9
“எங்க நித்தி உங்க அண்ணாவை இன்னும் காணவில்லை; போய்ப்பார்த்திட்டு வாங்க; தோசையெல்லாம் ஆறிப் போகுது!” மதுரா சொல்லி முடிக்க முன், “அண்ணா…சாப்பிட வாங்கண்ணா!” மீண்டும் அழைத்தாள் நித்தி.
“எனக்குப் பசியில்லை நித்தி; நீங்க இரண்டு பேரும் சாப்பிடுங்க!” அறைக்குள்ளிருந்த கார்த்திகேயனின் குரல் தேய்ந்து வந்தது.
உணவுண்ண ஆயத்தமாகி மேசையில் அமர்ந்திருந்த நித்தி, சட்டென்று தன்னருகில் அமர்ந்திருந்த மதுராவைப் பார்த்தாள்.
“முதல் கூப்பிட, சாப்பிடத் தொடங்குங்க வாறேன் என்றார்; இப்போ இப்படிச் சொல்கிறாரே!” என்றவள், ‘அண்ணா ஒருநாளும் இப்படிச் சொல்லமாட்டாரே! உடம்புக்கு ஏதேனும் செய்கின்றதோ தெரியவில்லையே!’ எண்ணிக்கொண்டே,
“ஏற்கனவே நல்லா நேரம் போய்ட்டுது, நீங்க சாப்பிடத் தொடங்குங்க மதுரா; அண்ணாவை கூட்டிக்கொண்டு வாறேன்!” படிகளில் தாவியேறினாள்.
“அண்ணா!” என மெல்ல அழைத்தவாறே இருள் வாசம் செய்த தமையன் அறையினுள் நுழைந்த வேகத்தில் விழிகளைச் சுருக்கி அவனைத் தேடியவாறே மின்விளக்கைப் போட்டவள், அங்கே அவன் இல்லை என்றதும், அறையின் மறுபுறமாக இருந்த பால்கனி நோக்கி விரைந்தாள்.
“அண்ணா! இங்கேயா நிற்கிறீங்க?” கேட்டுக்கொண்டே பால்கனி மின்விளக்கை உயிர்ப்பித்த வேகத்தில் தன்னருகில் வந்து நின்ற தங்கையை ஏறிட்ட கார்த்திகேயன்,
“சாப்பிடவில்லையா நித்தி? எனக்கு ஏனோ வயிறு டொம்மென்று இருக்கம்மா; நீங்க சாப்பிடுங்க.” என்றவனுக்கு, உண்மையாகவே சாப்பிடவேண்டும் போலவே இருக்கவில்லை.
மாலையிலிருந்து தொத்திக்கொண்டிருக்கும் பரபரப்பு, பசிக்கு விடுமுறை விட்டிருந்ததோ என்னவோ!
“ஏதாவது பிரச்சனையா அண்ணா? சுதா சித்தி வேறு ஏதாவது சொன்னாரா? அப்போதிருந்துதான் நீங்க…” யோசனையாக ஆரம்பித்தவளை, “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையம்மா!” அவள் தலையைப் பரிவாக வருடியவாறே இடைமறித்தான் கார்த்திகேயன்.
சற்று நேரம் மௌனமாக நின்றாள் நித்தி.
“மதுரா வந்தபிறகு இந்த இரண்டு கிழமையும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்ணா! அம்மா…நம்மோடு அம்மா இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டேன் போல!” தங்கை உரைத்த நிதர்சனம் புரிந்ததில் அமைதிகாத்தான் தமையன்.
“அதற்கும் நமக்குக் கொடுப்பினை இல்லை அண்ணா! பார்த்துக்கொண்டே இருங்க, நாளைக்குக் காலையில் போயிட்டு வாறேன் என்று புறப்பட்டு நிற்பார்.” தங்கை சொன்னதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை அவனால்.
“என்னம்மா சொல்கிறாய்! யார் போய்ட்டு வாறேன் என்…பது?” என்றவன், தங்கையை கேள்வியாகப் பார்த்தான்.
“என்ன நித்தி சொல்கிறாய்? மதுராவா…மதுரா இங்கிருந்து…போகப் போகிறாரா?” அவன் வினவிய நேரம், அவனது அறைக் கதவைத் தட்டிவிட்டு அகலத் திறந்த மதுரா,
“நித்தி… எங்கே நிற்கிறீங்க?” கேட்டவள், எதிர்புற பால்கனியில் இவர்கள் நிற்பதைக் கண்ணாடித் தடுப்பால் கண்டுவிட்டு, இவர்களை நோக்கி வந்தாள்.
தம்மை நோக்கி வந்தவளையேதான் பார்த்திருந்தனர் அண்ணனும் தங்கையும் .
நித்தியின் பார்வையில் ஒருவகை உரிமை கலந்த சீறல்! ‘நீ எப்படி எங்களை விட்டுப் போக நினைக்கலாம்!’ என்கின்ற கோபம்.
கார்த்திகேயனோ அதிர்வில் நின்றிருந்தான். ‘எந்த வார்த்தையை அவள் சொல்லிவிடக் கூடாது என்று எண்ணிப் பயந்தேனோ அதைச் சொல்லிவிட்டாளா? அப்போ, இங்கிருந்து போய்விடுவாளா?’ மனதில் முணுமுணுத்தான்.
‘நாங்கள் எண்ணுவது போல் இவள் இந்த வீட்டையும் எங்களையும் அத்தனை நெருக்கமாக உணரவில்லையா?’ என எண்ணியவனுள், ஏமாற்றத்தின் வாசம் கொஞ்சம் அதிகமாகவே பரவியது!
“நான் என்ன பொய்யாண்ணா சொல்கிறேன்; நீங்களே கேட்டுப் பாருங்க!” மதுராவை முறைத்துக்கொண்டே ஆரம்பித்தாள் நித்தி.
“வாங்க நடந்துவிட்டு வருவோம் என்று அழைக்கப் போகிறேன், மேடம் பெட்டி கட்டி ரெடியாக இருக்கிறார்!”
நித்தி சொல்லச் சொல்ல மதுராவின் முகம் இறுகி விட்டது.
“நித்தி, என்னம்மா இது சின்னைப்பிள்ளை போல! அங்க சாப்பாடு ஆறுது; சாப்பிட வருவீர்கள் என்று பார்த்தால் இங்கு நின்று வேண்டாத கதைகளைக் கதைத்துக்கொண்டு நிற்கிறீங்களே!” என்றவள்,
“நித்தி ஏதோ சொல்றா, அதை விட்டுட்டு நீங்க சாப்பிட வாங்க.” சாதாரணமாகச் சொல்லி நகர்ந்தவளை கைபிடித்து இழுத்து நிறுத்தினாள் நித்தி.
“ஹலோ ஹலோ, நான் என்ன இல்லாததையா சொன்னேன்! நீங்க இங்கிருந்து போக நினைக்கவில்லையா? இப்போ கூட விடிந்ததும் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கவில்லையா?” விழிகள் மினுங்கக் கேட்டாள்.
‘இல்லை; உங்களை விட்டு எங்கும் போகமாட்டேன்! இங்கிருக்கும் வரை, எங்கோ இருப்பதற்குப் பதிலாக உங்களோடு இருக்கிறேன்.’ என்ற வார்த்தைகள் அவள் வாயிலிருந்து உதிராதா என்ற ஏக்கத்தோடு எதிர்பார்க்கவும் செய்தாள்.
“அது..அது…” தடுமாறினாள் மதுரா. “நான் என்ன இங்கயே இருக்கவா வந்தேன்! கொஞ்ச நாட்களுக்குத் தானே நித்தி, எப்பவாவது போகத் தானே வேண்டும்!” என்றவள், பேச முற்பட்ட நித்தியை கைகாட்டித் தடுத்தாள்.
“எல்லாவற்றுக்கும் முதல், நாளை அம்மாவிற்கு தெரிய வந்ததும் அடுத்த நிமிடமே அங்கே வரச் சொல்வார் நித்தி. அதனால், ஒரேயடியாக இலங்கைக்கே போகலாம் என்று நினைத்திருக்கிறேன்!” என்றவளை, பாறையாகிப் போன முகத்தோடு பார்த்திருந்தான் கார்த்திகேயன்.
“ஓஹோ..அப்படியும் ஒரு எண்ணம் இருக்கோ! அதையும் தான் பார்ப்போம்!” நித்தி சிலிப்பிக்கொள்ள, மென்னகை புரிந்தாள் மதுரா.
“சரி சரி, அதையெல்லாம் விடிந்ததும் பேசிக் கொள்வோம்; இப்போ சாப்பிடலாம் வாங்க!”
“இங்க பாருங்க, எனக்கும் இப்போ சாப்பாடு வேண்டாம். நீங்க இலங்கை போனபிறகு எப்படி இருக்கிறதைக் கொட்டிக் கொள்வோமோ, அப்படியே இப்போதும் கொட்டிக் கொள்கிறோம். நீங்க போங்க!” குரல் இறுகச் சொன்ன தங்கையை, “நித்தி இதென்ன பேச்சு!” கடிந்து கொள்ளும் பார்வையோடு இடைநிறுத்தியவன், மதுராவை நேராகப் பார்த்தான்.
“இலங்கையோ இந்தியாவோ எங்குமே உங்களை விடுவதாக இல்லை மதுரா!” அவன் சொன்ன தொனியின் தீர்மானத்தில் திகைத்து விட்டாள் மதுரா.
அவளின் திகைப்போடிய முகத்தை நேராக உற்றுப் பார்த்தான் கார்த்திகேயன்.
“ஆமாம்! நாளை உங்கள் அம்மா அப்படியேதும் சொன்னால் நான் பேசிக் கொள்கிறேன்; நீங்க எங்களோடுதான்!” அவள் விழிகளையே உற்றுப் பார்த்தவாறு தன்னையுமறியாது ஒருவேகத்தில் சொல்லிக்கொண்டு வந்தவன் சட்டென்று சுதாகரித்தான்.
“உங்களுக்கு அவ்வளவு சுலபத்தில் லீவ் தருவதாக இல்லை என்கிறேன்! நீங்க போய்ட்டால் பிறகு இப்படி நேரத்துக்கு நேரம் வாய்க்கு ருசியா சாப்பிட நாங்க எங்கே போவது?” இராகமாக இலகுவாகச் சொன்னான்.
“சமையலறையை எட்டியும் பார்க்க வேண்டாம் என்று எவ்வளவு எச்சரிக்கை விட்டும், ‘இல்லை என் சமையல் திறனை உங்களிடம் பரீட்சிப்பேன்.’ என்று எங்களைப் போட்டு வாட்டி எடுத்து, பழகிய சமையலை எல்லாம் உண்ண வைத்து, ஒருமாதிரி சமையலில் தேறிவரும் நேரம் பார்த்து நழுவப் பார்க்கலாமா? இது கொஞ்சமும் நியாயம் இல்லை மதுரா! இதுக்கெல்லாம் நாங்க ஒத்துக்கொள்ளவே மாட்டோம்! அப்படித்தானே நித்தி.”
ஒருபோதுமில்லாது, தமையன் மதுராவோடு வாயாடுவதைப் பார்த்து வாய் பிளந்து நின்ற தங்கையையும் பேச்சில் நுழைத்தான்.
“எல்லாவற்றையும் விடுங்க மதுரா; எங்களைப் பார்த்தால் பரிதாபம் கூடவா வரவில்லை!” அவன் கேட்ட பாவனையில் மதுராவோடு சேர்ந்து நித்தியும் மலர்ந்து விட்டாள்.
“அதுதானே மதுரா, என்னை விட்டுவிட்டுப் போய் நிம்மதியாக உங்களால் இருக்க முடியுமா?” அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டாள் நித்தி.
“இல்ல, எவ்வளவு சொன்னாலும் நான் போய்த்தான் ஆகவேண்டும் என்றால் ஒன்று தான் செய்ய முடியும்!” சொல்லிக்கொண்டே, மதுரா நெளிய நெளிய அவள் வயிற்றில் கைவைத்து வருடினாள்.
“என் செல்ல ஏஞ்சல்ஸ் இரண்டு பேரையும் பெற்று என்னிடம் தந்துவிட்டுப் போங்க!” கட்டளையாகச் சொல்லவும் செய்தாள்.
குபுக்கென்று நிறைந்த மதுராவின் நயனங்கள் இரண்டும் தத்தளித்தபடி நித்தியில் படிந்தன!
கண்ணீரில் தத்தளிக்கும் மதுராவை ஆறுதல் படுத்த வேண்டுமென்று மனதில் துடித்தாலும் முடியாதிருந்தது கார்த்திகேயனுக்கு! கண்முன்னால் அவளின் வேதனை மனதைப் பிசைய, அவளை சகஜமாக்க எண்ணி, “ஹ்ம்ம…இது நல்ல ஐடியாதான் நித்தி!” தங்கையை ஆமோதித்தான்.
“இதோ அண்ணாவே சொல்லிவிட்டார். இனி என்ன செய்யப் போறீங்க குட்டீசைத் தரம் போறீங்களா? அல்லது நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளப் போறீங்களா?” விடாக்கண்டியாக நின்றாள் நித்தி.
“போனால் போகட்டும் நித்தி, செல்ல ஏஞ்சல்ஸ் அம்மா இல்லாமல் எப்படிம்மா; அதனால் உங்களோடெல்லாம் மனிதன் இருப்பானா என்று வெறுப்பு வந்தால் இங்கிருந்து தாராளமாகப் போகலாம். மற்றும்படி உங்களையும் எங்களில் ஒருவராகத்தான் நாங்க நினைக்கிறோம் மதுரா; இது உங்கள் வீடு!” சொன்ன கார்த்திகேயன் சட்டென்று திரும்பி, அறையால் நுழைந்து கீழே இறங்கத் தொடங்கினான்.
“சபாஷ் அண்ணா!” தமையன் பேச்சில் மலர்ந்த நித்தி, திகைத்து மௌனியாகி நிற்கும் மதுராவை நகைப்போடு பார்த்து,
“எப்படி? இதற்கு தங்கள் பதில்! ஹ்ம்ம்…ஹ்ம்ம்…சொல்லுங்க சொல்லுங்க..” சவாலாக கண்ணடித்தவளின் காதைப் பிடித்து திருகினாலும், வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்ட மதுரா,
“உண்மையிலேயே நமக்குள் முற்பிறவியில் ஏதோ பந்தம் இருந்திருக்கு நித்தி! இல்லையென்றால் எப்படி இப்படி!?” மீண்டும் கண்ணீர் விட்டவளை இறுக அணைத்துக் கொண்டாள் நித்தி.
“ம்ம்…இனிச்சரி வாரும் சாப்பிடுவோம்; உங்க அண்ணா கீழேதான் போயிருக்கிறார்.” இருவருமாக கீழே வந்தவர்கள், சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தோசையைப் பிட்டு வாயில் திணித்துக் கொண்டிருக்கும் கார்த்திகேயனைக் கண்டு ஒருகணம் திகைத்து, மறுகணம் முறுவலித்தனர் .
*****
இரவு முழுவதும் துளியும் உறக்கமின்றித் தவித்தாள் மதுரா.
கார்த்திகேயனும் நித்தியும் உற்ற உறவாக நடந்துகொண்டாலும், தன் துன்பத்தைப் பரிதாபமாக எண்ணாது, தமக்காக, தம் நிம்மதிக்காக தன்னை அவர்களோடு இருக்கும்படி அன்புக் கட்டளையிட்டாலும், தன் நிலையை அவ்வளவு சுலபத்தில் மறந்து விடுவாளா அவள்! மறக்கத் தான் முடியுமா?
‘அம்மாவிடம் எப்படிச் சொல்வேன்! இதெல்லாம் அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா?
தங்கச்சிக்கு கல்யாணம் சரிவந்திருக்கும் இந்நேரம் என் வாழ்க்கை பற்றிச் சொல்லி அவர்களைத் துன்பப்படுத்தும் படி அமைந்துவிட்டதே! இதற்காகத்தானே நேரில் பார்த்துப் பேசாதிருந்தேன்!’ அவள் மனம் தவித்துத் துடித்து மயங்கிச் சுருண்டது.
‘அம்மாவுக்குத் தெரிந்த பின் நான் ஏன் இங்கிருக்க வேண்டும்! பேசாமல் இலங்கைக்கே திரும்பிப் போய்விட்டால் என்ன?’ அவள் மனதில் இக்கேள்வி பூதாகரமாக நின்று பதில் சொல் என உயிரை எடுத்தது.
‘வாழ்வை இழந்து வயிற்றில் பிள்ளைகளோடு போய் நின்றால் என் தங்கைகள் வாழ்வு பாதிக்குமா? என் இந்த நிலையில் என் பிழையே இல்லாத போது நான் ஏன் அப்படி நினைக்க வேண்டும்!’ மாறி மாறிக் குழம்பினாள்.
“இங்கிருந்து போக யார் விடுவதாம்! அதுவெல்லாம் முடியவே முடியாது!” அண்ணனும் தங்கையும் பிணைத்திருக்கும் அன்புச் சங்கிலி கூட தீராத வலி தருவதாகவே உணர்ந்தாள் அவள்.
இப்படியே தவித்து, அதிகாலைப்பொழுதில் தன்னையுமறியாது உறக்கத்தின் அழுத்தமான பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டவளை, “மதுரா இன்னமும் எழவில்லையா? எப்போதும் ஐந்தரைக்கே எழுந்து விடுவாரே!” கல்லூரி செல்ல முன் பலதடவைகள் வந்து வந்து பார்த்து விட்டாள் நித்தி.
“நித்திரைதான்ணா, எழுப்பிப் பார்க்கவா?”
“வேண்டாம் நித்தி. இரவும் ஒழுங்காக நித்திரை கொள்ளவில்லை; எழும் போது எழட்டும்!” என்ற தமையனை, கேள்வியாகப் பார்த்தாள் அவள்.
“நித்திரை கொள்ளவில்லையா? உங்களுக்கு எப்படித் தெரியும்!” வினவவும் செய்தாள்.
“சாமத்தில், இரண்டு மணி இருக்கும்மா, கிச்சன் லைட் எரியுதே என்று எட்டிப் பார்த்தேன்; சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தார். உடம்புக்கு எதுவும் செய்யுதோ என்று வந்து கேட்டேன்!” என்ற தமையன் பேச்சில்,
“என்னை எழுப்பி இருக்கலாமேண்ணா! நேற்று முழுதும் ஒரே குழப்பம்; ஒழுங்காகச் சாப்பிடவும் இல்லை; என்ன செய்யுது என்று சொன்னாரா?” அவசரமாகக் குறுக்கிட்டாள் நித்தி.

