதை அறிந்திருப்பாரா? ச்சா ச்சா..அப்படித் தெரிந்திருந்தால் இந்த இரண்டு வருடங்களில் வராமல் இருந்திருக்க மாட்டார். குழந்தைகளைப் பாராமல் இருந்திருக்க மாட்டார்.’ உணர்வுப் பிடியில் திணறிய உள்ளம் ஏதோ ஒருவித நம்பிக்கையில் சொல்லிக் கொண்டாலும், அவன் முன் சென்று நிற்க அவளுள் துளியும் தெம்பிருக்கவில்லை.
‘குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் போனவள், இப்போ அவர் முகத்தில் எப்படி விழிப்பேன்!’ ஒருபக்க மனமோ அவனோடு கழித்த நாட்களின் நினைவில் இதத்தில் உருகிக் கரைய, மறுபுறமோ பதற்றத்தில் நடுங்கியது.
“பேசியது போதும் இறங்குடி, என் பிள்ளைகளுக்கு பொறுமை அவ்வளவாக இல்லை; பார், ரோட்டில் அங்குமிங்குமாக அலைகிறார்கள். இறங்கு; நான் ஆரணியை தூக்குறேன்; நீ ஆரபியை தூக்கு.” அசையாதிருந்த தோழியை உலுக்கினாள் உஷா.
“அடிபடுவாயோ குத்துப்படுவாயோ ஏன் கொஞ்சுவாயோ கெஞ்சுவாயோ தெரியாது. கார்த்தி அண்ணாவோடு பேசி சமாதானமாகி கல்யாணத்திகதி குறித்துவிட்டு சொல்லு!” என்ற உஷாவை அதிர்வோடு பார்த்தன மதுராவின் விழிகள்.
“என்னடி இது பார்வை? இதையெல்லாம் அங்கே உன் ஆளிடம் காட்டு!” தயை தாட்சண்யமின்றி கடுகடுத்தாள் உஷா.
“அடுத்தகிழமை கார்த்தி அண்ணாவின் அக்கா குடும்பம் அங்கிருந்து வருகிறார்கள்; நித்தியும் வருவாள்; உன் விருப்பு வெறுப்புப் பற்றி எனக்குக் கவலை இல்லை; நினைவில் வைத்திரு.” தீர்மானமாகச் சொன்னவள்,
“நான் மதுராவை மனமார விரும்பினேன். அந்தரித்து நின்றவளுக்கு தியாக மனதோடு வாழ்வு கொடுக்க நினைக்கவில்லை. அங்கு பரிதாபத்துக்கு இடமும் இருக்கவில்லை. அதை அவள் கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை.
இப்போதும் அந்தக் குழந்தைகளை என் பிள்ளைகளாகத்தான் நினைக்கிறேன். அதற்காக, ‘என் மனதில் உனக்கு இடமில்லை.’ என்றவளை நான் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம்; கொஞ்ச நாட்கள் போகட்டும்; பார்ப்போம்.” என்று கார்த்தி கறாராகச் சொன்னதாக அவன் தமக்கை சொன்னதை இவளிடம் சொல்லவில்லை.
“உன் கல்யாணத்தை பார்த்துவிட்டுத்தான் இந்த உஷா ஃப்ளைட் ஏறுவாள் மது. அப்படி உன் அம்மாவிடம் ப்ராமிஸ் செய்திருக்கிறேன்.” படபடவென்று பேசி, “செல்லம்மா எழும்புங்கோ.” ஆரணியை தட்டி எழுப்பி, அலங்க மலங்க விழித்தவளை தூக்கிக்கொண்டு இறங்கினாள் உஷா.
‘ஆக எல்லோருக்கும் தெரிந்துதான் நடந்திருக்கு!’ முணுமுணுத்த மனம், உடலோடு சேர்ந்து ஒத்துழைக்காது தடுமாறினாலும் மிகவும் பிரயாசைப்பட்டு அடுத்த மகளை தூக்கிக்கொண்டு இறங்கினாள் மதுரா.

