MPK 11
“தம்பி! இந்த சாதனா பிள்ளை என்னப்பா சொல்லுது? இனி வேலைக்கு வராதாமே?”
“ஓம் அம்மா. நாங்கள் வேற ஆக்களைப் பார்ப்பம்.”
“அவா செஞ்சது சரியெண்டேல. அதுக்கெண்டு வேலையை விட்டு நிப்பாட்டிறது சரியோ? பாவம் இஞ்ச வந்தே கொஞ்ச நாள் தானே?”
“அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்லுறிங்கள்? பிள்ளை அடம்பிடிக்குதெண்டு மருந்து குடுத்துப் படுத்தீட்டு வந்திருக்கிறா புத்திசாலி. பாவம் பிள்ளை… வேர்க்குது எண்டு ஃபான் போடப் போய் தட்டில ஏறி நித்திரைக் கலக்கத்தில விழுந்திருக்கிறார்.
சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டாக்கள் போகாட்டி என்ன நிலைமை? இவாவ வேலைக்கு எடுத்த பாவத்துக்கு நான் பழி கேக்கவோ? எனக்குத் தெரியா, எல்லாம் முடிஞ்சு பிள்ளை சுகமாகி வந்தாப் போல வெளிக்கிட்டுப் போகச் சொல்லுங்கோ. அதுமட்டுக்கும் தேவையான உதவியைக் கேட்டு செய்யுங்கோ.” என்றான் முடிவாக.
ஒரு வாரம் கழித்து பிஓபி போட்டு நித்திலனை இன்றுதான் வீட்டுக்கு விட்டிருந்தனர். பேத்திகள் முன்பள்ளி சென்ற இடைவேளையில் அவர்களைப் பார்க்க சென்றிருந்த பரமேஸ்வரி, இனி வேலைக்கு வரும்போது மகனையும் அழைத்து வருமாறு சொல்ல, சாதனா நடந்த எல்லாவற்றையும் சொல்லி விட்டிருந்தாள்.
தான் மகனிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தவர், எப்போதும் இல்லாத பழக்கமாக இரவு களைத்து வந்த மகனைப் பிடித்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அவன் முடிவாய் சொல்லி விட்ட கவலையில் அவர் மூழ்க, அதற்குள் உடை மாற்றி உண்ணுவதற்கு வந்திருந்தான் அவன்.
பரமேஸ்வரி மகனுக்குப் பரிமாற வந்தார்.
“நான் போட்டுச் சாப்பிடுறன் அம்மா. நீங்க போய் நித்திரையைக் கொள்ளுங்கோ.”
“இருக்கிறன் தம்பி. நீ சாப்பிடு…” என்று கொண்டே முழங்காலில் கையை ஊன்றி அமர்ந்தார்.
“ரெண்டு பேரையும் பார்க்கிறதால இப்ப உங்கட பகல் நித்திரையும் குழம்பிட்டு என்ன? கஷ்டமா கிடக்கோம்மா? கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ. நான் வேளைக்கெண்டு ஆரையேன் பார்க்கிறன்.”
“எனக்கு அதில எல்லாம் கஷ்டம் இல்ல. நீ இப்ப எடுத்த முடிவுல தான் கஷ்டம். எனக்கென்னவோ, இந்தப் பிள்ளையிட்ட பிடிச்சுக் கொண்டுது. ஆள் கதையிலயும் சரி, உடுப்பு தோற்றம் எண்டு எல்லாத்திலயும் நல்ல பதவிசான பிள்ளை. இனி வாறவை எப்பிடி வருவினமோ தெரியா.” என்றார் சலிப்பாக.
அவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அமைதியாக உண்டான்.
பரமேஸ்வரியும் அவன் உண்ணும் வரை அமைதியாக இருந்தவர், அவன் கை கழுவிய மறு நிமிடம் ஆரம்பித்து விட்டார்.
“தம்பி! கொஞ்சநேரம் பொறுமையா நான் சொல்லுறதைக் கேக்கேலுமோ?” என்ற, சாப்பாட்டு மேஜைக் கதிரையிலே அமர்ந்து விட்டான் அவன்.
“அந்த சாதனா பிள்ளை பாவமப்பு. ஒருதரின்ர ஆதரவும் இல்லாமப் பிள்ளையை வச்சுக் கொண்டு நிறையக் கஷ்டப்படுது.” என்றவர் ஆரம்பிக்க,
“கஷ்டப்படுற எல்லாருக்கும் ஒரு கதை இருக்கும் தான் அம்மா. அதுக்காக அவை கொலை செய்தாலும் சரியெண்டு விடேலுமோ?”
“நீ சொல்றது சரிதான் அப்பு. கஷ்டப்படுற ஆக்களுக்கு மட்டும் எண்டில்லை, இப்ப சந்தோஷமா இருக்கிற ஆக்களுக்கும் ஆரம்பத்தில கஷ்டப்பட்ட கதை இருக்கும். எனக்கும் இருக்கு. கேக்குறியோ?
உன்ர அப்பர் நீ ஒரு பிள்ளை மட்டும் காணும் எண்டிட்டார். பிறகென்ன தனி ஒரு பிள்ளையெண்டு இல்லாத செல்லத்தையெல்லாம் உனக்குக் குடுத்துக் குரங்குக் குட்டி மாதிரி உன்னை வளர்த்து விட்டுட்டு, உன்ர பத்து வயசுல அவர் போய்ச் சேர்ந்திட்டார். அவர் போனாப்போல உன்னைக் கட்டி மேய்க்க நான் பட்ட பாடு ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
தனியொரு பொம்பிளையா வீட்டையும் பார்த்துத் தோட்டத்தையும் பார்த்து உன்னையும் மேய்ச்சு எண்டு என்ர நிலைமை சொல்லி ஏலாது. அப்ப சில நேரம் யோசிப்பன், ஏன்டா கல்யாணத்தைக் கட்டினம், பிள்ளையைப் பெத்தம் எண்டு.
சில நேரங்களில உன்ர ஆக்கினை தாங்கேலாம தோட்டத்தான் வேப்ப மரத்தில கட்டி வச்சிட்டு என்ர வேலையைப் பார்த்திருக்கிறன். குழப்படி கூடினா உன்னைப் போட்டு அடிச்சிருக்கிறன்.
அப்ப உன்ர கதைப்படி பார்த்தா நானும் கொடுமைக்கார அம்மாவோ? உன்னில அக்கறை பாசம் இல்லாத அம்மாவோ?
அப்பிடியான அம்மாவா இருந்திருந்தா இண்டைக்கு உன்னை நாலு பேர் மதிக்கிற மாதிரி டொக்டராக்கி விட்டிருக்கமாட்டனே! என்னால பாரம் சுமக்கேலாது எண்டு உன்ர அப்பரிண்ட பென்சன் காசை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு, சாப்பிட்டு சாப்பிட்டு நித்திரை கொண்டுட்டு கட்டாயக் கல்வி வயசு முடிஞ்சதும் உன்னை எங்கயேன் கராஜ்ல வேலைக்கு சேர்த்து விட்டிருப்பன். உன்ர படிப்புக்கு அவர்ர பென்சன் காசைச் சேர்த்துக் கொண்டு நான் உழைச்சு அண்டண்டாடு பிரச்சனையளைப் பார்த்தனான்.
மனுஷன் இல்லாம தனியாளா குடும்பத்தைப் பார்க்கிற பொம்பிளையள் எல்லாம் பெரும்பாலும் இப்பிடித்தான். பிள்ளையளைக் கஷ்டப்படுத்தித்தான் பிள்ளையளுக்காக கஷ்டப்படேலும் அவையால.
சாதனா செஞ்சதும் அதைத்தான். பிள்ளையை வளர்க்க அவாக்கு இந்த வேலை வேணும். அதுக்குத் தடையா அவனே நிக்கவும் இப்பிடி செஞ்சு போட்டா. ஆனா அதை நினைச்சு நினைச்சு சரியாக் கஷ்டப்படுது. ஒருக்கா பட்ட பிறகு இனி இப்பிடி செய்ய யோசிக்கவே யோசிக்காது.
நீயும் கொஞ்சம் யோசியேன் அப்பு. அவாக்காக இல்லாட்டியும் எனக்காக யோசியேன். என்னதான் நான் அந்தப் பிள்ளைக்காகக் கதைக்கிற மாதிரி இருந்தாலும் இதில என்ர சுயநலமும் இருக்கு.
இனி இந்த மாதிரி ஒராளை வேலைக்குத் தேடி எடுக்கிறது கஷ்டம் தம்பி. எனக்கு இவாவோட செட் ஆகுது. இவா பிள்ளையளைத் தூக்கினாலும் எனக்கு அதில ஒவ்வாமையே வாறேல. அவ்வளவு சுத்தபத்தமான பிள்ளை. தச்சுத் தவறித் தலையில கை வச்சாலும் உடன உடன கையைக் கழுவீடும். அதுவுமில்லாம நல்ல நேர்மையான பிள்ளை. அவா எண்டபடியாதான் கொஞ்சநேரம் படுத்து எழும்புறேன். வேற ஆரேன் எண்டா எப்பிடி நம்புறது சொல்லு?”
ஆதித்யனும் யோசித்தான். தாய் தன்னோடு ஒப்பிட்டுப் பேசியதாலோ என்னவோ சாதனாவின் மேல் அவனுக்கிருந்த அதிருப்தியின் வீரியம் சற்றுக் குறைந்தது போல் இருந்தது.
அதை விட தாய் சொன்ன அந்த நம்பிக்கை விஷயம் தான் அவனை அதிகமாக சிந்திக்க வைத்தது.
“என்ன ஓமோ?” யோசிக்கக் கூட அவகாசம் கொடுக்காது தன்னைத் திருக்கும் தாயை பொய்யாக முறைத்தவன்,
“இப்ப என்ன அவவ வேலைக்கு கூப்பிடோணும். சரி வரச் சொல்லுங்கோ. ஆனா இனி இது மாதிரி ஒரு வேலையும் வைக்கக்கூடாது. கவனமா இருக்கச் சொல்லுங்கோ.” என்றவும் பரமேஸ்வரி முகத்தில் சந்தோசக் களை.
அதைப் பார்த்தவன், “நான் என்ர முடிவை மாத்திட்டன். அவாவ விட்டுட்டு உங்களைப் பொலிஸ்ல பிடிச்சுக் குடுக்கலாம் எண்டிருக்கிறன். ஒரு டொக்டரைப் பற்றிக் கதைக்கிறம் எண்டுற நினைப்பே இல்லாமக் குரங்குக் குட்டி எண்டுறீங்கள், மேய்க்கிறது எண்டுறீங்கள், இதுல கட்டி வச்சு வளர்த்தனான் எண்டு என்னட்டயே சொல்லுறீங்கள்! என்ன தைரியம் இருக்கோணும் உங்களுக்கு?” என்றான் கோபம் போல்.
“அந்த நேரம் உன்னை வச்சுக்கொண்டு நான் பட்ட பாட்டை பொலிஸ் மட்டும் கண்டிருந்தா, உன்னைத்தானப்பு சீர்திருத்தப்பள்ளில தூக்கிப் போட்டிருப்பினம். அப்பிடி ஒண்டு நடந்திருந்தா, இப்பிடி எனக்கு முன்னால இருந்து கொண்டு டொக்டர், பெரிய டொக்டர் என்று தம்பட்டம் அடிச்சிருக்கேலாது நீ. அந்த நன்றி எப்பவும் மனசுல இருக்கட்டும்.” என்றார் அவனுக்குத் தாயாக.
“பெரிய டொக்டர்…” என்ற தாயின் குறிப்பு அவனுக்கு நித்திலனை நினைவுபடுத்தியது.
மருத்துவமனை முழுக்க இவனைப் பெரிய டொக்டர், பெரிய டொக்டர் என்று ஏலம் விட்டு வந்திருப்பவன் நினைவில் அவன் முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது.
“என்னப்பா தனியா சிரிக்கிறாய்? சொன்னால் நானும் சிரிப்பனே!”
“இல்லையம்மா. அந்த நிலன் பெடியை நினைச்சுத்தான். கை முறிஞ்சு வார்ட்ல இருந்தமாதிரி இல்லாம, என்னவோ அவரை டூருக்குக் கூட்டிக் கொண்டு வந்த மாதிரி ஒரே சேட்டை. துறு துறு எண்டு வார்ட்டையே அளந்து கொண்டு திரிவார்.”
“பார்த்தியே நான் சொல்ல மறந்து போனன், நாளைக்கு உனக்கு நேரம் இருந்தா அந்தப் பெடியை ஒருக்கா போய்ப் பார். இண்டைக்கு நான் போக, நான் என்னவோ வார்ட் பார்க்க வந்த மற்ற டொக்டர் மாதிரி, பெரிய டொக்டர் வரேல்லயோ எண்டு கேக்கிறான் என்னட்ட.” என்ற, ஆதித்யன் வாய்விட்டே சிரித்து விட்டான்.
“அவர் அங்க ஹொஸ்பிட்டல்ல கேட்ட ஞாபகத்தில தான் கேட்டிருக்கிறார் அம்மா. அண்டைக்கு வீட்டை நிக்கேக்க என்னட்ட பார்க்கவே மாட்டேன் எண்டு, சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி நிண்டவர், பிறகு என்ன நினைச்சாரோ தெரியா, எந்த டொக்டர் பார்க்கப் போனாலும் பெரிய டொக்டர் வரேல்லயோ, பெரிய டொக்டர் வரேல்லயோ எண்டுதான் கேக்கிறவராம். மற்ற டொக்டராக்கள் காணுற நேரம் சொல்லி சிரிக்கிறவை என்னட்ட.
அதிலயும் ஜோக் என்னண்டா சதாசிவம் டொக்டர் முள்ளந்தண்டுல ஒப்ரேஷன் செய்த ஒரு பேஷன்ட பார்க்க வார்டுக்கு போயிருக்கிறார். அவர் பார்க்கிற அளவுக்கு இவர்ர காயம் இல்லைத் தானே? அதால அவர் அந்த பேஷன்ர மட்டும் பார்த்திட்டு போகத் திரும்ப, இந்தப் பெரிய மனுஷர் போனவரைக் கத்திக் கூப்பிட்டு, எல்லாரிட்டையும் கேட்கிற மாதிரி பெரிய டொக்டர் வரேல்லையோ எண்டு கேட்டிருக்கிறார்.
அவர்தான் அங்க இருக்கிற எல்லாருக்குள்ளயும் சீனியர். அவரிட்டயே இப்பிடிக் கேட்டா… அவர் சிரிச்சுப் போட்டு இவர் ஆரைக் கேக்கிறார் எண்டு விசாரிச்சிட்டு,
‘ஏன், நீங்க என்னை மாதிரி சின்ன டொக்டராக்களிட்ட காட்ட மாட்டீங்களோ?’ எண்டு கேட்டு வேணுமெண்டு வந்து இவரின்ர ரிப்போர்ட எல்லாம் பார்த்திட்டுப் போனவராம்.
அவர் போனாப்போல அங்க இருந்தவை எல்லாம் ஒரே நக்கலாம் இவரை. ‘மணிக்கட்டுல சின்ன முறிவுக்கு சதாசிவம் டொக்டரைப் பார்க்க வச்சிருக்கிறியள் எண்டா நீங்க பெரிய ஆள் தான் எண்டு!’
ஒரு கிழமையும் அங்க வார்ட்ட ஒரு கலக்குக் கலக்கிப் போட்டுத்தான் வந்திருக்கிறார் ஆள். இப்ப நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா, வீட்டை வந்தும் அதைத்தான் தொடரப் போறாரோ? இனி நான் ஒவ்வொரு நாளும் இவரைப் போய்ப் பார்த்திட்டுத் தான் வேலைக்கு வெளுக்கிடோணும் போல?” என்றான் சிரித்துக் கொண்டே அலுப்பான குரலில்.
“பாவம் தம்பி அவர். பிறந்ததில இருந்து தேப்பன் தொட்டுத் தூக்கின வரலாறு இல்லையாம். தேப்பன் இல்லாட்டிக் கூடப் பரவாயில்லை. இருந்தும் இல்லாத கொடுமை அதுக்கு. அப்பிடி என்ன ஒழுக்கம் கெட்டு மனுஷி இருக்கத்தக்கன இன்னொரு பொம்பிளை கேக்குதோ இவங்களுக்கு.”
“அம்மா! இதெல்லாம் அவேன்ர பேர்ஸ்னல். நாங்க அதைக் கதைக்கக் கூடா அம்மா.”
“அதுவும் சரிதான். ஆனா இப்பிடியானதுகளைக் கேட்கேக்கதான் என்ர பிள்ளை எவ்வளவு தங்கம் எண்டு தெரியுது. ஏன் தம்பி, இந்த மாதிரியானதுகளே ஒரு யோசினையும் இல்லாம இன்னொரு துணையைத் தேடி வாழேக்குள்ள, நீ ஏனப்பா இன்னொரு கலியாணம் செய்ய மாட்டன் எண்டு நிக்கிறாய்? வைஷ்ணவி போயும் மூண்டு வருஷம் ஆச்சுத்தானே தம்பி? பிள்ளைகளுக்கும் விருத்தெரியிற வயசு வரப்போகுது. இதுதான் சரியான காலமா இருக்கும் எண்டு எனக்கு யோசனை. நீயும் யோசியேன் தம்பி.”
உணர்வுகள் துடைத்த முகத்துடன் தாயை செவிமடுத்திருந்தவன், அவர் பேசி முடித்ததும்,
“நிறைய நேரம் முழிச்சிருந்திட்டீங்கள். போய் நித்திரையைக் கொள்ளுங்கோ. ரெண்டுபேரும் இண்டைக்கு உங்களோடயே படுக்கட்டும். குட் நைட்.” என்று விட்டு எழுந்து மாடியேறினான்.
பேச்சை முறித்து செல்லும் மகனைப் பற்றிய கவலையோடே அவரும் பேத்திகளின் அருகே வந்து படுத்துக் கொண்டார்.

