மாதொரு பாகம் கொண்டான் எபிலாக் – 3

சாமர்த்தியமாக இருபக்கமும் பேசிப் பேசியே தாயை இளக்கி தம்பியாரை ஏற்க வைத்து வீட்டோடு கொண்டு வந்து இருத்தி விட்டாள்.

நீ இறுதிவரை அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொண்டால் அந்த வீட்டை உன் பிள்ளைக்கு மாற்றி விடுகிறேன் என்று அவனிடம் டீலும் பேசியிருந்தாள். அவனும் அதன் பிறகுதான் முழு மனதாய் சம்மதித்திருந்தான்.

தாயைப் பார்த்துக் கொள்ள விலை பேசுவது தவறுதான். இது தெரிந்தால் தாயாய் அவரின் மனம் என்ன பாடு படும்? ஆனாலும் இப்பேற்பட்ட சுயநல பிண்டங்களைப் பிள்ளையாகப் பெற்றவரைப் பேணிக் காக்க அவளுக்கும் வேறு வழி தெரியவில்லையே!

அதன் பின்னும் அங்கே அடிக்கடி போய் வரமாட்டாள். வருடத்தில் ஒருமுறை காலை போனால் மாலை திரும்புவது போல் பார்த்துக் கொள்வாள். அதுவும் பிள்ளைகளை அழைத்துச் செல்லவே மாட்டாள்.

தாய் பிள்ளைகளைக் கேட்டால், அவர் விடமாட்டார் என்று சொல்லி சமாளித்து விடுபவள் சம்பிரதாயத்துக்குக் கூடத் தன் வீட்டுக்கு வாருங்கள் என்று யாரையும் அழைக்கவும் மாட்டாள்.

அவளுக்கு அவளின் சின்னக் குருவிக் கூட்டை யாரும் சின்னதாகக் கூட ஆட்டி விடக் கூடாது.

அதற்காக இவள் சொல்லும் பொய்களை வைத்து ஆதித்யனை மனுஷரை அண்டிப் பழகாதவன், ஸ்டேட்டஸ் பார்ப்பவன் என்று அவர்களாகவே எண்ணிக் கொண்டு தங்கள் எல்லையில் நின்று கொண்டனர் எல்லோரும்.

இப்படி இருந்தவள் நித்திலன் சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்ற அடுத்த நாள் அவனை மட்டும் அழைத்துக் கொண்டு சாவகச்சேரி சென்றிருந்தவள், ரிசல்டை சொல்லி மகன் கையால் ஊருக்கே இனிப்புக் கொடுத்தாள்.

ஆதித்யனுக்கு அதில் பெரிய உடன்பாடு இல்லையென்றாலும் மனைவியின் பழைய காயத்துக்கான மருந்து அது என்று அவளை அவள் போக்கில் விட்டான்.

அதை நினைவு வைத்துத்தான் நாளை சாவச்சேரிக்குப் போக ரெடியா இருங்கோ என்று நிலனிடம் அவளைக் கேலி பேசினான்.

“சரி வாங்கோ சாதனா. நித்திரை வராட்டிலும் பரவாயில்லை. கண்ணை மூடிப் படுங்கோ. தானா வந்திடும்.” என்று அவளைக் கூட்டிச் செல்ல அவன் இழுப்புக்கு இசைந்து நடந்தாள்.

அவன் கால் தடத்தின் மேலான பயணம் அவளை என்றுமே பிழையான இடம் சேர்க்காது.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்!”

பலமுறை கேட்க வைத்து விட்டான்.

பெரிதுவக்கவும் செய்து விட்டிருந்தான்.

இது அவள் மகனால் சாத்தியமானதா?

இல்லை, அவளின் மறு பாகமானவனால் சாத்தியமானது!

இன்னும் அவள் வாழ்வில் கிடைக்க இருக்கும் இன்பங்கள் எல்லாவற்றுக்கும் அவன்தான் முழுமுதல் காரணமாக நிற்பான், அவளின் பாகன்!

முற்றும்!

_____________________________________________________

ஹாய் டியர்ஸ்… ஒருவழியா எபிலாக்கும் தந்து ஸ்டோரிய முடிச்சிட்டேன். over all ஸ்டோரியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க எண்டா மீ ஹாப்பியோ ஹாப்பி…😍😍 அண்டைக்கு நீங்க போட்ட comments எல்லாம் பார்த்தேன். சந்தோஷத்தை சொல்ல வார்த்தையில்லை.🥰🥰 இனித்தான் உங்கட எல்லாரின்ர reviews கும் ரிப்ளை பண்ணப் போறேன். அதான் கேம் முடிஞ்சுதே!

இந்த ஸ்டோரிய இவளோ நாள் இழுத்தடிச்சு எழுதின லேசி ரைட்டர்… நான் வீனா ஷக்தி. முதன் முதலா என் பேச்சு வழக்கு இலங்கைத் தமிழில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழில் கதை எழுதியிருக்கிறன். உங்களுக்குப் பிடிச்சிருக்கும் எண்டு நம்புறன் டியர்ஸ்.🥰ஆராவது இது நானா இருக்கும் எண்டு யோசிச்சிருந்தா மறக்காம சொல்லிப் போட்டுப் போங்க டியர்ஸ்…😍

error: Alert: Content selection is disabled!!