மலருமோ உந்தன் இதயம் 8 – 2

“எங்குதான் போயிருப்பார்!’ எண்ணியவாறே வீட்டினுள் நுழைந்தவளை எதிர்கொண்டாள் நித்தி.

“அண்ணாவின் ஃபோன் இதோ இருக்கு மதுரா! நம்மோடு கதைத்துக்கொண்டு வந்ததில் ஃபோனை மேசையில் விட்டு விட்டார் போலிருக்கு! ஒருநாளும் சொல்லாமல் எங்கும் போகமாட்டாரே!” கலக்கத்தோடு சொல்ல, அவள் கரத்தைப் பற்றிக்கொண்டவள், “அவர் என்ன சின்னப் பிள்ளையா? இங்கு அருகில் போயிருப்பார்; வந்திடுவார்.” சமாதானம் செய்தாள்.

அவளோ, “சரி, அப்போ நீங்க போயிட்டு வாங்க, இருட்டவும் போகுது!” தலையைச் சிலுப்பிக் கொண்டே சென்று, சோஃபாவில் தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.

‘மூவருமாக நடப்போம் என்று எவ்வளவு மகிழ்வாக திட்டம் போட்டு கடைசியில், ப்ச்…இந்த அண்ணா எங்கு போனார்!’ மனதில் முணுமுணுத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளையும் வெளிவாயிலையும் மாறிமாறிப் பார்த்திருந்த மதுராவின் மனதுள்ளும் கார்த்திகேயன் எங்கே என்ற கேள்விதான்!

‘விருட்டென்று எழுந்து போனாரா? கோபமாகவா!? இல்லை இல்லை; என்னைச் சமாதானம் செய்தாரே! நாங்களில்லையா என்றெல்லாம் சொன்னாரே! சாதாரணமாகத் தான் ‘வெளியே நிற்கிறேன்; வாங்க.’ என்று விட்டு போனார்!’ நினைத்துக்கொண்டவள், மெல்லச் சென்று, நித்தி இருந்த சோஃபாவின் மறு மூலையில் அமர்ந்து கொண்டாள்.

இருபெண்களுக்கும் வாயிலைப் பார்த்துப் பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம்!

வயிற்றில் ஒன்றுக்கு இரண்டாக உயிர்கள் உள்ளார்கள் என்பது புரிந்திருந்தாலும், இங்கு வருவதற்கு முதல் உணவு விடயத்தில் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை மதுரா.

இந்த இரு கிழமைகளும், பெற்ற தாய் போல அவளைக் கவனித்துக் கொண்டாள் நித்தி. பார்த்துப் பார்த்து உணவுப் பொருட்களை வாங்கிப் போட்டான் கார்த்திகேயன்.

“மூச்…ஒரு சத்தமும் இல்லாமல் இதைக் குடியுங்க; சாப்பிடுங்க.” என, நேரத்துக்கு உணவுண்டதன் பலன், மதுராவின் வயிறு காந்தத் தொடங்கியது.

“நித்தி, டீ குடிப்போமா?” நீண்ட நேர மௌனத்தைக் கலைத்தவளை சடக்கென்று திரும்பிப் பார்த்தாள் நித்தி.

மேடிட்ட வயிற்றில் கரமொன்றை வைத்துத் தடவியவாறே அவள் கேட்ட பாவனையில் மனதில் பரிதாபம் சுரந்தாலும், ‘போகத்தான் போகிறேன் என்று என்ன வீம்பாகச் சொன்னார்! இப்போ டீ குடிக்க நான் எதற்கு!’ அவள் மனம் சிலுப்பிக் கொண்டது.

சற்றும் சிநேகமின்றி நோக்கியவளை முறுவலோடு நெருங்கி அமர்ந்தாள் மதுரா.

“நித்திம்மா பசிக்குதுடா; டீ குடிப்போமா?” மீண்டும் கேட்டதும் சட்டென்று எழுந்தாள் நித்தி.

“என்ன மதுரா இது!? பாருங்க ஆறரையாகுது; வாங்க.. நீங்க சாப்பிடுங்க…” சமையலறை நோக்கி நடந்தவளை, பின் தொடர்ந்தாள் மதுரா.

“இரவைக்குத் தோசை போட்டிருக்கிறேன் நித்தி; உம் அண்ணாவும் வரட்டும்.” என்றவள், “இப்போ டீ குடிப்போம்!” தேநீர் தயாரிப்பில் இறங்கினாள்.

“இல்லையில்லை, நான் அண்ணாவோடு சாப்பிடுகிறேன்; நீங்க இப்போ சாப்பிடுங்க.” மறுத்தவளை, இப்போது முறைத்தாள் மதுரா.

“நான் உங்களில் சரியான கோபத்தில் இருக்கிறேன் மதுரா! இந்தப் பார்வையை நான் பார்க்க வேண்டும்; பொறுங்க அண்ணா வரட்டும்!” சிலுப்பியவளிடம்,

“ஹ்ம்…இந்த பிஸ்கட்டில் இரண்டு சாப்பிட்டுக் கொண்டே கோபப்படும்!” பிஸ்கட் டின்னை நீட்டினாள் மதுரா.

“அப்போ, எங்களை விட்டுவிட்டுப் போக மாட்டீங்களே!” வினவியவள் மிகமிகச் சிறுமியாகத் தெரிந்தாள் மதுராவுக்கு!

“நித்தி, என்னம்மா இது! நான் கொஞ்ச நாட்கள் இருக்கத்தானே வந்தேன்.”

“அந்தக் கதையெல்லாம் தேவையில்லை! உங்களை எங்கும் போக விடமாட்டேன்!” ஒருவித அழுத்தத்தோடு சொன்னவள், சாப்பாட்டு மேசையில் இருந்த கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து, மேசையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டவளுக்கு, ‘இந்த அண்ணா எங்கே போனார்? யாரிடம் போய், என்னவென்று சொல்லி விசாரிப்பது? வெளியில் நிற்கிறேன் என்றவரைக் காணவில்லை என்று போலீஸிலா சொல்ல முடியும்!’ மனதில் இந்த எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.

“அண்ணா வந்து விடுவார் நித்தி, யாரும் பழகிய ஃப்ரண்ட்ஸ் வந்திருப்பார்கள். நாமும் உள்ளே கதைத்துக் கொண்டிருக்க, அவர்களோடு போய்விட்டார் போல; வந்துவிடுவார்.” நித்தியின் கலக்கம் உணர்ந்து தேற்றியவள், மாறிமாறி வார்த்தையாடி தேநீர் குடித்துவிட்டு மீண்டும் ஹாலில் வந்தமர்ந்தவர்கள், தொலைக்காட்சியை உயிப்பித்தார்கள்.

இருளவன் முனகலோடு போர்வையை விரித்துக் கொண்டிருந்ததில் வெளிப்புறம் கருமையைக் கடன் வாங்கியிருந்தது.

தன்னருகில் அமர்ந்திருந்த மதுராவின் தோள் சாய்ந்து அவள் கரத்தை இறுகப் பற்றியவாறே, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்திருந்த நித்தியின் கவனம் சிறிதும் அங்கே இல்லை.

‘அண்ணா எங்கே?’ அவள் மனம் பலத்த முணுமுணுப்பில் இறங்கியிருந்தது. அதே கேள்வியின் குழப்பத்தோடு நித்தியை ஆதரவாகப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தாள் மதுரா.

‘எங்காவது நண்பர்களோடு போய்விட்டார் போல; வந்திடுவார்!’ நிச்சயம் அப்படித்தான் இருக்குமென சமாதானம் செய்து கொண்டாள் அவள். தன் பிரச்சனை, நாளை தாயிடம் சொல்ல வேண்டும் என அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டு, கார்த்திகேயன் வரவை எதிர்பார்த்திருந்தாள் அவள்.

மனக்கலக்கத்தோடு இவர்கள் வீட்டிலிருக்க, நடந்து நடந்து உடலும் மனமும் களைத்துப் போனபின் வீடு திரும்பிய கார்த்திகேயன், வீட்டினுள் ஒளிர்ந்த மின்குமிழ் உபயத்தில் திரை விலகியிருந்த யன்னல் கண்ணாடியால் பெண்கள் இருவரும் இருக்கும் நிலையை பார்த்தவாறே அசையாது நின்றான்.

சொல்லாமல் கொள்ளாமல் தான் சென்றதில் தங்கை கலங்கி இருப்பாள் என்பது தெரிந்திருந்தாலும், ஏனோ, சட்டென்று வீடு திரும்ப அவன் மனம் ஒப்பவில்லை.

அதற்கு காரணமாக சிலபலதுகள் கரமுயர்த்தி அவனை சீண்டிப்பார்த்தன!

“மதுரா எம்மோடுதான் இருப்பாள்!” தன் சிறியதாயாரிடம் எத்தனை தீர்க்கமாக உரைத்து விட்டான். அதேவேளை இந்த விடயத்தில் இவனென்ன முடிவெடுப்பது? அதற்கு இவனுக்கு என்ன உரிமை உண்டு!?

மதுரா பற்றி அவனறிந்த வரை, சுயமாக நிற்கும் தெம்புடையவள் தான். அப்படியில்லாதவளால் அவ்வளவு பெரிய இடியை தாங்கியிருக்க முடியுமா? அவளின் அந்தச் சுபாவமே அவனுக்கு இன்று எதிரியாக நின்றது.

“ ‘சுதா மிஸ்ஸுக்கு விருப்பமில்லை என்ற பின் என்னால் இங்கிருக்க முடியாது.’ முடிவாகச் சொல்லி புறப்பட்டுவிட்டால்?” முணுமுணுத்தவனுக்கு, ‘நானறிந்த மட்டில் அப்படி முடிவெடுக்கக் கூடியவள் அவள். அப்படி அவள் புறப்பட்டுவிட்டால் தடுத்து நிறுத்த முடியுமா?’ அவனிதயம் முழுவதும் இக்கேள்வியின் இராச்சியமே!

அப்போதும் சுதா சொன்னதை போல, ‘நமக்கென்ன வந்தது!’ என்று ஒதுங்கவோ, ‘உன் வழியைப் பார்த்துக் கொள்!’ என்று அவளை விட்டுவிடவோ அவன் மனம் சம்மதிக்கவில்லை.

“நாங்கள் இல்லையா? இந்தக் கலக்கம் தேவையே இல்லையென்று ஆறுதல் சொன்னவன், ‘நான் இருக்கிறேன் என்று தன்னையும் மீறி நினைத்துவிட்டு தடுமாறியவன், அதற்கு ஏதுவாக, அவள் சார்பாக, தானே முடிவெடுக்கவே விரும்பினான்.

அதுதான் ஏன்? ‘கொஞ்ச நாட்கள் உன் வீட்டில் வந்திருக்கச் சம்மதித்தாள் என்பதால் நீ அதிகளவு உரிமை எடுத்துக் கொள்கிறாய்!’ என, தன்னைத் தானே அடக்க முனைந்தாலும், ‘இல்லை, இதிலென்ன இருக்கு! அன்று, எங்களோடு அவளை அழைத்து வரும் போது என்னதான் மீண்டிருப்பது போல் வெளிப்பார்வைக்குக் காட்டிக் கொண்டாலும் உடல், உளரீதியாக எவ்வளவு தளர்ந்திருந்தாள்.

இப்போதுதான் கொஞ்சமே கொஞ்சமாக சரியாகி வருகிறாள். திரும்பவும் தனியாகப் போனால்..’ என்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை .

‘ஒருவேளை அவள் இலங்கை போகும் படி நேர்ந்தால்!’ என்று பளிச்சிட்ட எண்ணத்தை, ஏனோ, ஒரே மூச்சில் ஒதுக்கி விட்டான்.

‘இதென்ன பைத்தியக்காரத்தனம்! இரட்டைக் குழந்தைகளைச் சுமந்துகொண்டு, அதுவும் ‘அனிமிக்’ அப்படி இப்படி இவளைக் கவனமாக இருக்கும்படி டாக்டர்ஸ் சொல்லியிருக்கும் இந்த நேரத்தில் எப்படிப் பயணம் செய்வது!?

அப்படியே போவதாக இருந்தாலும் அதைப் பற்றி முடிவெடுக்கும் நேரம் இதுவல்ல!’ அதை ஒதுக்கியவன், ‘அவள் இன்று இருக்கும் நிலைக்கு குழந்தைகள் பிறந்து நல்லபடியாக பிரச்சனைகள் இன்றி அமைதியாக இருக்க உதவுவது என் கடமை!’ என்றே, சொல்லிக் கொண்டான்.

‘அவள், எனக்கும் என் தங்கச்சிக்கும் செய்தவற்றுக்கு இது பரிகாரம் என்று வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும்!’ என, இறுதியில் முடிவெடுத்தவன், “இங்கிருந்து போகப் போகிறேன் என்ற சொல் அவள் வாயிலிருந்து வந்துவிடக் கூடாது என்கின்ற பிரார்த்தனையோடுதான் வீடு திரும்பியிருந்தான்.

இப்போது, தங்கையும் மதுராவும் ஒன்றாக ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவன் மனம் கனிந்தது.

‘அவள் வேற்றாளில்லை!’ என, தன் மனம் அறுதியிட்டு உணர்வதில் எள்ளளவும் பிழையில்லை என்றுணர்ந்தவன், அக்கணம், மெல்ல மெல்ல அமைதி கொள்வதை உணர்ந்து கொண்டான்.

அதேநேரம், மதுராவையே பார்த்திருந்தவனுக்கு, இத்தனை நாட்களையும் விட ஏதோ ஒருவிதத்தில் வீரியமாக அவள் தன்னுள் ஊடுருவிவிட்டதை உணரவும் முடிந்தது. அதைப் பிரித்து வைத்து ஆராயும் நோக்கமின்றி, கைபேசி, வீட்டுத்திறப்பு எதையும் எடுத்துச் செல்லாததில் இப்போதும், அழைப்பு மணியை அழுத்தும் நோக்கமின்றி நின்றவனை மதுராதான் முதலில் கண்டாள்.

இருளில் மெல்லிய வரிவடிவமாக அவன் உருத் தெரிய, அப்போதும் ஒரு சந்தேகத்தில் சட்டென்று எழுந்தவள், வெளிவாயில் மின்குமிழைத் தட்டிவிட்டு வாயிலைத் திறக்க, “அண்ணாவா மதுரா?” கேட்டவாறே அவள் தோள்பற்றி விலக்கியவாறே வெளியில் வந்த நித்தி,

“அண்ணா!” கிட்டத்தட்ட கூவிக்கொண்டு போய் அவனைக் கட்டிக் கொண்டாள்.

“சொல்லாமல் கொள்ளாமல் எங்கேண்ணா போயிட்டீங்க! நான் பயந்தே போனேன்!” கலக்கம் மறையாது சொன்னவள், தமையன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

“ஏன்ணா ஒருமாதிரி இருக்கிறீங்க!? ஏதாவது பிரச்சனையா? எங்கே போயிருந்தீங்க? ஒருவார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே!” படபடத்தவளை சிறு முறுவலோடு பார்த்தான் கார்த்திகேயன்.

“வெளியில் நின்று நின்று பார்த்தேன் நித்தி; நீங்க இரண்டுபேரும் வரவில்லை என்றதும், தனியே நடந்துவிட்டு வாறேன். வேறு எங்கம்மா போகப் போகிறேன்!” என்றவன்,

“மேலெல்லாம் கசகச என்று இருக்கும்மா; குளித்துவிட்டு வாறேன்!” நகர்ந்தவன் பார்வை ஏனோ மதுராவை ஏறெடுக்கவில்லை. இதுதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாதவகையில் ஒரு தயக்கம் அவனைப் பிடித்து ஆட்டியது.

விறுவிறுவென்று மேலே செல்லும் தமையனை பார்த்திருந்துவிட்டு “அதற்கு, சொல்லாமல் கொள்ளாமலா போவது!” என்ற நித்தியின் கூற்றையே மதுராவும் நினைத்துக் கொண்டாள்.

இந்த சில நாட்களாக அறிந்திருந்த கார்த்திகேயனுக்கும் இப்போது முகம் பாராது ஒதுங்கிச் செல்பவனுக்கும் ஏதோ வேறுபாடு இருப்பது போலவே அவளுக்குத் தோன்றியது.

‘எதுவோ நடந்திருக்கு! நானே கேட்காமல் சுதா மிஸ் நிறையவும் திட்டி விட்டாரோ!’ இப்படித்தான் அவள் மனம் நினைத்துக் கொண்டது.

‘காலையில் முதல் வேலை இங்கிருந்து போவதுதான்!’ முடிவை மீண்டும் உறுதி செய்தவள், ‘நித்தி நான் தோசை சுடத் தொடங்குறேன்; அண்ணா குளித்ததும் சாப்பிட வரச் சொல்லுங்க.” சமயலைறைக்குள் நுழைய,

“இன்றைக்கு நான் சுடுகிறேன்; நீங்க அருகில் நில்லுங்க மதுரா! அண்ணா குளித்ததும் கீழேவருவார்!” இவளும் அவளோடு சேர்ந்து கொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!