MPK 19
அவள் பார்வை மொத்தமும் மகியிடம் தான் இருந்தது. அவள் கண்களில் இருந்த கலக்கம் அவள் வாங்கும் சம்பளத்துக்குப் புறம்பானது. மகியின் பால் உள்ள தூய்மையான அன்பின் வெளிப்பாடு அது என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
மதியம் தாயிடம் அழைத்துக் கதைத்தபோதே பரமேஸ்வரி மகியுடன் அவள் படும் பாட்டை சொல்லியிருந்தார். சொன்னதை சொன்னபடி கேட்டுக் கொள்ளும் அவன் புத்திரிகள் இருவரும் சிறு நோவு என்று வந்து விட்டால் உடன் இருப்பவரை உலுக்கி எடுத்து விடுவார்கள்.
ஆதித்யன் முடிந்தால் அந்தமாதிரி நேரங்களில் அவர்களுடன் இருந்து சமாளிப்பான். இல்லையென்றால் பரமேஸ்வரி பார்த்துக் கொள்வார். தாயின் உடல் நிலையும் இவனுக்குத் தெரியும் ஆதலால், இவன் அடிக்கடி அழைப்பு எடுத்து மகள்களிடம் கதைத்துக் கொள்வான். இன்று சாதனா இருக்கும் தைரியத்தில் தாய் பற்றிய கவலையின்றி மகளைப் பற்றி மட்டும் ஒன்றிரண்டு முறை எடுத்துக் கேட்டுக் கொண்டான்.
அப்படி அவன் ஒருமுறை எடுத்துக் கேட்கும் போது பரமேஸ்வரி சொன்ன பதில் இதுதான்.
“உன்ர பிள்ளைக்குத் தோதா ஒரு ஆளும் தோளும் கிடைக்கவும் அவாவை விட்டு இறங்க மாட்டேன் எண்டு நிக்கிறா. அதுவும் பாவம் வந்ததில இருந்து தூக்கிக் கொண்டு அங்கயும் இஞ்சயுமா நடக்குது. எனக்குத் தெரிஞ்சு நாளைக்கு காலுக்கு மருந்தெடுக்க சாதனா உன்னட்டதான் வருமெண்டு நினைக்கிறன்.”
அதன் பின் அவனுக்கு வீட்டுக்கு அழைக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆறு மணி ஆனதாக எங்கோ ஒரு கோவில் அலாரம் அடிக்க,
‘ஐயோ சாதனா செல்லும் நேரமாகிவிட்டதே! அம்மா எப்படித் தனியாக சமாளிப்பார்?’ என்று அத்தனை பரபரப்பிலும் மனம் வீட்டைச் சுற்றத்தான் செய்தது. ஆயினும் அதை ஒதுக்கி விட்டுத் தன் கடமையை செவ்வனே செய்து முடித்து அரக்கப் பறக்க வீடு வந்தால் அவன் கவலைகளை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் செய்வது போல் நித்திலன் மற்றும் சாதனா இருவரும் அங்கேயே நின்றிருக்கக் கண்டவனுக்கு மகளின் நிலையைத் தாண்டி ஒரு இதத்தைக் கொடுக்கவே செய்தது.
அதிலும் தன் மகளுக்காகத் தன்னைக் கோவித்த நித்திலனின் கோபமும் ‘வார்ட்டில மறிச்சா நான் நிக்கிறன்…’ என்ற சாதனாவின் வார்த்தைகளும் நினைக்க நினைக்க…
சொந்தப் பிள்ளையை சேர்ந்தது போல் இரண்டு நாட்கள் மருத்துவனையில் வைத்திருக்க சோம்பல் படும் தாய்மார்கள் எத்தனை பேரைப் பார்த்திருக்கிறான் அவன்? சிலர் முழுவதும் குணமாகும் முன்னே லெட்டர் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு அழைத்துப் போவதெல்லாம் உண்டு.
‘அப்படியிருக்க இவள்?’ என்றுதான் அவளைப் பார்த்திருந்தான்.
இன்றைக்குத் திகதிக்கு அவனிடம் இல்லாதது என்று எதுவும் இல்லை. ஆஸ்தி முதல் அந்தஸ்து வரை அவன் சேர்க்க ஆசைப்பட்டதுக்கு மேலதிகமாகவே எல்லாம் உண்டு.
அவன் வாழ்வில் இருக்கும் ஒரே குறை என்னவென்றால் மகள்களுக்கு ஒரு பெண்ணின் துணை கண்டிப்பாகத் தேவை என்ற இடத்தில் வரும் வெற்றிடம் மாத்திரமே..! அதுதான் அம்மா இருக்கிறாரே என்று சொல்ல முடியாதபடிக்கு அவரும் வயோதிகத்தோடு அல்லாடுகிறார்.
மரணம் எந்தவொரு மனிதனுக்கும் நிச்சயிக்கப்பட்ட தேவ செயல். பரமேஸ்வரிக்கு அது நிச்சயிக்கப்பட்ட நாள் வரும் காலம் இந்த இரு சிறுமிகளையும் வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன் என்று யோசிக்கவே முடியவில்லை அவனால்.
‘என் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழல் அமைத்துக் கொடுக்காமல் என் மருத்துவக் கடமையை ஆற்றி மட்டும் என்ன கிழிக்கப் போகிறேன்? அவர்களைக் காக்க உரிமையோடான ஒரு உறவு வேண்டாமா? இப்படி நோயென்று வந்தால் மடியில் போட்டுத் தட்டிக் கொடுக்க… எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை கொடுக்க ஒரு தாய்மை வேண்டாமா?’ என்று அவனுக்குள்ளாக ஏக யோசனைகள் ஓடிக் கொண்டிருக்க, அவன் பார்வை மட்டும் சாதனா முகத்தில் இருந்து மீளவே இல்லை.
நாளை மகளை மருத்துவமனை விடுதியில் சேர்க்கவேண்டிய நிலை வந்தால் ஒன்றுக்கு இரண்டாக கை தேர்ந்த தாதியை வைத்துப் பார்க்க அவனால் இயலும். ஆனால் அவர்களிடம் கடமை மட்டும்தானே எஞ்சியிருக்கும்? காசுக்குப் பிள்ளையைப் பார்க்கும் அவர்கள், இன்னும் இரண்டுநாள் கூடுதலாக வார்ட்டில் மறித்தால் தங்களுக்கு வரவு என்று நினைக்கக் கூடக் கூடும்.
மாறாக, ‘என் பிள்ளை இப்படிப் படுத்துக் கிடப்பதைப் பார்க்க முடியவில்லை. விரைவில் சரியாகி வீட்டுக்கு சென்று அவள் ஓடியாடி விளையாட வேண்டும், இறைவா!’ என்று வேண்டுதல் வைக்கும் அன்பு… அது அன்னையிடம்தானே இருக்கும்! அதை இவளால் என் பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியுமென்றால்…’ என்று சிந்தித்துக் கொண்டே போனவனைக் கலைத்தது பரமேஸ்வரியின் குரல்,
“இப்ப ஏன் சாதனாவை முறைக்கிறீங்கள் தம்பி? அவா சொல்லுறது சரிதானே? பிள்ளையைப் பார்க்க எனக்கும் பயமாத்தான் கிடக்கு! ஆஸ்பத்திரிக்குப் போவம் தம்பி.” என்றிட, அவரைத் திரும்பி முறைத்தவன்,
“இஞ்ச நிக்கிற எல்லாருக்கும் என்னைப் பார்க்க எப்பிடி கிடக்குது? நானும் டொக்டர்தான். எனக்குத் தெரியாதோ, எப்ப என்ன செய்யோணும் எண்டு!” என்றவன் மகளின் இரத்த அழுத்தத்தையும் பரிசோதித்து விட்டு,
“எங்கட மகி செல்லம் நோர்மலா தான் இருக்கிறா. பனடோல் சிரப் குடிச்சுட்டுப் படுத்தா காய்ச்சல் குறைஞ்சிடும். பிறகு விடிய பார்த்திட்டு ஹொஸ்பிட்டல் போலாம் என்ன செல்லம்?” என்று கதைத்துக் கொண்டே மகளுக்கு சிரப்பைக் கொடுத்தான்.
“அப்ப நாளைக்கும் நான் நேர்சரி போறேலயோ அப்பா?” மருந்தைக் குடித்து முடித்துக் கேட்ட மகளை உச்சி முகர்ந்தவன்,
“பிள்ளைதான் அச்சாவா மருந்து குடிச்சிட்டே! அப்ப நாளைக்குக் காய்ச்சல் ஓடிப் போடும். பிள்ளையும் நேர்சரிக்கு ஓடிப் போவீங்கள்…” என்று கதை கொடுத்துக் கொண்டே தட்டிக் கொடுக்க, மருந்தின் தாக்கத்தில் அவன் மடியிலேயே உறங்கிப் போயிருந்தது குழந்தை. மறுபக்கம் மயூவும் உறங்கி விட்டிருந்தாள்.
அவள் உறங்கவும்தான் நிம்மதிப் பெருமூச்செறிந்தவன், அதுவரையிலும் வீட்டுக்கு செல்லும் நினைவே மறந்து நின்றிருந்த சாதனா மற்றும் நித்திலனிடம்,
“சாதனா! நீங்க செஞ்ச உதவிக்குத் தாங்க்ஸ தவிர வேற என்ன சொல்லுறதெண்டு எனக்குத் தெரியேல. உண்மைக்கும் எதைக் குடுத்தும் சரிக்கட்டேலா அளவுக்கு செஞ்சிருக்கிறீங்கள். நன்றி. இனி நான் பார்த்துக் கொள்ளுறன், நீங்க வெளிக்கிடுங்கோ. நிலனும் யூனிஃபார்மோட இருக்கிறார். தனியா போவீங்கள் தானே? இல்லா வோட்ச்மன் அண்ணாவை விட சொல்லவோ?”
“இதுக்கு நன்றி சொல்லி என்னைப் பாவியாக்காதீங்கோ டொக்டர். எனக்குப் பிள்ளை சரியானாக் காணும். பிறகு நாங்க தனியா போவம், பக்கத்தில தானே! நீங்கள் பிள்ளையைப் பாருங்கோ. என்னவும் தேவையெண்டா யோசிக்காம கோல் ஒண்டு எடுங்கோ. நான் விடியவும் வேளைக்கு வாரேன்.” என்று விடை பெற, அவளுக்குத் தலையசைத்தவன், நித்திலனிடம் திரும்பி,
“பாய் நிலன். குட் நைட்.” என்ற, அவன் அவனருகில் வந்து உறங்கும் மகியை எட்டிப் பார்த்தான்.
“பாவமென்ன மகி? உண்மையா அவாக்கு நாளைக்கு சரியாப் போடும்தானே?” என்றவனை ஆதித்யன் ஒரு கையால் அணைத்து இறுக்கியவன்,
“நாளைக்கு வந்து பாருங்கோவன், தங்கச்சி எவ்வளவு உஷாரா உங்களோட விளையாடுவா எண்டு…” என்று தன்னையும் மீறி சொல்லி விட்டிருந்தான்.
பரமேஸ்வரி அனுபவசாலி. மகனின் பேச்சில் மறைந்திருந்த பொருளை சட்டென விளங்கிக் கொண்டுவிட்டார். உள்ளம் முழுதும் பொங்கிய உவகையுடன் அவர் திரும்பி சாதனாவைப் பார்க்க, அவள் இவர்கள் சத்தம் எட்டாத தூரத்தில் மகனின் புத்தகப் பைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“தங்கச்சியோ? ஆர் மகியோ?”
“மகியும்தான் மயூவும்தான்… ரெண்டு பேரும் தங்கச்சிதானே உங்களுக்கு. அவை உங்களை நிலன் அண்ணா எண்டுதானே கூப்பிடுறவை?”
“ஓம் என்ன? ஆனா நான் பள்ளிக்கூடத்தில எல்லாரிட்டயும் இவை என்ர ஃப்ரெண்ட்ஸ் எண்டெல்லோ சொல்லி வச்சிருக்கிறன். நாளைக்குப் போய் மாத்தி சொல்லட்டோ?”
“ம்ம்?? ம்ஹும்… நாளைக்கு வேண்டாம். நான் சொல்லேக்க சொல்லுங்கோ.” என்றவும் உடனே, “சரி டொக்டர்…” என்று கேட்டுக் கொண்டான்.
அந்த டொக்டர் என்ற அழைப்பையும் உடனே மாற்றும் உத்வேகம் எழுந்தாலும் ‘பொறுமனமே! இன்னும் கடக்க வேண்டிய படிகள் நிறைய உண்டு. இருக்கும் நிலைக்கு இதுவே அதிவேகம்தான்.’ என்று ஆர்ப்பரிக்கும் மனதை அமைதிப்படுத்தினான்.
“சரி நிலன் அம்மா வெளிக்கிட்டா பாருங்கோ. வீட்ட போயிட்டு அம்மான்ர ஃபோன்ல எனக்கு ஒரு கோல் தாங்கோ என்னப்பா?”
“சரி டொக்டர். பாய்… குட் நைட்… அம்மம்மா பாய்…” என்றவன் உறங்கிக் கொண்டிருக்கும் இருவருக்கும் கூட, பாய் சொல்லிப் புறப்பட, செல்லுமவனைப் புன்னகையோடு பார்த்திருந்தான் ஆதித்யன்.
“தம்பி ஒரு முடிவுக்கு வந்திட்டீங்க போல?”
தாயின் கேள்வியில் அதே புன்னகை மாறா முகத்துடன் அவரை ஏறிட்டுப் பார்த்தவன்,
“நான் மட்டும் எடுத்தா காணாதே அம்மா!”
“அதெல்லாம் என்ர பிள்ளை ஈசியா சமாளிச்சு எதிராளிய தன்ர வழிக்குக் கொண்டு வந்திடுவான்.” என்றார் அவர் பெருமிதமாக.
“அவ்வளவு திறமையான பிள்ளைக்கு நீங்க ஏன் இப்பிடி ஒரு ஆளைக் கட்டி வைக்க நினைச்சனீங்களாம்?”
“இப்பிடி ஒரு பிள்ளையெண்டா? விளங்கேல… எதைச் சொல்லுறீங்கள்?”
“இல்லை, நோர்மலாவே இஞ்சத்த தாய்மார் எல்லாம் ஒண்டுக்கும் உதவாத ஊதாரிப் பிள்ளையளையே பெருசாத் தூக்கிப் பிடிச்சுக் கதைச்சு, அவைக்கு சமனா ஒண்டுமே இல்லையெண்டு சாதிச்சு எல்லா வகையிலையும் திறமான பொம்பிளையை பார்ப்பினம். அது முதலாம் கல்யாணம் ரெண்டாம் கல்யாணம் எண்டெல்லாம் பார்க்க மாட்டினம். ஆனா இஞ்ச நான் எல்லா விதத்திலயும் தகுதியான ஆளா இருந்தும் நீங்க ஏன் கல்யாணம் செய்யாத ஒரு பிள்ளையைப் பார்க்காமல் ஏற்கனவே கட்டி ஒரு பிள்ளையோட இருக்கிறவாவைப் பார்த்தனீங்கள் எண்டு கேட்கிறன்.”

