மாதொரு பாகம் கொண்டான் 23 – 1

MPK 23

“போற எண்டா நீங்க மட்டும் போங்கோ. நான் வரேல்ல.” என்ற நித்திலனின் வார்த்தைகள் சாதனாவின் உயிரைக் கொளுத்தியது.

மகனுக்குத் தன் மேல் பெரிதான பிடிப்பில்லை என்று அவளுக்கே தெரியும் என்றாலும் யாரோ ஒரு மூன்றாம் மனிதருக்குக் கொடுக்கும் முன்னுரிமை கூடத் தனக்கு இல்லாமல் போகும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

பொதுவாக ‘அம்மாவா? அப்பாவா?’ என்ற தேர்வில் பிள்ளை தந்தையைத் தேர்வு செய்தாலே தாய் மனம் வெளியே சொல்ல முடியாத ஒரு நெருடலைச் சுமக்கும். எனில் இதை எப்படி ஏற்றுக்கொள்ளும் அவளின் பெற்ற மனம்?

அந்த நேரம்தான் சரியாக ஆதித்யன் மருந்துகளோடு உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்த கணம் அவள் வேதனைகள் எல்லாம் கோபமாய் உருப்பெற்று அவனிடம் திரும்பிற்று.

அதை அவள் அவனுக்குக் கடத்தும் முன் நித்திலன் அவள் மேலான புகாரைத் தன் அன்புக்குப் பாத்திரமானவனிடம் எடுத்துச் சென்று தாயின் கோபத்துக்கு இன்னும் எரிபொருள் சேர்த்தான்.

“டொக்டர்! அம்மாக்கு கால் முறிஞ்சிட்டு எண்டு வேலைக்கு வரவேண்டாமெண்டு சொல்லிட்டீங்களோ? அம்மா சாவகச்சேரி மனோ டொக்டரிட்ட வேலைக்குப் போகப் போறாவாம். என்னையும் கூட்டிக் கொண்டு போய் அங்க இருக்கிற பள்ளிக்கூடத்தில சேர்க்கப் போறாவாம். நீங்களும் ஒருத்தரும் வரமாட்டீங்களாம் அங்க! நீங்க இல்லாம நான் அங்க என்ன செய்யிறது? நான் ஆரோட விளையாடுவன் அங்க? அங்க என்னை ஒருத்தருக்கும் பிடிக்காது. எல்லாரும் என்னைப் பேசுவினம். நான் உங்களோடயே இருக்கட்டோ? அம்மா மட்டும் அங்க போகட்டும். அம்மா கேக்கிறா, தான் இல்லாட்டி ஆர் என்னைப் பார்க்கிறதாம்? என்னை நீங்கள் பார்ப்பீங்கள் தானே? நான் உங்களைக் கரைச்சல் படுத்தமாட்டன். நீங்க இண்டைக்குப் பின்னேரம் சொல்லித் தந்த மாதிரி என்ர வேலை எல்லாம் நானே செய்யிறேன். வேணுமெண்டா உடுப்பும் தோய்ச்சுப் பழகுறன். பள்ளிக்கூடத்துக்கும் நடந்தே போய் வருவன், எனக்குப் பாதை வடிவாத் தெரியும்.”

தன்னை அவன் இங்கே வைத்திருந்தால் என்ன என்ன தொல்லைகள் தன்னால் வரும் என்று அவன் ஊகித்ததை எல்லாம் அதை செய்யமாட்டேன் என்று கூறிக் கொண்டே வந்தவனுக்கு தொண்டைக்குள் பெரும் கேவல் ஒன்று சேர்ந்து வெடித்தது.

தான் சென்று வருவதற்குள் என்ன நடந்ததென்று புரியாமல் குழம்பி சூழ்நிலையைக் கிரகித்துக் கொள்ள ஆதித்யன் எடுத்துக் கொண்ட அமைதியான கால அவகாசம்தான் அந்தக் கேவலுக்குக் காரணமாகப் போயிற்று.

அவன் அழவும் மற்றதை யோசிக்க மனமின்றி கையில் இருந்த எல்லாவற்றையும் அங்கிருந்த தட்டில் வைத்து விட்டு அவனைத் தூக்கிக் கொண்டான் ஆதித்யன்.

“என்ர நிலன் செல்லத்துக்கு என்ன நடந்த இப்ப? ஆர் பிள்ளையை அழ வச்சது? சொல்லுங்கோ அவைக்கு பெரிய ஊசியா போட்டு விடுவம்.”

“நீ… நீங்க தான் அ..அழ விட்டனீங்க! நா…நான் கேட்கிறேன், இஞ்… இஞ்ச உங்களோட இருக்கட்டோ எண்டு? நீங்க பே… பேசாம இருக்கிறீங்கள்! அப்..அப்ப என்னைப் போகச் சொல்லப் போறீங்கள் என்ன? என்னில விருப்பமில்லைதானே உங்களுக்கு?” என்று பெரிதாக வெடித்து அழவும் ஆதித்யன் திரும்பி சாதனாவை முறைத்தான்.

அவளோ இவன் மேல் இருக்கும் கோபத்தைக் காட்டவா? மகன் அழுவதால் உண்டான பரிதவிப்பைப் போக்கவா? இல்லை, கடுக்கும் காலின் வலியைப் பார்க்கவா என்று நிலைதடுமாறி அமர்ந்திருந்தாள்.

அவள் நிலை புரிந்தவனால் ஒரு அளவுக்கு மேல் அவளிடம் கடுமையான பார்வையைக் கூட செலுத்த முடியாமல் போகவே முதலில் சின்னவனை சமாதானம் செய்ய முயன்றான்.

“ஆர் சொன்னது பிள்ளையை எனக்குப் பிடிக்காதெண்டு? எனக்கு நிலன் எண்டா அவ்வளவு விருப்பம். மயூ, மகி மாதிரி நீங்களும் என்ர சரியான செல்லம்தான். உங்களில எனக்கு விருப்பமில்லாம போகுமே? இது தெரியாதோ உங்களுக்கு? நிலன் சரியான கெட்டிக்காரப் பிள்ளை எண்டெல்லோ நான் நினைச்சுக் கொண்டிருக்கிறன்…” என்று கேட்டு அவன் கொக்கியிட்டு நிறுத்த,

“நான் கெட்டிக்காரன்தான்.” என்று அழுகையை நிறுத்தி ரோஷமாகச் சொன்னான் அவன்.

“அப்ப அந்தக்கெட்டிக்காருக்குத் தெரியாதோ ஆதி டொக்டர் நிலனில சரியான பாசமெண்டு. அதோட அவரை எங்கேயும் போகவும் விடமாட்டன், என்னோடதான் வச்சிருப்பன் எண்டு!” சொன்னவனால் திரும்பிப் பாராமலே சாதனாவின் பார்வையின் சூட்டை உணர முடிந்தது.

“உண்மையா அம்மா என்னை கூட்டிக் கொண்டு போக விட மாட்டீங்கள்தானே? இல்லா, நான் அழுகிறேன் எண்டு பொய் சொல்லுறீங்களோ?” விவரமாகக் கேட்டவனை மெய்ச்சிக் கொண்டவன்,

“நான் ஏன் பொய் சொல்லப் போறன்? அதுவும் என்ர செல்லத்திட்ட! என்ன நடந்தாலும் சரி, நீங்கள் எனக்குப் பக்கத்திலதான் இருப்பீங்கள்!”

இதை சொல்லும் போது சாதனாவின் விழிகளை ஒரு நொடிக்கும் குறைவாக ஆழ்ந்து நோக்கி அவன் உறுதியைப் பறை சாற்றியவன், மீண்டும் நித்திலனிடம் திரும்பி,

“நான்தான் பிள்ளையைப் போக விடமாட்டன் எண்டு சொல்லிட்டனல்லோ, இனி ஒண்டையும் யோசிக்காம நித்திரையைக் கொள்ளுங்கோ! நாளைக்கு ஸ்கூல் போகோணும்.”

“நான் நாளைக்கு ஸ்கூலுக்கு உங்களோட வரட்டே, அம்மாக்குக் கால் ஏலாதெல்லோ?”

“நிலன்! என்ன பழக்கமிது?” சாதனா மகனை அதட்ட,

“நீங்க இருங்கோ சாதனா. அவருக்கு விளங்கிற மாதிரி நான் சொல்லுறேன்.” என்றவன்,

“நாளைக்கெண்டில்லை இனி எனக்கு நேரம் கிடைக்கிற எல்லா நாளும் நீங்கள் என்னோடதான் ஸ்கூலுக்கு வரப் போறீங்கள். அதுவும் உங்கட மான் குட்டியள் உங்கட ஸ்கூல் சேர்ந்தா பிறகு ஒவ்வொருநாள் விடியவும் நீங்களும் என்னோடதான் வருவீங்கள். பிறகு ஸ்கூல் முடிஞ்சாப்போல அம்மா மூண்டு பேரையும் ஒண்டா கூட்டியருவா. அதுக்கு ஆட்டோ வைப்பம். இல்லா டக்ஸி வைப்பம்.” என்று அவன் சொல்ல சொல்ல நிலனுக்கு குஷியைக் கேட்கத் தேவையில்லை.

“அப்ப இனி மூண்டு பேரும் ஒண்டாத்தான் போய் வரப் போறமோ?”

“ஓம்!”

“நான் வேளைக்கெண்டு போய் நித்திரை கொள்ளுறன். விடிய வேளைக்கு எழும்போணும்.” என்றவன் ஆதித்யன் கன்னத்தை எச்சில் செய்துவிட்டு படுக்கையறை புகுந்து கடகடவென்று தனக்கான போர்வைகளைத் தானே விரித்துக் கொண்டு படுத்துக் கொண்டான்.

அவன் செயலில் சிரித்துக் கொண்ட ஆதித்யன், அவனை எழுப்பி, பழக்கம் இல்லாமல் விரித்ததில் சுருங்கி இருந்த போர்வையின் சுருக்கங்களை இழுத்து, அவனை சரியாகப் படுக்க வைத்தான்.

படுத்திவிட்ட அடுத்த நிமிடமே அவன் கண்ணை மூடி நித்திரைக்குள் செல்ல, இவன் சாதனாவிடம் வந்து நின்றவன், ஒன்றுமே சொல்லாமல் பண்டேஜை எடுத்து அவள் காலில் கவனமாக சுற்றினான்.

அவளும் அமைதியாகவே அவன் செயலை அனுமதித்தாள். கட்டி முடித்து அவன் மருந்தைக் கொடுத்து தண்ணீர்ப் போத்தலை நீட்டவும்,

“மருந்தே போடாம உங்கட அம்மாக்கு நோய் சரியாகோணுமாம்.” அவன் அப்போது சொன்னது நினைவு வர, அந்த மருந்தை நினைத்து இந்த மருந்தை வாங்கவே தயங்கினாள் அவள்.

“கனக்க யோசிக்காதேங்கோ, இந்த மருந்தை வேண்டிக் குடிச்சா, உங்களுக்குச் சம்மதம் எண்டு நினைச்சு உங்களைக் கடத்திக் கொண்டு போய் கல்யாணம் எல்லாம் செய்யமாட்டன்.” என்றதும் என்ன கதை இது என்பது போல் முகத்தை சுழித்தாள்.

“நான் கதைக்கிறது எவ்வளவு பிழையோ, அதே மாதிரி நீங்க நினைக்கிறதும் பிழைதானே? நான்…”

“நீங்க ஒரு டொக்டர். அதுதானே? அதைக் கொண்டாங்கோ இஞ்ச.” என்று மருந்தை வாங்கிக் கடகடவென்று விழுங்கிக் கொண்டாள்.

“டொக்டரா உங்கட கடமை முடிஞ்சுது. இனியெண்டாலும் நித்திலனிட்ட மாதிரி அக்கம் பக்கத்தில இருக்கிறவையிட்டயும் என்னை விக்கிறதுக்கு முன்னம் வெளிக்கிடலாம்தானே?”

அடக்கப்பட்ட கோபத்துடனும் முட்டி நின்ற கண்ணீருடனும் சொன்னவளை சலனமே இல்லாமல் பார்த்தவன்,

“நீங்கள் எங்க படுக்கிறனீங்கள்? நித்திலனுக்குப் பக்கத்திலயா, இல்லைத் தனியாவா?” என்று கேட்க, அவனின் கேள்வியில் திடுக்கிட்டு விழித்தாள் சாதனா.

“நீ… நீங்க என்ன கதைக்கிறீங்கள்? வீட்டை வெளிக்கிடேலயோ நீங்கள்?” என்று கேட்டு முடிப்பதற்குள் படபடத்துப் போனது அவளுக்கு.

முதலில் அவளின் பதட்டத்தை விநோதமாகப் பார்த்தவனுக்குப் பின்புதான் தன் கேள்வியில் இருக்கும் இடக்கான பொருள் புரிந்தது.

வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டவனுக்குக் கோபமும் கூட வந்தது, தன்னை இப்படி நினைப்பாளா இவள் என்று!

“பதறி மூச்சைக் கீச்சை அடக்காதேங்கோ. நான் வீட்டை போய்தான் படுப்பேன். இஞ்சயே பாய் போட்டுப்…” மேலே வந்ததை வாய்க்குள் முழுங்கியவன்,

“எங்க படுக்கிறனீங்க எண்டு கேட்டது, உங்களுக்கு பெட்ஷீட் விரிச்சு விட்டுட்டுப் போகத்தான். அதிலயும் எந்த உள்நோக்கமும் இல்லை. மனிதாபிமான அடிப்படையிலதான் செய்ய நினைச்சன்.

ஆனா சும்மா எண்டில்லை, என்னில எவ்வளவு நல்ல எண்ணம் என்ன உங்களுக்கு? முதல் மனுஷி செத்து நாலு வருஷம் ஆச்சு. இத்தினை வருஷத்துக்கும் எத்தின லேடீஸ் ஸ்டாஃபோட நைட் டியூட்டி செய்திருப்பன்? இண்டைக்கு வரைக்கும் இதை மாதிரி ஒருத்தர் என்னைக் கேவலப்படுத்தினதே இல்லை. உங்களிட்ட கல்யாணம் செய்யக் கேட்டதாலயே நான் கேடுகெட்டவன் ஆயிட்டனோ?” என்று அவன் வெறுப்பும் வருத்தமும் கலந்த குரலில் கேட்க, அவளுக்கே ஒருமாதிரியாகி விட்டது.

குற்றக் குறுகுறுப்பில் அவள் ஏதோ பேச எடுக்கவும் தடுத்தவன், “என்ன இப்ப சொறி சொல்லப் போறீங்களோ? எனக்கு அது தேவையே இல்லை.” என்றவன்…

error: Alert: Content selection is disabled!!