மாதொரு பாகம் கொண்டான் 1.1

MPK 01

“ஐயோ! என்ர குடியைக் கெடுக்கவெண்டு வந்து பிறந்தவளே! உன்னால இந்த வீட்டுக்கு எண்டைக்கு தான் நிம்மதி வந்து சேரப் போகுதோ? ஏனடி இந்த வேலை செஞ்சு போட்டு வந்த நீ? என்னண்டாலும் எங்களிட்ட ஒருக்கா கேட்டுட்டு செய்திருக்கலாம் தானேடி?”

ஒப்பாரி வைத்த தாயை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா.

“வாழ்த்துக்கள் மிஸிஸ் சாதனா! உங்களை அம்மா’ண்டு கூப்பிட இன்னும் ஏழு மாசத்துல மகனோ மகளோ வரப்போகினம்.”

மகப்பேற்று மருத்துவர் சொற்களில் அவள் சொரிந்த ஆனந்தக் கண்ணீரின் ஈரம் இன்னுமே அவள் கன்னத்தில் மிச்சம் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அன்றிரவே அவள் தலையில் தாக்கிய பேரிடி, அவள் உடலின் மொத்த ஈரத்தையும் உலரச் செய்திருந்தது.

இந்த நிலையில் அவள் வாழ்வு தாழ்ந்து போக என்ன பாவம் செய்துவிட்டாள் அவள்?

எல்லோரையும் போல் ஒரு காதல்! என்ன காதலுக்கு சா*தி, ம*தம் பார்க்கத் தெரியாது என்ற சுலோகத்தை மெய்ப்பித்து விட்டாள். பாவம், பதினெட்டு வயதில் அவளுக்கு இந்தக் கௌரவக் கல்யாண அரசியல் எல்லாம் தெரிந்திருக்கவில்லை.

விளைவு, விஷயம் தெரிந்தவுடன் அவள் தந்தையும் தமையனும், “அந்த ***னுக்கு எங்கட *** சா*தில பொம்பிளை கேக்குதோ?” என்று கத்தியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டனர்.

இவர்களைக் கூட விட்டு விடலாம். அப்போது வெறும் பதினேழு வயதேயான அவன் தம்பியும் அடியடா.. பிடியடா.. என்று சா*திப் பெருமை பேசிக்கொண்டு, தாயோடு சேர்ந்து அவளை அடி, உதை என்று சித்திரவதை செய்ததில் நடுங்கிப் போய்விட்டாள் அவள்.

அன்று வரை அவளை அந்த வீட்டில் பெயர் சொல்லி அழைத்தவர்கள் யாரும் இல்லை. தாயும் தந்தையும் பிள்ளை என்ற சொல் தாண்டுவதில்லை. அண்ணன் தங்கச்சி என்ற சொல் தாண்டியதில்லை. தம்பியோ, அக்கா, அக்காச்சி என்று பாசத்தில் உருகிக் கொட்டுவான்.

ஆனால், அன்றிலிருந்து எல்லாமே மாறி விட்டிருந்தது. ஏதேதோ காது கொடுத்துக் கேட்கமுடியாத கெட்ட கதாபாத்திரங்கள் எல்லாம் இவள் என்றாகிப் போனாள்.

கத்தியோடு இவர்கள் தங்கள் பிள்ளையைத் தேடித் திரியும் விஷயம் கேள்விப்பட்ட இவளின் காதலனின் பெற்றோர், மகனைப் பாதுகாப்பாக திருகோணமணமலையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, அங்கிருந்து பாஸ்போர்ட் விசா எடுத்து அப்படியே அரபு நாட்டுக்கு அனுப்பியும் விட்டார்கள்.

பிள்ளையைக் காப்பாற்றி விடவேண்டும் என்ற துடிப்பு, இதில் சம்மந்தப்பட்ட இன்னொரு ஜீவனின் நிலை என்ன என்று சிந்திக்கவிடவில்லை அவர்களை.

அதில் பிழை ஒன்றும் இருப்பதாக சாதனாவுக்குத் தோன்றவுமில்லை. பெற்ற மனம். பிள்ளையின் உயிரை மட்டும் தானே முதன்மையாய் பார்க்கும்?

ஆனால் அவளின் காதலன் என்று ஒருவன் இருந்தானே? அவனுக்குத் தன் நினைவு ஒரு செக்கன் கூடவா வரவில்லை?

‘பள்ளிக்கூடம், டியூஷன் போகும் போதும் வரும் போதும், விடாது பின்னால் சைக்கிளில் சுற்றி அவள் மனதைக் கலைத்துத் தலைக்கு மேல் தன்னை வைத்துக் கொண்டாடிய குடும்பத்தினரிடமே அடிவாங்கும்படி செய்துவிட்டுத் தான் மட்டும் பாதுகாப்பாகக் தலைமறைவாகி விட்டானே பாவி!?’ என்றவள் அவனை நிந்தித்துக் கொண்டு இரண்டு மூன்று மாதங்களை நகர்த்தி முடிப்பதற்குள் இவளது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வந்து விட்டிருந்தது.

காதல் பாடத்தில் திறமைச் சித்தி பெற வேண்டி காதல் பாடல்களையும் களவாக வரும் குறுஞ்செய்திகளையும் மனப்பாடம் செய்த மனதால், பல்கலைக் கழகம் செல்லும் அளவுக்கான பள்ளிப் பாடத்தை ஞாபகம் வைத்திருக்க முடியவில்லை போல. அவ்வளவு திறமையான பெறுபேறு வரவில்லை. மூன்று பாடத்திலும் சித்தி பெற்றுவிட்டாள். அவ்வளவு தான் சொல்லிக்கொள்ள முடிந்தது.

இவளோடு உயிரியல் பிரிவில் கூடப் படித்த இரண்டு பேர் மெடிசின் என்டர் பண்ணும் அளவு ராங்க் எடுத்திருந்தனர்.

ஐந்தாறு பேர் வேறு வேறு கோர்ஸ்களுக்கு பல்கலைக்கழகம் செல்ல முடியுமான அளவு ஸ்கோர் செய்திருந்தனர்.

அதற்கு அடுத்துக் கல்வியல் கல்லூரிக்கு செல்லும் அளவும் சிலர் தேறியிருந்தனர்.

இவள் இந்த மூன்றுக்கும் உதவாத மைனஸ் இசட் ஸ்கோர் எடுத்து மூன்று எஸ் சித்திகளைத் தான் பெற்றிருந்தாள்.

பெற்றவர்கள் திட்டி அடித்த போது வலித்ததை விட…

காதல் என்று சொல்லி விட்டு ஆபத்து என்றதும் கைவிட்டு சென்ற காதலனின் துரோகம் வலித்ததைக்காட்டிலும்…

நீ எதற்குமே லாயக்கில்லை என்று சுட்டுவது போல் வந்த பெறுபேறு, அவளுக்கு அவளையே அசிங்கமாக உணர வைத்து வலிக்க வைத்தது.

அத்தோடு அவள் காதல் பகிரங்கமான அன்றே உறவுகளின் சுயரூபம் மொத்தமாய் தெரிய வந்ததிலிருந்து, தனக்காகத் தான் நிற்க வேண்டிய தேவையை உணர்ந்திருந்தாள்.

அதில் தான் இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி அவளைப் பூதாகாரமாய் மிரட்டியது.

என்ன ஆனாலும் படிப்பு ஒன்று தான் தன்னைத் தானே காத்துக்கொள்ள ஒரே வழி என்று தாமதமாக என்றாலும் சரியாக உணர்ந்து கொண்டவள், அடுத்த வருடப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தாயிடம் தயங்கித் தயங்கி மெல்லப் பேச்சுக் கொடுக்க, அவர் இவளை முறைத்தவர்,

“ஏன் **** பெடியனோட கதைச்சது காணாது எண்டு அடுத்ததா *** பெடியனோட கதைக்கப் போறியோ?” என்று கேட்டவரை ஆத்திரமும் சலிப்புமாகப் பார்த்தவள்,

“அதான் இப்ப ஒண்டும் இல்லையெண்டு ஆச்சுது தானே? பிறகும் ஏன் அதையே குத்திக் குத்திக் காட்டுறீங்கள்? எனக்குப் படிச்சு வேலைக்குப் போகோணும். இனி இப்பிடி எதிலையும் போய் சிக்கமாட்டேன்!” என்றவளை என்ன சொல்லியும் நம்பவில்லை அவர்.

“அடிச்சுப் பல்லைக் கொட்டிப் போடுவனடி ***. செய்றதையும் செஞ்சு போட்டு வாயைப் பார். உன்னை இனி எங்கள் ஒருத்தராலயும் நம்பேலாது. படிக்கிற வயசுல தராதரம் தெரியாம கண்டவனோடயும் மேய்ஞ்சு திரிஞ்சு போட்டு, இப்ப படிக்கப் போறன் எண்டு ஆருக்கு நடிப்பு விடப் பார்க்கிறாய்? உனக்கு ஆம்பிளை கேட்டுத் தான அவனைக் காதலிச்சனீ? இனி அதுக்கு நாங்கள் வழி செய்து தாறம். நாலஞ்சு புரோக்கர்மாரிட்ட உன்ர குறிப்பு, ஃபோட்டோ குடுத்துக் கிடக்குது. சம்மந்தம் பொருந்தி வந்தா, கல்யாணத்தை செய்து வைக்கிறம், நீ அதை இதை மனசுல வைக்காம, கட்டுறவனோட போய் வாழப் பார்.” என்றவர்,

“நானே எங்க உன்ர கேவலக் கூத்துகள் எல்லாம் வெளி வெட்டைக்குத் தெரிஞ்சு, கல்யாணம் பொருந்தி வந்தாப்போல பொம்பிளையை பற்றி விசாரிக்கேக்க ஆரேன் சொல்லிப்போடுவினமோ எண்டு பதறிக் கொண்டு திரியுறன். வாறா இஞ்ச படிக்கிறன் கிழிக்கிறன் எண்டு! இன்னும் பேரைக் கெடுக்க…” என்றார் முறைப்பும் முனங்கலுமாக.

சாதனாவுக்கு அவரின் முன்பாதி பேச்சுக்கள் அருவருப்பையும் ஆத்திரத்தையும் கொடுத்ததென்றால் பின்பாதி அச்சத்தைக் கொடுத்து விட்டிருந்தது.

என்னவோ தான் செய்யக் கூடாத பெரிய தப்பை செய்துவிட்டோம் என்று நடுங்கி ஒடுங்கிப் போனவள் அதன்பின் அவர்கள் இழுப்புக்கே நடந்தாள்.

இவர்கள் அவசரத்துக்கு வெளிநாட்டு சம்மந்தம் எதுவும் பொருந்தி வரவில்லை என்று உள்ளூர் ஓணானாக இந்த வினோதனைப் பிடித்துக் கட்டி வைத்து விட்டிருந்தார்கள்.

அவனும் ஆரம்பத்தில் நல்லவன் போலத்தான் இருந்தான். இவர்கள் வீட்டை இவளுக்கு சீதனத்துக்கு என்று பேசியிருந்தார்கள்.

வினோதன் வீட்டுக்கு ஒற்றைப்பிள்ளை. அவர்களுக்கும் சொந்த வீடு இருப்பதால், இவர்கள் இருவரையும் தங்களோடு இருக்குமாறு அவனின் பெற்றோர் கேட்டுக்கொண்டவர்கள், வீடு உங்கள் பெண்ணுக்காய் எழுதினாலும் நீங்களே இருந்து கொள்ளுங்கள். தேவைப்படும் போது வேறு வீடு பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சங்கடமென்றால் வாடகையாக சிறுதொகையைக் கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் குடும்பமாக விருது வாங்கும் அளவு நடித்திருந்தார்கள்.

வினோதனும் சாதாரண நடிகன் அல்ல. ஆஸ்கார் நாயகன் அவன்.

ஒரு பிரபல்யமான பைக் ஷோ ரூம் ஒன்றின் சாவகச்சேரி கிளை மேனேஜராகப் பணி புரிகிறான் அவன்.

படித்த கணவன் தன்னைப் புரிந்துகொள்வான் என்று திருமணத்தின் பின் தான் எங்கேனும் வேலைக்கு செல்லட்டுமா என்று சாதனா கேட்டு நின்ற போது, இவள் படிப்புக்கு ஏற்ற, ஆனால் தன் கௌரவம் குறைந்து விடாத மாதிரி வேலை கிடைப்பது கஷ்டம் என்று யோசித்து முதலில் மறுத்தாலும் பிறகு, அவர்கள் ஷோரூம் வாடிக்கையாளரான ஒரு மருத்துவர், தன் மருத்துவமனைக்கு ஃப்ரொன்ட் டெஸ்க் வேலைக்கு ஆள் இருந்தால் சொல்லும்படி கேட்க, அது டீசன்டான வேலை என்பதால் தன் மனைவியையே அனுப்பி வைத்திருந்தான்.

error: Alert: Content selection is disabled!!