மலருமோ உந்தன் இதயம் 4 – 1

4

 

மாடி மரப்படியில் கேட்ட மெல்லிய அரவத்தில், சட்டென்று அங்கே திரும்பியது கார்த்திகேயனின் பார்வை.

ஒடுக்கமான படிகளில் கவனமாக இறங்குவதில் முனைந்திருந்த மதுரா, அவளை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவர்களை கண்டுகொள்ளவில்லை.

வந்தவர்களை உபசரிக்கவென தேநீர் தயாரித்துக்கொண்டிருந்த சுபாவுடன் குசுகுசுவென்று உரையாடிக்கொண்டிருந்த யோகம், இறங்கி வருபவளைக் கவனிக்கவில்லை.

தமையனின் பார்வையைத் தொடர்ந்து, நித்தியின் பார்வையும் மதுராவில் நிலைத்தது.

யௌவனத்தின் அதீத சாரலோடு கூடிய சாந்தமான நிலா வதனம்; சற்றுமுன் நீர் அடித்துக் கழுவியிருந்ததன் உபயம் பளிச்சென்றிருந்தது.

பிடிவாதம் கொண்ட சிறுசிறு கேசக் கற்றைகள் நீர்ப்பற்றோடு கன்னங்களை உரசிக் கொண்டிருக்க, அசிரத்தையாகப் பின்னப்பட்டிருந்த ஒற்றைப்பின்னல் ஒருபக்கத் தோளால் முன்பக்கம் தவழ்ந்து கொண்டிருந்தது.

லைட் ஆரஞ் நிறத்தில் தொளதொள டாப், கறுப்பு நிற தொளதொள பாண்ட்; அவள் மேனியின் நிறத்தை அதிகரித்துக் காட்டியது.

மெல்லிய உடல்வாகில் வயிறு மட்டும் பெரிதாக, வேறாகத் தெரிந்தது.

அலங்காரமோ நகைகளோ இன்றி, துடைத்து வைத்த தோற்றத்தில் இறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்திருந்த நித்தியின் இதய ஆழத்திலிருந்து பரிதாப மூச்சு வெளியேறியது.

‘இவவுக்கு என்ன குறை! இவவைக் கட்டிய பின்னும் இன்னொருத்தியுடன் எப்படி உறவாட முடிந்தது!?’ நித்தியின் இளநெஞ்சில், விடையறிந்தே ஆகவேண்டும் என்கின்ற தவிப்போடு முட்டி மோதியது இக்கேள்வி.

‘அப்படி என்ன தான் இருக்கு அந்தப் பெண்ணிடம்! அவளும் அவள் மூஞ்சியும்.’ தொடர்ந்து எண்ணியவள் முகம் அருவருப்பில் கோணியது.

கடைசி இரு படிகள் இருக்க, ஏதோ தோன்ற நிமிர்ந்த மதுரா அப்படியே அசையாது நின்றுவிட்டாள். அவள் விழிகளில் முதலில் பட்டது கார்த்திகேயனின் முகம் தான். அப்புதியவனின் விழிகள் வெளிப்படையாகத் தெரிவித்து நின்ற பரிதாபத்தை அறிந்துகொண்டவள் உள்ளம், அவமானத்தில் மூழ்க, வதனம் கண்டிச் சிறுத்தது!

‘யார் இவர்!? யோகம் ஆன்ட்டி எங்க?!’ இவள் மனதில் குழம்ப, சற்றுமுன் அவள் உணர்ந்தது நிஜமா எனத் தடுமாறும் வகையில் மிகவும் சாதாரணமாகப் பார்த்திருந்தான் கார்த்திகேயன்.

‘இப்போ பரிதாபமாகப் பார்த்தாரே! அப்படி இல்லையா? யாரைப் பார்த்தாலும் என் பரிதாப நிலைதான் நினைவில் வருதா? யார் இவர்கள்?’ மனம் முணுமுணுக்க, அசையாது நின்றவளின் கரம் மாடிக் கைபிடியை இறுகப் பற்றியது.

அவள் கீழே இறங்காது நின்றுவிடவே, ‘எங்களைக் கண்டதும் தான் நின்று விட்டார்! இதோ வாறேன்!’ சட்டென்று எழுந்தாள் நித்தி.

“மதுரா…மதுரா தானே?” என்றவாறே விரைந்து வந்து கரங்களைப் பற்றியவளைப் பார்த்த மாத்திரத்தில், தன் இளைய சகோதரிகளின் நினைவில் கனத்துப் போனது மதுராவின் மனம். நித்தியின் முகத்தில் பதிந்த பார்வையை விலக்க மறந்து நின்றாள் அவள். ஏனோ, அவளை இறுகக்கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது மதுராவுக்கு.

“என்ன அப்படிப் பார்க்கிறீங்க? யாரடா இவர்கள் நம் பெயரைச் சொல்கிறார்களே; நமக்குத் தெரியவில்லையே என்று யோசிக்கிறீங்களா?” முறுவலோடு கேட்ட நித்தி, “முதல் இறங்கி வாங்க!” அவள் கரம் பற்றி அழைத்து வந்து, அங்கிருந்த இரட்டைச்சோஃபாவில் அமர்த்தி, அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

நித்தியின் கரம் பற்றுதலில், ஒரு சொந்தத்தின் உரிமை உணர்வை உணர்ந்த மதுராவின் கல்லாகிக் கிடந்த நெஞ்சம், மெல்லத் தளர்ந்து நடுங்கியது.

அப்பா, அண்ணா என்கின்ற உற்ற பந்தங்களை அநியாயமாக இழந்து நின்றபோதோ, வேதனையைப் பகிர்ந்து கொள்ளவும் தோள் கொடுக்கவும் கைகோர்த்து நின்றனர், அன்னையும் இளைய சகோதரிகளும்; உற்றார் உறவுகளும். அதே, வசந்தம் தரும் வாழ்வென்று தயங்காது தனியே யாரை நம்பி வந்தாளோ, அவனே, கொடும் சூறாவளியாகச் சுழற்றி அடித்த போது, ஆறுதலாக அணைத்து நின்ற ஒரே ஜீவன் யோகம் மட்டுமே.

அதிலும் சிலநாட்களில், தன்னுள் தானே ஒடுங்கிக் கொண்டாள் மதுரா.

‘ஹப்பா! அவளை ஒருமாதிரி தேற்றி விட்டோம்!’ யோகமும் அவள் விடயத்தில் தலையிட்டவர்களும் நினைத்தாலும், அதுவல்ல நிஜம்! கொந்தளிக்கும் எரிமலைபோன்ற உள்ளுணர்வுகளை, நெஞ்சை அறுக்கும் வேதனையை, பயங்கரமாக ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்கின்ற அவமானத்தை ஒன்றாகத் திரட்டி அமுக்கி அடக்கி, வெளிப்பார்வைக்கு திடமாகக் காட்டிக் கொண்டாள் என்பதுதான் உண்மை. அதைவிட வேறு வழியும் இருக்கவில்லையே!

கடந்த சில மாதங்களாகத் தனிமையின் அரவணைப்போடு வாழ்ந்தவள், இறுகப் பற்றியிருந்த நித்தியின் கரம் உணர்த்திய நேசத்தில் கரைந்து போக முயன்றாள்.

“மதுரா…நான் நித்தி, இவர் என்ர அண்ணா கார்த்திகேயன்!” அமைதியாக அமர்ந்திருந்தவளிடம் அறிமுகத்துடன் ஆரம்பித்தாள் நித்தி.

இருவரையும் பார்த்து மெலிதாக முறுவல் செய்தாள் மதுரா.

“உங்களுக்கு சுதா டீச்சரைத் தெரியும் தானே? உங்கட அம்மாவோடு படிப்பிக்கிறார்!” என்றதும், சட்டென்று இவர்கள் யாரென்று புரிந்தது மதுராவுக்கு.

“நீங்க, சுதா மிஸ்சின்ட அக்காவின் மகளா? மிஸ் உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். இங்க வந்ததும் உங்களிட்ட வரவேணும் என்றிருந்தன்; பிறகு, அப்படியே முடியாமல் போய்ட்டுது! உங்கட வீட்டு நம்பர் கூட தந்து விட்டார்!” என்றவளை, இறுக்க அணைத்துக்கொண்டாள் நித்தி.

அந்த அணைப்பின் நெருக்கம் இதுவரை எவருமே தராத ஆதரவை நல்கியது மதுராவுக்கு. யாருமில்லாது தத்தளித்துத் துவண்டிருந்த அவளுள்ளம், அறியாத ஊரில் அந்நியமான பாஷையின் மத்தியில் தான் தனியல்ல; தன்னை அறிந்தவர் இருக்கிறார் என்றதில் மெல்ல மெல்ல நிமிர நினைத்தது.

“ம்ம்… உங்கட கல்யாணப்பேச்சு ஆரம்பிச்ச போதே சித்தி சொன்னார் மதுரா! ஆனால்,” நிறுத்தி, மதுராவைப் பார்த்த நித்தியின் முகம் கணத்தில் இருண்டுவிட்டது.

‘நாங்க மட்டும் அன்றைக்கே விசாரித்து அவன் பற்றி அறிந்திருந்தால் ஒருவேளை இன்று இவருக்கு இந்நிலை வந்திருக்காதோ!’ அவளுள் எழ முயன்ற தவிப்பை அடித்துக்கொண்டு மேலெழுந்தது அன்னை தந்தையின் இழப்பு!

‘அன்றைக்கு நாங்களிருந்த நிலை யாரோ ஒரு மதுரா பற்றி எள்ளவும் சிந்திக்க வைக்கவில்லை.’ மனம் முனக, தலை குனிந்தவள் சற்று நேரம் பேச்சின்றி இருந்தாள்.

“அதையெல்லாம் மறக்கடிக்கின்ற மாதிரி எது எதுவோ நடந்து..” குரல் இறுகச் சொல்லிக்கொண்டு வந்தவளின் விழிகள், பெற்றோர் நினைவில் குபுக்கென்று நிறைந்து விட்டன!

சுதா மிஸ் கூறி, இவர்கள் பெற்றோர் இறந்த விபரமறிந்திருந்த மதுரா, அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.

அந்நிமிடம், தன் ஆற்றமுடியாத வேதனையையும் தாங்கொணாக் கசப்புடன் பெரும்பாரமாகக் கருதி குழந்தைகளைச் சுமப்பதையும் மறந்தாள் அவள். தன்னை அனைவரும் பரிதாபப்பார்வை பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தைத் தள்ளி வைத்தாள். சற்றுமுன் மலர்வாக இருந்து, கணத்தில் சுருங்கிக் கலங்கிவிட்ட நித்தியை தேற்ற முனைந்தாள்.

பெற்றோர் பற்றிப் பேச்சு வந்ததும் கண்ணீர் விடும் தங்கையை, எப்போதும் கடிந்து கொள்ளும் கார்த்திகேயன், இன்று, ‘சபாஷ்’ போட்டான். அவனையும் அறியாதுதான் மதுராவை பரிதாபமாகப் பார்த்தான். அதை அவள் உணர்ந்து இறுகியதும் தன்னைச் சுதாகரித்திருந்தவன், ‘இவளை எப்படி அணுகுவது!?’ என்கிற யோசனையிலிருக்க, சுலபமாக, அவள் சோகத்தை ஒதுக்கி, தனக்காக இரக்கப்பட வைத்துவிட்டாளே அவனின் செல்லத் தங்கை!

இவர்கள் பேசுவதைக் கண்டதும் விரைந்து வந்தார் யோகம்.

“மதுராம்மா, எப்படிடா இருக்கிறாய்?” என்றவர், “பிள்ளைகள் உன்னைக் காணாமல் போக முடியாது என்றதும் அழைத்து வந்தேன்மா!” சங்கடத்தோடு சொன்னார்.

“நானும் இவேண்ட வீட்டுத் தொலைபேசி எண்ணிருந்தும் இதுவரை கதைக்காமல் இருந்திட்டன்; சுத்தமாக என்ர நினைவில் வராமல் போய்ட்டுது! ஸாரி..” நித்தியிடம் கூறினாள் மதுரா.

“இதிலென்ன இருக்கு? அதுதான் இப்பப் பார்த்திட்டமே!” என்றாள் நித்தி.

“அது சரி, செக்கப்புக்கு போனீர்களா? இரட்டைக் குட்டிகளாமே! இரண்டும் பெண்ணா? ஆணா? ஹ்ம்ம்..ஆண் ஒன்று பெண் ஒன்று என்றால் நன்றாக இருக்குமே!” படபடத்த நித்தி,

error: Alert: Content selection is disabled!!