மாதொரு பாகம் கொண்டான் 18 – 1

MPK 18

“என்ன வேலையம்மா பார்த்து வச்சிருக்கிறீங்கள்? அவா என்னைப் பற்றி என்ன நினைச்சிருப்பா? உங்களுக்கு ஏதேனெண்டா என்னட்டத் தனியா கேட்கத் தெரியாதோ?” தாயிடம் கோபமாய் கேட்டான்.

“இப்ப இதால என்ன வந்திடப் போகுது தம்பி? நான் கதைச்சதால மனசு சலனப்பட்டுப் போறதுக்கு நீங்கள் ரெண்டு பேரும் ஒண்டும் ஸ்கூல் படிக்கிற பிள்ளையள் இல்லைத்தானே? நான் எனக்கு வந்த யோசினைய சொன்னன். நீங்கள் ஓமெண்டா ஓமெண்டப் போறீங்கள். இல்லையெண்டா இல்லையெண்டு போட்டு உங்கட உங்கட வேலையைப் பார்க்கப் போறீங்கள். இதுக்கேன் இவ்வளவு கோபம்?”

அவர் சாதாரணமாகப் சொல்ல, ஆதித்யனுக்கு தலையை எங்கும் பலமாக முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. ஸ்கால்ப் இன்ஜரி ஆபத்தானது என்று அவன் படித்த படிப்பு அதைத் தடுத்து விட்டிருந்தது.

“நான் என்ன சொல்லுறன், நீங்க என்ன சொல்லுறீங்கம்மா? உங்களுக்கு வந்த எண்ணத்தை சொன்னது பிழை எண்டு சொல்லேல நான். அதை முதல் என்னட்ட தனிய சொல்லியிருக்கலாம் தானே எண்டுதான் கேட்கிறேன்.”

“ரெண்டு பேரிட்டையும் தனித்தனியா கதைச்சுக் கேட்கிறளவு நேரங்கள் இல்லையப்பு. உங்களுக்கும் வயசு போகுது. பிள்ளையளுக்கும் விருத்தெரியிற வயசு வருகுது.”

ஏதோ இருவரும் தத்தம் மனசுக்குள் மற்றவரைத் திருமணம் செய்ய ஆசை வைத்துக் கொண்டு வெளியே பரிமாற முடியாமல் காலத்தை விரயம் செய்து கொள்வது போல் அவர் கதை இருக்க, இவர் புரிந்துதான் பேசுகிறாரா என்று அவரைப் பார்த்து நின்றான் ஆதித்யன்.

‘நான் என்ர மனசறிஞ்சு எல்லாம் சரியாத்தான் செய்யுறேன். எல்லா விஷயத்திலயும் நிதானம் நல்ல முடிவைத் தந்திடாது. சில விஷயங்களில உடனுக்குடன செயற்படுறதுதான் நல்ல ரிசல்டைத் தரும்…’ மனதுக்குள் கூறிக் கொண்ட பரமேஸ்வரி அவனைத் திசை திருப்ப,

“பிள்ளையள் குளிக்கப் போய் கன நேரம் ஆயிட்டு, தம்பி. தண்ணிய கண்டா மீன் குஞ்சுகள் மாதிரி வெளில வர விருப்பம் இருக்காது. போய் அவைய பாருங்கோ.” என்றவர் பின்னே நினைவு வந்தவராக,

“கிளினிக் முடிஞ்சுதோ, இல்லா ஆக்கள் இருக்கினமோ?” என்றார்.

“இல்லை, இண்டைக்கு அப்பொயின்ட்மெண்ட் குறைவாத்தான் குடுக்கச் சொன்னனான்.” என்றுவிட்டு மகள்களைப் பார்க்க விரைந்தான்.

அதன் பின் அவனுக்கு வேறு எதையும் யோசிக்க முடியாதவண்ணம் மகள்கள் அவன் நேரத்தைக் களவாடிக் கொண்டனர்.

மறுநாள் வழக்கம் போல் வேலைக்கு வந்திருந்தாள் சாதனா. முந்தைய நாள் இரவு உறங்காமல் இருந்து பரமேஸ்வரி நேற்றைய பேச்சின் மிகுதியை இன்று தொடர்ந்தால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தீர்க்கமான முடிவோடுதான் வந்திருந்தாள்.

ஆனால் பரமேஸ்வரியோ நேற்றுத் தான் அப்படி ஒரு கேள்வியை முன் வைத்தேன் என்ற அடையாளமேயின்றி வழக்கம் போல் அவளுடன் பலதரப்பட்ட விடயங்களை ஆராய அவள்தான் குழம்பிப் போனாள்.

ஒருவேளை நேற்று அவர் வேறு ஏதோ சொல்ல நான்தான் அதை வேறு விதமாகக் கேட்டுக் கொண்டேனோ, இல்லை இந்த நண்பன் படத்தில் சத்யன் சொல்லுவாரே தேஜா வூ, ஜமாய் வூ அதில் ஏதேனும் ஒன்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறேனோ என்றெல்லாம் சிந்திக்க வைத்து விட்டார் பரமேஸ்வரி.

அடுத்தடுத்த நாட்களிலும் அவளுக்கு இதே குழப்பமே தொடர் கதையாய் அமைய, ஒருவாரம் முடிவில் அப்படி ஒருநாள் தன் வாழ்வில் வரவே இல்லை என்று முடிவெடுத்து அவள் நோர்மாலாகியிருந்த நேரம் பார்த்து, அவளை அப்நோர்மலாக்க பரமேஸ்வரி அம்மா பெற்றெடுத்த தவப்புதல்வன் அவள் முன் வந்து நின்று தாயின் பேச்சை நினைவு படுத்தினான்.

இடைப்பட்ட நாட்களில் எது மாறியிருந்தாலும் நித்திலனின் ஆதித்யன் மேலான ஹீரோ வொர்ஷிப்பும் கிரேஷும் மட்டும் மாறவே இல்லை. கூடித்தான் போயிருந்தது.

கிளினிக் பார்க்க ஆரம்பிக்கும் முன் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அவன் மகள்களைக் கண்டு விட்டுப் போக வருபவனிடம் அவன் மகள்களுக்கு முந்தி ஓடி வந்து தாவிக் கொள்வான்.
அவனும் முகம் கோணாமல் மெய்யான அன்புடனே அவனைத் தூக்கி முத்தமிட்டு இறக்கி விட்டு மகள்களைத் தூக்கிக் கொள்வான்.

இரண்டு மகள்களும் தலா இரண்டு வார்த்தைகள் தந்தையிடம் பகிர்ந்தால் இவன் அவர்கள் இருவரையும் மிஞ்சி தன் குரலில் ஐந்து வார்த்தைகள் அவன் காதில் விழும்படி செய்து விடுவான்.

அதில் அவன் ஸ்கூல் வெள்ளை ஷேர்ட்டில் அவன் நண்பன் பென்சிலால் கிறுக்கியது, அதற்குத் தான் அவனை ஒன்றும் சொல்லாமல் வகுப்பாசிரியரிடம் முறையிட்டது என்று எல்லாம் அடங்கியிருக்கும்.

அப்படி எதுவும் தான் செய்த நல்ல பழக்கவழக்கங்களைப் பற்றி அவன் சொல்லும் போது ஆதித்யன் மறக்காது அவனைப் பாராட்டுவான். சில சமயங்களில் அவனை உற்சாகப் படுத்துவது போல் பென்சில் பெட்டி, வரைதல் கொப்பி என்று மகள்களுக்கு வாங்கும் போது ஞாபகம் வைத்து வாங்கி அவனுக்கு அன்பளிப்பு வழங்குவான்.

அதே போல் அவன் செயல்களில் தவறை உணர்ந்தால் அதையும் சொல்லி அவனைத் திருத்த சொன்னால், “இனி நான் இப்பிடி செய்யவே மாட்டேன்…” என்று உடனே வாக்குக் கொடுத்தும் விடுவான்.

இது எல்லாம் முன்னரே வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்றாலும் பரமேஸ்வரி திருமணம் என்ற பேச்சை எடுத்த பின்பாக நித்திலனின் இந்த செய்கைகள் எல்லாம் ஆதித்யனுக்குள் சொல்லில் வடிக்காத ஒரு உணர்வைக் கொடுத்து சென்றது.

தாயின் பேச்சுக்குப் பின் சாதனாவை எதிர்கொள்ள அவன் அவ்வளவெல்லாம் சங்கடப்படவில்லை. தாய் சொன்னதுபோல் ஒரு புரபோசலை வைத்தால் அதற்கு ஆமென்றால் ஆமென்றும் இல்லை என்றால் இல்லை என்றும் சொல்லி விட்டுப் போகட்டும். இதில் என் தவறு என்று எதுவும் இல்லாதபோது நான் ஏன் மருக வேண்டும் என்று இயல்பாகவே அவளைக் கடந்தான்.

ஆனால் நித்திலனிடம் அப்படி இருக்க முடியவில்லை. தாய் சொன்னதுபோல் நடக்கும் பட்சத்தில் தான் இவனுக்குத் தந்தை ஸ்தானம்தானே ஆவேன்?

தந்தை என்ற உறவு வெற்றிடமாக இருக்கும் காரணத்தால், தான் கொடுக்கும் சிறு சிறு சலுகைகளை பெரும் வரப்பிரசாதமாகக் கருதி, நடைமுறை பற்றிய எந்த சிந்தனையும் இன்றித் தன்னிடம் அதீத உரிமையை எடுத்துக் கொள்ளும் அவன் மேல் முன்னரே இளக்கமும் உருக்கமும் உண்டு அவனுக்கு.

அது இந்தப் பேச்சின் பின் பல்கிப் பெருகியிருந்தது. சாதனா தன்னைப் பற்றியும் நித்திலனைப் பற்றியும் சொன்னதைக் கேட்ட பின்னும் சாதனாவைத் திருமணம் செய்து கொள்ளலாமே என்று தாய் கேட்கும் முன்னும் இருந்த இடைப்பட்ட காலத்தில் தனக்கென்று இன்னொரு துணையைத் தேடிக்கொள்ளும் முடிவுக்கு ஆதித்யன் வந்திருந்தான்தான்.

அதுவும் தன்னைப் போல் துணையை இழந்த ஒரு பெண்ணை ஏற்றுக் கொள்வதுதான் சரியாகவும் நியாயமாகவும் இருக்கும் என்று நினைத்திருந்தான். அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை இருந்தால் என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை.

ஆனால் அன்றைக்குப் பின் நித்திலனைப் பார்க்கும் போதெல்லாம், இதை முன்னெடுத்து இவனைத் தங்களோடு இணைத்தால் என்ன என்று விழுந்த எண்ண விதை மெது மெதுவாக அவன் மனதில் வேரூன்ற, அவ்வப்போது சாதனாவையும் நினைத்துப் பார்த்தான்.

இது நடந்தால் நித்திலன் மட்டுமே தனக்கு என்று வரப்போகிறவன் இல்லையே! சாதனா? அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள என் மனம் சம்மதிக்குமா?

error: Alert: Content selection is disabled!!