MPK 20
வேப்ப மரத்தின் தண்டில் சாய்ந்து இடுங்கிய புருவங்களுடன் பேச வேண்டியதை சரியாகப் பேசி விட வேண்டுமே என்று சிந்தனை சாகரத்தில் மூழ்கியிருந்தான், ஆதித்யன்.
அவன் எதிரே நீண்ட இடைவெளியில் இறுகிப் போன முகத்துடன் இவன் பேசப் போவது குறித்த தவறுதலான ஊகத்தோடு நின்றிருந்தாள் சாதனா.
நிமிடங்கள் கரைந்து இருள் மெல்ல மெல்லக் கவிழ, சாதனா சுற்றத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தவள், “இருட்டுப்படுது டொக்டர்.” என்றாள் சுருக்கமாக.
அந்த இரண்டு வார்த்தைக்குள், ‘இதற்கு மேல் நான் இங்கு நிற்க முடியாது, சொல்வதை விரைவாகச் சொல்லுங்கள். இல்லையென்றால் என்னை செல்ல விடுங்கள்’ என்ற ஏகப்பட்ட அர்த்தங்கள்.
அது அவனுக்கும் விளங்க தொண்டையை செருமிக் கொண்டவன்,
“உங்களிட்ட முக்கியமான ஒண்டு கதைக்க எண்டுதான் வந்தனான். ஆனா… நான் சொல்ல வாறதை நீங்க சரியா விளங்கிக் கொள்ளுவீங்களோ எண்டு கிடக்கு…”
அவன் முன்னுரை கொடுக்க அவளுக்குத் தான் நினைத்தது சரியென்றே தோன்றி விட்டது.
அதற்கு இன்னும் வலு சேர்ப்பது போல் அவனும் “இண்டைக்கு விடிய நீங்க வரேல்லயெல்லோ…” என்று அவன் தொடங்க,
“நீங்க சொல்ல வாறது எனக்கு விளங்குது டொக்டர். இனி நான் வேலை நேரத்தைத் தவிர சும்மா நேரம் வரமாட்டேன்.” என்று தான் முடித்து வைத்தாள்.
அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் அவன் பார்த்திருக்கவே,
“அப்ப நான் போட்டு வரட்டோ டொக்டர்?” என்றவள் திரும்பி நடக்க,
“கொஞ்சம் நிக்கிறீங்களோ சாதனா? உங்களைக் கதைக்கவெண்டு கூப்பிட்டது நான். ஆனா நீங்கள் நீங்களா என்னத்தையோ சொல்லிட்டுப் போறீங்கள்? இப்ப என்னத்துக்கு அப்பிடி சொன்னீங்கள்? உங்களை வரவேண்டாம் எண்டு சொல்லத்தான் நான் கூப்பிட்டனான் எண்டு ஆர் சொன்னது உங்களுக்கு?” அவன் கோபமாய் கேட்க, சாதனா குழம்பிப் போய் நின்றாள்.
“நீங்களா வந்து ஒண்டைப் பழக்கிப் போட்டு இனி ஒண்டும் இல்லையெண்டா நாங்க கேக்கோணுமோ? அந்தக் கதையெல்லாம் இஞ்ச நடக்காது. நாளைக்குக் காலமை வீட்ட நிக்கோணும் ரெண்டு பேரும்.” என்று கட்டளையிட்டான்.
அவனின் பேச்சு அவளுக்குத் திகைப்பைக் கொடுத்தது. ஆனாலும் தன்னிலையை விளக்கி விடவேண்டும் என்று,
“பிழையெல்லாம் என்னிலதான் டொக்டர். ஒண்டயும் யோசிக்காம பிள்ளையள் கேட்டவுடன நேரம் காலம் பார்க்காம இஞ்ச வந்து போயிட்டன். அது இப்ப பார்த்தா உங்கட மரியாதையைக் குறைச்சிடும் போல. அதான் இனி வரவேண்டாம் எண்டு நினைச்சிருக்கிறன்.” என்றவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்.
“எங்கட மரியாதை குறையிற மாதிரி அப்பிடி என்ன நடந்தது இஞ்ச?”
“அக்கம் பக்கத்தில பிழையா கதைக்கினம் டொக்டர்.” என்று மட்டுமே சொன்னவள் மீதியைப் புரிந்து கொள்ளுங்கள் என்ற விகுதியை மௌனத்தில் கடத்தினாள்.
அவனுக்கும் புரிந்துவிட, “ஓ…” என்ற ஒற்றை இழுவையுடன் அதற்கான பிரதிபலிப்பை முடித்துக் கொண்டவன்,
“அதையேன் என்னட்ட சொல்லுறீங்கள்? நீங்க சொல்லாட்டி எனக்குத் தெரிஞ்சிருக்காதே!”
“இப்பிடி ஒரு கதை வந்தாப் பிறகும் சம்மந்தப்பட்ட ஆக்களிட்ட சொல்லாம இருக்கிறது பிழையெல்லோ? இனி இதுக்கு நீங்க என்ன முடிவை எடுத்தாலும் எனக்கு சரிதான். வேலையை விட்டு நிப்பாட்டுற எண்டாலும் வேளைக்கு சொல்லுங்கோ. நான் அதுக்கு எல்லாம் பார்க்கோணும்.”
எதையும் எதிர்கொள்ளும் திடத்துடன் சொன்னவள் குரலில், கடைசி வரிகளைப் பேசும் போது மட்டும் அவ்வளவு சோர்வு.
அதன் காரணத்தை ஓரளவு ஊகித்துக் கொண்ட ஆதித்யன், மற்ற எல்லாத்தையும் விடுத்து,
“அம்மா அண்டைக்குச் சொன்னதைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள், சாதனா?” என்று நேரடியாக விஷயத்துக்கு வர, அவளோ என்றைக்கு என்ன சொன்னார்கள் என்ற ரீதியில் அவனைப் பார்த்து வைத்தாள்.
பரமேஸ்வரி கேட்டதைத்தான் அவர் திரும்பக் கேட்கவில்லையென்றதும் இவள் மறந்திருந்தாளே! அதை விட அது இவன் மனதில் இன்றளவும் நிற்கும் என்பதை அவள் துளியும் நினைத்திருக்கமாட்டாள்.
‘பரமு அம்மா என்ன சொன்னவா? என்னட்ட கதைச்ச மாதிரி ஆரேன் அவாட்டையும் தேவையில்லாததுகளைக் கதைச்சிருப்பினமோ? அதைக் கேட்டு மூஞ்சைக்கு நேர ஒண்டும் சொல்லேலாம அம்மா ஏதேன் மறைமுகமா என்னைப் போகச் சொல்லுற மாதிரி கதைச்சு அது எனக்கு விளங்காம இவ்வளவு நாளும் இஞ்ச இருந்திட்டனோ? கடவுளே! இப்ப கொஞ்ச நாளாத்தான் என்னையும் என்ர பிள்ளையையும் நல்லதெண்டு சொல்லுற மாதிரி ஆக்களைக் கண்ணில காட்டின எண்டு சந்தோஷமா இருந்தன். அது பொறுக்கேலயா உனக்கு? இவையிட்டையும் கெட்ட பேர் வாங்கிக் கொண்டுதான் வெளில போகோணுமா?’ என்ற சிந்தனையில் உடல் தளர்ந்து நின்றாள்.
அவள் நிலை காணவே பரிதாபமாக இருந்தது அவனுக்கு.
“ரிலாக்ஸா இருங்கோ சாதனா. இப்ப என்னத்துக்கு இவ்வளவு டென்ஷன்?”
“இல்லை, மனோ டொக்டர், ராணி அம்மாக்கு அடுத்ததா உங்கட அம்மாதான் என்னை ஜட்ஜ் பண்ணாம நான் சொல்லுறத வச்சு என்னை அதாயே நம்பினவா. என்னட்ட கதைச்ச மாதிரி ஆரேன் அவாட்டையும் கதைச்சிருந்தா என்னை என்ன நினைச்சிருப்பா?”
“எங்கட அம்மா அப்பிடி ஆரிட்டையும் கதை கேட்டு நம்பிற ஆளில்லை. நானே போய் உங்களைப் பிழையா சொன்னாலும் அதை அப்பிடியே நம்பமாட்டா. அதால நீங்க கொஞ்சம் அமைதியாகுங்கோ.” என்று ஆறுதல் சொன்னவன், அது அவளை முழுதாகப் போய் சேர்வதற்குள்,
“நான் கேட்டது அம்மா எங்கள் ரெண்டு பேரையும் கல்யாணம் செய்யச் சொல்லி சொன்னதைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள் எண்டு!” தானே நேரடியாகக் கேட்டு அவள் முகம் பார்க்க, அவன் எதிர்பார்த்ததுக்கும் அதிகமான அதிர்ச்சியை முகத்தில் காட்டி நின்றிருந்தாள் அவள்.
“இப்ப ஏன் இவ்வளவு ஷொக்? அம்மா அண்டைக்கு கேட்டதைத்தானே திரும்பக் கேட்டனான்? அதைப் பற்றி ஒருநாளும் யோசிக்கேலையோ நீங்க?”
‘இதைப் பெரிதாக எடுத்து யோசிக்கும் அளவு தான் இல்லையோ?’ என்று தன் பேர்ஸ்னாலிட்டி குறித்து எழுந்த ஐயத்தில்தான் அவன் இப்படிக் கேட்டது.
ஆனால் அவளுக்குத்தான் அவன் கேள்வியில் முகம் இறுகிப் போனது.
“என்ன சொல்ல வர்றீங்கள், அதை யோசிச்சுதான் நான் இதெல்லாம் செய்து கொண்டு திரியுறேன் எண்டு சொல்லுறீங்களோ?” என்ற இவனுக்குத் திகைப்பு.
தன் கேள்வியில் இப்படி ஒரு பொருளும் இருந்திருக்கிறதா என்று மீட்டிப் பார்த்தான். அவள் பக்கத்தில் நின்று கிரகித்தால் பொருள் சரியாகவே பொருந்தி வருவதைப் போல இருக்க, மானசீகமாக தன் தலையில் தட்டிக் கொண்டவன் வெளியே விறைப்பாக,
“தமிழைத் தமிழுக்கு டிரான்ஸ்லேட் பண்ணி எங்கயிருந்து இப்பிடி ஒரு அர்த்தம் கண்டு பிடிச்சனீங்கள்? நான் கேட்டது, இது சரியா வருமோ இல்லையோ எண்டு நீங்க ஒருநாளும் யோசிக்கேலையோ எண்டு!” என்றவும்,
‘என்ன இவர் இப்படியெல்லாம் பேசுகிறார்? பரமேஸ்வரி அம்மா தான் கதைத்தது தவறு என்று உணர்ந்துதான் இதைப் பற்றிய பேச்சைப் பின்னாளில் எடுக்கவில்லை என்று நினைத்தால் தன்னிடம் கேட்காமல் டொக்டரிடம் இதைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார் போல! அதுதான் தன் மூலமாக இதை முடிவுக்குக் கொண்டு வர டொக்டர் இப்படி வந்து நிற்கிறார் போல…’ என்று தான் நினைத்தாள் அவள். இவனுக்கு இதில் சம்மதம் இருக்கும் என்று அவளுக்கு எண்ணமே இல்லை.
“இதில யோசிக்க என்ன கிடக்கு டொக்டர்? சின்னப் பிள்ளையிட்ட சொன்னா கூட இது சரிவராத விஷயம் எண்டு சொல்லிப் போட்டுப் போகும்.” என்றாள் உடன் பதிலாக.
“அப்ப நான் என்ன புத்திக் கோளாறு உள்ள ஆளோ, இல்லா நேற்றுப் பிறந்த குழந்தையோ? எனக்கு யோசிக்க யோசிக்க இதுதான் சரிப்பட்டு வருமெண்டு கிடக்கே!”
அவன் பட்டென தன் மனதை சொல்லிவிட, சத்தியமாக இப்படி ஒன்றை எதிர்பாராது திடுக்கிட்ட நிலையில் நின்றவள்,
“டொ…டொக்டர்??” என்று திணறினாள் அவனை வெறித்தபடி.
தன்னில் நிலைத்த அவள் கண்களுக்குள் கண்ணியமாக தன் பார்வையை ஊடுருவ விட்டவன்,
“எனக்கு உங்களையும் நித்திலனையும் எங்களோட சேர்க்கோணுமெண்டு விருப்பம் சாதனா. அம்மா சொல்லீட்டா எண்டு மட்டும் நான் இந்த முடிவுக்கு வரேல. நான் நல்லா நிதானமா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். நீங்க சொன்னீங்களெல்லோ, சின்னப் பிள்ளையளிட்ட கேட்டாலும் இது சரிவராதெண்டு சொல்லுவினம் எண்டு? உங்கட ஆசைக்கு நீங்க வேணுமெண்டா எங்கட வீட்டுச் சின்னவேட்ட கேட்டுப் பாருங்கோவன். மூண்டு பேரும் யோசிக்காம இதுக்கு ஓமெண்டுவினம். அவை சகோதரங்களா பழக வெளிக்கிட்டு நிறைய நாளாகிட்டுது. இப்ப யோசிக்க வேண்டிய ஆள் நீங்க மட்டும் தான் சாதனா. யோசியுங்கோ… உங்களை மட்டும் யோசிக்காம எங்கள் அஞ்சு பேருக்கும் சேர்த்து யோசியுங்கோ.”
நிதானமாக சொற்களைக் கோர்த்தவனை எதிர்த்து சாதனாவால் வாய் திறக்க முடியவில்லை.
இதே புரபோசலை வேறு ஒருவன் முன் வைத்திருந்தால் இவளின் அணுகுமுறையே வேறாக இருந்திருக்கும். அவன் நேர்மையாக நல்ல எண்ணத்துடன் இவளைக் கேட்டிருந்தால் கூட, அவனைப் பொறுக்கி ரேஞ்சில் பார்த்து விரட்டியிருப்பாள்.
அந்த அணுகுமுறையை இந்த அதி நல்லவனிடம்… சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளவனிடம்… பொறுப்பாகப் பிள்ளை வளர்ப்பவனிடம் காட்ட வரவில்லை அவளுக்கு.
இல்லை என்று மனதில் தோன்றும் மறுப்பைக் கூட அப்படியே சொல்ல வரவில்லை.
அவனை மறுக்கும் தகுதி கூட தனக்கு இல்லை என்று நினைத்தாளோ?
தொடர்ந்த அவள் மௌனத்தில் அவள் மேல் இரங்கிய ஆதித்யன்,
“நேரமாகுது சாதனா, வெளிக்கிடுங்கோ. பிறகு ஆறுதலா யோசியுங்கோ, ஒரு அவசரமும் இல்லை.” என்று நல்லவனாக சொன்னவன்,
“ஆனா… உங்கட மான் குட்டியள் ஸ்கூல் போக வெளிக்கிட முன்னம் ஒரு நல்ல பதில் சொன்னீங்கள் எண்டா நல்லம்.” கொஞ்சம் சுயநலம் கலந்த பொது நலத்தோடு அவளை நெருக்கவும் செய்தான்.
மூச்சுப் பேச்சின்றி அவன் சொல்வதை மட்டுமே கிரகித்து நின்றிருந்த சாதனாவுக்கு இப்போது இங்கிருந்து நகர்வது ஒன்றே தனக்குத் தன்னால் செய்யக் கூடிய ஆகப் பெரும் ஆறுதல் என்று தோன்றிட, அவனிடம் தலையசைத்து விட்டு நகர்ந்தாள்.
சிறு இடைவெளி விட்டு அவள் பின்னோடு நடந்த ஆதித்யன், தாயின் அறையை எட்டும் நேரம் அவளை அழைத்து நிறுத்தினான்.
இன்னும் என்ன என்பது போலான சோர்ந்த பார்வை அவளிடம் இருந்து வர அதைக் கண்டு கொள்ளாதவன்,
“நாளைக்கு விடிய வேளைக்கெண்டு வாங்கோ சாதனா. பிள்ளையள் பார்த்துக் கொண்டு நிப்பினம்.”
“இல்லை… அது சரி வராது…” என்றவள் முகத்தில் முழுமையான மறுப்பு.

