MPK 16
காலையில் இருந்து தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்த சூரியன் களைத்து மிதமான வெப்பத்தைப் பாய்ச்சத் தொடங்கியிருந்த நேரம் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டின் பின்புறம் வந்திருந்தாள் சாதனா.
முன்னர் போல் மூவரும் ஒரே கட்சியாக எல்லாம் இப்போது விளையாடுவதில்லை.
மகி மற்றும் நித்திலன் இருவரும் இணைந்து ஏதேனும் ஒன்றை விளையாடிக் கொண்டிருந்தால்,
மயூ தனியாக சாதனா அருகில் அமர்ந்து பஷில்ஸ் பொருத்துதல், ஏபிசிடி ஒழுங்கு முறையில் அடுக்குதல் என்று எதையாவது செய்து கொண்டிருப்பாள்.
இந்த ஒருவாரமும் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.
மயூ மறந்தும் இவர்கள் இருவர் அருகிலும் வருவதே இல்லை. அதாவது நித்திலன் இருக்குமிடம் வருவதில்லை.
இப்போதும் மகியும் நித்திலனும் டக் டிக் டொஸ் விளையாடிக் கொண்டிருக்க, மயூவை சாதனா மடியில் வைத்துப் பஞ்சதந்திரக் கதைப் புத்தகத்தில் இருந்து கதை வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தாள்.
அவளும் இடையிடையே “நரி ஏன் அன்ட்ரி அப்பிடி பாதில விட்டுட்டுப் போனது? கொஞ்சம் பெரிய தடியா எடுத்துத் தட்டி கிரேப்ஸை விழுத்தி இருக்கலாம்தானே? சிங்கம் காட்டுக்கு ராஜா தானே! அப்ப சிங்கத்துக்குத் தெரியாதோ தண்ணிக்குள்ள எட்டிப் பார்த்தா, தன்ர முகம் தான் தெரியும் எண்டு… அநியாயமா கிணத்துக்குள்ள விழுந்து போட்டுது என்ன? அது விழுந்தாப் போல ஒருத்தரும் தூக்கி விடேலயோ?” இப்படித் தனக்குள் உதித்த சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே, சுவாரசியமாக அடுத்தடுத்த கதைகளைக் கேட்டிருந்தாள்.
சாதனா கதை சொல்வதும் அதற்கான மயூவின் சந்தேகங்களும் மகி மற்றும் நிலனின் காதுகளிலும் விழத்தான் செய்தன. அவர்களுக்கும் அங்கே போய் கதை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. நித்திலன் அதை அடக்கிக் கொண்டான் என்றால் மகி முடியாமல் கேட்டே விட்டிருந்தாள்.
“நிலன் அண்ணா, வாறீங்களோ நாங்களும் போய் அன்ட்ரிட்ட கதை கேப்பம்?”
“நான் வரேல்ல மகி. நீர் போறதெண்டா போம்.”
“பிறகு நீங்க தனியா அல்லோ? இதை என்னெண்டு தனியா விளையாடுவீங்கள்? வாங்கோவேன் அண்ணா போவம்.” என்று கெஞ்சினாள்.
“நான் வந்தா மயூ கோவிச்சுக் கொண்டு எழும்பிப் போடுவா. நான் வரேல.” என்று முகத்தை சுருக்கினான் சோர்வாக.
என்னதான் மகி தன்னை ஒதுக்கி வைக்காமல் விளையாட்டுக்கு சேர்த்துக் கொண்டாலும் “நிலன் அண்ணா! நிலன் அண்ணா!!” என்று தன்னிடம் வாயோயாது பேசும் மற்ற மான்குட்டி, தன்னிடம் சும்மாவேனும் கதைக்காமல் ஒதுங்கிச் செல்வதைப் பார்த்து அவன் மனம் சுணங்கிப் போகத்தான் செய்கிறது.
மகியோடு விளையாடிக் கொண்டே இடையிடையே திரும்பி மயூவின் முகத்தைப் பார்ப்பான். அவளிடம் சிநேகமான சிரிப்பு ஒன்று தெரிந்து விடாதா என்று!
“மயூ அப்பிடியெல்லாம் செய்யவே மாட்டா. நீங்க வாங்கோ.”
“இல்லை… அவாக்கு நான் அடிச்சதால என்னைப் பிடிக்காமப் போட்டுது. அதான் கோவிச்சுக் கொண்டு என்னோட கதைக்காம விட்டுட்டா… கட்டாயம் நான் போனாக் கோவிச்சுக் கொண்டு போவா.”
“மயூக்கு நீங்க அடிச்சதெண்டு கோவம் இல்லை நிலன் அண்ணா. அவாக்கு நீங்க அடிச்சது நொந்து போயிட்டு. அதான் நீங்க திரும்பியும் அடிச்சாலுமெண்டு உங்களுக்குக் கிட்ட வாறேல்ல. ஏன் நிலன் அண்ணா, உங்களுக்கு மயூவை விருப்பம் இல்லையோ? மயூ குட் கேர்ள்தானே?”
“எனக்கு மயூவைப் பிடிக்காதெண்டு ஆர் சொன்ன? எனக்கு ரெண்டு மான்குட்டியிலயும் நல்ல விருப்பம். எங்கட வகுப்புல நிகேதன் எண்டு ஒரு பெடியன் படிக்கிறான். அவன்தான் பள்ளிக்கூடத்தில என்னோட நல்லாக் கதைக்கிறவன். அவனிட்டயெல்லாம் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறன் தெரியுமோ? உங்களுக்குப் பிறகுதான் அவனில எனக்கு விருப்பமெண்டு அவனுக்கு சொல்லி வச்சிருக்கிறன்.” அவனுக்குத் தெரிந்தளவில் தன் பாசத்தின் அளவை சொல்ல, மகி கேட்டுக் கொண்டாலும்,
“அப்ப ஏன் அண்ணா மயூவை அடிச்சனீங்கள்?” என்று தன் சகோதரிக்கு நியாயம் கேட்டாள்.
“அது… அண்டைக்கு அவா நான் சொல்லச் சொல்லக் கேட்காம கலரை மாத்தி அடிக்கவும் கோபம் வந்திட்டு… அடிச்சுப்போட்டன். நான் மெல்லமாதான் அடிச்சனான். ஆனா அவாக்கு சரியா நொந்திட்டுப் போல என்ன? எவ்வளவு பிலத்து (பலமாக) அழுதவா! நாங்கள் போனாப் போலயும் அழுதவாவோ?” மெய்யாக வருந்திக் கேட்டான்.
“இல்லை… அன்ட்ரி உங்களை அடிச்சதைப் பார்த்துட்டு அழுகையை நிப்பாட்டிட்டா.”
“நான் அடி வேண்டின சந்தோஷத்தில அழுகையை நிப்பாட்டிட்டாவோ?”
அவனில் இன்னுமே ஒட்டிக் கொண்டிருக்கும் குறைக் குதர்க்க புத்தி இப்படித்தான் கேட்க வைத்தது.
“இல்லை நிலன் அண்ணா. அன்ட்ரி உங்களை நிறைய அடிச்சதைப் பார்த்து பயந்துபோட்டா மயூ. எனக்கும் தான் பயமா கிடந்தது.
‘நிலன் அண்ணா ஒருக்கா அடிச்சதுக்கே எனக்கு சரியா நொந்தது. அன்ட்ரி அவரை விடாம அடிச்சிட்டா… அண்ணாக்கு எப்பிடி நொந்திருக்கும்? பாவம் அவர் எண்டு’ நீங்க போனாப் போல அப்பாட்ட சொல்லிக் கவலைப்பட்டவா மயூ.”
“உண்மையா அப்பிடியோ சொன்னவா?”
“சத்தியமா அப்பிடித்தான் சொன்னவா.” அவள் அடித்துச் சொல்ல, ஏற்கனவே குறுகுறுத்துக் கொண்டிருந்த அவன் மனதின் குறுகுறுப்பு இன்னும் கூடியது.
“நான் இப்ப போய்க் கதைச்சா அவா கதைப்பாவோ?”
“அது எனக்குத் தெரியா… ஆனா நீங்க அவாட்ட சொறி சொல்லி, இனி இப்பிடி அடிக்க மாட்டன் எண்டு சத்தியம் சொல்லுங்கோ… அவா சிலது ஓமெண்டு கதைப்பா.”
“அப்ப உங்கட அப்பாட்டயும் அப்பிடி சொறி சொல்லட்டோ? மயூவை அடிச்சதில இருந்து அவரும் தானே என்னோட கதைக்கிறேல?” அதை சொல்லும் போதே அவனையறியாது அவன் குரல் அழுதிருந்தது.
“ஓம்… சொல்லிப் பாருங்கோ… பிழை செய்தா சொறி கட்டாயம் சொல்லோணும்தானே?”
“ம்ம்… அப்ப நான் இப்பவே மயூவோட கதைக்கிறன்.” என்றுவிட்டு அவன் அவர்கள் இருக்குமிடம் நகர, பின்னோடே மகியும் ஓடினாள்.
இருவரையும் கேள்வியாகப் பார்த்த சாதனாவின் பார்வை பிரத்தியேகமாக தன் மகனை முறைக்கவும் செய்தது.
“ஏன் மகி இஞ்ச வந்திருக்கிறீங்கள்? இவர் ஏதேன் பிள்ளையை அடிச்சவரோ?”
“இல்லை அன்ட்ரி… நிலன் அண்ணா மயூவோட கதைக்கவாம்.”
“உனக்கு என்ன அவவோட கதை? ஏன் அண்டைக்கு அடிச்சது காணாதெண்டு திரும்ப வந்து நிக்கிறியோ? பிள்ளைக்குக் கிட்ட வரக் கூடாது சொல்லிப் போட்டன். நீ செஞ்ச வேலைக்கு அவை மகியையும் உன்னோட சேர விட்டிருக்கக் கூடாது. பாவம் பார்த்து விட்டது காணாதெண்டு…” என்று அவள் அவனைத் திட்டிக்கொண்டே போக…
“ஐயோ! அன்ட்ரி… அவரைப் பேசாதேங்கோ. அண்ணா மயூவிட்ட சொறி சொல்லத்தான் வந்தவர். பிறகு நிலன் அண்ணா, எனக்கு அடிக்கேலத்தானே? அப்ப அவரோட நான் கோவிக்கக் கூடாதெண்டு அப்பாதான் சொன்னவர். அதான் நான் அண்ணாவோட கதைக்கிறன். அதால நீங்க அதுக்கும் சேர்த்து அவரைப் பேசாதேங்கோ!” என்று அழகாக எடுத்துச் சொல்ல, சாதனாவுக்கு அள்ளிக் கொஞ்சத்தான் மனசு வந்தது.
“பெரிய மனுஷி நீங்க சொன்னாச் சரிதான். அவரை நான் ஒண்டும் சொல்லேல.” என்று அவளைக் கேலி செய்தவள், இவர்களுக்கெல்லாம் பிடிக்கும் அதிசயமாக மாறிப் போன தன் மகனைப் பார்த்தாள்.
அவன் முகத்தில் இருந்த பாவம் அவளை அதற்கு மேல் அவனிடம் கோபத்தைக் காட்ட விடவில்லை. மயூவிடம் திரும்பியவள்,
“மயூ! பிள்ளைக்கு இவரோட கதைக்க விருப்பமோ? ஓமெண்டா சொல்லுங்கோ, இல்லாட்டி வேண்டாம்.”
“அவர் சொறி சொன்னாதான் அன்ட்ரி நான் கதைப்பன். இல்லாட்டி கதைக்கமாட்டன்.”
அந்தப் பிஞ்சுக் குரலில் அதிகப்படியான அழுத்தமும் தன் நிலையில் நின்று பிறழாத உறுதியும்.
“நான் சொறி சொல்லத்தான் வந்தனான் மயூ. உங்களை அடிச்சதுக்கு சொறி. இனி நான் ஒருத்தருக்கும் அடிக்கவேமாட்டன். இது அம்மாவில சத்தியம். நீங்க பயப்பிடாம என்னோட முதல மாதிரிக் கதைப்பீங்களோ? என்னோட சேர்ந்து விளையாடுவீங்களோ? எனக்கு நேசம் சொல்லுவீங்களோ?”
அறுந்து போன அவளின் அன்பு இழையை முடிச்சுப் போட்டு சேர்க்கவென்று மடமடவென்று கேட்க, மயூ அவனுக்குப் பதில் சொல்லாமல் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த தந்தையைக் கண்டு விட்டு அவனை நோக்கி ஓடினாள்.
ஓடி வந்தவள் ஆதித்யனை நெருங்காமல் தூரத்தில் நின்று கொள்ள, தன்னை சுத்தப்படுத்தி வந்திருந்தவன் மகளைக் கையில் ஏந்திக் கொண்டான்.
அவர்கள் இருவரையுமே ஏக்கமும் சோர்வுமாகப் பார்த்து நின்ற, நித்திலனைக் கண்டு தாயாக மனம் கனத்துப் போனாள், சாதனா.
“அப்பா! நிலன் அண்ணா என்னட்ட சொறி சொன்னவர். இனி அடிக்கவும் மாட்டாராம் எண்டு சத்தியம் சொல்லுறார். நான் அவரோட கதைக்கட்டோ ப்பா?”
அவன் தாடையை தன் பிஞ்சுக் கரங்களால் பற்றிக் கேட்ட மகளுக்குப் பதில் சொல்லாமல், ஆதித்யன் திரும்பி நித்திலனைப் பார்த்தான்.
மயூரகி கேட்டதும் அவன் ஆமென்று பதில் சொல்வான் என்று பார்த்திருந்த நித்திலனுக்கு அவனின் அந்த மௌனம் சுட்டுவிட்டது.
அதோடு குற்றத்தை உணர்ந்து கொண்டவன் கண்களுக்கு ஆதித்யன் சாதாரணமாகப் பார்த்த பார்வை கூடத் தன்னை முறைப்பது போல் ஒரு தோற்றத்தைக் கொடுக்க, கண்ணைக் கரித்தது. உடன் மெல்லிய விசும்பலும்.
அவனைக் கிட்ட சேர்ப்பதே பாவத்தை சேர்ப்பது போல் கருதி ஒதுக்கி வைத்தவர்கள் மத்தியில் அரவணைத்து அன்பு புகட்டியவர்களின் இந்த உதாசீனம் தாயின் தடி அடிகளை விடவும் வலிக்கச் செய்தது. அந்த வலி கண்ணீர் எனும் வடிவமெடுத்து கண்களை மீறியது.
உடல்தான் வலிக்கு மரத்துப் போயிருந்தது. மனது இன்னும் அதன் பாலக பருவத்தோடுதான் இருக்கிறது!
அதை அவனை உணரச் செய்து விட்டனர் மருத்துவரும் அவன் மகவுகளும்.
தன் வீட்டுத் தரையில் சூரியன் விழுந்து கிடந்திருந்தால் கூட சாதனா அவ்வளவு திகைத்திருக்க மாட்டாளாக இருக்கும். தன்னுடன் ஒருவர் பேசவில்லை என்று கண்ணீர் சிந்தும் மகனைக் கண்டு அவள் வாழ்நாளின் உச்சபட்ச அதிர்ச்சியைத் தொட்டு நின்றாள் அக்கணம்.
தன்னை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் அவர்களை அடித்துத் துன்புறுத்தி, எச்சில் துப்பித்தானே பழக்கம் அவனுக்கு?
ஆதித்யனும் கூட அவனிடம் அழுகையை எதிர்பாராதவனாக பதறியவன், மகளை இறக்கி விட்டுவிட்டு இவனிடம் வந்தான்.
“நிலன்! ஏன் இந்த அழுகை? நீங்கள் குட் போய் எல்லோ? மயூ உங்களோட கதைப்பா. கண்ணைத் துடையுங்கோ.” என்று அவன் தலையைத் தடவ, கேவிக் கொண்டு அவன் காலைக் கட்டிக் கொண்டான் அவன்.
மகனின் இம்மாதிரியான அதிகப்படியான ஒட்டுதலை ஆதித்யன் எவ்வாறு எடுத்துக் கொள்வானோ என்று சாதனா “நிலன்!” என்று ஆதித்யனிடமிருந்து மகனைப் பிரிக்க வர, அவன் அவளைக் கவனிக்காமல் குனிந்து நித்திலனைத் தூக்கிக் கொண்டிருந்தான்.
நிலனும் என்னவோ பல காலமாகத் தனக்குப் பழக்கப்பட்ட தோள் மாதிரி அவன் கழுத்தைச் சுற்றிக் கையைப் போட்டுக் கொண்டு அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

