“உடம்புக்கு எதுவுமில்லை; நித்திரை வரவில்லை, சுடுதண்ணி எடுக்க வந்தேன் என்றார்.” என்றவன்,
“ஹ்ம்ம்… தாயிடம் சொல்ல வேண்டும் என்கின்ற பதற்றம் போல!”
“இருக்காதா அண்ணா, இங்கு வந்து இத்தனை நாட்களில் தன் வாழ்க்கை பற்றி மனம் திறந்து ஒருநாள் ஒரு சொல்லுச் சொல்லவில்லை; அதற்கென்று மனவருத்தம் இல்லை என்றா அர்த்தம்!” முகம் இறுகச் சொன்னவள்,
“உண்மையாகவே மதுரா மிகவும் திடமானவர் இல்லையா அண்ணா! வேறு யாரும் என்றால்..” விழிகளை மூடி மதுராவுக்கு நடந்த கொடுமையின் வலியை தான் உணர்ந்தாள்.
“ஹ்ம்…நாமும் கடந்த குப்பைகளைக் கிளரும் சந்தர்ப்பத்தை மதுராவுக்கு உருவாக்கவில்லை!” என்ற கார்த்திகேயன்,
“மதுராவின் அம்மா என்ன சொல்வார்? எப்படித் தாங்குவார்? என்கின்ற பதற்றம் தான்மா என்னுள்ளும்!” என்றவனுக்கு, அழுது ஆர்பாட்டம் செய்து மகளை தம்மிடம் அழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்கின்ற பயமும் இல்லாமல் இல்லையே!
‘அந்தக் கவலை உனக்கு ஏன்? அவர் மகளை அவர் இங்கு தனியாக இருக்க விடுவாரா?’ நேரகாலம் பார்க்காது எதிர்கேள்வி கேட்டு வைத்தது இவன் உள்மனம்!
‘ஏன் என்றால்…’ அந்தக் கேள்வியை அவ்வளவாக இரசிக்காதவன் காரணத்தைத் தேடிப்பார்த்தான்.
‘ஆங்..இப்போ இருக்கும் உடல் நிலையில் பயணம் செய்வது கொஞ்சமும் நல்லதில்லை. அதைவிட, குழந்தைகள் இங்கே பிறப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். இரட்டைப் பிள்ளைகள்; ஏதாவது பிரச்சனைகள் என்றாலும் மருத்துவ ரீதியாகவும் இங்குதான் வசதி. வேறு என்ன?!’ சமாதானமும் சொல்லிக் கொண்டான்.
“மதுரா, ஆன்ட்டியோடு கதைக்கும் பொழுது நான் இருக்க மாட்டேன் என்று யோசனையாக இருக்குண்ணா!” தங்கை குறுக்கிட அவளைப் பார்த்தான்.
“இன்றைக்கு வர ஆறுமணியாகும்; எப்போ கதைப்பார் என்று கேட்டு நீங்களும் கூடவே இருங்க.” கெஞ்சலாகக் கேட்க, அவனோ, “ம்ம்…பார்ப்போம்மா!” என்றான்.
“என்னண்ணா பார்ப்போம்! கட்டாயம் இருங்க. ப்ளீஸ்ணா…தனியாக கஷ்டப்படுவார்!” கெஞ்சிய தங்கையின் தலையைப் பாசமாக வருடியவன், “நீ ஒன்றையும் யோசியாதே, நான் அருகில் இருப்பேன்!” உறுதி அளித்தான்.
தங்கை கல்லூரி சென்ற பின் தானும் கிளினிக் புறப்பட்ட கார்த்திகேயன் அப்போதும் மதுராவின் சத்தமின்றிப் போகவே, மெதுவாக அறையின் கதவில் இருமுறை தட்டினான். அறையின் நிசப்தம் அவள் உறக்கத்தை உணர்த்தினாலும் அப்படியே விட்டு விட்டுப் போக மனம் வராது மெல்ல கதவைத் திறந்து, ஓரடி எடுத்து உள்ளே நுழைந்தவனுக்கு அதற்கு மேல் கால்கள் நகர மறுத்தன!
மூடிய தடித்த திரைகளையும் தோற்கச் செய்து வெற்றிகரமாக உள்ளே கசிந்து கொண்டிருந்தான் பகலவன்!
கட்டிலில் ஒருக்களித்து அசந்துறங்கும் மதுராவில் விழுந்த கார்த்திகேயனின் விழிகள், அப்பால் இப்பால் நகர மறுத்து அவள் வதனத்தில் ஓட்டிக் கொண்டன! கழுத்துவரை தடித்த போர்வையால் மூடியிருக்க, அவள் வதனம் மட்டும் குளிர் நிலவைப் போல் பளிச்சிட்டது! மிகவும் திடமாக நடமாடுபவள், உறக்கத்தில், ஒரு துளி ஆதரவேனும் கிடைக்காதா என ஏங்கும் ஆதரவற்ற குழந்தை போலவே அவனுக்குத் தெரிந்தாள்.
அவள் நிலை, அவன் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கமோ என்னவோ, ‘இவளின் துன்பத்தை எல்லாம் வழித்துத் துடைத்தெறிந்திடக் கிடைத்தால்!’ என்ற எண்ணம் மனதில் சட்டென்று மின்னி மறைந்தது.
‘நிச்சயம் அதற்கு என்னால் முடிந்தளவு உதவி செய்வேன்!’ அவன் மனம் முணுமுணுத்தது கேட்டுவிட்டதோ என்றவகையில் சிறுமுனகலோடு புரண்டு படுத்தாள் அவள்.
அவள் ஆழ்ந்த நித்திரை என்றெண்ணி நகர நினைத்தவன், ‘உடம்புக்கு எதுவும் செய்கிறதோ! மணியும் எட்டரை தாண்டிவிட்டதே. காலையில் இவ்வளவு நேரம் சாப்பாடும் இல்லாமல்..’ ஒருமுடிவோடு நடந்து யன்னல் திரைகளை இழுத்து விட்டான்.
அதுவரை, இதற்காகவே காத்திருந்ததுபோல துள்ளிக் குதித்து உள்ளே பாய்ந்தான் பகலவன்.
இலேசாக அருண்ட மதுரா, கார்த்திகேயனின் நடை ஒலியும் திரைச்சீலை இழுபட்ட ஒலியும் பகலவனின் ஒளியும் கலந்து மோத விழிகள் மலர்ந்தாள். கூசிய கண்களை மூடித் திறந்தவள், அங்கே கார்த்திகேயனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று, இது கனவோ என்றுதான் எண்ணினாள்.
இங்கு வந்து இத்தனை நாட்களில், மறந்தும் இவள் அறையை எட்டியும் பார்த்ததில்லை இவன். அன்று அருகில் இருக்க பதறி விலகியவள், இப்போது இதயம் எகிற அவனையே வெறித்தாள்.
அவள் வதனத்தின் மாற்றத்தை துல்லியமாக உணர்ந்தவன், ஏனோ மனதுள் மெல்லச் சிரித்துக் கொண்டான். ‘இவள் மனதில் என்னை நினைத்து பயந்து கொண்டா இருக்கிறாள்.’ என்கின்ற எண்ணமும் தோன்றாமலில்லை. ஆனாலும் அது ஏனோ எவ்வித மனச்சுணக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அன்றே அவள் அதற்கு விளக்கம் தந்திருந்தாளே!
“மணி ஒன்பதாகப் போகுது மதுரா! இன்னமும் எழவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் நித்தி. வர ஆறுமணியாகும் என்று சொல்லச் சொன்னாள். நீங்க எழுந்து காலைச் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு வேண்டும் என்றால் தூங்குங்க. நானும் போயிட்டு வாறேன்!” அவள் பதிலை எதிர்பாராது வாயிலை நோக்கி நகர்ந்தான்.
மதுராவோ, அவன் ஏன் அறையினுள் வந்தான் என்பது தெளிவானாலும் அதிர்வு மறையாது அப்படியே இருந்தாள்.
வாயிலருகில் சென்றவன் அவள் அசையாது இருப்பதைப் பார்த்துவிட்டு முகத்தில் பதற்றத்தோடு திரும்பி வந்தான்.
“மதுரா! உடம்புக்கு ஏதாவது செய்யுதா? என்ன செய்யுது? இரவிரவா முழித்திருந்தால்..” தவித்தவன் தவிப்பு அவள் விழிகளைக் கலக்கியது!
“இல்ல இல்ல…அப்படி ஒன்றும் இல்லை…” முயன்று முறுவலித்தாள்.
நம்பிக்கையின்றி நின்றவனிடம், “நீங்க போயிட்டு வாங்க! நான்… எனக்கு ஒன்றுமில்லை!” மீண்டும் தடுமாறினாள்.
“நீங்க சொல்வதை நம்பிப் போகிறேன் மதுரா. எதுவும் என்றால் கொஞ்சமும் யோசியாது சொல்ல வேண்டும்.” என்றவன், அவள் தலையசைப்பைப் பெற்று வெளியில் நகர்ந்தான்.
மீண்டும் மீண்டும் நித்தியினதும் கார்த்திகேயனும் பரிவிலும் கவனிப்பிலும், ‘நான் கோழையாகிறேனோ!’ மனதுள் பிசைய, கண்கள் கசிய எழுந்தவள், காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து பசியுணர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருக்கையில் தொலைபேசியில் அழைத்தான் கார்த்திகேயன்.
“சாப்பிட்டாச்சா மதுரா?”
“ம்ம்..சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.”
“மதியத்துக்கு சமைக்க வேண்டாம், ரெஸ்ட் எடுங்க; இன்றைக்கு கடையில் வாங்குவோம். அதைச் சொல்லத்தான் எடுத்தேன்.” என்றவன், அவள் பதிலைக் கேட்காமல் வைத்தும் விட்டான்.
“ப்ச்…எனக்கு என்ன? இரண்டு பேருக்குச் சாப்பாடு செய்ய முடியாமல் என்ன வந்துவிட்டது!” முணுமுணுத்தவாறே உண்டு முடித்தவள், விறுவிறுவென்று அவன் க்ளினிக்குக்குள் நுழைந்தாள்.
காரிடாரில் சிகிச்சைக்கு வருபவர்கள் அமர்ந்திருக்க ‘வணக்கம்’ சொல்லி முன்னேறியவள், அரைச்சுவருக்கு அப்பாலிருந்து நட்பாக முறுவலித்த ரிஷப்ஷனிஸ்ட் பெண்மணியை அணுகினாள்.
மலர்வோடு வணக்கம் கூறிய அப்பெண்மணி அவள் நலத்தை விசாரித்துவிட்டு, “கார்த்திகேயன்…அவரைப் பார்க்கவா வந்தீங்க? பிஸியாக இருக்கிறார்!” என்றாள்.
“ஓ! பரவாயில்லை நான்..” சிறிது தயங்கியவள், ‘கால்பண்ணிச் சொல்வோம்!’ என்ற முடிவுடன் சிறு தலையசைப்போடு திரும்பி வந்து நேரே சமையலில் இறங்கிவிட்டாள்.
சிறிது நேரம் கடந்திருக்கும், “என்ன மதுரா, உடம்புக்கு எதுவும் செய்கின்றதா?” வேகமாக சமையலைறைக்குள் நுழைந்த கார்த்திகேயன், அவள் சமையலை ஆரம்பித்திருப்பதைப் பார்த்து, தான் சொன்னதைக் கேட்கவில்லையே என்ற அதிருப்தியோடு பேச்சை நிறுத்தினான்.
“என்ன நீங்க எந்த நேரமும் இப்படிக் கேட்கிறீங்க? அதெல்லாம் ஒன்றுமில்லை, நான் நல்லாத்தான் இருக்கிறேன்!” அவன் அக்கறையே இவளை மிகவும் சங்கடப்படுத்த, சிறிதாக முறுவலித்தாள்.
“ஹ்ம்…தேடி வந்ததாகச் சொன்னார்கள்; அதுதான்..” இழுத்தவன், “சமைக்கத் தேவையில்லை என்றேனே!” என்றதற்கு, இவள், ‘என்ன நீ?’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.
“சொன்னவர், நான் என்ன சொல்கிறேன் என்று கேளாமல் ஃபோனை வைத்துவிட்டீர்கள்; சமைக்கிறேன் என்று சொல்லத்தான் வந்தேன்!” என்றவள் நேரத்தைப் பார்த்துவிட்டு, “டீ அல்லது காஃபி குடிக்கிறீங்களா?” என்று கேட்டு முடிக்க முன்,
“ம்ம்…காஃபி, உங்களுக்கு கஷ்டம் இல்லையே!” கேட்டவாறே அருகில் இருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
“பெரிய வேலை பாருங்க..” சொன்னவாறே, காஃபி மிஷனில் நீரையும் காப்பி பவுடரையும் போட்டு பட்டனைத் தட்டி விட்டுவிட்டு, “மதியம் சாப்பிட வாங்க..” என்றவாறே சமையலில் இறங்கிவிட, அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவனுக்கு அன்றைய நாள் சற்றே சுவாரஸ்சியம் கூடியதாகத் தெரிந்தது.
அவன் தாயார் போன பின், இப்படி அவனை அக்கறையாக கேட்டு உபசரிக்கும் முதல் ஆள் இவள் என்ற வகையில் அவள்பால் கனிவும் அக்கறையும் அதிகரிக்கவே செய்தது.
தன்முன்னால் காஃபி கப்பை வைக்க எடுத்துக் கொண்டவன், “வீட்டுக்கு எத்தனைக்கு எடுப்பீங்க மதுரா?” என்றதும் திரும்பிப் பார்த்தவள் முகம் கணத்தில் இருண்டுவிட்டது.
“அம்மாவிடம் சொல்லத்தான் வேண்டும்; சொல்ல முடிவெடுத்த பின்னும் எப்படிச் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை!” கலக்கத்தோடு சொன்னாள்.
“நடந்து முடிந்து விட்டதைச் சொல்லப் போறீங்க மதுரா! அதனால் அதையும் இதையும் யோசிக்க வேண்டாம்; உங்க அம்மா புரிந்து கொள்வார்.” என்றவாறே எழுந்தவன்,
“மதியம் சாப்பிட்ட பிறகு எடுத்துக் கதைப்போம்; நான் சொல்லத் தேவையில்லை, தைரியமாக இருங்க!” என்று ஆறுதல் சொல்லிச் சென்றான்.
‘யார் தான் ஆறுதல் சொன்னாலும், நான் திடமனதோடு இருப்பதாக நினைத்துக் கொண்டாலும் நடந்ததையெல்லாம் அதுவும் தொலைபேசியில் அம்மாவுக்கு உணர்த்திவிட முடியுமா?’ மலைப்பாகவே இருந்தது அவளுக்கு!

