அவனுக்குப் பெரியவர்கள் மொழி புரியவில்லை போல. ஆதித்யனுக்கு நிகராகத் தாயின் காலை உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.
உண்மையில் பிள்ளை பயந்துதான் விட்டான். எப்போதும் அதட்டியும் அடித்தும் மட்டுமே பழக்கப்பட்ட தாய் அலறவும் இயல்பான இரத்தபாசம் துளிர்த்ததோ என்னவோ பதறித் துடித்துவிட்டான். ஆதித்யன் வந்த பின்தான் சற்று ஆறுதலாக உணர்ந்தான்.
“இது சவ்வு நெரிபட்ட மாதிரிதான் தெரியுது. இப்ப நோவுக்கு மருந்தும் பண்டேஜும் கட்டி விடுறன். எதுக்கும் நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு போய் ஸ்கான் ஒண்டும் எடுப்பம். பெருசா ஒண்டும் இல்லையெண்டா ரெண்டு நாள் லேசர் பிடிச்சா சரியா போய்டும்.”
அவன் நிலவரம் சொல்லவும் அவள் முகம் கவலைக்குள்ளானது.
“உண்மைக்கும் பெரிசா ஒண்டும் வராதுதானே டொக்டர்? பெருசா ஒண்டும் இல்லாட்டி செலவாகிற இந்த ரெண்டு நாளே சமாளிக்கிறது கஷ்டம். இதில பெருசா எண்டா??”
“கஷ்டம் எண்டா என்ன செய்யலாம் எண்டுறீங்கள்? காலுக்கு துணியேதேன் சுத்திப்போட்டு வேலைக்கு வரப் போறீங்களோ?” தடித்த குரலில் அவன் கேட்கவும் அவளுக்கு சலித்தது.
“உங்களுக்கு என்ர நிலைமை சொன்னாலும் விளங்கப் போறதில்லை டொக்டர். அதால கதைய விடுங்கோ. நீங்க செஞ்ச உதவிக்கு தாங்க்ஸ்.”
“உங்கட நிலைமை ஒண்டும் எனக்கு விளங்காம இல்லை. உங்கட நிலமையில இருந்துதான் என்ர அம்மா என்னை வளர்த்தவா. நானும் இப்ப என்ர பிள்ளையளை வளர்க்கிறன். அதுக்காக உடம்புக்கு வாறதை முழுசா மாத்தாம விடலாமோ? இந்த மாதிரிக் கஷ்டங்களைத் தனியா சமாளிக்கிறது கஷ்டமெண்டு பங்கிடுவமெண்டாலும் அதுக்கும் ஒத்து வர்றீங்கள் இல்லை.” என்று அவன் சொல்லவும்…
“டொக்டர்!” என்று அதட்டலாய் வந்தது சாதனாவின் குரல்.
பார்வை நித்திலனை சுட்டிக் காட்டி அவன் கதைக்குக் கண்டனம் தெரிவித்தது.
ஆதித்யன் கண்களை மூடித் திறந்து தன்னை நிதானத்துக்குக் கொண்டு வந்தான். எப்போது பார்த்தாலும் என் நிலை புரியாது, புரியாது என்று அவள் பேசுவதால் வந்த ஆதங்கமும் மாதங்கள் கடந்தும் அவள் ஒரு முடிவை சொல்லாமல் திரியும் ஆதங்கமும் ஒருசேர நித்திலனையும் மறந்து இப்படிக் கதைத்து விட்டான்.
“அம்மாக்கு மருந்து குடுக்க வேணும் எண்டு சொல்லிப்போட்டு ஏன் நீங்க ரெண்டு பேரும் சண்டை பிடிக்கிறீங்கள்? அம்மா மருந்து வேண்டாம் எண்டு சொன்னவாவோ டொக்டர்?”
இருவரையும் அவதானித்து அவன் கேட்கவும் ஆதித்யன் சாதனாவை ஒரு பார்வை பார்த்தவன்,
“ஓம் நிலன். உங்கட அம்மாவுக்கு மருந்தே குடிக்காம நோய் சரியாகோணுமாம். அந்த மாதிரி சரியாக்க ஒரு டொக்டராலயும் ஏலாது.” என்று இரு பொருள்பட சொன்னவன்,
“நான் வீட்ட போய் மருந்தும் பண்டேஜும் எடுத்துக் கொண்டு வாறன்.” என்றுவிட்டுத் திரும்பியும் பாராமல் நடந்தான்.
சாதனாவும் வேண்டாம் என அவனை மறுக்கவில்லை. மறுத்தால் மட்டும் கேட்டு விடுவானா? நான் டொக்டர் என்று கொண்டு வருவான் என்று அமைதியாக இருந்துவிட்டாள்.
“ஏன் மருந்து வேண்டாம் உங்களுக்கு? மருந்து குடிச்சாத்தானே நோகாது?” கேட்ட மகனை அருகில் அழைத்தவள், அவன் தலையைத் தடவிக் குடுத்தாள்.
“நித்திரை வரேல்லயோ நிலன்? விடிய பள்ளிக்கூடம் போகோணுமல்லோ?”
“நித்திரை வருகுதுதான். ஆனா டொக்டர் இப்ப மருந்து கொண்டு வருவாரல்லோ?”
“அவர் எனக்குத்தானே மருந்து கொண்டு வாறார். நீங்க நித்திரை கொள்ளுங்கோவன்.”
“இல்லை… நான் அவர் போனாப் போலயே நித்திரை கொள்ளுறன்.” என்று பிடிவாதம் பிடித்து அமர்ந்திருந்தவனைப் பார்த்தவளுக்கு அந்தக் கேள்வியைக் கேட்டே ஆகவேண்டும் போலிருந்தது.
“நிலன்!”
“ம்ம்”
“உங்களுக்கு ஏன் அவரை… அதான் ஆதி டொக்டரில இவ்வளவு விருப்பம்? மாமாக்கள் ரெண்டு பேரோடையும் கூட நீங்கள் இப்பிடி பழகிறேலதானே? இவரிட்ட மட்டும் ஏன்?” என்று தன்மையாகக் கேட்டதில் அவனும் முரண்டு பிடிக்காமல் பதில் சொன்னான்.
“மாமாக்களோ? மாமாக்கள் ரெண்டு பேரும் கூடாது. அவை என்னைத் தூக்கவே மாட்டினம். அதோட எப்பவும் என்னைப் பேசிக் (திட்டிக்) கொண்டே இருப்பினம். ஊத்தைப் பெடியன் எண்டு எல்லாரிட்டையும் சொல்லுவினம். மச்சானோட விளையாடப் போனாலும் பெரிய மாமா, அத்தை ஒருதரும் விடமாட்டினம்.
ஆனா டொக்டர் அப்பிடி இல்லையெல்லோ? என்னைக் கூடாதெண்டு சொல்லுறதே இல்லை அவர். அச்சா எண்டு… அது எதோ சொல்லுவார், ஆ… பிரில்லியண்ட் எண்டுதான் சொல்லுவார். மகி, மயூ ஆக்களோட விளையாட வரச் சொல்லி அவர்தானே என்னைக் கூப்பிட்டவர். இல்லாட்டி இப்பயும் நீங்கள் என்னை வீட்டுக்குள்ள வச்சுப் பூட்டிப் போட்டுத்தானே போயிருப்பீங்கள்!” என்று ஆரம்பித்தவன், ஆதித்யன் தன்னைத் தூக்கிக் கொஞ்சுவது முதல் அவன் அன்பான கண்டிப்பு, தண்டிப்பு எல்லாவற்றையும் தனக்குத் தெரிந்த மொழியில் தனக்கு அவனைப் பிடித்ததற்கான காரணமாகக் கூறிக் கொண்டே போக சாதனாவின் கருவறை பிரசவ வலிக்கு நிகரான வலியை மீண்டும் உணர்ந்தது.
அவன் ஆதித்யனிடம் விரும்பும் அத்தனையும் ஒரு தந்தையிடம் இருந்து மகனுக்குக் கிடைத்திருக்க வேண்டியது.
தனக்கு அது கிடைக்கவில்லை என்றதும் மாமன்களிடம் தேடியிருக்கிறான் நிலன். அவர்களுக்கு அந்தளவு பெரிய மனதெல்லாம் இல்லாமல் போகவே, யாரோ ஒருவனிடம் இருந்து கிடைத்த எல்லாவற்றையும் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு விட்டவன், அதற்கான சன்மானமாகத் தந்தைக்கு என்று ஒரு மகனிடத்தில் சேமிப்பிலிருக்கும் பாசத்தை மொத்தமாக ஆதித்யனுக்குக் கொடுத்து விட்டிருக்கிறான்.
இப்படிப்பட்டவன் ஆதித்யன் இல்லாத இடத்துக்கு செல்வதாக இருந்தால் என்ன செய்வான் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.
இப்போதுதான் திருந்தி ஓரளவு பிள்ளைப் போக்கிற்கு வந்திருக்கிறான். அந்த மாற்றத்துக்கு முற்றும் முழுதாகக் காரணமானவன் ஆதித்யன் ஒருவனே! அப்படியிருக்க ஆட்டத்தில் அவனே இல்லையென்றால் முன்னிலும் மூர்க்கமாக மாறி விடுவானோ மகன் என்று நினைக்க நினைக்க பயப்பந்து அவள் தொண்டையை அடைத்தது.
அதற்கான விடையையும் அவனிடமே அறிந்து கொள்ள வேண்டிப் பேச்சுக் கொடுத்தாள்.
“நிலன்! நாங்கள் அடுத்த மாசம் மட்டில சாவச்சேரிக்குப் போகவேண்டி வரும். இனி அம்மாக்கு அங்க மனோ டொக்டரிண்ட ஹொஸ்பிட்டல்லதான் வேலை. உங்களுக்கும் சாவகச்சேரி போகத்தானே விருப்பம் எண்டு சொன்னீங்கள்? இனி நீங்க முதல் படிச்ச பள்ளிக்கூடத்தில, உங்கட ஃப்ரெண்ட்ஸோடயே படிக்கலாம்.”
ஓரக் கண்ணில் அவனை நோட்டம் விட்டபடியே அவள் பொய்யுரைக்க,
அவன் அவள் பிடியில் நின்று துள்ளி விலகினான். அதே வேகத்தில் கேள்விக் கணைகளையும் தொடுத்தான்.
“ஏன் நாங்க அங்க போறம்? நாங்க போகேக்க டொக்டர், மயூ, மகி, அம்மம்மா எல்லாரும் எங்களோட வருவினமோ? இஞ்ச அவேன்ர வீட்டுக்குப் பக்கத்தில நாங்க இருக்கிற மாதிரி அங்கயும் அவை எங்கட வீட்டுக்குப் பக்கத்திலதானே இருப்பினம்? இல்லா எங்கட வீட்டையே கூட்டிக் கொண்டு போய் வச்சிருப்பமோ அவைய? அப்பிடியெண்டா டொக்டருக்கு ஆஸ்பத்திரிக்கு இடம் காணாதென்ன? மாடி வீடெண்டாத்தான் அவருக்கு ஆஸ்பத்திரி செய்ய இடம் காணும். அங்க எங்கட வீட்டுக்குப் பக்கத்தில மாடி வீடு எங்க கிடக்கு? இனி டொக்டரின்ர பெரிய ஆஸ்பத்திரி சாவச்சேரி ஆஸ்பத்திரியோ? மான்குட்டியள் ரெண்டும் அங்க நான் படிச்ச பள்ளிக்கூடத்திலயோ படிப்பினம்?” என்று அவளைப் பதில் சொல்லவே விடாமல் கேட்டுக் கொண்டே போனவனை விக்கித்துப் போய்ப் பார்த்தாள் சாதனா.
அவர்களோடு அவனை இணைத்துப் பார்க்கிறானே மகன் என்று அவள் கவலை கொண்டிருக்க, அவனானால் தங்களோடு அவர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு யோசிக்கிறானே என்று இருந்தது அவளுக்கு.
அது அப்படியில்லை என்று அவனுக்குப் புரியவைக்க வேண்டிய கட்டாயம் இப்போது அவளுக்கு.
“அவை ஏன் நிலன் எங்களோட வரோணும்? அவேன்ர இடம் இதுதான். நாங்க மட்டும்தான் சாவச்சேரி போகப் போறம்.”
“என்ன!? அவை வரமாட்டினமோ? அப்ப நானும் ஒரிடமும் வரமாட்டன்! நான் இஞ்ச அவையோடதான் இருப்பன்.”
“அடி வாங்க நிலன். எனக்கு அங்கதான் வேலை, நான் போகோணும் எண்டுறன். நீங்க என்னெண்டு இஞ்ச நிப்பீங்கள்? நானில்லாம ஆர் உங்களைப் பார்ப்பினம்?”
“டொக்டர் பார்ப்பார். அவர் அண்டைக்கு சொன்னவர், ‘எனக்கு மயூவும் மகியும் மாதிரித்தான் நீங்கள்.’ எண்டு. போற எண்டா நீங்க மட்டும் போங்கோ. நான் வரேல்ல.” என்றவனைக் கண்களில் தேங்கிய நீருடன் வெறித்தாள் சாதனா.

