MPK 15
எக்ஸ்பிரஸ் வேகத்தில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, நித்திலனின் முறிந்த எலும்பும் பொருந்தியிருந்தது. மூன்று தினங்களுக்கு முன் கைக் கட்டையும் அவிழ்த்திருந்தனர். ஆதித்யன் அறிவுரையின் பேரில் அன்றே வார்டுக்குப் போய் தனக்கு சிகிச்சையளித்த டொக்டர்ஸ், நேர்ஸ் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்து வந்திருந்தான்.
“மகி! உங்கட அப்பாவை ஏன் நிறைய நாளா காணேல. வீட்டை வாறேலயோ?”
“வீட்ட வாறவர் அண்ணா. ஆனா நேரஞ் செல்லத்தான் வாறவர். பின்னேரம் கிளினிக் கூடத் திறக்கேல கொஞ்சநாளா.”
மயூ, “ரெண்டு மூண்டு நாளா அப்பாவுக்கு கிளிநொச்சில முடிச்சுக் கொண்டு வவுனியா ஆஸ்பத்திரிக்கும் போகோணுமாம் நிலனண்ணா. அதாலதான் பிந்தி (லேட்டா) வாறவர்.”
“பிந்தியெண்டா எத்தினை மணிக்கு வாறவர்?” வர்ணம் தீட்டுவதை பாதியில் நிறுத்தி விட்டு ஆதித்யன் பற்றிய தகவல்களை ஆர்வத்தோடு சேகரித்தான்.
“அது ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நேரம் வருவர் அப்பா. நாங்க நித்திரை கொண்டு நிறைய நேரத்துக்குப் பிறகும் வருவர்.”
“அப்ப அவர் நித்திரை கொள்ளுறேலயோ? பாவமெல்லோ அவர்?”
“ஓம்… அதாலதான் அவர் நித்திரை கொள்ளுற நேரம் நாங்க அவரைக் குழப்புறேல”
அறையின் தாழ்வாரத்தில் இருந்தபடி அவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,
அவர்களைப் பார்ப்பதுபோல் கிளினிக் பகுதியிலிருந்து பக்கக் கோடியை மறைக்கப் போடப்பட்டிருந்த ஆளுயரக் கேட்டை ஒட்டி மதிலோடு இருந்த சவுக்கு மரத்தின் அடியில் கதிரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் பரமேஸ்வரியும் சாதனாவும்.
எந்நேரமும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பரமேஸ்வரிக்கு சாதனா நல்ல பேச்சுத் துணையாக அமைந்து போயிருந்தாள்.
பரமேஸ்வரி மறுத்தும் கேட்காமல் சமையலுக்கு உதவிகள் செய்தபடி அவரோடு அடுப்படி முதல் அரசியல் வரை அலசி ஆராய்ந்தாலும் சாதனா அவர்களின் சொந்த விடயங்களைப் பற்றித் துரும்பளவு கூடக் கேட்டுக் கொள்ளமாட்டாள்.
ஆனால் அந்தக்கால மனிதியான பரமேஸ்வரியால் அப்படியெல்லாம் எல்லை வகுத்துப் பேச முடிவதில்லை.
அதற்காக இலக்கு வைத்தெல்லாம் அவளைப் பற்றித் தோண்டித் துருவினார் என்றுமில்லை.
இயல்பாகவே அவளைப் பற்றித் தோன்றும் கேள்விகளை ஒளிவு மறைவின்றிக் கேட்டுவிடுவார்.
சாதனாவும் அவளை விமர்சிக்கும் நோக்கத்தில் அவர் கேட்பதில்லை என்று புரிந்து பதில் கூறுவாள்.
ஆரம்பத்தில் கேள்விக்குப் பதில் என்பதுபோல் இருந்தது, போகப் போக அவளின் மன பாரங்களையெல்லாம் பகிரும் கவுன்சிலிங் செக்ஷனாக மாறிப் போனது.
அவள் தன் கதை என்று சொல்லும்போது தன் பரிதாப நிலையை மட்டும் சொல்லாமல், தன்னால் தனக்கு நடந்த அநீதி என்று தன் குறைகளையும் சேர்த்தேதான் சொல்லுவாள்.
தான் சொல்வதைக் கேட்டு அவர் தன்னைத் தவறாக நினைத்தால் என்றெல்லாம் கவலைப்படவே மாட்டாள்.
ஆனால் பரமேஸ்வரியால் எந்த இடத்திலும் அவளைக் குறையுள்ளவளாக நினைக்கவே முடியவில்லை. சில இடங்களில் அவள் மேல் தவறு இருந்ததை அவரும் உணர்ந்தார்தான்.
படிக்கும் வயதில் மனதை அலை பாயவிட்டது எல்லாம் பெரும் பிழை.
ஆனால் அதைத் தன் வாழ்க்கையில் தான் செய்த ஆகப் பெரும் பிழை என்று அவளே சொல்கையில் தன் தவறுகளை ஒப்புக்கொள்ளும் சீரிய குணத்துக்கு சொந்தக்காரி என்று மறுகோணத்தில்தான் பார்த்தார் அவளை.
அவளைப் பற்றி ஒவ்வொருநாளும் ஒவ்வொருவிதமாக அறியக் கிடைத்தது அவருக்கு.
“சாதனா, எத்தினை வயசம்மா உனக்கு?”
“முப்பது முடியுதம்மா.”
“கேக்கிறன் எண்டு பிழையா எடுக்கக் கூடாது. நீ ஏன் பிள்ளை இன்னொரு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கேல. நீ சொன்ன கணக்கை வைச்சுப் பார்த்தா இருபத்திரண்டு இருபத்தி மூண்டு வயசிலயே மனுஷனை விட்டுட்டு வெளிக்கிட்டிருப்பாய் எண்டு நினைக்கிறன்.
அது ஒண்டும் வாழ்க்கையைத் துலைக்கிற வயசோ, முடிக்கிற வயசோ இல்லைத்தானே? அவனே… மன்னிக்கோணும்… எனக்கு அவனுக்கு மரியாதை குடுக்க வரேல்ல. அவ்வளவும் செய்து போட்டு அவனே நெஞ்சை நிமிர்த்தித் திரியேக்க, உனக்கு என்னம்மா? கொஞ்சம் யோசிச்சு நல்லவனா பார்த்து கட்டியிருக்கலாம்தானே?”
“யோசிச்சு நிதானிச்சு முதல் கல்யாணத்தைக் கட்டியிருந்தாலே ரெண்டாம் கல்யாணம் எண்டுற கதை வரத் தேவையே இருந்திருக்காதே அம்மா. முதல் பிழை நான் விட்டது… அது என்னெண்டு உங்களுக்கே தெரியும்.
அடுத்த பிழை, அறியா வயசுல நான் பிழை விட்டுட்டன் எண்டுறதுக்காக திருப்பி எக்ஸாம் எடுக்க நிண்ட என்னை விடாம வெருட்டிக் கல்யாணம் கட்டி வைச்ச எங்கட வீட்டாக்களில.
மூண்டாவது பிழை வினோதன்லயும் வினோதன் வீட்டுக்காரரிலயும். வினோதன்ர வீட்டுக்காரருக்கு முன்னுக்கே தெரியும், அவர் அந்த நிவேதாவைக் காதலிச்சது. அந்தப் பிள்ளை வேற சாதியாம் எண்டு அவரின்ர மண்டையைக் கழுவி, எங்கட வீட்டுக்காரர்ட அவசரத்தைப் பயன்படுத்தி எனக்கு அவரைக் கட்டி வச்சது பெரிய பிழை.
அதிலயும் வினோதன்… முடிவெடுத்துக் கட்டிப் போட்டன், இனி கட்டின மனுஷிக்கு மட்டும் உண்மையா இருப்பம் எண்ட உறுதியில்லாம அந்தப் பிள்ளை கஷ்டம் எண்டு வந்து கேட்க, தன்ர ஒஃபிசிலயே வேலை எடுத்துக் குடுத்து, போகப் போக பழைய பழக்கத்துல சபலப்பட்டு அவளோட கள்ளத் தொடர்புல இருந்தது எல்லாம் என்னமாதிரி மனநிலைமைல இருந்து செய்தான் எண்டு தெரியேல.
அப்பவும் கூட தனக்கு இப்பிடி ஒரு பிரச்சனை இருக்கு. அவளில திரும்ப விருப்பமா கிடக்கு எண்டு என்னட்ட சொல்லியிருந்தா, கஷ்டப்பட்டு எண்டாலும் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு நானே விலகிப் போயிருப்பன் அம்மா. இன்னொருத்தியோட வாழுற அவனோட வாழ எனக்கு என்ன ஆசையாவே இருக்கும்?
நித்திலன் வயித்தில இருக்கிற அதேநேரம் அவன் இன்னொருத்தியோட தொடர்பில இருக்கிறான் எண்டு தெரிய வந்துது. எனக்கு எப்பிடி இருந்திருக்கும் அப்ப?
முதல்நாள் ஆசையாசையா பிள்ளை உண்டாகிட்டு மனசுக்குள்ள குதிச்சுக்கொண்டு இருந்த எனக்கு, அடுத்தநாளே அவன் ஒரே நேரத்தில என்னோடயும் அவளோடயும்… நினைக்க நினைக்க அப்பிடி ஒரு அருவருப்பு. அதான் ஆர் சொல்லியும் கேட்காம டைவர்ஸ் வாங்கியே தீருறதெண்டு நிண்டனான்.
ஆனா அதுக்குப் பிறகுதான் அவன்ர குணம் முழுசாத் தெரிய வந்தது.
விஷயம் தெரிஞ்ச அடுத்தநாள் அவன் நித்திரையால எழும்பைக்கு முன்னமே அவன் செய்த எல்லாத்தையும் அவன்ர தாய் தகப்பனுக்கு சொல்லி, இனி அவனோட வாழேலாது எண்டு சொல்லிப்போட்டு அவை மறிக்க மறிக்க எங்கட வீட்டை வந்திட்டன்.
நான் என்ர வீட்ட வந்த கொஞ்ச நேரத்திலயே அவனும் அடிச்சுப் பிடிச்சு வந்தான். மனுஷிக்கு உண்மை தெரிஞ்சிட்டு சமாதானப் படுத்த எண்டெல்லாம் வரேல்லை. நான் வீட்டை விட்டு வெளிக்கிட முன்ன அந்தப் பெட்டையை அவன்ர ஃபோன்லயே எடுத்துக் கிழி கிழியெண்டு கிழிச்சுப் போட்டன்.
ஆம்பிளை அவனுக்குத் தான் சபலத்தில அறிவில்லையெண்டா, இந்த நாய் ஒரு பொம்பிளையா இருந்து கொண்டு யோசிக்காம என்ர வாழ்க்கையையும் தன்ர வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சிட்டு நிக்குதே எண்ட கோபம், ஆதங்கம் எல்லாத்தையும் கொட்டிட்டேன்.
அதை எடுத்து அந்தப் பெட்டை இவரிட்ட சொல்லி அழுதிருக்கு. அதுக்கு நியாயம் கேட்கத்தான் ஆள் அவ்வளவு வேகமா ஓடி வந்தவர்.
வந்த உடனமே என்ர தலைமுடியைப் பிடிச்சு அடிக்க வெளிக்கிட அப்பா, அண்ணா, தம்பி மூண்டு பேரும் நிண்டதால பிடிச்சுப் போட்டினம்.
வயித்தில பிள்ளை இருக்கெண்டு அதுவரைக்கும் நான் ஒருத்தருக்கும் சொல்லேல. இவன் அடிக்கவும் பயத்தில அப்பவே சொல்லிட்டன்.
அதைக் கேட்டு அப்பாக்கள், நடந்ததை எல்லாம் மறந்துட்டு அந்தப் பிள்ளைய விட்டுட்டு பிள்ளைக்காக வாழுங்கோ எண்டு சொல்ல, அவன் துள்ள வெளிக்கிட்டான்.
‘உன்ர பிள்ளையை வேணுமெண்டாலும் விடுவனே ஒழிய அவளை விடமாட்டன். இப்பிடிக் கதைச்சுக் கொண்டு ஒருத்தரும் வந்து நிக்கக் கூடாது எண்டுதான் கவனமா இருந்தனான். அப்பிடியிருந்தும் இவள் என்னண்டு பிள்ளைத்தாச்சி ஆனவள் எண்டு இவளைக் கேளுங்கோ’ எண்டு… தன்ர வக்கிரத்தைக் கொட்டிட்டுப் போட்டான்.
அப்பதான் அப்பாக்கு ஓரளவுக்கு இவனைப் பற்றி விளங்கிச்சு. நான் வாழாம வந்து வீட்டோட இருந்திடுவனோ எண்ட கோபத்தில முதல் என்ர நடத்தையைப் பிழையா கதைச்சவரால அவன் அப்பிடி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருக்கேலாமப் போயிட்டு.
அதால அவேன்ர வீட்டுக்காரரக் கூப்பிட்டுக் கதைக்கவும்தான் அவை வாய் தடுமாறி முன்னமே அவன் காதலிச்ச பெட்டை எண்டு சொல்லியிருக்கினம்.
அதை ஏன் முன்னமே சொல்லேல எண்டு இவையால கேட்கேலாம பேச்சு, ஏனெண்டா நாங்களும் உண்மை ஒண்டும் சொல்லாமத்தானே செய்தனாங்கள்!
அதால ஒழுங்கா அதையெல்லாம் விட்டுட்டு பிள்ளையோட வாழச் சொல்லுங்கோ எண்டு கேட்க, அவை அதுக்குக் கதை சொல்லாம, ‘நீங்க எல்லாரும் வீட்டை விட்டு வெளிக்கிடுங்கோ. அது சீதனத்துக்குக் குடுத்த வீடுதானே, அங்க இவை ரெண்டு பேரும் தனியா இருக்கட்டும்.’ எண்டு சொல்லவும், அப்பா சுதாரிச்சிட்டார்.
‘முதல் எண்டாக் கூட இதுக்கு நாங்க ஓமெண்டு விட்டிருப்பம். இப்ப என்ன நம்பிக்கையில உங்கட பிள்ளையோட என்ர பிள்ளையைத் தனியா விடச் சொல்லுறீங்கள்? வேணுமெண்டா இவரை இஞ்ச வந்து பிள்ளையோட தங்கச் சொல்லுங்கோ. ஆனா நாங்களும் இஞ்சதான் இருப்பம்’ எண்டு முடிவா சொல்லிப்போட்டார்.
அப்பிடி வந்தா, தான் முழுக்க இவையின்ர கட்டுப்பாட்டுக்குள்ள வந்துடுவேன் எண்டு இவன் அதுக்குச் சம்மதிக்கேல.
அவன்ர தாய் தேப்பனும் தங்கட பெடியன் செய்த பிழையளை மறைச்சு நான் ஆண் மூர்க்கை பிடிச்சு வீட்டுக்கு அடங்காம திரியிறனாம் எண்டும், அப்பாக்கள் சீதனம் தர்ற மாதிரித் தந்துட்டு, இப்ப வீட்டைத் தருகினம் இல்லையெண்டும் கதையைப் பரப்பி விட, பார்க்கிற எல்லாரும் எனக்கு அறிவுரை சொல்ல வருவினம்.
எனக்குத்தான் இது எதாலயும் ஒரு பிரச்சனையும் இல்லையே! என்ர முடிவு இனி ஒரு காலமும் அவனோட வாழேலாது எண்டுறதுதான். அதுக்குச் சாதகமா அவை நடந்துகொள்ள அப்பாடி எண்டு என்ர வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்திட்டன்.

