மாதொரு பாகம் கொண்டான் 1.2

மூன்று வருடம் குழந்தை தங்கவில்லை என்றதை எல்லோரும் பேசுபொருளாக்கி அவளை விமர்சிக்கும் போதெல்லாம்,

“இப்ப அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? எங்களுக்குத் தெரியும் எல்லாம்.” என்று அவர்கள் வாயை அடைக்கும் கணவனின் மேல் அதிகரித்த அன்பு தானே அவனுக்கு அவளை அடிமையாக்க சொன்னது.

ஆனால் அவன்? தன் பிழையை மறைக்க, என்னைத் தாங்கித் தன்னை நல்லவனாக்கி நம்ப வைத்திருக்கிறான்.

நானும் என்னை அவன் மணல் கோட்டைக்கு மகாராணியாக்கியது தெரியாமல் முட்டாளாக இருந்திருக்கிறேன்.

‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? இப்படியே இவன் கையில் கேலிப் பொம்மையாக இருப்பேன் என்றா?’

அழுகைக்கு இடையில் ஆவேசம் கொண்டவள், இதோ விடிந்ததும் அந்த வீட்டைத் துறந்து, கணவன் என்ற ஒருவன் இனி வேண்டவே வேண்டாம் என்று அங்கே அவர்கள் வீட்டில் அவன் ரெட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டுத் தாய் முன் நிற்கிறாள்.

அவரோ, விஷயம் இதுதான் என்று சொன்ன பின்னும் மகளுக்கு ஆறுதலும் ஆதரவும் கொடுக்காது அவள் முடிவைப் பிழை என்று கத்துகிறார்.

இப்படிப்பட்டவரிடம் தன் மனதை, அதில் இருக்கும் ரணத்தை இன்னும் விளக்க அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை.

சொல்லி அழ யாரும் இன்றி வலிகள் அவள் நெஞ்சப் பள்ளத்தாக்குகள் பதுங்கிக் கொள்ள…

‘இன்னும் மிச்சம் இருக்கும் மூன்று உருப்படிகளும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்குதுகளோ?’ என்று சலிப்பும் தவிப்பும் அவள் நெஞ்ச மேற்பரப்பில் ஆட்சி கொண்டன.

திடீரென்று தாயின் ஓலம் அதிகரிக்க, என்னவென எட்டிப் பார்த்தாள்.

மூர்க்கங்கள் மூன்றும் ஒன்றாய் வந்து இறங்கியது அவள் தமையனின் ஆட்டோவில்.

விடிகாலையில் வாழை இலை வெட்டி சந்தைக்கு அனுப்பும் சோலியாக சென்று விட்டு வீடு திரும்பியிருந்தனர்.

வந்தவர்கள் மூவரும் சுதாவின் அழுகையில் துணுக்குற்று அவரை விசாரித்தனர்.

விஷயம் பகிரப்படவும் மூன்று பேரும் ஒன்று போல் சொன்ன வார்த்தைகள்…

“அவர் செஞ்சது பிழை தான். ஆனா நீயும் ஒண்டும் ஒழுங்கா இருந்திட்டுக் கட்டிக் கொண்டு போகேல்லத் தானே? காதல் எண்டு கண்ட கருமத்தையும் செய்திட்டுத் தானே அவரைக் கட்டின நீ? அதை மனசுல வச்சுக்கொண்டு கொஞ்சம் பொறுமையா இரு, நாங்க அவரோட கதைச்சு விளங்க வைக்கிறம்.”

“என்னத்த விளங்கப்படுத்தப் போறீங்கள்? இந்தத் தப்பை ஒருக்கா செய்தவன் திருந்த வாய்ப்பே இல்ல. சரியெண்டு இவன் திருந்தியே மாறினாலும் என்னால அவனை இனி நம்பேலாது. இண்டைக்கு எவளிட்டப் போட்டு வந்து எனக்குப் பக்கத்துல வாறான் எண்ட அருவருப்போட என்னால காலத்துக்கும் வாழேலா.

பிறகு நான் செஞ்சதெண்டு நீங்க சொல்லுறது அது முடிஞ்சு போனது. கல்யாணத்துக்குப் பிறகு கட்டின மனுஷனுக்கு உடம்பாலயும் மனசாலயும் உண்மையா இருந்த நான், அதை அவனிட்டயும் எதிர்பார்க்கிறதில பிழையில்லத்தானே? அதால இதை முடிச்சு விட்டுட்டு, எனக்கு டிவோர்ஸ் வாங்கித் தாங்கோ! நீங்க பார்த்துக் கட்டி வச்ச நல்ல மாப்பிளை தானே? நீங்களே அவனோட என்னெண்டு கதையுங்கோ.”

“தம்பி அந்த பெலிட்ட எடு, இண்டைக்கு இவளின்ர முதுகுல அடையாளம் போடுறன். இந்த வாயை அங்க கதைச்சுத் தான் இவளின்ர மனுஷன், அவளிட்டப் போனானோ தெரியா? இல்லா, இவளின்ர அந்தப் பழைய காதலன் இப்ப ஊருக்கு வந்திருக்கிறானாம். அவனோட போகத்தான் அந்த மனுஷன்ல பழி சொல்லி இந்த நாடகமோ தெரியா.” என்ற தந்தையை விக்கித்துப் பார்த்தாள் சாதனா.

பெற்ற பிள்ளையை இப்படிப் பேச எந்தத் தந்தையால் முடியும்? இவரால் முடிகிறதே! ஏன்? காதலித்ததாலேயே ஒழுக்கம் கெட்ட இவளை தங்கள் கௌரவத்துக்குக் குறையில்லாத இடத்தில் கட்டி வைத்து விட்ட நிம்மதியில் இருந்தவரின் அந்த நிம்மதியைக் குலைத்ததாலா?

அந்த நிம்மதியைத் தக்க வைக்க என் ஒழுக்கத்தை இழுக்காக்கி அடக்கப் பார்க்கும் இவருக்கு, திருமணத்துக்குப் பின் வினோதன் செய்த ஒழுக்கக்கேடெல்லாம் ஒன்றுமே இல்லையா?

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? என் ஒழுக்கத்தை நிரூபிக்க, அந்த ஒழுக்கங் கெட்டவனுடன் வாழ வேண்டுமா?

வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றி இன்னும் யாரிடமும் சொல்லியிருக்கவில்லை. கணவனிடம் முதலில் சொல்லி அவனை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டு, மற்றவர்களிடம் சொல்வோம் என்று அவன் வரக் காத்திருந்தவளுக்கு, அவன் வந்த பின், கொடுத்த துன்ப அதிர்ச்சியை மற்றவர்களுக்கு விளங்க வைக்கவே நேரம் போதுமானதாக இருந்தது.

இப்போது குழந்தையைப் பற்றிச் சொன்னால், குழந்தைக்காக அவனுடன் வாழச் சொல்வார்கள். அது தன்னால் முடியுமா என்று அவள் சிந்திக்கையிலேயே, அவள் கணவன் பெரும் ஆத்திரத்தோடு இவர்கள் வீட்டின் முன்னால் வந்து இறங்கினான்.

error: Alert: Content selection is disabled!!