“என்னை மாதிரி வரோணும் எண்டு இந்த ஃபீல்ட் செலக்ட் பண்ணாதைங்கோ நிலன். என்ர பிள்ளை எப்பவும் என்னை மாதிரித்தான் இருப்பார். ஆனா நீங்க சாதிக்கிற துறை உங்களுக்குப் பிடிச்சதா இருக்கோணும். டொக்டர்ட பிள்ளை டொக்டர்தான் ஆகோணும் எண்டு நினைக்கிற ஆள் அப்பா இல்லை, தெரியும்தானே பிள்ளைக்கு?” என்று அவன் பேசியதை அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள்…
“எனக்கு உங்களை மாதிரியும் இருக்கோணும். டொக்டராவும் ஆகோணும். நான் விருப்பப்பட்டுத்தான் பயோ எடுக்கிறன். என்னை நம்புங்கோ அப்பா… இன்னும் இரண்டரை மூண்டு வருஷத்தில உங்கட வாயால என்னை டொக்டர் எண்டு கூப்பிட வைப்பன்! முதல் முதலா நீங்கதான் என்னை அப்பிடிக் கூப்பிடவும் வேணும்.”
செய்து காட்டி விட்டான். பெருமையில் விம்மியது ஆதித்யனின் நெஞ்சம்.
சாதனாவுக்கும் தான்! காவாலி, விடுகாலி, உருப்படாதவன் எல்லாப் பெயரும் மாறிவிட்டது. இன்னும் ஐந்தாறு வருடத்தில் அவள் மகன் மருத்துவன். இதெல்லாம் யாரால் என்று கண்கள் கசிய, ஆதித்யனைப் பார்த்திருந்தாள்.
மகனைத் தட்டிக் கொடுத்து விடுவித்த ஆதித்யன் அப்போதே ஞாபகம் வந்தவனாக சாதனாவைப் பார்த்தான்.
அவள் உணர்வுப் பெருக்குகள் கலங்கி நின்ற கண்களில் தெரிய, அது பிடிக்கவில்லை அவனுக்கு. அவன் பிள்ளையை அவன் உயர்த்தி விட்டதற்கு இவள் நன்றி செலுத்துவாளா என்றிருந்தது.
“நிலன்! அங்க பாருங்கோ உங்கட அம்மாவை! நீங்க எடுத்த ரிசல்ட் காணாது போல அவாக்கு. அழுதுகொண்டு இருக்கிறா.” என்றான் வேண்டுமென்றே.
நிலனோடு மூன்று பிள்ளைகளும் அப்படியா என்று அவள் முகம் பார்க்க, பதறிக் கண்களைத் துடைத்தவள்…
“ஐயோ அப்பிடி ஒண்டும் இல்லை பிள்ளையள். இதை விடப் பெரிய ரிசல்ட் என்னெண்டு எடுக்கிறது? என்ர பிள்ளை பெருசா சாதிச்சிட்டார். இப்ப எனக்கு எவ்வளோ சந்தோஷமா கிடக்கு தெரியுமோ? அந்த சந்தோஷத்திலதான் அழுகை வந்த! உங்கட அப்பா வேணுமெண்டு மாத்தி சொல்லுறார். அவருக்கு உங்களிட்ட தான் ஹீரோவாகோணும், நான் வில்லியாகோணும்.” என்றவள் ஆதித்யனை முறைத்தாள். அந்த முறைப்பில் கோபம் துளியுமில்லை.
அவனோ “அப்ப நிலன் நீங்க போய் வேளைக்கு நித்திரை கொள்ளுங்கோ. நாளைக்கு விடிய முன்னம் சாவச்சேரில இருக்கோணுமெல்லோ?” என்று இன்னும் சீண்டினான்.
“ஓம்… நான் கூட்டிக் கொண்டு போகத்தான் போறேன். என்ர பிள்ளையை டொக்டராக் காட்டோணும் எல்லாருக்கும்.”
“காட்டுங்கோ… காட்டுங்கோ…” என்று அவள் ஆசைக்கு இணங்கியவன், “அதே நேரம் நிலனுக்கும் விருப்பமோ எண்டு கேட்டிட்டுக் கூட்டிக் கொண்டு போங்கோ.” என்று மகன் விருப்பத்தையும் யோசித்தான்.
“நான் அம்மாவோட போறன் அப்பா. ஆனா நாளைக்கு வேண்டாம். வெள்ளிக்கிழமை பப்ளிக் ஹொலிடே. மயூ, மகிக்கும் ரியூஷன் இல்லை. மூண்டு பேரும் வீட்டில நிப்பினம். அண்டு போனாத்தான் சரியா இருக்கும்.” என்ற, உடனே சரியென்று விட்டவன்,
“சரி எல்லாரும் போய் படுங்கோ. இனியும் முழிச்சிருக்காம!” என்ற,
“எல்லாருக்கும் குட் நைட்” என்று பெண் பிள்ளைகள் மூவரும் தங்களஅறைக்கு சென்றனர்.
நிலன் தன் கழுத்தில் இருந்த ஸ்டெத்தை எடுத்து மிதமாக வருடிப் பார்த்தவன், மீண்டும் தந்தையை அணைத்து “தாங்க்ஸ் அப்பா! குட் நைட்.” என்று பிரிந்து சென்றான்.
செல்லும் அவனையே விழியகற்றாமல் பார்த்திருந்தான் ஆதித்யன்.
“அப்ப ஏன் நீங்க என்னைத் தூக்கிக் கொஞ்சுறேல?” என்று கண்ணீரோடு கேட்டு நின்ற பிஞ்சு முகம் மனக் கண்ணில் மின்னியது.
‘இந்தக் காலம்தான் எத்தனை விரைவில் ஓடி விடுகிறது? இப்படியே ஓடி அவன் மகனைத் தூக்கிக் கொஞ்சும் காலத்தில் விட்டிடுமோ?’
அவன் சிந்தனைகள் இவ்வாறு இருக்க, அறைக் கதவை மூடும் நேரம் தந்தையின் பார்வை தன்னில் நிலை பெற்றிருப்பதைக் கண்ட நிலன், பறக்கும் முத்தமொன்றை அனுப்பி விட்டுக் கதவை மூடிக் கொண்டான்.
இவன் இதழ்கள் நீளப் புன்னகை சிந்தின.
‘எத்தனை காலம் ஆனால்தான் என்ன? அவனுக்கே பிள்ளை வந்தால்தான் என்ன? என் பிள்ளை எப்போதும் என் பிள்ளைதான்!’ மனதோடு பேசிக் கொண்டவன், உற்சாக மனநிலையோடு சாதனாவை எதிர் கொண்டான்.
அவள் இடத்தை விட்டு எழும் எண்ணமின்றி அப்படியே இருக்க,
“இன்னும் என்ன வேணும்? அதான் சாமத்தில எல்லாருக்கும் விபூதி அடிச்சு எழுப்பி நினைச்சதை முடிச்சாச்சே? இனியெண்டாலும் போய்ப் படுக்கலாம்தானே?” என்றவனை முறைத்தவள்,
“அவரைப் பாரேன். நல்லா கிஃப்ட் எல்லாம் முன்னமே வேண்டி வச்சிட்டு ரிசல்ட் பார்க்கக் கூப்பிட்டா நடிச்சுக் கொண்டு…”
“அது எனக்கு என்ர பிள்ளையில நம்பிக்கை இருந்த. அதான் அவர் எக்ஸாம் எழுதி முடிச்ச கையோடயே வாங்கி வச்சிட்டேன்.” என்று கொண்டே அவளருகில் சரிந்து அமர்ந்து கொண்டான்.
“அது சரி.” என்றவள், “இந்த இசட் ஸ்கோருக்குப் பெரதெனியா யுனிக்குக் கிடைக்குமென்ன? ஆனா என்னெண்டு உங்களை விட்டுட்டு இருக்கப் போறாரோ தெரியா.” என்றாள் கவலையாக.
அவனுக்கும் அதுதான் கஷ்டமாக இருந்தது. கைக்குள்ளேயே இருந்த பிள்ளை. அவன் பிடித்து வைக்கவில்லை. அப்பா அப்பா என்று அவனே விரும்பி ஏற்றுக்கொண்ட கைச்சிறை அவனது.
உயர்தரம் கற்கத் தொடங்கிய போது இவனோடு படிப்பவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் டியூஷன் நல்லது என்று சனி, ஞாயிறுகளில் அங்கே தங்கிப் படிக்க, இவன் நான் இங்கேயே படிக்கிறேன். எக்ஸ்ட்ராவாக ஒன்லைன் கிளாஸ் போகிறேன் என்று முடித்துக் கொண்டிருந்தான்.
எல்லாம் எதற்காக? குடும்பத்தை விட்டு இருக்க முடியாமல்தானே? முக்கியமாக ஆதித்யனைப் பார்க்காமல் இருக்க முடியாமல்!
ஆனால் இனி என்ன செய்வது? எல்லாம் பழகத்தான் வேண்டும். கஷ்டம் என்றாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்துக்காக போர்க்களத்தில் இறங்கும் போது வெற்றித் திலகமிட்டு வழியனுப்பி வைப்பதுதானே நல்ல பெற்றோர்களுக்கு அழகு?
“போய்ப் படிச்சிட்டு வரட்டும் சாதனா! எங்களை விட்டும் வேற உலகம் இருக்கிறதைப் பார்க்கட்டும். பார்த்து முடிச்சிட்டுத் திருப்பி வரட்டும்.”
“சிலநேரம் அங்க பிடிச்சுப் போய் அங்கேயே வேலைக்கு சேர்ந்தா?”
“அதுக்கு சான்ஸே இல்லை. அவருக்கு என்னை இமிட்டேஷன் செய்யோணும். அப்பாவை மாதிரி அப்பான்ர இடத்தில இருக்கோணும். நீங்கள் வேணுமெண்டா பாருங்கோ, அவர் ஓர்தோதான் படிப்பார்.” என்று உறுதியாக சொன்னவன்,
“இனி கிளிநொச்சில எனக்குப் போட்டி என்ர பிள்ளைதான். வேற ஒருதரும் வரேலாது.” என்று கிளிநொச்சி வைத்தியசாலையின் சிரேஷ்ட எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் ஆதித்யன் பெருமையோடு சொல்ல, சாதனா அவனைப் பேரன்போடு பார்த்திருந்தாள்.
“அடுத்துப் போட்டிக்கு என்ர மான்குட்டியளும் இறங்கினம். அவைக்கும் அடுத்த கிழமைல இருந்து பயோக்கு கிளாஸ் தொடங்குது.”
“ஓம் சாதனா. இந்தப் பிள்ளையள் எல்லாம் ஏன் வேளைக்கெண்டு வளரினம்? குட்டியும் பார்த்துக் கொண்டிருக்க டக்கெண்டு வளர்ந்திடுவா பாருங்கோ. எனக்குத்தான் தூக்கிக் கொஞ்சப் பிள்ளையள் பற்றாக்குறையா கிடக்கப் போகுது. நீங்கள் ஏதேன் பார்த்து செய்யுங்கோவன்.” என்று அவளை வம்பிழுக்க, பிடித்து நன்றாகக் கையைக் கிள்ளி விட்டாள்.
“கொஞ்ச வருஷத்தில பென்ஷன் வந்திடும். இன்னும் கொஞ்ச வருஷம் போனா நிலனுக்கே பிள்ளை வந்திடும். அவருக்கு வர்ற ஆசையெண்டா?” என்று முறைக்க,
“ஏன் அதுக்கென்ன?” என்றவன்…
“என் பிள்ளையும் என் பேரனும் ஒரு வகுப்பில் படிப்பாரோ?” பாடியவனுக்கே அடக்கமாட்டாமல் சிரிப்பு வர, அவள் தோளில் புதைந்து கண்ணீர் வர சிரித்தான்.
சாதனாவுக்குமே சிரிப்பு பீறிட்டது.
“ஆதி! அடி வாங்கப் போறீங்கள். சத்தம் கேட்டுப் பிள்ளையள் வந்தாலும்.” சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டே சொல்ல, உஷ்… என்று அரும்பாடு பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.
“அந்தப் பாட்டு என்னத்துக்கு வந்த அந்தப் படத்தில? நீங்கள் எதுக்கு படிக்கிறீங்கள்?”
“படத்தில எதுக்கு வந்தா என்ன? எனக்கு இப்ப பொருந்துதுதானே?”
“உங்களைத் திருத்தேலாது.”
“அதைப் பிறகு பார்ப்போம். இப்ப வாங்கோ நித்திரை கொள்ளுவோம்.” என்று அவன் எழும்ப…
“நித்திரை வராதெண்டு நினைக்கிறன். நீங்க போய்ப் படுங்கோ.” என்றாள் அவள் ஏகாந்த மனநிலையில்.
அவள் மனம் புரிய மீண்டும் அவள் அருகிலேயே அமர்ந்தவன், அவள் கரங்களைக் கோர்த்துக் கொண்டான் ஆதரவாக.
அவன் தோளில் தலை சாய்த்தவள், “நீங்க அடிச்சாலும் பரவாயில்லை, எல்லாத்துக்கும் தாங்க்ஸ் ஆதி. பரமு அம்மாக்கும் தாங்க்ஸ் சொல்லோணும். அம்மாவை இந்த நேரம் சரியாத் தேடுது. அம்மா இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பா என்ன?” என்ற, ஆதித்யனும் தாயின் நினைவில் வருத்தப் பெருமூச்சு விட்டான்.
நான்கு வருடங்கள் முன்பு பரமேஸ்வரி அம்மா உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டிருந்தார்.
கெட்டதிலும் நல்லதாக அடுத்தடுத்து இரண்டு மாதங்கள் வித்தியாசத்தில் பூப்பெய்திய தன் முதல் இரு பேத்திகளினதும் பூப்புனித நீராட்டு விழாவைக் கண்ட பின்னேதான் கண் மூடியிருந்தார்.
நிச்சயம் அவர் ஆன்மா சொர்க்கத்தில்தான் சேர்ந்திருக்கும். கண் மூடும் போதுதான் அவர் மனதில் எந்தக் கவலையுமில்லையே!
இருவர் வாழ்க்கையை ஒன்று சேர்த்து மொத்தமாக அறுவர் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொடுத்த நிறைவே போதுமே!
அத்தோடு அவரின் நல்ல ஆத்மாக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு இடம் பொருத்தமாகவும் இருக்காதே!
“அம்மா எங்களோட இல்லாட்டியும் எங்களையும் பிள்ளையளையும் ஆசீர்வதிச்சுக் கொண்டுதான் இருப்பா.” என்ற, சாதனாவும் அதை ஆமோதித்தாள்.
தாய்க்கும் அதிகமாக இணங்கிவிட்டாள் அவரோடு. அதுதான் மிகவும் சோர்ந்து விடுவாள் அவர் நினைவு வருகையில்.
அவள் வீட்டோடு அவளின் நிலை இப்போது ஓடும் புளியம்பழமும் போலத்தான்.
இவளும், இவள் தம்பியும் தொடர்பில்லாது போன கொஞ்ச காலத்திலேயே சாதனாவின் தாய் சுதா, மூத்த மகனைப் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொண்டிருந்தார், அவன் சும்மா வாய்ப் பேச்சுக்குத்தான் சரி, மற்றைய படி மனைவியின் சொல்லைத் தாண்டி சிறு துரும்பையும் தனக்காக நகர்த்த மாட்டான் என்று!
இருந்தும் மனதை இழுத்துப் பிடித்து வீம்போடு தனிமையில் வாழ்ந்தவர், தன் பிடிவாதம் வலுவிழந்த ஒரு சமயத்தில் தானே சாதனாவை அழைத்துப் பேசியிருந்தார்.
“அம்மா எண்டு ஒருத்தி இருக்கிறன் எண்ட நினைப்பே இல்லை என்ன உனக்கு?” என்று தளர்வாய் கதைத்த தாயின் குரலில் இவள் மனம் இளகிற்று.
அதன் பின் “மூன்றைப் பெத்தும் உடம்பு சுகமில்லாம போனா சுடுதண்ணி வைச்சுத் தரக் கூட ஆளில்லை…” என்று தொடங்கி மனதின் ஆதங்கத்தை எல்லாம் கொட்டக் கொட்ட பாவமாய் போயிற்று இவளுக்கு.
அதற்காக இவள் அவரோடு போய் இருந்து விடுவதெல்லாம் சாத்தியம் இல்லையே! அதேபோல் அவரை இங்கே அழைத்து வருவதும் சாத்தியம் இல்லை.
ஆதித்யன் ஒன்றும் சொல்லமாட்டான் என்றாலும் அவர் வந்து இங்கே மயூ, மகியை வேறாய் பார்த்து ஒரு சொல் சொன்னால் கூட அவளும் அவனும் பார்த்துப் பார்த்துக் கட்டிய கூடு சிதைந்து விடுமே!
அதைவிட சுதாவும் அந்த வீட்டை எங்கும் வரவும் மாட்டார்.
இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தவள், முடிவில் ஒரு யோசனையாக இதுவரை இருக்கிறாயா செத்துவிட்டாயா என்று எடுத்தும் பார்க்காத தன் தம்பியாரை அழைத்திருந்தாள்.

