மாதொரு பாகம் கொண்டான் 24 – 2

“அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லை. இண்டைக்கு விடியத்தான் அம்மாட்ட உங்களுக்கு இப்பிடியெண்டு சொன்னனான். அதுவும் ஏன் நீங்க விடிய வரேல்ல எண்டு கேக்கத்தான் சொன்னனான். அப்ப அவாவாதான் கேட்டவா, சாதனாவோட நானும் வந்து பார்க்கட்டோ எண்டு. இதுக்குப் பிறகு உங்களுக்கு இதில ஏதேன் கஷ்டம் எண்டா அம்மாவோடயே எடுத்துக் கதையுங்கோ. நாங்க போய்ட்டு வாறம்.”

இடக் கையில் நித்திலனின் புத்தகப்பையும் வலது கையில் நித்திலனின் இடது கரத்தையும் பற்றியபடி பக்கவாட்டில் நித்திலனைத் திரும்பிப் பார்த்து ஏதோ பேசுவதும் அவனிடம் பதில் வாங்குவதும் அவனுடன் சேர்ந்து சிரிப்பதுமாக ஏதோ உரிமைப்பட்டவன் போல் அவன் நடந்து செல்ல, இருவரையும் பின்னிருந்து பார்த்தவளுக்கு கண்களை அவர்களிடமிருந்து பிரித்தெடுக்கவே முடியவில்லை.

நித்திலன் இவள் மகனாக இல்லாமல் ஆதித்யனும் யாரென்றே தெரியாதவனாய் இருந்து மூன்றாம் மனிதியாய் இவள் இந்தக் காட்சியைக் கண்டிருந்தாள் என்றால் நிச்சயம் இருவர் உறவும் தந்தை மகன் என்பதைத் தாண்டி வேறாக இருக்கும் என்று துளியேனும் நினைத்தே இருக்கமாட்டாள்.

அப்படி இருந்தது இருவர் பிணைப்பும். அந்தப் புத்தகப்பை… அது நித்திலன் சுமக்கக் கூடிய பாரம்தான். பள்ளிக்குள் அவன்தான் சுமந்தாக வேண்டும். ஆனாலும் தம்முடன் வரும்போது பிள்ளைக்கு அந்த பாரத்தைக் கொடுக்க வேண்டாம் என்று பெற்றவர்கள் அதை தாம் சுமப்பர். அதை ஆதித்யன் இயல்பாக நித்திலனுக்கு செய்தது எல்லாம் எந்த வகையில் சேர்த்தி என்றுதான் புரியவில்லை அவளுக்கு.

அதை விட மகனின் சாப்பாட்டுப் பெட்டியில் இருந்த பிஸ்கேட் இங்கிருக்க மகன் இடைவேளையில் என்ன சாப்பிடுவான் என்ற கவலை அவளுக்கு வரவில்லையே!

ஆதித்யன் பார்த்துக் கொள்வான், அப்படியொன்றும் பட்டினியாக இருக்க விட்டுவிடமாட்டான் என்ற நம்பிக்கை அவள் மனதில் வேரூன்றி நிற்கிறதே! அதுதானே இன்னும் பெரிய ஆச்சரியம்!

யோசனைகள் கூடிக் கொண்டு போனதே தவிர முடிவென்ற ஒன்று இன்னும்தான் மனதில் உதிக்கவில்லை. அது கொடுத்த சோர்வான பெருமூச்சுடன் மெல்ல எழுந்து தயாரானாள்.

ஆதித்யன் சொன்னபடி ஒன்பது மணியளவில் ஆட்டோ வந்து வாசலில் நிற்க அதனுள்ளே அமர்ந்திருந்தார், பரமேஸ்வரி.

இவள் நொண்டிக் கொண்டு வரவும், இறங்கி உதவி செய்ய வந்தவரைத் தடுத்தவள்,

“நீங்க இருங்கம்மா. என்னால நடக்க ஏலும். என்னைத் தாங்கிறன் எண்டு நீங்க விழுந்து வச்சா இன்னும் கஷ்டமா போடும் உங்களுக்கு.”

“தண்ணி ஊத்தி இருந்தா உடன துடைச்சு விடுறதில்லையா பிள்ளை? பார் இப்ப ஆருக்குக் கஷ்டமெண்டு!”

“நிலன் சாப்பிட்டுக் கைகழுவிட்டு ஊத்திட்டார் போல. நான் கவனிக்காம காலை வச்சிட்டேன்.”

“சரி விடம்மா. நடந்ததுக்கு என்ன செய்யிறது? இனிக் கவனமா இருக்கோணும்.” அவர்கள் கதைத்துக் கொண்டே வர ஆட்டோ கிளிநொச்சி வைத்தியசாலையைத் தாண்டி சென்று கொண்டிருந்தது.

“என்ன அண்ணா ஆஸ்பத்திரியைத் தாண்டிக் கொண்டு போறீங்கள்? கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கெல்லா போகோணும் நாங்க?” என்ற சாதனாவின் குரலில் ஆட்டோவை சடன் பிரேக் போட்டு நிறுத்திய ட்ரைவர்,

“டொக்டர் மெடி கியூர்லதானே இறக்கச் சொல்லிச் சொன்னவர்?” என்றபடி, பரமேஸ்வரியைக் கேள்வியாகப் பார்த்தார்.

“நீங்க குழம்பாதேங்கோ தம்பி, நீங்க சரியாத்தான் போறீங்கள்.” என்ற பரமேஸ்வரி சாதனாவிடம் திரும்பி,

“கொஞ்ச நேரம் சும்மா வானை. அவர் ரோட்டில கவனமா ஓடட்டும். நான் இறங்கி எல்லாம் சொல்லுறன் உனக்கு.” என்று மென்மையாய் சொல்ல, ஒன்றும் புரியாவிட்டாலும் அமைதியாக அவருக்கு உடன்பட்டாள்.

குறித்த இடம் வந்ததும் ஆட்டோக்காரர் இருவரையும் இறக்கி விட்டவர், “முடிச்சிட்டுக் கோல் ஒண்டு தாங்கம்மா, வாறன்.” என்றுவிட்டுப் போனார்.

A9 ரோட்டில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நூறு மீட்டர் தொலைவில் இருந்த தனியார் மருத்துவமனை முன் நின்றிருந்தனர் பரமேஸ்வரி மற்றும் சாதனா.

“இஞ்ச ஏன் அம்மா வந்திருக்கிறம்? இஞ்ச காசு கட்டிப் பார்க்கிற அளவுக்கெல்லாம் நான் வசதி இல்லை.”

“நான் ஸ்கானுகள் எடுக்கிறதெண்டா இஞ்சதான் பிள்ளை வாறது. அங்க டேட் எடுத்து, அவ்வளவு கூட்டத்துக்கயும் காவல் நிண்டு பார்க்க எல்லாம் என்னால ஏலாதம்மா. என்ர பிள்ளை வேற நீதி, நேர்மை எண்டு என்னை முன்னுக்கு எடுத்துப் பார்த்தும் விடமாட்டார் எண்டேக்க பிள்ளையளை வச்சுக் கொண்டு நாள் முழுக்க அங்கின நிக்கவும் ஏலாதுதானே! அதான் எங்களுக்காகத்தானே உழைச்சுச் சேர்க்கிறியள்? அம்மாக்குக் கொஞ்சம் கூடச் செலவழியுங்கோ எண்டு போட்டு இஞ்ச வாறது. இஞ்சயும் அவருக்குத் தெரிஞ்ச டொக்டராக்கள்தான் எல்லாரும். ஆஸ்பத்திரி ஓனரும் தம்பியின்ர சினேகிதம்தான்!” என்றார் நீண்ட விளக்கமாக.

“ஓ… அப்ப சரியம்மா. உங்களுக்கு இஞ்ச பார்த்திட்டு நீங்க வீட்ட போங்கோ. நான் பிறகு அங்க போய்ப் பார்க்கிறேன்.”

“உனக்கு என்ன விசரே பிள்ளை? நீ அங்க பார்க்கிற எண்டா என்னத்துக்கு நான் இஞ்ச கூட்டியந்தனான்? இஞ்சயே ரெண்டு பேரும் பார்த்திட்டுப் போவம்!”

“அதெல்லாம் வேண்டாம் அம்மா! நான் அங்கேயே பார்க்கிறேன். எனக்கு இதெல்லாம் சரிவராது.” என்று பிடிவாதம் பிடிக்க,

“சொன்னா கேளம்மாச்சி. உன்னைக் கஷ்டப்படுத்தோணும் எண்டு இப்பிடிச் செய்யேல நாங்கள். சொல்லப் போனா இஞ்ச கூட்டிக் கொண்டு போகச் சொல்லித் தம்பி கூடச் சொல்லேல. நான்தான் கேட்டனான் அவரை. அப்பவும் அவர் சொன்னவர், ‘அவா இதுக்குச் சம்மதிக்கமாட்டா, அவாக்குக் கரைச்சல் குடுக்க வேண்டாம்’ எண்டு. நான்தான் கேக்காம அவவோட நான் கதைக்கிறன், அவாக்கும் சேர்த்து அப்பொயின்மெண்ட் போடச் சொன்னனான்.

இழுத்தடிக்காம நீ வேளைக்குச் சுகமானாத்தான் எங்கள் எல்லாரின்ர வண்டியும் ஓடும். ஒருநாள் நீயில்லை எண்டா ஒண்டுக்கும் கை வர மாட்டேன் எண்டுது. அதுக்காக வேலைக்குத்தான் நானோ எண்டு பிழையா நினைக்காதயனை. நீ வந்து வேலை செய்யோணும் எண்டில்லை. பக்கத்தில நிண்டு கதைச்சுக் கொண்டு நிண்டாலே காணும் எண்டுறளவுக்கு உனக்குப் பழகிட்டுது வீடு.

பிள்ளையளும் விடிய நீ வராததுக்கே ஆயிரம் விசாரணை. உனக்குக் கால் ஏலாதெண்டு தகப்பன் சொல்லவும் அப்பவே உன்னைப் பார்க்க வரவெண்டு நிண்டவை. தம்பிதான் இப்ப நேரமில்லை, நேர்சரியால வந்து போகலாம் எண்டு சமாளிச்சு அனுப்பினவர்.

எங்களுக்காகத்தான் நான் உனக்குச் செய்ய நினைக்கிறன். ஆனா உனக்கு நாங்க காசு குடுக்குறம் எண்டுறது மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுதெண்டா, அதைத் தம்பிற்ற சொல்லிட்டு மாசம் மாசம் சம்பளத்தில கழியம்மா. இப்ப பேசாம வா.” என்று அவள் மறுக்கவே முடியாதபடிக்குப் கதைத்து இழுத்துச் சென்றார்.

ஒருவழியாக இருவருக்கும் ஸ்கான் எடுக்கப்பட்டு, அதன் பிரதி உடனேயே ஆதித்யனுக்கு அனுப்பவும் பட்டது. அவனும் பத்து நிமிடத்தில் பார்த்து முடித்தவன், பரமேஸ்வரிக்கு ஊசிக்கும் சாதனாவுக்கு லேசர் பிடிக்கவும் பரிந்துரை செய்தான். மேலும் சாதனாவுக்கு ஒன்று விட்ட ஒரு நாளுக்கு மூன்று முறை லேசர் பிடிக்க வரவேண்டும் என்ற பரிந்துரையும் மூன்று நாளைக்குரிய மருந்துகளும் வழங்கப்பட்டது.

இருவரும் மீண்டும் ஆட்டோ ஏறி வீடு வந்து சேர்ந்தனர். சாதனாவை தங்கள் வீட்டில் இறங்கிக் கொள்ளும்படி பரமேஸ்வரி கேட்க, அவளோ மறுத்து தனக்கு சற்றுத் தனிமை வேண்டும் என்று தங்கள் வீட்டில் வந்து அடைந்து கொண்டாள்.

வீட்டுக்கு வந்தவள் எந்த வேலையும் இன்றி பாயைப் போட்டு சுவரோடு சாய்ந்து கொண்டவள் பெரும் சிந்தனை சுழலுக்குள் சிக்கிக் கொண்டு வெளிவர வழி தேடி அலைந்தாள்.

அவளாக முயன்று ஒன்றுக்கும் முடியவில்லை என்று அவள் சோர்ந்து தளர்ந்திருந்த நேரம் நான்கு பிஞ்சுக் கரங்கள் அவள் இருகரம் பற்றி அவளைத் தம்மை நோக்கி இழுத்து கரை சேர்த்திருந்தன.

error: Alert: Content selection is disabled!!