எபிலாக்
பத்து வருடங்களின் பின்…
நள்ளிரவு பன்னிரண்டரை மணி… ஆதித்யன் குடும்பமே நடு ஹோலில் சிவராத்திரி அனுஷ்டித்துக் கொண்டிருந்தது.
எப்போதும் போல் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நள்ளிரவில் வெளியாகியிருந்தன.
டிராஃபிக் காரணமாக பரீட்சைகள் திணைக்களத்தின் வெப்சைட் லோட் ஆகிக் கொண்டே இருக்க, இந்தப் பக்கம் சாதனாவுக்கு லோடு லோடாக டென்ஷன் ஏறிக் கொண்டிருந்தது.
“ப்ச்… இப்ப என்னத்துக்கு சாதனா இப்பிடி டென்ஷன் ஆகிறீங்கள்? நோர்மலா இருங்கோ பார்ப்பம்.” என்று கடிந்தான் ஆதித்யன்.
நாற்பதின் பிற்பாதியில் ஆங்காங்கே வெள்ளி முடிகள் மினுமினுக்க சால்ட் அண்ட் பெப்பர் ஹெயார் ஸ்டைல் அவனை இன்னொரு பரிமாணத்தில் கம்பீரமாகக் காட்டியது.
சாதனாவும் நாற்பதின் முற்பாதியில் பேரிளம் பெண் என்ற வகைப்பாட்டுக்குள் வந்திருந்தாலும் அன்பான கணவன், அருமையான பிள்ளைகள், அவர்களால் கிடைத்த நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கையால் வயதை எடை போட முடியாத பொலிவோடே இருந்தாள்.
“என்னைப் பார்க்கிறதை விட்டுட்டு வேளைக்கெண்டு ரிசல்ட பாருங்கோ.” என்றாள் அவள்.
“என்னவோ நான்தான் பார்க்கமாட்டேன் எண்டு நிக்கிற மாதிரி சொல்லுறீங்கள்? சேர்வர் லோட் ஆகுது. அதுவும் பாவம்தானே? வந்த ரிசல்ட் எங்கயும் போயிடாது நாளைக்கு பார்ப்பம் எண்டு நினைக்காம உங்களை மாதிரி எத்தினை அம்மாக்கள் சாமத்தில அதைப் போட்டுப் பாடாப் படுத்திக் கொண்டிருப்பினம் இந்த நேரம்?” என்ற சாதனா அவனை முறைத்தாள்.
கண்டுகொள்ளாதவன் மடிக்கணினியின் திரையின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
பத்து மணிக்கு உறங்கியவனைப் பன்னிரண்டு மணிக்கு, “ஆதி! எழும்புங்கோ. ஏ/எல் ரிசல்ட் வந்திட்டுதாம்.” என்று உசுப்பி எழுப்பியவளை,
“வந்தா வரட்டும். இந்த நேரமே பார்க்கோணும் எண்டு ஒரு அவசரமும் இல்லைத்தானே? விடிய பார்ப்பம், பேசாம படுங்கோ. சாமத்தில போய் பிள்ளையளையும் எழுப்பிக் கொண்டு நிக்காம!” என்றவனை விடாமல் அடம் பிடித்து இழுத்து வந்திருந்தாள்.
அந்தக் கடுகடுப்புதான் அவனுக்கு. அவனுக்கு பெற்றோர்கள் இந்தத் தேர்வுகள், பெறுபேறுகள் இதையெல்லாம் பெரிதான டென்ஷனாக எடுத்துக் கொண்டு பிள்ளைகளிடமும் அதைத் திணிப்பது அறவே பிடிக்காத ஒன்று!
பரீட்சை நன்றாக எழுதி பாஸானால் சந்தோஷம். இல்லை, பிள்ளையால் முடியவில்லையென்றால் அவர்கள் சாதிக்கவும் வேறு வேறு துறைகள் இருக்கும்தானே? அதில் சேர்த்துவிட்டு அவர்களை வாழ்க்கையில் உயர்த்த நான் தூணாக இருப்பேன் என்று உறுதியாக இருப்பவன், அதையே பிள்ளைகளிடமும் ஊட்டி வளர்த்திருக்கிறான்.
பரீட்சையின் தோல்விகளை வாழ்க்கையின் தோல்வியாக நினைத்து உயிரைப் போக்கிக் கொண்ட எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பான்? அவர்களில் ஒருவராக அவன் பிள்ளைகள் பதிவாகி விடக் கூடாது அவனுக்கு. அவன் வாழ்வதே அவர்களுக்காகத் தானே!
ஆனால் சாதனா இந்த விஷயத்தில் சாதாரண தாய் போல்தான் நடந்து கொள்வாள். அதற்காக பெறுபேறுகள் குறைந்தால் பிள்ளைகளை திட்டிப் பேசி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவாள் என்று அர்த்தம் இல்லை.
பரீட்சை, பெறுபேறு என்று வந்தால் அதில் தன் பிள்ளைகளின் செயற்பாட்டை அறிந்து கொள்ளக் கொஞ்சம் அதிக ஈடுபாடு காட்டுவாள். அவ்வளவுதான்! ஆனால் அதையே கூடாது என்பான் ஆதித்யன்.
இப்போதும் அதே ஆர்வத்தில் அவன் செய்யாதே என்று சொன்ன மற்றதையும் செய்து முடித்திருந்தாள். அதான் பிள்ளைகளையும் எழுப்பி விட்டிருந்தாள். அதற்கும் சேர்த்துத்தான் பிள்ளைகள் அறியாமல் அவளை முறைத்துக் கொண்டிருக்கிறான்.
இவர்கள் இப்படித் தங்களுக்குள் பிடுங்குப்பட்டுக் கொள்ள, இதற்கு சம்மந்தமானவனோ துளி கூட பதட்டம் என்பதே இல்லாமல் கூலாக அமர்ந்து தங்கைகளுடன் பேசிக் கொண்டிருந்தான்.
அன்று பார்த்த சிறுவன் அல்ல இவன். பத்தொன்பது வயது முடிகிறதல்லவா? அதற்குரிய உடற்கட்டும் அரும்பித் தடிக்கும் மீசையும் மழித்தும் எட்டிப் பார்க்கும் கன்னத்து முடிகளும் என்று தோற்றத்தில் வேறாகி நின்றிருந்தான்.
அவன் உடல் வளர்ச்சிதான் வயதுக்குரியது. மனமுதிர்ச்சி வயதையும் தாண்டியது.
அன்று ஆதித்யன் அவன் வயதுக்குப் புரியும்படி சொல்லி ஏற்க வைத்தவற்றின் உண்மை நிலவரங்கள் எல்லாம் வளர வளர அவனுக்குத் தெரிந்து போயின.
தங்கைகளின் பெயரின் பின்னால் ஆதித்யனின் பெயர் வருவதன் அர்த்தமும் தன் பின்னால் சம்மந்தமே இல்லாமல் வினோதன் என்ற பெயர் தொடரும் அர்த்தமும் நன்றாகவே புரியத் தொடங்கியது.
தெரிந்து கொண்ட போது பெரிதாக எல்லாம் அவன் ஃபீல் செய்ததில்லை. அவனை வேற்று ஆளாக உணரும்படி யாரும் நடந்து கொண்டால்தானே அவனுக்கு அதை எண்ணிக் கவலை பிறக்க?
மூத்த பிள்ளை என்று ஆதித்யன் முன்னுரிமை கொடுக்கும் அதே அளவுக்கு தங்கைகளும் அண்ணா, அண்ணா என்று ஆதித்யனை அடுத்து அவனையே நாட, அவனால் அநாவசியமாக வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியவே இல்லை.
ஒரே ஒரு வருத்தம்தான் இருந்தது. அவனைப் பின்தொடரும் அந்தப் பெயர்! தக்க சமயம் வந்த போது சட்ட ரீதியாக அதையும் நிவர்த்தி செய்த பின் முற்றும் முழுதான ஆதித்யனின் வாரிசு ஆகிப் போனான்.
ஆதித்யனின் மறு பிரதியாகவே வளர்ந்தான்.
அவன் சம்பந்தப்பட்டு எதை எடுத்துக் கொண்டாலும் அங்கே ஆதித்யனே முன்னுரிமை பெற்றிருப்பான்.
கடவுள் கூட தந்தைக்கு ஒரு படி கீழேதான் அவனுக்கு!
இப்போது பார்க்கவிருக்கும் பெறுபேறு கூட தந்தையைப் போல் மருத்துவர் ஆகவேண்டும் என்று தேர்ந்தெடுத்த
க.பொ.த உயர்தர உயிரியற் பிரிவுக்கானதுதான்!
“அண்ணா! உங்களுக்கு உண்மையாவே டென்ஷன் இல்லையோ?” வலது புறமிருந்த மயூ கேட்க, இடப்புறம் இருந்த மகியும்…
“ஓம் அண்ணா நானும் அதான் கேட்க இருந்தனான்.” என்ற, இருவர் தோள்களிலும் கை போட்டு அழகாகப் புன்னகைத்தவன்,
“என்னால முடிஞ்ச பெஸ்ட குடுத்திருக்கிறன். அதுக்கேற்ற ரிசல்ட் வரப் போகுது. இதுக்கேன் டென்ஷன்?” என்றான் கூலாக.
பின், “மயூ! மகி!! போன கிழமை நீங்க எழுதி முடிச்ச ஓ/எல் ரிசல்ட் எப்பிடியும் இன்னும் நாலு மாசத்தில வந்திரும். அப்ப நீங்களும் டென்ஷன் எல்லாம் ஆகவே கூடாது. எங்கட திறமைய சோதிக்கத்தான் எக்ஸாம். மன நிம்மதியைக் குலைக்க இல்லை. விளங்குதோ?” என்றான் தகப்பனின் அச்சாக!
இருவரும் அவனை ஆமோதித்துத் தலையாட்டினர்.
ஆதித்யன் விழிகள் ஒரு நொடி லப்டொப்பில் இருந்து உயர்ந்து மகனைத் தொட்டு மீண்டது.
அறிவுரை சொல்லுமளவு வளர்ந்து விட்டான் மகன் என்ற புளகாங்கிதத்தில் அவன் உதடுகளில் அழகான புன்னகை.
“அப்ப நானும் பயப்பிடக் கூடாதோ அண்ணா? எனக்கும் அடுத்த வருஷம் ஸ்கொலர்ஷிப் எக்ஸாம் வருதெல்லோ?”
நித்திலனின் மடியில் ஒய்யாரமாக இருந்துகொண்டு அவனை அண்ணாந்து நோக்கிக் கூவியது ஒரு குஞ்சுக் குயில்.
வேறு யார்? ஆதித்யன் சாதனாவின் நான்காவது முத்து.
ஆதித்யன் கொண்ட ஆசை திருமணமான அடுத்த ஆண்டே அவன் கை சேர்ந்திருந்தது.
“நிவா குட்டி! அந்த எக்ஸாமுக்கு இன்னுமே கவலைப்படக் கூடாதடா. அது சும்மா பிள்ளைக்கு எழுத வாசிக்கத் தெரியுமோ எண்டு பார்க்க வைக்கிற எக்ஸாம். எங்கட நிவா செல்லம் வடிவா எழுதுவா, வாசிப்பா எல்லோ? பிறகேன் அதுக்கெல்லாம் பயப்பிட?”
“ஓம் அண்ணா. எனக்கு வடிவா எழுதத் தெரியும். வாசிக்கவும் தெரியும். ரீச்சர் எனக்கு எல்லாத்துக்கும் வெரி குட் போடுறவா கொப்பில.” என்றது சிட்டு அழகாகச் சிரித்து.
“எங்கட நிவா சரியான கெட்டிக்காரி.” சகோதரிகள் இருவரும் ஒருமித்த குரலில் பாராட்டினார்கள்.
நிலன், “ரீச்சர், அண்ணா, அக்காக்கள், அம்மா, அப்பா எல்லாரும் பிள்ளையைக் கெட்டிக்காரி சொல்லுறமெல்லோ? அது காணும் உங்களுக்கு! பிறகு அவையென்ன எக்ஸாம் வைக்கிறது, பாஸ் சொல்லுறது? அண்ணா சொல்லுறேன் நிவாஷினி ஆதித்யன் இப்பவே பாஸ்தான்.” என்ற மலர்ந்து சிரித்தவள் தமையனின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“அப்பிடியே உங்களை மாதிரியே வளர்த்து விட்டிருக்கிறீங்கள் என்ன? எக்ஸாமுக்குப் பயப்பிட வேண்டாம் சரி, மரியாதை குடுக்கோணும் எல்லோ? இப்பிடி சொன்னா சின்னவாக்கு எக்ஸாம் ஏதோ சில்லறை வேலை எண்டு பதிஞ்சிடும். ஏற்கனவே அவாக்கு எல்லாரும் செல்லம் குடுக்கிறதும் கூட!”
ஆதித்யனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் முணுமுணுத்தவளுக்கு சிரிப்பை மட்டுமே பதிலாகக் குடுத்தான் அவன்.
அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆதித்யனின் பிள்ளைகள் இவர்கள் என்று அறிமுகப்படுத்துவது போய் இவர்களின் தந்தை ஆதித்யன் என்று பெருமையாகக் தன்னை அறிமுகப்படுத்தும் படி ஒரு இடத்தில் அவனின் நான்கு பிள்ளைகளும் அவனை வைப்பர் என்று!
“இஞ்ச பாருங்கோ வெப்சைட் வந்திட்டுது. நிலன்! இன்டெக்ஸ் நம்பரைச் சொல்லுங்கோ.” என்று சாதனா படபடக்க,
“அது அப்பாக்குத் தெரியும். பாடமாக்கி வச்சிருப்பார்.” அவன் சொல்லி முடிப்பதற்கும் ஆதித்யன் அதைப் பதிவிட்டு முடிப்பதற்கும் சரியாக இருந்தது.
திடீரென்று தொற்றிக் கொண்ட பரபரப்பில் மயூவும் மகியும் எழுந்து போய் தந்தையின் இருபுறமும் கழுத்தைக் கட்டிக் கொண்டு பின்னால் நின்று திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, நிலன் அப்போதும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அவன் மடியிலிருந்த நிவாஷினியும்தான்.
“அண்ணா! ரிசல்டுக்குப் பயப்பிடக் கூடாதெண்டு சொன்னீங்கள் எல்லோ, அக்காக்கள் ஓடிப் போய் நிக்கினம்!”
“அது அண்ணான்ர ரிசல்ட் பார்க்கிற ஆர்வத்தில செல்லம்.”
“அப்ப எனக்கும் ஆர்வம். நானும் பார்க்கப் போறேன்.” என்று ஓடிப் போய் தந்தையின் மடியில் ஏறிக் கொள்ள, அவளைத் தூக்கி சரியாக அமர வைத்தவன் அவள் உச்சியில் முத்தம் வைத்து…
“பிள்ளேன்ர நித்திரையையும் குழப்பிப் போட்டினமோ?”
“இல்லையப்பா. அம்மா அக்காக்களைத்தான் எழுப்பினவா. நான்தான் தனியா கிடக்க பயமெண்டு எழும்பி வந்தனான்.” என்ற, ஆதித்யன் சாதனாவைப் பாசமாகத் திரும்பிப் பார்த்தான்.
“என்னை ஏன் பார்க்கிறீங்கள், உண்மையா நான் அவாவை எழுப்பவே இல்லை. ஆனா பார்த்தீங்களோ உங்கட வாய்த் திறமை எங்க வந்து தங்கியிருக்கு எண்டு? நல்லது சொல்லுற மாதிரியே மூட்டி விடுறா உங்கட பிள்ளை!” என்ற சிரித்துக் கொண்டே மகளை மீண்டும் உச்சி முகர்ந்தான் அவன்.
“அப்பா! இஞ்ச ஸ்கிரீனைப் பாருங்கோ. அண்ணான்ர ரிசல்ட். த்ரீ ஏ. டிஸ்ட்ரிக்ட் ராங்க் ஃபோர்த். ஐலண்ட் ராங்க் ஃபிஃப்டீந்த். இசட் ஸ்கோர் டூ பொயிண்ட் செவின் சிக்ஸ் த்ரீ சீரோ.” என்று ஷீட்டில் தெரிந்த அனைத்தையும் உற்சாகக் குரலில் கத்திப் படித்தாள் மகி.
அவள் குரலில் கேட்டுக் கொண்டே திரைவழி பார்வையாலும் மகனின் திறமையை உள்வாங்கிக் கொண்டிருந்த ஆதித்யன் கண்கள் நிமிர்ந்து நிலனின் மேலே படிய அவனும் அவனைத்தான் பார்த்திருந்தான்.
அதற்குள் அவனைக் கட்டி வாழ்த்து மழையில் நனைக்கத் தொடங்கி விட்டிருந்தனர் மயூவும் மகியும். அதைப் பார்த்த நிவாஷினியும் தந்தையின் மடியிலிருந்து இறங்கி ஓடி வந்து அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
மிதமான சிரிப்புடன் பிள்ளைகளைப் பார்த்திருந்த ஆதித்யன், எழுந்து அறைக்குள் சென்றான். நிலனின் பார்வை அப்போதும் அவனையே தொடர்ந்தது.
அடுத்த நிமிடமே கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு அறையிலிருந்து திரும்பி வந்தவன், மகன் முன்னால் வந்து நிற்க, நித்திலன் எதிர்பார்ப்போடு எழுந்து நின்றான்.
ஆதித்யன் கையோடு எடுத்து வந்த ஸ்டெதஸ்கோப்பை அவன் கழுத்தில் போட்டு விட்டவன்,
“வாழ்த்துகள் டொக்டர் நித்திலன்.” என்று கர்வத்தோடு சொல்ல, நிலனின் முகம் முழுதும் மலர்ந்து விரிய பாய்ந்து தந்தையைக் கட்டிக் கொண்டவன், அவன் தோளில் முகத்தை அழுத்திப் புதைத்து முத்தம் பதிக்க ஆதித்யனும் அவன் தலையில் முத்தம் பதித்தவன், அவனைக் கட்டிக் கொண்டு முதுகைத் தடவிக் கொடுத்தான்.
நிலனுக்கு இப்போதுதான் அவன் கடின உழைப்புக்கான பலன் கிட்டியது போலிருந்தது.
நித்திலன் உயர்தரத்தில் உயிரியல் பிரிவு எடுக்கிறேன் என்றதும் ஆதித்யனுக்கு அவன் தன் மேல் உள்ள அபிப்பிராயத்தில்தான் தன் ப்ரபெஷனைத் தேர்ந்தெடுக்கிறானோ என்ற சந்தேகம் வர, அவனை இருத்திப் பேசியிருந்தான்.

