மாதொரு பாகம் கொண்டான் 17 – 2

அவள் பார்வையின் குழப்பம் புரிந்தவனாக, “அண்டைக்கு மயூ அழவும் ஓடி வந்து தூக்கினேனே அண்டைக்கு.” என்றவும் அன்று தான் என்ன கதைத்தோம் என்று மீட்டிப் பார்த்தவளுக்கு அது ஞாபகம் வரவும் மிகுந்த சங்கடமாக உணர்ந்தாள்.

பரமேஸ்வரி தன்னை அப்படி அறிவது வேறு. இவன் அறிவது வேறல்லவா?

‘அந்த பரிதாபத்தில்தான் இன்று உதவுகிறேன் என்று வந்தானா?’ நொடிக்குள் யோசித்தவளுக்கு அவன் மேல் கோபமே வரவில்லை.

அவன் வீட்டில் நின்று அக்கம் பக்கம் யோசிக்காமல் கதைத்து விட்டு தான் கதைத்ததை ஏன் கேட்டாய் என்றா சண்டைக்கு செல்ல முடியும்?

தன் செயலுக்காகத் தன்னையே திட்டிக் கொண்டவள், ‘இனிமேல் உணர்ச்சிவசப்பட்டு எல்லாம் எதையும் கதைத்து விடக்கூடாது. ஏன் பரமேஸ்வரியிடம் கூட ஒரு கவனத்துடனே கதைக்க வேண்டும். தான் பாட்டுக்கு மனதுக்கு அமைதி கிடைக்கிறது என்று எல்லாவற்றையும் கொட்ட, அவர்கள் என் பரிதாபநிலையைக் காட்டி அவர்களிடம் ஆதாயம் தேடப் பார்க்கிறேன் என்று நினைத்துவிட்டால்? நான் அப்படியல்ல என்றபோது ஏன் வீணே அந்தப் பழியை சுமக்க வேண்டும்?’

அவள் முகம் கசங்கி நின்றிருப்பதைக் கண்டவன்,

“உண்மையா சொறி… நான் கேட்கோணும் எண்டு நினைச்சு ஒண்டையும் கேட்கேல. அண்டைக்கு காரை சேர்விஸ் விட்டுட்டு டக்ஸி பிடிச்சு வந்தனான். அதான் நான் வந்தது தெரியேல உங்களுக்கு. அப்பிடியே மேல போட்டு வந்து பிள்ளையளைப் பார்க்க இந்தப் பக்கம் வரேக்கதான், அம்மா உங்களிட்ட கல்யாணம் செய்யலாம்தானே எண்டு கேட்டுக் கொண்டிருந்தவா.

அந்த நேரம் நான் வாறது சரியா இருக்காதெண்டு, அம்மாக்கு ஏன் இந்தத் தேவையில்லாத அடுத்தவையின்ர பெர்சனல் கதையள் எண்டு மனசுக்குள்ள நினைச்சுக் கொண்டு திரும்ப மாடியேறப் போக வெளிக்கிடேக்க தான், எல்லாம் சரியா இருந்திருந்தா ரெண்டாவது கல்யாணமெண்டுற கதையே தேவையில்லையெண்டு நீங்க சொன்னது காதில விழவும் என்னால அசையேலாம போச்சு. ஏனெண்டா நானும் அண்டைக்கு வரைக்கும், ‘நீ கொஞ்சம் கவனமா இருந்திருந்தா எனக்கும் பிள்ளையளுக்கும் இந்த நிலைமை வந்திருக்காதுதானே வைஷு, ரெண்டாவது கல்யாணம் எண்டுற சொல்லுக்கு இடமே இல்லை தானே?’ எண்டு என்ர வைஃப்ல நினைக்கிற நேரமெல்லாம் கோவப்படுவன்.

அதான் என்னை மாதிரியே நீங்களும் சொல்லவும் ஒண்டும் யோசிக்காம அதிலயே நிண்டுட்டன். நீங்க ஒவ்வொண்டும் சொல்ல சொல்லத்தான் நான் எவ்வளவு அறிவில்லாம யோசிச்சுக் கொண்டு இருந்திருக்கிறன் எண்டே எனக்கு விளங்கினது.

உங்கட வாழ்க்கைல நடந்த ஒவ்வொண்டும் மனுஷரால நடத்தப்பட்டது. அதையே உங்களால தடுக்கேலாம இருந்ததெண்டா மரணம் ஆருக்கு எப்ப எண்டுறது எங்களை மீறி இருக்கிற ஒரு சக்தி முடிவு பண்ணுறது. அது கடவுளாவோ விதியாவோ இயற்கையாவோ ஏதோ ஒண்டா இருந்துட்டுப் போகட்டும். அந்த ஒண்டைத் தாண்டி, ‘நீ ஏன் எங்களை விட்டுப் போனனீ?’ எண்டு கோபப்பட்டு வைஷ்ணவின்ர ஆத்மாவை இவ்வளவு நாளும் அலைக்கழிச்சுக் கொண்டு இருந்திட்டனோ எண்டு ஒரு மாதிரியா போச்சு. அதான் அண்டைக்கே அந்த நிமிஷமே அந்தப் பிடியில இருந்து வைஷுவை நான் விட்டுட்டேன்.

பிறகு தான் என்னை மாதிரியே யோசிக்கிற உங்கட யோசினையில என்ன பிழை இருக்கெண்டு விளங்கினது. உங்கட வாழ்க்கையில சில இடத்தில சில மனுஷர் தவறி இருந்தாலும் அது தவிர்த்திருக்க வேண்டியது எண்டாலும் அது நடந்து முடிஞ்சுது. அதை, ‘இது ஏன் இப்பிடி நடந்தது, மாறி வேற மாதிரி நடந்திருக்கலாமே’ எண்டெல்லாம் யோசிச்சுட்டு இருக்கிறதால இனி ஒண்டும் வரப் போறதில்லை. அதால நெக்ஸ்ட் என்னெண்டு பார்த்து மூவ் ஆகுங்கோ எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கேக்கதான் இதுவும் எனக்கும் பொருந்தும் எண்டு தோணிச்சு.

என்ன செய்யிறது, எவ்வளவுதான் பிரக்டிகலா இருந்தாலும் சில விஷயம் பெர்சனலா அனுபவிக்கேக்க அதை எங்கட வாழ்க்கையில அப்ளை பண்ணக் கஷ்டமாதான் இருக்கும். அதுக்கு நானும் விதிவிலக்கில்ல. உங்கட பிரச்சனைக்கு இப்பிடி யோசிக்கேக்கதான் எனக்கான முடிவுக்கான தெளிவும் கிடைச்சது. அதுக்கு ஒரு தாங்க்ஸ்.

பிறகு இனி கல்யாணம் செய்றதும் செய்யாம விடுறதும் உங்கட பேர்சனல். ஆனா ‘எல்லாம் சரியா நடந்திருந்தா இது தேவையில்லைதானே?’ எண்டுற யோசனையை மட்டும் கல்யாணம் வேண்டாம் எண்டு மறுக்கிறதுக்கான காரணமா வைக்காதேங்கோ. நிலனுக்கு நல்ல ஒரு கைட் கிடைச்சு, உங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர் கிடைச்சு, வாறவருக்கு உங்கள் ரெண்டு பேராலயும் நிறைவான குடும்பம் கிடைக்குமெண்டா நீங்க தாராளமா ஒரு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்.

நான் இப்பிடிக் கதைக்கிறதை நீங்கள் எப்பிடி எடுப்பீங்கள் எண்டு தெரியேல. ஆனா இது என்ர ஹபிட்.

ரெண்டு கிழமைக்கு முன்னம் ஸ்கூல்ல லவ் பிரச்சனையாம் எண்டு ரெண்டாம் மாடியில இருந்து குதிச்சு ஒரு பிள்ளை ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருந்தவா. அவாக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கிறது மட்டும்தான் என்ர வேலை. ஆனாலும் அதை மீறி அந்தப் பிள்ளைக்கு பார்க்கிற நேரம் எல்லாம் நிறைய நல்லது சொல்லுவன். அதுமாதிரித்தான் உங்களுக்கும். எனக்கு சொல்லோணும் எண்டு இருந்தது சொல்லிட்டன். பிழையெண்டா சொறி.”

“திரும்பத் திரும்ப சொறி சொல்லாதீங்க டொக்டர். நீங்க சொல்லுறது ஒண்டும் நியாயமில்லை எண்டாத்தானே நான் இதையெல்லாம் தப்பா நினைக்க? பிறகு நான் கதைச்சத நீங்க கேட்டுட்டீங்கள் எண்டும் நான் கோபப் படேலாது. நான் ஒண்டும் அறையைப் பூட்டிப் போட்டு பரமேஸ்வரி அம்மான்ர காதுக்கு மட்டும் கேட்கிற மாதிரி விஷயத்தை சொல்லேலத்தானே? அதோட அது வெளியில தெரிஞ்சிட்டே எண்டெல்லாம் கவலைப்பட ஒண்டுமே இல்லை. அங்க இதுக்கு நேரெதிரா கேவலமா என்னை ஜோடிச்சு வச்சிருக்கினம். அதுக்கே நான் கவலைப் படேல. அப்பிடியிருக்கேக்க என்ர உண்மையான நிஜம் வெளியில தெரிஞ்சதை நினைச்சோ கவலைப்படுவேன்?”

“இந்தப் பக்குவம் எல்லாத்திலயும் இருந்தா சரி. நான் நித்திலன் விஷயத்தை சொல்லுறன். அவரோட கொஞ்சம் மினக்கெட்டாலே கெட்டிக்காரப் பிள்ளையா வருவார் எண்டு நினைக்கிறன். உங்கட கம்போர்டுக்கு யோசிச்சு அவற்ற எதிர்காலத்தை வீணாக்காதேங்கோ.”

இவ்வளவு நேரம் இருவரும் கதைத்துக் கொண்டிருக்க அதை மௌனமாகத் தனக்குள்ளே உள்வாங்கிக் கொண்டிருந்த பரமேஸ்வரி, தனக்குள்ளே ஏதேதோ சிந்தித்தவர் திடீரென,

“அப்ப தம்பி, உங்களுக்கு இனி கல்யாணம் செய்யிறதில ஒரு பிரச்சனையும் இல்லையோ?” என்று கேட்டிருந்தார்.

தாயின் இந்தத் திடீர் கேள்வியை எதிர்பாராமல் அதுவும் சாதனா முன்பு வைத்தே அவர் இதைப் பேசுவார் என்று சற்றும் எதிர்பாராதவனாய் திகைத்த ஆதித்யன், “அம்மா!” என்றான் லேசாய் கண்டனம் தொனித்த குரலில்.

அவன் பார்வையிலும் இதைப் பிறகு கதைத்துக் கொள்ளலாம் என்ற செய்தி இருந்தது.

ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல், “இல்லை ஓமெண்டா உங்களுக்கு எப்பிடிப்பட்ட பிள்ளையா பார்க்க வேணும் எண்டு யோசினை என்னவும் இருக்கோ? நீங்க முதல் கல்யாணத்துக்கே பிள்ளையின்ர குணத்தை மட்டும் பார்த்தாக் காணுமெண்டுதான் சொன்னனீங்கள்! ஆனாலும் கேட்கோணும்தானே? வாற பிள்ளை கல்யாணம் கட்டி இருந்தாலும் பிரச்சனை இல்லையோ? இல்லா கட்டாத பிள்ளையா இருக்கோணுமோ?” என்று அவர் இன்னும் திருக, மருத்துவனிடம் மருந்துக்கும் பொறுமை இன்றிப் போனது.

“அம்மா!” என்றவன் குரல் ஓங்கி ஒலிக்க, அந்த இடத்தில் தான் அதிகப்படியாக, அந்நியமாக இருப்பதை உணர்ந்த சாதனா, அவனுக்கு மேலும் சங்கடத்தைக் கொடுக்க விருப்பமின்றி,

“நான் போட்டு வாறன் அம்மா. நேரம் போய்ட்டு..” என்று நகரப் பார்த்தாள்.

அவரோ நீ “கொஞ்சம் இரம்மா…” என்று அவளை விடாமல் கையைப் பிடித்துக் கொண்டவர்,

“சாதனா மாதிரிப் பிள்ளை எண்டா உங்களுக்கு ஓமோ தம்பி? மாதிரி என்ன மாதிரி, ரெண்டு பேருக்கும் ஓமெண்டா சாதனாவையே உங்களுக்குக் கேட்கலாம்தானே?” என்று அன்றே மனதில் முளைத்த ஆசையை அதிரடியாகப் போட்டு உடைத்து விட, இருவருமே உச்சபட்சமாய் அதிர்ந்து நின்றிருந்தனர்.

அதிர்ச்சியில் கூட ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவித்திருந்த பரமேஸ்வரி அம்மாவையே இருவர் விழிகளும் திகைத்து நோக்கியிருந்தன.

அதிலிருந்து முதலில் தெளிந்த சாதனா, மெதுவாகத் தன் கையை அவர் பிடியில் இருந்து விலக்கிக் கொண்டவள்,

“நிலன் தனியா இருக்கிறான். நான் போறன்.” என்று யார் முகத்தையும் பாராமல் சொல்லி விட்டு, எதிலிருந்தோ தப்பித்தவள் போல், ஓட்ட வேகத்தை நடையில் கொண்டு வந்து அவர்கள் பார்வையில் இருந்து விரைந்து மறைந்தாள்.

“ஏன் அம்மா பிந்தி வாறீங்கள்? டொக்டர் இண்டைக்கு வேளைக்கு ஆஸ்பத்திரிய மூடிட்டார் போல. எட்டிப் பார்த்தனான் அவரைக் காணேல. அங்க நிக்கிறாரோ? நான் போய் அவருக்கு பாய் சொல்லிப்போட்டு வரட்டோ?”

நிலன் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அவனை இழுத்துக் கொண்டு வீடு வந்தவள், அதன் பின்னும் அங்கே தாக்கிய அதிர்ச்சி குறையாமல் மந்த நிலையிலே ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாள்.

இதில் நித்திலன் வேறு டொக்டரைப் பார்க்க விடவில்லை என்று கோபத்தில் அவளைப் பேசிக் கொண்டே திரிய, அவளால் எதற்கும் பதில் கொடுக்க முடியவில்லை.

இரவுணவு கூட சமைக்கவில்லை. மகனுக்கு டீ போட்டு சமபோஷாவைக் குழைத்து, இரண்டு மூன்று சொக்லேட் கிரீம் பிஸ்கட்டுகளையும் கொடுத்தவள், தான் வெறும் டீயை மட்டும் அருந்தி விட்டுப் படுத்துக் கொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!