மாதொரு பாகம் கொண்டான் 15 – 2

மனோ டொக்டருக்கும் ராணி அம்மாக்கும் மட்டும் விஷயத்தைச் சொன்னன். அவை விளங்கிக் கொண்டு என்னைத் தொடர்ந்து வேலை செய்யச் சொல்லிச்சினம்.

முடிவா வேண்டாம் எண்டா சட்டப்படி டைவர்ஸ் எடுக்கிறது நல்லம், இல்லாட்டி பின்னால பிள்ளைக்கும் உனக்கும்தான் பிரச்சினை வர வாய்ப்புக் கூட எண்டு சொல்லவும் அவையிட்டயே நல்ல லோயரா கேட்டு அப்ளை பண்ணினன்.

டைவர்ஸ் எண்டதும் அவன் பயந்து போனான். சீதனக் காசுகள் திரும்பக் குடுக்கோணும், மாசம் மாசம் படி கட்டோணும் எண்டு பயந்து தரவேமாட்டன் எண்டு நிண்டான்.

அவனுக்கு எண்ணம் என்னவெண்டா, நான் இப்பிடியே டைவர்ஸ் எடுக்காமலே என்ர காசுல விலத்தி வாழ்ந்திட்டா அவன் அந்தப்பக்கம் தன்ர கேடுகெட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம் எண்டு!

நாளைக்கு எனக்கு ஒண்டு நடந்தா வீடும் அவனுக்குத்தானே எண்டு பிளான் போட்டிருக்கிறார்.

அதில்லை எண்டவும் தனக்கு சேர்ந்து வாழ விருப்பம். டிவோர்ஸ் தரமாட்டன் எண்டு துள்ளினார். அம்மாக்களுக்கும் அதுதான் விருப்பம். அப்பாக்கு மட்டும்தான் இவன்ர பிளான் ஓரளவு பிடிபட்டதில, அவர் எனக்கு சப்போர்டுக்கு நிண்டார்.

அந்த எரிச்சல் எல்லாம் ஒண்டு சேர, மனோ டொக்டரிட்ட போய் நான் கேடு கெட்டவள், ஆரையோ வச்சிருக்கிறன், அதாலதான் தன்னை விட்டுட்டுப் போகப் பார்க்கிறாள். இந்த வேலை இல்லாட்டி ஒழுங்காத் தன்னோட இருப்பாள். அதால அவளை வேலையால நிப்பாட்டுங்கோ எண்டு சொல்ல அவர் உங்கட சொந்தப் பிரச்சனையளை இஞ்ச கொண்டு வராதேங்கோ எண்டுட்டார்.

அந்த வெப்பியாரமும் சேர, இது நடந்து கொஞ்ச நாள் கழிச்சு பிள்ளை பிறந்திருக்க பார்க்கிறன் எண்டு வந்தவன்,

“இதென்ன பிள்ளை என்னை மாதிரிக் கொஞ்சம் கூட இல்லை. இது ஆருக்கோதான் பிறந்திருக்கு. ஆர் கண்டது அந்த மனோரஞ்சன் டொக்டருக்குக் கூடப் பிறந்திருக்கலாம். அதான் தான் அவ்வளவு சொல்லியும் இவளை வேலையால நிப்பாட்ட மாட்டன் எண்டிருக்கிறான் கிழடன். தயவு செய்து இதுக்கு என்ர இனிஷியல் போடாதேங்கோ. ஆர் தேப்பன் எண்டு கேட்டு அதைப் போடுங்கோ. இல்லாட்டிப் பெரிய பிரச்சனை வரும்.’ எண்டு தன்ர கழிசடைக் குணத்தை மொத்தமாக் காட்டிப்போட்டுப் போட்டான்.

இவன்ர துரோகம் தெரிய வந்த நாளுக்குப் பிறகு இவன் சம்மந்தப்பட்ட ஒண்டுக்கும் நான் அழுகிறதே இல்லை. ஆனா அண்டைக்கு நான் அழுத அழுகை… பிள்ளை பெத்த வலி வேதினைய விட, என்ர பிள்ளையைப் பற்றி இவன் சொல்லிப்போட்டுப் போனது அவ்வளவு வலிச்சது. என்ர பிள்ளை பிறந்த அண்டைக்கே என்ர துரதிஷ்டத்துக்கான பலனைத் தன்னில சுமந்திட்டுது. அதான் இண்டைக்கு வரைக்கும் அவன் உய்யவே இல்லைப் போல.

டைவர்ஸ் கேஸ் போய்க்கொண்டு இருக்கேக்கயும் தனக்குப் பிள்ளை ஆர்ட எண்டு சந்தேகம் இருக்கெண்டு கோர்ட்டுல சொல்லி என்ர பிள்ளைக்கு பேர்த் சேர்டிஃபிகேட் எடுக்க விடவே இல்லை. கடைசியா டெஸ்ட் எடுத்து இவன்ர டின்ஏ’யோட மட்ச்சானாப் போலதான் கோர்ட் இனிஷியல் போடலாம் எண்டு சொல்லி அனுமதி குடுத்தது.

அப்ப எல்லாம் அப்பிடி ஒரு கோவம் வரும் இவ்வளவு போராடி இவன்ர இனிஷியலை என்ர பிள்ளைக்கு வைக்கிற அளவுக்கு இவன் தகுதியானவனோ எண்டு!

ஆனா நிதர்சனம் என்னைப் பொறுமையா போகச் சொல்லிச்சு. என்ர நடத்தையை நிரூபிக்கிறதைக் காட்டிலும் இந்த சமுதாயத்தில என்ர பிள்ளையின்ர பிறப்பு முறையானதுதான் எண்டு காட்ட வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது.

அதோட அவன் இந்த நாட்டின்ர பிரஜை எண்டு காட்டத் தேவையான எல்லா ஆவணங்களுக்கும் முதல் தேவையே அந்த பேர்த் சேர்டிஃபிகேட் தானே? அதான் அது வாங்கும் மட்டும் அமைதியா பல்லைக் கடிச்சுக் கொண்டு இருந்தனான்.

அதுக்குப் பிறகு நான் தாமதிக்க விரும்பேல. ஆர் என்ன சொல்லியும் கேட்காம லோயரைக் கொண்டே எனக்கு அவனிட்ட இருந்து எந்தக் காசும் தேவையில்லை. தந்த சீதனக் காசும் தர வேண்டாம். அவன் கட்டின தாலிக் கொடியையும் திருப்பித் தாரன் எண்டு சொல்லவும் வந்தது வரைக்கும் லாபம் எண்டு இழுத்தடிக்காம டைவர்ஸுக்கு ஒத்து வந்துட்டான்.

இலங்கைல ரெண்டு பேரும் ஓம் எண்டாலும் அவ்வளவு கெதியா டைவர்ஸ் கிடைக்காதே. அதுக்குப் பிறகும் நிறைய அலைஞ்சு ஒருமாதிரி அவனிட்ட இருந்து விடுதலை வாங்கிட்டன்.

நான் அண்டைக்கே கொஞ்சம் யோசிச்சு அவன்ர ஃபோன்ல இருந்த அந்தப் பெட்டையோட கதைச்ச ஆதாரங்களை எடுத்திருந்தா, இன்னும் வேளைக்கெண்டு என்ர வேதனை முடிஞ்சிருக்கும். என்ன செய்யிறது அனுபவிக்கோணும் எண்டு இருந்திருக்கு எனக்கு.”

யாருக்கோ நிகழ்ந்த நிகழ்வை சொல்லுவது போல் எந்த ஏற்றமும் இறக்கமும் இன்றி சொன்னவளைக் கனிவோடும் பரிவோடும் பெரும் பிரமிப்போடும் தழுவிக் கொண்டன, பரமேஸ்வரியின் பழுத்த விழிகள்.

காயம் பட்டுப்பட்டுப் பக்குவம் அடைந்ததால் மட்டுமே இந்த உணர்ச்சியற்ற பேச்சு சாத்தியம் என்று அவரின் அனுபவ அறிவு அவளைக் கண்டு கொண்டது.

அவர் யோசித்துக் கொண்டிருக்கையிலே அவள் தொடர்ந்து பேசினாள்.

“காதலிச்ச விஷயம் வெளியில தெரிஞ்சு பேர் கெட்டுப்போடும் எண்டு இவை செஞ்சு வச்ச கல்யாணத்தால எனக்குக் கிடைச்ச பேர்தான் எக்கச்சக்கம். அப்பிடியிருக்க முடிஞ்ச சகாப்தத்தைத் திருப்பித் தொடர மனசு வருமோ? எனக்கு இப்ப இருக்கிற குறை நிம்மதியே காணும். இதையும் கெடுத்து பைத்தியமா அலைய என்னால ஏலாதம்மா.”

“ஏனம்மாச்சி, எல்லாரும் அவனை மாதிரியே இருப்பினம்? நல்ல ஆம்பிளையளும் இருக்கினம் தானே?”

“இருக்கலாம் அம்மா.. ஆனா எனக்கு அமையுற ஆம்பிளை சொந்தம் ஒண்டும் உருப்படியா அமைஞ்சதில்லை. அப்பர்ல இருந்து அண்ணன் தம்பி முதற்கொண்டு காதலிச்சவன் கட்டினவன் எண்டு ஆருமே திறமில்லை. ஒருவேளை என்ர ராசி அப்பிடித்தான் போல.

ஏன் எனக்கெண்டு பிறந்ததும் அப்பிடித்தானே? அவன் அவன்ர அப்பனுக்கு மேலால என்னை அழ வச்சிட்டான். ஏன் அவன்ர அப்பனால செய்யேலாததையும் செய்து போட்டான்.

வினோதன் என்னை அவ்வளவு கேவலப்படுத்தியும் நான் ஒரு பிழையும் செய்யேல எண்டு, அதே ஊருக்குள்ள நெஞ்சை நிமிர்த்தித் திரிஞ்சனான். இவன் அதுக்கும் விடாம என்னை நாடு கடத்திட்டான்.

இவ்வளவு பேரும் எனக்குப் படிப்பிச்சு விட்ட பாடமே காணும். இனி ஒருத்தன் வந்து புதுசா படிப்பிக்க வேண்டாம். படிக்கிறளவு தெம்பும் எனக்கு இல்லயம்மா.” என்று ஓய்ந்த மூச்சை விட்டவளைப் பார்க்க ஒன்றுமே சொல்ல முடியாமல் போயிற்று.

“என்ன செய்யிறது என்னை நம்பி வந்து பிறந்துட்டான் எண்டு ஓடிக் கொண்டிருக்கிறன். அவனாத் தன்னைப் பார்த்துக் கொள்ளுற வரைக்கும் அவனை வளர்த்துவிட்டா மட்டும் காணும் அம்மா. அதைத் தவிர வேற எந்த ஆசையும் எனக்கில்லை.

அதுவும் இப்ப மான்குட்டியளோட பழக வெளிக்கிட்ட பிறகு அவனிட்ட நல்ல மாற்றம். முதல் மாதிரிக் கோபம் குறைவு. எடுத்தெறிஞ்சு கதைக்கிறதும் இல்லை. கை நீட்டுறதும் இல்லை.” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை,

“அப்பாஆஆஆ…” என்ற மயூரகியின் அழுகுரல் பலமாக வந்து இருவர் செவியையும் அறைந்தது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த இருவரும் பிள்ளைகள் இருக்குமிடத்திற்கு ஓடும் முன், இவர்களுக்குப் பின்னால் இருந்த கேட்டைப் படாரென்று திறந்து கொண்டு இவர்களைத் தாண்டி அழும் மகளிடம் ஓடியிருந்தான் ஆதித்யன்.

இருவருக்கும் அடுத்த திடுக்கிடல் இது. இவன் எப்போது வந்தான்? இவ்வளவு நேரமும் எங்கிருந்தான் என்று யோசித்தவர்கள், தந்தையைக் கண்டதும் இன்னும் ஏங்கி ஏங்கி அழுத மயூவின் குரலில் கலவரமாகி அவர்களிடம் விரைந்தனர்.

மயூ என்ன நடந்தது என்றே சொல்லாமல் “அப்பா… அப்பா…” என்று தேம்பித் தேம்பி அழ, பார்த்திருந்த மகிக்கும் கண்கள் கலங்கி ஊற்றெடுத்திருந்தது.

நித்திலன், இருவரையும் மாறி மாறி முழித்துப் பார்த்தபடி முகம் வெளிறி நின்றிருந்தான்.

“மயூக் குட்டி… அப்பான்ர செல்லமெல்லோ? அழக் கூடாது. அழாம என்ன செய்யுதெண்டு சொல்லுங்கோ. ஏதேன் கடிச்சதே பிள்ளைக்கு?” என்று கேட்டுக் கொண்டே அவள் கை, கால்களை எல்லாம் தடவித் தடம் பார்த்துக் கொண்டிருக்க, சாதனாவுக்கும் பரமேஸ்வரிக்கும் பதறிக் கொண்டு வந்தது.

“ஏன் தம்பி இப்பிடி அழுகுது பிள்ளை? கடவுளே! வெய்யில் குறைவெண்டு தான் வெளியில இருக்கவோ எண்டு கேட்க ஓமெண்டனான்.”

“அம்மா! நீங்க பதறாம மகியைப் பாருங்கோ…” என்ற, அதற்கு முன்னமே சாதனா மகியைத் தூக்கிக் கொண்டவள்,

“மயூக்கு ஒண்டும் இல்லை தங்கம். நீங்க அழாதேங்கோ… ஏன் மயூ அழுகுறாவெண்டு பிள்ளைக்குத் தெரிஞ்சா சொல்லுங்கோவன். அப்ப தானே அப்பா மயூவின்ர அழுகையை நிப்பாட்டுவார்.” என்று தடவிக் குடுக்க,

அவளோ, “ரோசாப் பூக்குத் தான் சொன்ன கலர் அடிக்கேலயெண்டு நிலன் அண்ணா மயூவை அடிச்சுப் போட்டார். அதான் மயூ அழுகுறா.” என்றாள் மெல்லிய விசும்பலுடன்.

மகியின் சொற்கள் காதில் விழுந்ததும் மகளை ஆராய்வதை நிறுத்திய ஆதித்யன், திரும்பி நித்திலனைப் பார்த்தான்.

ஏற்கனவே நடுங்கிப் போய் நின்றிருந்த நித்திலனுக்கு, அவன் பார்வை இன்னும் அச்சத்தைக் கொடுக்கவே முன்னிலும் முகம் வெளிறி நின்றிருந்தவன் முதுகில் சரமாரியாக விழுந்தன இடிகள் ஒப்ப அடிகள்.

error: Alert: Content selection is disabled!!